டெல்லியில் கடந்த மே மாதம் மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அவருடன் சேர்ந்து வாழ்ந்த அஃப்தாப் பூனாவாலா கொலைசெய்து 35 துண்டுகளாக வெட்டினார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கு தொடர்பாக கொலைசெய்யப்பட்ட ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் வால்கர் இன்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது விகாஸ் வால்கருடன் பா.ஜ.க முன்னாள் எம்.பி கிரீத் சோமையாவும் உடனிருந்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்த விகாஸ் வால்கர், ``என்னுடைய மகளின் கொலையில் எனக்கு நீதி கிடைக்கும் என்று தேவேந்திர பட்னாவிஸ் உறுதியளித்திருக்கிறார். டெல்லி ஆளுநரையும் ஏற்கெனவே சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர்களும் நீதி கிடைக்க உதவி செய்வோம் என்று உறுதியளித்திருக்கின்றனர். அஃப்தாபுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். இந்தக் கொலையில் அஃப்தாப்-பின் பெற்றோருக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரிக்க வேண்டும். தொடக்கத்தில் விசாரணை தாமதமாகிவிட்டது.

வசாய் போலீஸார் விரைந்து செயல்பட்டிருந்தால் என்னுடைய மகளைக் காப்பாற்றியிருக்கலாம்" என்று தெரிவித்தார். 18 வயதைக் கடந்தவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், ``இது குறித்துக் கூடுதலாக ஆய்வு செய்யப்பட வேண்டும். 18 வயதை கடந்தவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட வேண்டும். என்னுடைய மகள் வீட்டைவிட்டுச் செல்லும்போது, `எனக்கு 18 வயதாகிவிட்டதால் செல்கிறேன்' என்று கூறினார். எனவேதான் இதைச் சொல்கிறேன். எனக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது.
என்னுடைய மகள் வீட்டைவிட்டுப் போகும்போது, அஃப்தாப் எங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடன் தங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அவருடன்தான் தங்குவேன் என்று தெரிவித்துவிட்டுச் சென்றார். பிரச்னையை ஏற்படுத்தும் மொபைல் ஆப்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு மத்தியில் ஷ்ரத்தாவை அவரின் நண்பர்கள் தொடர்புகொள்ள முயன்றனர். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்தத் தகவல் எனக்குக் கிடைத்தவுடன், நான் உடனே மும்பை வசாய் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். ஆனால், போலீஸார் உடனடியாக விசாரணை மேற்கொள்ளவில்லை" என்றார்.