சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

சுடப்பட்ட இம்ரான் கான்... வெடித்த வன்முறை! - மேலும் சரியும் பாகிஸ்தான் பொருளாதாரம்?

சுடப்பட்ட இம்ரான் கான்
பிரீமியம் ஸ்டோரி
News
சுடப்பட்ட இம்ரான் கான்

தன்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை வைத்து அனுதாபங்களைத் தேடிக்கொள்ள நினைப்பார் இம்ரான். ஏற்கெனவே, அரசையும் ராணுவத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசிவந்தார்

பொருளாதார நெருக்கடி, பெருவெள்ளம் எனத் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டுவந்த பாகிஸ்தானில், முன்னாள் அதிபர் இம்ரான் கான் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது!

இம்ரான் கான் தலைமையிலான `பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்’ (பி.டி.ஐ) கட்சியின் அரசு, கடந்த ஏப்ரல் மாதம் கவிழ்க்கப்பட்டது. நவாஸ் ஷெரீப்பின் மகன் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமரானார். அப்போதிலிருந்தே, `முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும்’ என்று பேசிவருகிறார் இம்ரான். அதை வலியுறுத்தும் வகையில், அக்டோபர் 28-ம் தேதி முதல் லாகூரிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணியைத் தொடங்கினார். நவம்பர் 3-ம் தேதி அன்று, இந்தப் பேரணி குஜ்ரன்வாலா பகுதியை அடைந்தபோது, மர்மநபர்கள் சிலர் இம்ரான் கானின் வாகனத்தை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் இம்ரான். எனினும், கூட்டத்திலிருந்த ஒருவர் உயிரிழந்துவிட்டார். இம்ரானின் முழங்காலில் குண்டு பாய்ந்ததாகக் கூறப்பட்டது. சுயநினைவோடு இருக்கும் இம்ரான், தனது வலது காலில் கட்டோடு தூக்கிச் செல்லப்படும் வீடியோவும் வெளியானது. இம்ரானை இரண்டு பேர் சுட்டதாகவும், அதில் ஒருவரான நவீத் முகமதைக் காவல்துறை பிடித்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறையிடம் நவீத் அளித்த வாக்குமூலத்தில், ``நான் சுயமாகத்தான் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டேன். இம்ரான், மக்களைத் தவறாக வழிநடத்துகிறார். அதனால்தான் கொலைசெய்ய முயன்றேன்’’ என்று கூறியிருக்கிறார்.

சுடப்பட்ட இம்ரான் கான்... வெடித்த வன்முறை! - மேலும் சரியும் பாகிஸ்தான் பொருளாதாரம்?

பி.டி.ஐ கட்சியின் பொதுச்செயலாளர் ஆசாத் உமர், ``இந்தக் கொலை முயற்சிக்குப் பின்னால், பிரதமர் ஷெபாஸ், உள்துறை அமைச்சர் ராணா சனவுல்லா, பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்த மேஜர் ஃபைசல் நசீர் ஆகிய மூன்று பேரும்தான் இருப்பதாக இம்ரான் என்னிடம் கூறினார்’’ என்றார். துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு முதன்முறையாக வீல் சேரில் அமர்ந்துகொண்டு இம்ரான் பேசிய வீடியோவில், ``இரண்டு பேர் என்னைச் சுட்டனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சுட்டிருந்தால் நான் பிழைத்திருக்க மாட்டேன். நான்கு குண்டுகள் என்மீது பாய்ந்தன. நான் மதத்தை அவமதித்தேன் என்று வதந்திகளைக் கிளப்பினர். இப்போது, மதத் தீவிரவாதி என்னைக் கொலைசெய்ய முயன்றிருக்கிறான். இந்தச் சதிக்குப் பின்னணியிலிருக்கும் நான்கு பேர் தொடர்பான வீடியோ என்னிடம் இருக்கிறது. எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அந்த வீடியோ வெளியிடப்படும்’’ என்றிருக்கிறார்.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்ததோடு, இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருக்கிறார் பிரதமர் ஷெபாஸ். அதேநேரம், பல இடங்களில் அரசுக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் இம்ரானின் ஆதரவாளர்கள். சில இடங்களில் இது வன்முறையாகவும் மாறியிருக்கிறது.

சுடப்பட்ட இம்ரான் கான்... வெடித்த வன்முறை! - மேலும் சரியும் பாகிஸ்தான் பொருளாதாரம்?

``தன்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை வைத்து அனுதாபங்களைத் தேடிக்கொள்ள நினைப்பார் இம்ரான். ஏற்கெனவே, அரசையும் ராணுவத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசிவந்தார். தற்போது, இந்தத் துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் ராணுவமும் அரசும்தான் இருக்கின்றன என்று பி.டி.ஐ கட்சியினர் குற்றம்சாட்டிவருகிறார்கள். எனவே, இது இம்ரானின் மைலேஜை நிச்சயம் அதிகரிக்கும்’’ என்கின்றனர் பாகிஸ்தான் அரசியலைக் கூர்ந்து நோக்குபவர்கள்.

பொருளாதார நிபுணர்களோ, ``கடந்த ஆண்டு இறுதியிலிருந்தே மோசமாக இருந்த பாகிஸ்தான் பொருளாதாரத்தை, அதல பாதாளத்துக்கே கொண்டு சென்றுவிட்டது சமீபத்திய பெருவெள்ளம். அயல்நாடுகளின் நிதியுதவிகளால் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுகொண்டிருந்தது பொருளாதாரம். ஆனால், இப்போது வெடித்திருக்கும் வன்முறையால், இனி இந்த நிதி உதவிகள் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும்’’ என்று கவலை தெரிவிக்கின்றனர்!

பாகிஸ்தான் மக்களுக்கு உடனடித் தேவை அமைதியும், பொருளாதார நம்பிக்கையும்!