
பா.ஜ.க அறிவுசார் பிரிவிலிருந்து ஒரே இரவில் ரஜினி பக்கம் வந்தார். ரஜினியின் ஆரம்பிக்காத கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல் நேரத்தில் எல்லா தொலைக்காட்சிகளிலும், பிரசார மேடைகளிலும் தலைகாட்டி, `பன்ச்’ வசனமெல்லாம் பேசிவிட்டு, தற்போது ஆள் அட்ரஸே இல்லாமல் இருக்கும் அரசியல் தலைவர்கள் பற்றிய சிறு தொகுப்பு...
கருணாஸ்
அ.தி.மு.க-வில் சீட் ஒதுக்கப்படாததால், `அ.தி.மு.க-வின் தோல்விக்கு வேலை செய்வோம்' என்று சொல்லி அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார் கருணாஸ். அங்கிருந்தும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வராததால், கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றதோடு, `தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை’ என்றும் அறிவித்தார். பதுங்கியிருக்கும் புலி பாயுமா இல்லையா என்று குழப்பத்திலிருக்கிறார்கள் தொண்டர்கள்!
சரத்குமார்
தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாக, `234 தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராக இருக்கிறோம்' என்று பேட்டியளித்த சரத்குமார் பின்னர், ம.நீ.ம கூட்டணியில் இணைந்து 40 தொகுதிகளைப் பெற்றார். பெற்ற 40 தொகுதிகளில், போட்டியிட ஆளில்லாத காரணத்தாலோ என்னவோ மூன்று தொகுதிகளைத் திருப்பியளித்து, அரசியல் வரலாற்றில் புதியதொரு சாதனையைப் படைத்தார்.தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு சமத்துவ சரத், சைலன்ட் சரத் ஆகிவிட்டார்!

மன்சூர் அலிகான்
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி, `தமிழ்த் தேசியப் புலிகள் கட்சியை' தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான். முதலில் `தேர்தலில் போட்டியிட மாட்டேன்' எனப் பேட்டி கொடுத்தவர் பின்னர், கோவை தொண்டாமுத்தூரில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாகக் கூறி பிரசாரத்தில் இறங்கினார். சில நாள்களில், மீண்டும் `நான் போட்டியிடவில்லை' என்றவர், 24 மணி நேரத்துக்குள்ளாக முடிவை மாற்றிக்கொண்டு தொண்டாமுத்தூரில் களமிறங்கினார். தனக்கு ஓட்டுப்போட்ட 428 பேருக்கும் மனசுக்குள்ளேயே நன்றியைச் சொல்லிவிட்டு, தேர்தல் முடிந்ததும் “ரகிட ரகிட ரகிட...” என்று பாடிக்கொண்டே சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டார்!
பிரேமலதா
அ.தி.மு.க., தி.மு.க என எந்தக் கட்சியோடாவது கூட்டணி வைத்துவிடலாம் என்ற முடிவிலிருந்த தே.மு.தி.க-வுக்கு இரண்டு கட்சிகளும் ‘பெப்பே’ காட்டிவிட, அ.ம.மு.க-வோடு ஜோடி சேர்ந்தது அந்தக் கட்சி. விஜயகாந்த்தின் ஃபேவரைட்டான விருத்தாசலத்தில், தனது முதல் தேர்தலைச் சந்தித்தார் கட்சியின் பொருளாளர் பிரேமலதா. கூட்டணி பேரத்தில் இருந்த வீரியம், தொகுதிப் பிரசாரத்தில் இல்லாததால் டெபாசிட் இழந்தார். அதிரிபுதிரியாகப் பேசி முரசில் கிழிசல் விழவைத்த மகனை அடுத்த எலெக்ஷனுக்கு ஊட்டி வளர்த்துக்கொண்டிருக்கிறார் அண்ணியார்!
பழ.கருப்பையா
கிட்டத்தட்ட தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கட்சிகளோடும் பயணித்த பழ.கருப்பையா, 2020-ல் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ரீ-என்ட்ரி கொடுத்து, கமலின் ம.நீ.ம-வில் இணைந்தவருக்கு, தி.நகர் தொகுதி ஒதுக்கப்பட்டது. சுமார் 14,000 ஓட்டுகளைப் பெற்று தோல்வியடைந்தார். ‘என்னடா.. எங்கிட்டுப் போனாலும் முட்டுச்சந்தாவே இருக்கே...’ என்று மையத்தில் அமர்ந்து மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்கிறார்!

அர்ஜுனமூர்த்தி
பா.ஜ.க அறிவுசார் பிரிவிலிருந்து ஒரே இரவில் ரஜினி பக்கம் வந்தார். ரஜினியின் ஆரம்பிக்காத கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். ரஜினி டாடா காட்டிவிட, `இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி’யை அவசரமாக ஆரம்பித்தார். ரோபோவை சின்னமாகவெல்லாம் அறிவித்துவிட்டு, `தேர்தலில் போட்டியிட மாட்டோம்’ என்று பல்டியடித்தார். ‘ரோபோ சர்வீஸுக்குப் போயிருக்கிறது’ என்கிறார்கள் தொண்டர்கள்!





