சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

கார்காலக் காதல்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

சிறுகதை

``முன்னாடி போற பிங்க் கலர் வெஸ்பால இருக்கற பொண்ணோட இடுப்பைப் பார்த்துட்டே ஓட்டி, லெஃப்ட்ல கூடவே வர்ற அந்தச் சொட்ட மண்டையன் பைக்கை இடிக்கப்போறே நீ...”

குரல் கேட்டதும் ஒரு நொடி திடுக்கிட்டது தினகருக்கு. `என் மைண்ட் வாய்ஸ் எனக்கே ஏன் இவ்வளவு சத்தமாகக் கேட்கிறது’ என்று நினைத்துக்கொண்டு காரைச் செலுத்தினான். வெஸ்பா பெண், வண்டியை மெதுவாகச் செலுத்தவும் இவனும் காரை ஸ்லோ செய்தான். டக்கென்று காரின் இடதுபுறம் யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அந்த வழுக்கைத் தலை ஆசாமி.

``யோவ்... எங்கே பார்த்து ஓட்டிட்டு வர்ற... எதுக்கு ஸ்லோ பண்ற இப்ப... ஆளப் பாரு...” என்று கையை நீட்டி ஒரு கெட்ட வார்த்தையை வேறு காற்றில் வீசிவிட்டுச் சென்றான்.

அடுத்த நொடி `கெக் கெக் கெக் கெக்...’ என்று கார் இன்ஜின் ஸ்டார்ட் ஆகும்போது கேட்பதுபோல ஒரு சத்தம் - சிரிப்புதான் அது - கேட்டது.

கார்காலக் காதல்
கார்காலக் காதல்

``நாஞ் சொன்னா கேட்கலை. சொட்ட மண்டையன்கிட்ட திட்டு வாங்கிக்கிட்டியா... வேணும் உனக்கு! நீ பண்ணினதுக்கு எனக்கு அடி.”

இப்போது இது மைண்ட் வாய்ஸ் இல்லை என்று உறைத்தது தினகருக்கு. காரைக் கொஞ்சம் ஓரமாக நிறுத்தி, இன்ஜினை ஆஃப் செய்யாமல் திரும்பிப் பின் சீட்டில் பார்த்தான். யாரும் இல்லை. தன் அருகிலிருந்த சீட்டையும், பின் சீட்டுகளையும் கைகளை நீட்டித் தடவி யாரும் அருவமாக இருக்கிறார்களா என்று பார்த்தான். ஒன்றும் தட்டுப்படவில்லை.

அதற்குள் பின்னாலிருந்து வந்த ஹாரன் சத்தம் அவன் மண்டையைப் பிளந்தது. இவன் நிறுத்தியிருந்த இடம் ஆட்டோ ஸ்டாண்ட்போல.

“சரி... மூவ் பண்ணு. போய்க்கிட்டே பேசலாம். பயப்படாதே” - என்றது குரல். தினகர் உடலின் மயிர்க்கால்களெல்லாம் சிலிர்க்க, பயம் அப்பிக் கொண்டது. ஆனாலும் சூழல் அவனைக் காரை எடுக்கச் சொன்னது. நியூட்ரலில் இருந்த காரை, மெதுவாக முதல் கியருக்கு மாற்றினான். சாலையை நோக்கித் திருப்பி மெதுவாக இரண்டாவது கியருக்கு வந்தபோது அந்த `கெக் கெக் கெக் கெக்...’ சிரிப்புச் சத்தம் மீண்டும் கேட்டது.

``ய... யாரு?” பயமும் தயக்கமும், தப்பிக்க வழியில்லாத உணர்வுமாகக் கேட்டான்.

``ஏம்ப்பா... ரெண்டு வருஷமா என்னை ஓட்டிக்கிட்டிருக்கே. பொசுக்குனு யார்னு கேட்டுட்டே?” என்றது குரல்.

