
பேரூராட்சித் தலைவராவதற்கு முன்பிருந்தே அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் கைத்தறி மூலம் பட்டுப் புடவைகளை நெய்து விற்பனை செய்துவருகிறேன். 2018-ம் ஆண்டில் எனக்கு அறிமுகமானார் சுஜாதா.
கைத்தறிப் பட்டு நெசவாளர்கள், ஜவுளி வியாபாரிகளிடம் கைவரிசை காட்டிவந்த பெண்ணையும், அவரின் கூட்டாளிகளையும் கைதுசெய்திருக்கிறது காவல்துறை. பல ஆண்டுகளாக இந்த மோசடி தொடர்ந்திருப்பதும், கொள்ளையடித்த பட்டுப்புடவைகளை விற்று, சொகுசாக அந்தப் பெண் வாழ்க்கை நடத்தியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது!
ஈரோடு, கோவை, சேலம் மாவட்டங்களில், கைத்தறிப் பட்டு நெசவாளர்களிடமிருந்தும், மொத்த ஜவுளி வியாபாரிகளிடமிருந்தும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவைகள், ஜவுளி ரகங்களை சுஜாதா என்பவர் கொள்முதல் செய்துவந்திருக்கிறார். பணத்தைத் தராமல், நீண்டகாலம் தலைமறைவாகியிருந்த அவரை அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள் தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் பிடித்திருக்கிறார். இதையடுத்து சுஜாதாவை அந்தியூர் போலீஸார் விசாரிக்கவும், பல உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. சுஜாதா மீது வரிசையாக ஒருவர் பின் ஒருவராகப் புகாரளிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

நம்மிடம் பேசிய அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள், “பேரூராட்சித் தலைவராவதற்கு முன்பிருந்தே அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் கைத்தறி மூலம் பட்டுப் புடவைகளை நெய்து விற்பனை செய்துவருகிறேன். 2018-ம் ஆண்டில் எனக்கு அறிமுகமானார் சுஜாதா. முதல் மூன்று மாதங்களுக்கு, எங்களுக்குள் கொடுக்கல், வாங்கல் கணக்கைச் சரியாகப் பராமரித்துவந்தார். அந்த நம்பிக்கையில், 12 லட்சம் ரூபாய்க்குப் பட்டுப்புடவைகளை அவரிடம் கொடுத்தேன். அதற்கான காசோலையைக் கொடுத்தார். அவர் வங்கிக் கணக்கில் பணமில்லாததால், காசோலை ரிட்டர்ன் ஆகிவிட்டது. சுஜாதாவும் தலைமறைவாகி விட்டார். என்னைத் தவிர லட்சுமணன், முனுசாமி, சம்பத் உள்ளிட்ட பலரிடமும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவைகளை வாங்கி சுஜாதா ஏமாற்றியிருக்கிறார். அவரைப் பல ஆண்டுகளாக நாங்கள் தேடிவந்த நிலையில், பணி நிமித்தமாக பெருந்துறைக்குச் சென்றபோது டீக்கடையில் வைத்து அவரைப் பார்த்தேன். உடனே பெருந்துறை போலீஸார் உதவியுடன் சுஜாதாவைப் பிடித்து, அந்தியூர் போலீஸில் ஒப்படைத்தேன்” என்றார்.

தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் லட்சுமணன், “கோவை சின்னியம்பாளையத்தில், `சுஜா சில்க்ஸ்’ என்ற பெயரில் தான் நடத்திவரும் ஜவுளிக்கடையில் விற்பதற்காக, பட்டுப்புடவைகளை என்னிடம் வாங்கிச் சென்றார் சுஜாதா. ஆரம்பத்தில் உடனுக்குடன் பணத்தைக் கொடுத்துவந்தவர், மேலும் மூன்று பேரை அறிமுகம் செய்தார். இவர்கள் அனைவருக்கும் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் பட்டுப் புடவைகளை கொடுத்திருக்கிறேன். ஆனால், பணம்தான் வரவில்லை. ஏற்கெனவே பொள்ளாச்சி, சோமனூர், கருமத்தம்பட்டி, பல்லடம், செல்வபுரம், உக்கடம் எனப் பல பகுதிகளைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களும் சுஜாதாவின் மோசடி குறித்துப் பலமுறை புகார் கொடுத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பிறகுதான் எனக்குத் தெரிந்தது. எங்கள் பணத்தை போலீஸ்தான் மீட்டுத்தர வேண்டும்” என்றார்.
தான் வாங்கிய ஜவுளிகளை வடமாநிலங்களில் விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தில் சொகுசாக வாழ்க்கை நடத்திவந்திருக்கிறார் சுஜாதா. சொகுசு காரில் உலா வந்ததால், அவரது படாடோபத்தைப் பார்த்து பல ஜவுளி வியாபாரிகளும் கடனுக்கு பட்டுப்புடவைகளை கொடுத்திருக்
கிறார்கள். பல மாவட்டங்களிலும் இவர்மீது பல கோடி ரூபாய் அளவில் மோசடிப் புகார்கள் பதிவாகியிருப்பது அந்தியூர் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, சுஜாதா மீதான மோசடி வழக்கைக் குற்றப்பிரிவுக்கு மாற்ற காவல்துறை தீவிரமாகியிருக்கிறது.

இதற்கிடையே அந்தியூர் போலீஸாரிடம் சுஜாதா அளித்த வாக்குமூலத்தில், ‘நான் வாங்கிய ஜவுளி ரகங்களை சேலத்தைச் சேர்ந்த குப்புராஜ், வெங்கடேஷ், சுரேஷ் ஆகியோரிடம்தான் கொடுத்தேன். அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதால், ஜவுளி வாங்கியவர்களுக்குப் பணத்தைத் தர முடியாமல் போய்விட்டது’ எனத் தெரிவித்ததாகச் சொல்கிறது போலீஸ் வட்டாரம்.
ஈரோடு மாவட்ட எஸ்.பி சசிமோகனிடம் பேசினோம். “வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை குற்றப் பிரிவுக்கு மாற்றுவது குறித்து விசாரணையின் இறுதியில் முடிவு செய்யப்படும்” என்றார் சுருக்கமாக.
கொரோனா நெருக்கடியால் வியாபாரத்தில் தொய்வு, மூலப் பொருள்களின் விலையேற்றம் என ஏற்கெனவே நெசவாளர்களும் ஜவுளி வியாபாரிகளும் நொந்துபோயிருக்கிறார்கள். இந்த நிலையில், சுஜாதா போன்றவர்களின் மோசடிகள் அவர்களை மேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்க வைக்கின்றன. இந்த வழக்கை, குற்றப்பிரிவுக்கு மாற்றுவதோடு நெசவாளர்கள், வியாபாரிகள் இழந்த பணத்தை மீட்டுத்தரவேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது. இந்தப் பட்டுப்புடவைக் கொள்ளையில் சுஜாதாவுடன் தொடர்புடையவர்களையும் போலீஸ் கைதுசெய்தால் மட்டுமே நிரந்தரத் தீர்வாகவும், மற்றவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும்!