மகாராஷ்ட்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்து தனி அணியாகச் செயல்படுகிறார். அவரின் அணிக்கு தேர்தல் கமிஷன் தனி அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. பாஜக-வோடு கூட்டணிவைத்துக்கொண்டு தேர்தல்களில் போட்டியிட்டுவருகிறார். ஷிண்டேவை உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். அவரோடு சேர்ந்து சிவசேனாவின் சஞ்சய் ராவத்தும் கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். தற்போது சஞ்சய் ராவத் அளித்திருக்கும் பேட்டியில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி சிவசேனாவின் தனிப்பிரிவு கிடையாது என்றும், அது ஒரு கேங் என்றும் விமர்சித்திருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், ``ஷிண்டே அணி தனிப்பிரிவு கிடையாது. அது ஒரு கேங். கேங், போலீஸ் துப்பாக்கிச்சூடு அல்லது கேங்வாரில் கொலைசெய்யப்படும். கேங்குகளுக்குச் சொந்த அடையாளம் கிடையாது.

அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற விரும்பவில்லை. எவ்வளவு பணம் கிடைக்குமோ அதை வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுவிடுவார்கள். ஷிண்டே அணியில் இருப்பவர்களுக்குச் சொந்த அறிவு கிடையாது. அவர்கள் முதலில் சிவசேனா, பாஜக-வோடு கூட்டணிவைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இப்போது அவர்கள் தங்களது கட்சியை பாஜக-வோடு இணைக்க விரும்புகின்றனர். அவர்கள் சீட்டை விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே அணிக்கு மேலும் ஒரு திருப்பமாக, முக்கிய நிர்வாகியாகத் திகழ்ந்த அமெய் கோலே யுவசேனாவின் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டார். ஆதித்ய தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த கோலே திடீரென ஆதித்ய தாக்கரே கூட்டிய கூட்டத்தையே புறக்கணித்திருக்கிறார். இதனால் அவர் விரைவில் ஷிண்டே அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.