தினகருக்கு இன்னும் அதிகமாக வியர்த்தது. ஏசியின் தண்மையைக் கூட்டினான்.

சிறுகதை
சிறுகதை

“கார் எப்படிப் பேசும்... யார்னு சொல்லுங்க... விளையாடாதீங்க” தன் ஃபோனை இடது கையால் எடுத்து ஆன் செய்து, அதிலிருந்து ஏதும் கால் வந்து புளூடூத் மூலம் ஒலிக்கிறதா என்றெல்லாம் பார்த்தபடி பேசினான். ம்ஹும்... இல்லை.

“ஏன், கார் பேசாதா?”

“ரெண்டு வருஷமா இந்தக் காரை ஓட்டறேன். பேசினதில்லையே!” - காரைச் செலுத்திக் கொண்டே கேட்டான் தினகர். `ஒன்றும் அசம்பாவிதமாக நடக்கவில்லை. என்னதான் என்று பார்ப்போமே...’ என்ற சின்ன தைரியம் அவனுக்குள் வந்திருந்தது.

``மனுஷங்க நீங்களே பொறந்து ஒண்ணரை வருஷம் கழிச்சுதான் பேசறீங்க. நாங்க பேச ரெண்டு வருஷமாகாதா? என்ன... உங்க மொழியில எங்க ஆளுக பேசறதில்லை. எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஒருக்கா ரெண்டு மாசம் டியூ கட்டலைன்னு என்னை உன்கிட்ட இருந்து பேங்க்காரன் பிரிக்கப் பார்த்தப்போ, நீ போட்டியே ஒரு எமோஷனல் சீன்... `இந்தக் காருதான் என் உசுரு... என் தம்பி மாதிரி...’ அது இதுன்னு. அதுல எனக்கே ஒரு மாதிரி ஆகிடுச்சுப்பா. என்ன, உன் மொழியைக் கத்துக்கிட்டுப் பேச கொஞ்சம் டைமாச்சு.”

தினகர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த வங்கி ஏஜென்ட்டிடம் பேசியது காருக்குள் அமர்ந்துதான். நன்றாக நினைவிருக்கிறது. அப்போது யாரும் இருக்கவில்லை. உருகி உருகி இவன் பேசியதும், 15 நாள் டைம் கொடுத்தான் அந்த ஏஜென்ட். அதெல்லாம் தினகருக்கு நினைவுக்கு வந்தது. அதைச் சரியாகச் சொல்கிறது இந்தக் குரல் என்றால்... இது நிஜம்தானா?

“நான் எப்படி நம்பறது?” - அப்படியும் விடாமல் கேட்டான் தினகர்.

“நீ கொஞ்ச நேரம் முந்தி மதுவந்தியைத்தானே கூப்பிட்டே... இப்போ அவளைத்தானே பார்க்கப் போற? நேத்து நைட் பீச்சுக்குப் போற வழியில, உனக்கு லெஃப்ட் சீட்ல அவ உட்கார்ந்திருக்கறப்போ நீ அவளை என்ன பண்ணினேன்னு சொல்றேன் கேளு. அப்போ என்னாச்சுன்னா...”

தினகர் அவசர அவசரமாக “டேய்ய்ய் டேய்ய்ய் நோ நோ நோ...” என்று கத்திக்கொண்டே ஹாரன், ஆக்ஸிலேட்டர், பிரேக் என எல்லாவற்றையும் அழுத்தினான். வண்டி கொஞ்சம் அலைபாய்ந் தாலும் யார்மீதும் எதன்மீதும் இடிக்கவில்லை.

மீண்டும் வியர்த்தது தினகருக்கு. “சரி... சரி... விடு. இந்நேரம் யார் மேலயாச்சும் மோதியிருப்பேன்.”

