கல்வித்துறையில் எப்போதுமே கவனம் செலுத்தும் தமிழகம். காமராஜர் காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் எந்த ஆட்சி அமைந்தாலும் பள்ளிக்கல்வித்துறையில் பல சிறப்பான திட்டங்களைத் தீட்டியதால்தான் இன்றளவும் இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதன்மையான இடத்தை வகிக்கிறது.
தற்போதைய தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையும் பல முக்கியமான நகர்வுகளை முன்னெடுத்திருக்கிறது. இல்லம் தேடி கல்வித் திட்டம், அரசுப்பள்ளி மாணவர்களின் தரவுகளைச் சேகரித்து அதற்கான திட்டங்களை வகுப்பது, அரசுப்பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், காலை சிற்றுண்டித் திட்டம் என்னும் முக்கியமான செயற்பாடுகளின் அடுத்த கட்டம், உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்று.

அனைவருக்கும் கல்வியைக் கொண்டு செல்வது, கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற கல்வி என்பது எல்லாம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு கற்றலின் வடிவங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவதும் முக்கியம். கல்வி என்பது மனப்பாடமாகவோ தேர்வுமுறைக்கான ஒரு விஷயமாகவோ தேங்கிவிடாமல் கற்றல் என்பதன் முழுப்பரிமாணத்தையும் மாணவர்கள் உணர வேண்டும். வகுப்பறைக்கு உள்ளே மட்டுமல்ல, வகுப்பறைக்கு வெளியிலும் கல்வி விரிந்திருக்கிறது என்பதை நோக்கித் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அடியெடுத்துவைக்கிறது.
அந்த வகையில் கரகாட்டம், வில்லுப்பாட்டு, ஓவியம் என்று பல்வேறு கலை வடிவங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு என்று பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாதம்தோறும் இரண்டாம் வாரத்தில் குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் திரையிட்டு மாணவர்களிடம் உரையாடலை ஏற்படுத்துவது என்று பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்திருக்கிறது.

அந்த முடிவின்படி சென்னையில் சில அரசுப்பள்ளிகளில் `The Red Balloon' என்ற ஆஸ்கர் விருதுபெற்ற பிரெஞ்சு குறும்படம் 13.10.2022 அன்று திரையிடப்பட்டது. இந்தத் திரையிடலை மாணவர்கள் எப்படி உள்வாங்கிக்கொள்கிறார்கள் என்பதை அவதானிக்கவும் அவர்களிடம் உரையாடவும் கல்வித்துறைக்கு வெளியேயுள்ள துறைசார்ந்த நிபுணர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தது. எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற முறையில் சென்னை ராயப்பேட்டை ஹோபர்ட் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற திரையிடலில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

'The Red Balloon' ஒரு பிரெஞ்சு சினிமா என்றாலும் அதிகம் வசனங்கள் இன்றி காட்சிகள் வழியாகவே நகரும் சினிமா என்பதால் மாணவிகள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பார்த்தனர். அதுவும் அவ்வப்போது ஆரவாரமும் சிரிப்பொலியும் கடல் அலைகள்போல் எழுந்து அடங்கின. திரையிடல் முடிந்ததும் ஆசிரியை உமா திரைப்படத்தின் கதை, அதன் கருத்து, பாத்திரங்களின் பெயர்கள் உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்டார். எல்லாவற்றுக்கும் மாணவிகள் சரியாகப் பதில் சொன்னது திரைப்படத்தை எந்தளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதற்கான சான்று. படத்தில் ஒரு காட்சியை நடித்துக் காட்ட முடியுமா என்று ஆசிரியைக் கேட்டதும் மாணவிகள் ஆர்வத்துடன் நடித்துக்காட்டியதும் ஆச்சர்யம்தான். பள்ளி தலைமை ஆசிரியை கண்மணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்வீட்டின் ஆகியோர் திரைப்படம் குறித்து தங்கள் கருத்துகளை மாணவிகளிடம் பகிர்ந்துகொண்டனர்.
நான் திரைப்படத்தின் உள்ளடக்கம், அந்தத் திரைப்படத்தில் சொல்லப்படும் கருத்துகள் எப்படி நமது மண்சார்ந்த கதைகளிலும் பிரதிபலித்திருக்கின்றன, கல்வி என்பது எப்படி ஒருங்கிணைந்த செயற்பாடாக இருக்கவேண்டும் என்று சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். ஆனால் அவையனைத்தும் ஒற்றை வழிப்பாதையல்ல. மாணவிகளுடனான உரையாடலாகவே இருந்தது. என் எழுத்துகள் குறித்தும் திரைப்படம் குறித்தும் கல்வி குறித்தும் பல முக்கியமான கருத்துகளை இயல்பான மொழியில் மாணவிகள் முன்வைத்ததுடன் ஆச்சர்யம் தரத்தக்கப் பல கேள்விகளையும் எழுப்பினார்கள். ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் சிறுமி, ''எந்த அவமானம் உங்கள் வாழ்க்கையை மாற்றியது?" என்று ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். ''எப்போதுமே இளைய தலைமுறை அதற்கு முந்தைய தலைமுறையைவிடப் புத்திசாலித்தனமாகவே இருக்கிறது" என்றேன். அதுதானே உண்மை!

"கல்வி என்பதை மனிதர்களுக்குக் கற்பிக்க வேண்டிய அவசியமெல்லாம் அவர்கள் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும்" என்றார் பெரியார். சுதந்திரச் சிந்தனையையும் கலையுணர்வையும் வளர்க்கக்கூடிய இந்தத் திரையிடல் முயற்சி அரசுப்பள்ளிகளைத் தாண்டி எல்லாப் பள்ளிகளுக்கும் விரியட்டும்!