“ஆமா. ஆனா மோதாம இருந்ததுக்கு நான்தான் காரணம். நீ ஸ்டீயரிங்கை விட்டுட்டே. மோதினா உனக்கென்ன... ஜாலியா உள்ளே உட்கார்ந்திருக்கே. எனக்குத்தான் அடிவிழும். அதான் நான் கொஞ்சம் மூஞ்சியைத் திருப்பித் தப்பிச்சுக்கிட்டேன். இல்லைன்னா அந்த பஸ்ல இடிச்சுக்கிட்டிருப்பேன்.”

“சரி, உனக்கு என்ன வேணும் இப்ப?”

“என்ன வேணும்னா... புரியலை எனக்கு. ஏதாச்சும் வேணும்னு கேட்டேனா நான்?”

சிறுகதை
சிறுகதை

``ப்ச். இது ஒரு மாதிரி இருக்கு. யாரோ என்னைப் பார்த்துட்டே இருக்கற மாதிரி இருக்கு. எனக்கு டிரைவிங்னா ரொம்பப் பிடிக்கும். நான் காலைலயும் நைட்லயும் டிரைவ் பண்ற டைம்தான் ஃப்ரீயா இருப்பேன். இப்போ அந்த டைம்லயும் என் கூடவே நீ வர்ற மாதிரி இருந்தா நான் எப்படி ப்ரைவசியா இருப்பேன்?”

``உன்கூட நான் வந்தாத்தானே நீ டிரைவ் பண்ண முடியும்?” என்றது கார். கூடவே ‘சரியாத் தானே கேட்டேன்’ என்ற ’கெக் கெக் கெக்...’ சிரிப்பும்.

``உஸ்ஸ்ஸ்... உனக்கு எப்படிச் சொல்றதுன்னு தெரியலை” என்றபடி காரை அருகிலிருந்த பெட்ரோல் பங்குக்கு விட்டான். கார் கண்ணாடியை இறக்கியபடி “ஆயிரம் ரூபாய்க்குப் போடு” என்றான்.

``ஹும்... லிட்டருக்கு 74 ரூவா 80 பைசா! என்னை வாங்கறப்ப 63 ரூவா 2 காசு. எனக்கொரு அண்ணன் இருந்தான். உங்கப்பா வெச்சிருந்தாரே... அவன் இருக்கறப்போ அம்பது, அறுபதுன் னெல்லாம் சொல்வாங்க. இப்போ பெட்ரோலுக்கு டெய்லி ஒரு ரேட்டு. அதுக்கு வழியில்லாம இன்ஸ்டால்மென்ட்டும் கட்ட முடியாம ஆளாளுக்கு அல்லாடறது... இதையெல்லாம் எவனும் கேட்காதீங்க...”

பெட்ரோல் போடும் பையன், இவன் முகத்தை நேராகப் பார்த்து “என்னைத் திட்டாத சார். நானா ரேட் ஏத்தறேன்... ஏன் பொலம்பற... மொதல்ல வண்டி பெட்ரோல் டாங்கைத் திறந்துவிடு” என்று சொல்ல, தினகர் இன்ஜினை அணைத்து, பெட்ரோல் டாங்க் லீவரை இழுத்து டாங்கைத் திறந்தான். பெட்ரோல் போட்டு முடிக்கும் வரை, அவனுக்கு டென்ஷனாகவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு வண்டியை எடுத்தான்.

“ஏன் உம்முன்னே இருக்கே?”

“நீ பேசினதுக்கு அங்கே அவன் என்னைத் திட்டறான். உன்னால நான் எங்கேயாச்சும் அடி வாங்குவேன்போல...”

“ஹேய்... நான் பேசறது மத்தவங்களுக்கும் கேட்குதா... நான் உன்கிட்டதானே பேசினேன்... செம செம...” என்றது கார்.

கொஞ்ச தூரம் போனதும் மீண்டும் “செம செம...” என்று தொடர்ந்தது கார்.

``என்ன செம?”

“நான் பேசறது உனக்கு மட்டும்தான் கேட்கும்னு நெனைச்சேன். மத்தவங்களுக்கும் கேட்குதுன்னா செமதானே. இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல மதுவந்தி கார்ல உட்காருவா. ரெண்டு வாரம் முன்னாடி ஆபீஸ்விட்டு வர்றப்போ, உன் கொலீக் தாரணிகிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசினதை நான் சொன்னேன்னு வையி... செம ஜாலியா எனக்குப் பொழுது போகும்ல?” என்றது கார்.

கோபமாக காரை பிரேக்கிட்டு நிறுத்தினான் தினகர். “இதெல்லாம் ஓவர். இப்ப உனக்கு என்ன வேணும்?”

``அடேய்.... போய்க்கிட்டே பேசு. எவனாச்சும் வந்து எம்மேல மோதறதுக்கா... மது வேற வெயிட் பண்ணிகிட்டிருப்பா டூட். சரி,.. என்ன வேணும்னு கேட்டேல்ல... எனக்கொரு பேர் வையேன்” என்றது கார்.

தினகர் காரை மெதுவாகச் செலுத்தியபடி “லட்சுமி...” என்றான். காரிலிருந்து `உர்ர்ர்ர்ர்’ என்றொரு ஒலி கேட்டு சாலையில் சென்றவர் களெல்லாம் திரும்பிப் பார்த்தார்கள். “என்ன... போன வாரம் ரேடியோவுல ஒலிச்சித்திரத்துல போட்ட படத்துல ரஜினி அவரு காருக்கு வெச்ச பேராக்கும்... அவரே ரோபோ வெர்ஷனுக்கு வந்துட்டாரு. லட்சுமியாம்ல... ஆம்பளைக் குரலுக்கு, `லட்சுமி’ன்னு பேர்வெச்சது நீதான்யா... அட்லீஸ்ட் `லட்சுமணன்’னாச்சும் சொல்லியிருக்கலாம்” என்றது கார்.

தினகர் ஜெமினி மேம்பாலம் ஏறியபடி “ஆலிவர்?” என்றான்.

“டேய்... தமிழ்ப் பேரா சொல்லுடா. இங்கிலீஷ் பேர்தான் பிராண்டுலேயே இருக்கே.”

சட்டென்று “முகில்... முகில் ஓகேவா? உன்னை ஓட்டறப்ப அப்டியே மேகத்துல மிதக்கற மாதிரி...” தினகர் சொல்லச் சொல்ல, “மூடு. ரொம்ப அளக்காதே. முகில் ஓகே” என்றது முகில்.

ஜெமினி மேம்பாலம் இறங்கி, மெட்ரோ தாண்டி, ஸ்பென்சர்ஸ் முன் முகிலை நிறுத்தினான். சற்று நேரத்தில் மதுவந்தி கதவைத் திறந்து அமர்ந்து கொண்டாள். “மணி ஆறரை. ஆறுக்கு வரேன்னே...” என்றாள் ஏறியதும்.

“இல்லை... வர்றப்போ கொஞ்சம் லேட்டா யிடுச்சு. பெட்ரோல் வேற போட்டேன்” என்றான்.

“சரி. சீக்கிரம் எடு. பீச் போயிட்டு என்னை வெஸ்ட் மாம்பலத்துல எட்டரைக்குள்ள விட்டுடணும்” என்றவள் “ஹேய்ய்ய் தினகர்... என்னடா ஒரு மாதிரி இருக்கே... ஏசி வொர்க் பண்ணலையா?” என்று ஏசியின் குமிழைத் திருகினாள்.

“சேச்சே... அதெல்லாம் வொர்க் பண்ணுதுப்பா. ஆபீஸ் டென்ஷன். வேற ஒண்ணுமில்லை.”

முகிலை - அதாவது காரை - வாலஜா ரோட்டில் திருப்பி, சேப்பாக்கம் வழியே காமராஜர் சாலைக்கு விட்டான். பிறகு கண்ணகி சிலைக்கு முன்னே, இடதுபுறம் செலுத்தி, பீச்சுக்குள் வரிசையாக கார்கள் நின்றுகொண்டிருந்த பகுதிக்குள் செலுத்தினான்.

``யாரும் இல்லாத இடமாகப் பார்த்து நிறுத்து” என்று கண்ணடித்தாள் மதுவந்தி. தினகருக்கு டென்ஷனானது. ஏதோ ஒருபக்கம் இருந்த இடைவெளிக்குள் காரை நிறுத்தினான். இன்ஜினை அணைத்தான்.

“சரி... சொல்லு... என்ன டென்ஷன்?”

“ப்ச்... ஒண்ணுமில்லை மது. வழக்கமா இருக்கறதுதான். டீம் சேஞ்ச் பண்ணினாங்க. டக்னு செட் ஆகலை. ஆகிடுவேன்னு வையி. இன்னும் முழுசா புது டீம் பழகலை. அதான்...” ஏதேதோ சொல்லி சமாளித்தான். தினகருக்கு தன்னை முகில் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வு இருந்தது.

``ஹேய்ய்ய்... அதுக்கென்னப்பா” மதுவந்தி, தன் சீட்டில் வலதுபுறமாக முழுவதுமாகத் திரும்பி டிரைவிங் சீட்டில் இருந்த தினகரை நோக்கி அமர்ந்தாள். அவன் கைகளைத் தன் விரல்களால் தடவியபடி, “நீ எங்கே போனாலும் சின்ஸியரா வொர்க் பண்ணுவே. நான் கூப்பிட்டாக்கூட ஆபீஸ் டைம் முடியாம வரமாட்டே” பேசிக் கொண்டே அவன் சட்டையின் கைப்பகுதியை உயர்த்தி, புஜத்தைத் தடவின அவள் விரல்கள்.

சட்டென்று வலதுகையால் அவள் கையைத் தடுத்தான் தினகர். அவள் கையை எடுத்து அவள் மடியிலேயே வைத்தான்.

“ஏன்... எதுக்கு இப்போ என் கையை எடுத்துவிட்டே?”

“ஒண்ணுமில்ல மது.”

``நான் அலையறேன்னு நினைக்கிறே இல்ல?”

“சேச்சே...” பதறினான் தினகர். “மது... அதெல்லாம் இல்லை.”

“ஆமாம். அதான் உண்மை. நேத்து நீ என்ன பண்ணினே... என்னென்ன பேசின? நேத்து அவ்ளோ பண்ணி என் மூடை ஸ்பாயில் பண்ணிட்டு, இப்போ நான் சும்மா ஆறுதலா தொட்டதுக்கே தட்டிவிடறே... ஏன்னா நீ என்ன பண்ணினாலும் நான் கம்னு இருக்கணும். நான் ஆசைப்பட்டா கேவலமா நினைப்பே...”

திரும்பி அமர்ந்துகொண்டு முகமெல்லாம் சிவக்கப் பேசினாள் மது.

கார்
கார்

``சத்தியமா அப்படி இல்லை மது.”

``அப்போ இங்கே வா. கிஸ் பண்ணு...” மது, தினகரின் முகத்தைத் தன் முகத்தோடு நெருக்கமாக்க, தினகர் சங்கடமாக உணர்ந்தான். மீண்டும் முகிலின் நினைப்பு வந்து - மூன்றாமவன் ஒருவன் பார்க்கிற உணர்வு மேலெழுந்தது.

மதுவந்தி கையை அவன் முகத்திலிருந்து விலக்கினாள். “மூஞ்சியை அப்படி வெச்சுக்கற... என்ன நினைச்சுட்டே நீ?” என்றவள், காரை விட்டுக் கோபமாக இறங்கினாள். தினகர் அவசர அவசரமாகத் தானும் இறங்கினான். மது இருக்கும் பக்கம் அவன் சுற்றி வருவதற்குள், அவள் ஓட்டநடையில் வேக வேகமாகச் சென்று, வந்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி ஏறிக்கொள்ள, அந்த ஆட்டோ விரைந்தது. “மது... மது...” என்று இவன் கத்திய கத்தலுக்குச் சுற்றியிருந்த சிலர் வேடிக்கை பார்த்தனர்.

காரிலிருந்து `உர்ர்ர்ர்ர்’ என்றொரு ஒலி கேட்டு சாலையில் சென்றவர்கள் எல்லாம் திரும்பிப் பார்த்தார்கள்

தினகர் வேகவேகமாக காரை ஸ்டார்ட் செய்து, ரிவர்சில் எடுத்தான். ஆட்டோவைப் பின்தொடர, ஆட்டோ மெயின் சாலைக்கு வந்து, மீண்டும் வலதுபுறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலைக்குள் விரைந்தது. இவன் தொடரும் முன் சிக்னல் விழ, எல்லா வண்டிகளும் நின்றன. இவன் கோபத்திலும் விரக்தியிலும் ஸ்டீயரிங்கில் படபடவென அடித்தான்.

“டேய்... டேய்... டேய்... என்ன பண்றே...” என்றது முகிலின் குரல்.

“... பண்றாங்க. உன்னால அவகூட சண்டை. பார்த்தேல்ல?”

“என்ன சண்டை?”

“என்ன சண்டையா... தெரியாத மாதிரி கேக்குறே. நீ இருக்கறதால நான் அவகூட ஃப்ரீயாவே இல்லை. அவகிட்ட எப்படிச் சொல்றதுன்னும் தெரியலை. சொன்னா யார் நம்புவா... பார்த்தேல்ல, அவ எப்படிக் கோபமாப் பேசிட்டுப் போனான்னு?”

“லூஸா நீ... நான் எப்படிக் கேட்பேன்... நீதான் என்னை ஆஃப் பண்ணிட்டியே?”

`அடடா...’ என்றிருந்தது தினகருக்கு. ஆஃப் செய்துவிட்டால் இது வெறும் இயந்திரம்தானா... இது எதையும் பார்க்காதா... கேட்காதா... பேசாதா?

“அப்போ ஆஃப் பண்ணினா நீ எதையும் பார்க்க, கேட்க மாட்டியா?”

“நீ தூங்கிட்டா யாராவது பேசறதைக் கேட்டுட்டே இருப்பியா... கண்ணை மூடிட்டா பார்த்துட்டே இருப்பியா?” என்றது முகில் பதிலுக்கு. “இன்னொண்ணும் சொல்றேன். எனக்கு கேட்க, பேச மட்டும்தான் முடியும். பார்க்கவெல்லாம் முடியாது.”

“அப்போ நேத்து பீச்சுக்குப் போற வழியில மதுவந்திட்ட என்னென்ன பண்ணினேன்னு சொன்னியே?”

“எங்கே சொன்னேன்... சொல்ல ஆரம்பிச்சேன். அவ்வளவுதான். அதுவுமில்லாம, நீங்க பேசிட்டுப் போனப்ப நீ அவகிட்ட என்ன கேட்டே... அவ உன்கிட்ட என்ன சொன்னான்றதையெல்லாம் கேட்டேனே... அதையெல்லாம்வெச்சு அடல்ட் ஜானர்ல மூணு சீசனுக்கு வெப் சீரிஸே எடுக்கலாம். ச்சை!”

கார்காலக் காதல்

முகில் அப்படிச் சொன்னதும் வெட்கமாக உணர்ந்தான் தினகர். அதையும் தாண்டி மதுவந்தியை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்தித்தான். அவள் பல மாதங்களாகக் கேட்டுக்கொண்டிருந்தாலும், இவன் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்திருக்கிறான். அன்றிரவே அதைப் பற்றிப் பேசி, மதுவந்தியைச் சமாதானப்படுத்தினான். “என்னை நம்பு. நாம லவ் பண்ண ஆரம்பிச்சப்போ, நம்ம ப்ரைவசிக்காகத்தான் அந்தக் காரையே வாங்கினேன். அப்படி இருக்கறப்போ, நீயா வர்றப்போ வேணாம்னு விலகுவேனா... என்ன ஆச்சுன்னு ஒருநாள் சொல்லுவேன்” என்றான். தங்கள் அந்தரங்கம் மூன்றாவது ஒருத்தனுக்கு - அது காராகவே இருந்தாலும் - தெரிந்துவிட்டது என்ற எண்ணம் அவனை சீக்கிரமே திருமணத்துக்குத் தயாராகச் சொன்னது. மதுவந்தியிடம் சொல்லி அந்த வாரமே இரு வீட்டினரும் சந்தித்துக்கொண்டனர். இரு வீட்டுக்கும் இவர்கள் காதல் ஒரு வருடத்துக்குமேல் தெரியும் என்பதால் எல்லாம் சுலபமாக நடந்தது.

மதுவந்தியின் அப்பாதான் எல்லோரையும்விட, உச்சபட்ச உற்சாகத்தில் இருந்தார். “மாப்பிள்ளை ஏதோ பிரமோஷனுக்கப்புறம்தான் கல்யாணம்னு சொன்னதா மது சொன்னா. எனக்குத்தான் இந்த வருஷமே பண்ணிட்டா பரவாயில்லைன்னு இருந்தது. `எதுவும் வேண்டாம்... எல்லாச் செலவையும் பிரிச்சுக்கலாம்’கறீங்க. சந்தோஷம். ஆனா ஒரே ஒரு விஷயம். அவளுக்கு என்னோட கார்னா ரொம்ப இஷ்டம். என்னால புதுசா வாங்க முடியாது. என் காரை நீங்க எடுத்துக்கணும்.”

“என்னை நம்பு. நாம லவ் பண்ண ஆரம்பிச்சப்போ, நம்ம ப்ரைவசிக்காகத்தான் அந்த காரையே வாங்கினேன்''

தினகர் அவரையே பார்த்தான். தினகரின் அப்பா, அம்மா ஒன்றும் சொல்லாமல் தினகரின் முகத்தைப் பார்த்தார்கள். மதுவந்தி உள்ளே இருந்தாள். ``ஓகே அங்கிள்” என்றான் தினகர். தான் மட்டும் ஆபீஸ் போக வர முகிலை எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி மதுவோடு சுற்றும் தருணங்களில் மதுவின் அப்பா கொடுக்கப் போகும் காரில் சுற்றலாம் என்று எண்ணிக்கொண்டான்.

திருமணம் முடிந்த அன்று மண்டபத்தில், மாமனார் அந்தக் காரைப் புதியதுபோல ரெடி செய்து, சுற்றிலும் ரோஜாப்பூக்களெல்லாம் ஒட்டிவைத்திருந்தார். மண்டபத்தை விட்டுக் கிளம்பும்போது `மாப்பிள்ளையும் பொண்ணும் வீட்டுக்கு கார்ல வரட்டும்’ என்று எல்லோரும் சொல்ல, தினகர் அந்தக் காரை எடுத்தான். இடதுபுறம் அமர்ந்துகொண்டாள் மதுவந்தி. காரை ஸ்டார்ட் செய்து செலுத்தி, மதுவைத் திரும்பிப் பார்த்தான். அவள் முகத்தின் ஜொலிப்பு இவனை என்னவோ செய்தது. இடது கையால் அவள் கன்னத்தைத் தடவியபடி புன்னகைத்தான்.

“கார் செம ஸ்மூத்தா இருக்கு. புதுசு மாதிரியே... வாங்கி எவ்வளவு வருஷமாச்சு?”

“ம்ம்ம்... ரெண்டு வருஷம் இருக்கும்.” என்றாள் மதுவந்தி.

எங்கிருந்தோ `கெக் கெக் கெக் கெக்...’ என்ற சிரிப்புச் சத்தம் கேட்டது.