சினிமா
தொடர்கள்
Published:Updated:

தாலி கிடையாது... 220 ரூபாயில் திருமணம்!

விமல்ராஜ், பத்மா
பிரீமியம் ஸ்டோரி
News
விமல்ராஜ், பத்மா

“நட்பாவே இருப்போமே...’ என பத்மா சொன்னார். அப்படியேதான் பேசினோம்; பழகினோம். ஆனாலும், குடும்பத்தினரோடு அறிமுகப்படுத்திக்கொண்டோம்

பத்திரிகையடித்து, பந்தக்கால் நட்டு, சீர்செனத்தியோடு ஊர் முழுக்க அழைத்து, சுற்றமும் நட்பும் சூழ, விருந்து எனக் களைகட்டாத கிராமத்துக் கல்யாணங்களே இல்லை எனலாம். கொரோனா காலத்தில்கூட குறையில்லாமல் விருந்து வைத்துக் கொண்டாடப்பட்ட திருமணவிழாக்களே அதிகம். அப்படி இருக்கும்போது, 7 பேரோடு, வெறும் 220 ரூபாய் செலவில் நடந்த, அந்த அதிசயத் திருமணம் சமூக வலைதளங்களில் செம டிரெண்ட்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த விமல்ராஜுக்கும், மன்னார்குடியைச் சேர்ந்த பத்மாவுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு நடந்துமுடிந்த அந்த ‘லவ் டு கம் அரேஞ்சுடு’ திருமணம், அத்தனை சம்பிரதாயங்களையும் தகர்த்து புதியதொரு பாதையை இளைய சமுதாயத்திற்குக் காட்டியிருக்கிறது.

தாலி கிடையாது... 220 ரூபாயில் திருமணம்!

“சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில மைனிங் இன்ஜினீயரிங் படிச்சேன்” என்று ஆரம்பிக்கும் விமல்ராஜ் தன் மனைவி பத்மாவைக் கைகாட்டி, “இவங்க, தஞ்சாவூர் சாஸ்த்ரா யுனிவர்சிட்டியில பி.டெக்., பயோ டெக்னாலஜி படிச்சாங்க. ரெண்டு பேரும் வங்கிப் பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு எழுதினோம். கனரா வங்கி புரோபிஷினரி ஆபீஸர் எக்ஸாம்ல செலக்ட் ஆகி டிரெய்னிங் போனோம். ஆனா, அதுவரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டது கிடையாது. எங்கள மாதிரி செலக்டானவங்களுக்கு 2019 நவம்பர் மாசம் சென்னையில 14 நாள் டிரைனிங் நடந்துச்சு. அப்போ எல்லோரும், ‘மை நேம் இஸ்...’ என தங்களை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியபோது, ‘என்னோட பேரு பத்மா பாண்டியன்’ எனத் தன்னோட அப்பா பேரையும் சேர்த்து அழகுத் தமிழில் அறிமுகப்படுத்தியபோது நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். குட்டியான ஃபிரீ ஹேர், நெத்தியில பூ, பொட்டு இல்லாம, காதுல பத்து ரூபா வளையம், கழுத்துல மெல்லிசா சில்வர் செயினோட, நேவி புளூ டாப்ஸ் போட்டு ரொம்ப சிம்பிளா இருந்தாங்க. அந்தக் கூட்டத்துலயே தனிச்சுத் தெரிஞ்சாங்க. ‘நம்மோட எண்ண ஓட்டத்துக்கு ஏத்த மாதிரி இருக்காரே’ன்னு உள்மனசு சொல்லுச்சு.

தாலி கிடையாது... 220 ரூபாயில் திருமணம்!

பயிற்சி முடியிற வரைக்கும், ‘பேசலாமா வேணாமா’ன்னு யோசிச்சு, கடைசியில எல்லோரும் ஊருக்குக் கிளம்பிய அந்தப் பரபரப்பான தருணத்திலதான் இவங்ககிட்டே அறிமுகம் செஞ்சுக்கிட்டு செல் நம்பர் வாங்கிக்கிட்டோம். (விமல்ராஜ் பேசப் பேச புன்முறுவலோடு ஆர்வமாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார் பத்மா). ரெண்டு நாளைக்கு அப்புறம் பத்மாகிட்டே நான்தான் முதல்ல பேசினேன். ரெண்டு பேருமே பல விஷயங்கள்ல ஒரே மாதிரி சிந்தனையோட இருந்தோம். அதுக்கப்புறம்தான், ‘கல்யாணம் பண்ணிக்கிடலாமா?’ அப்படீங்கிற விஷயத்தை ரொம்ப தயங்கித் தயங்கி பத்மாகிட்டே சொன்னேன்” என்றபடியே தன் மனைவியைப் பார்க்க, அவரோ, கூச்சத்தோடு தலைகுனிந்து புன்முறுவலை வெளிப்படுத்தினார்.

தாலி கிடையாது... 220 ரூபாயில் திருமணம்!

“நட்பாவே இருப்போமே...’ என பத்மா சொன்னார். அப்படியேதான் பேசினோம்; பழகினோம். ஆனாலும், குடும்பத்தினரோடு அறிமுகப்படுத்திக்கொண்டோம். அப்போதுதான், பத்மாவின் குடும்பத்தில் உள்ள எல்லோருமே முற்போக்குச் சிந்தனையோடு இருந்த விஷயம் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதே மாதிரி என்னோட அம்மாவுக்கும் பத்மாவை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அப்புறந்தான் எங்களை அறியாமலேயே மேரேஜ் பத்திப் பேச ஆரம்பிச்சோம். படிக்கிற காலத்துல இருந்தே பெரியாரோட சிந்தனைகளோடதான் நான் வளர்ந்தேன். பத்மாவும் சீர்திருத்தவாதியாகவே வளர்க்கப்பட்டிருக்காங்க. ஸோ... நாங்க திருமணம் செஞ்சுக்கலாம்னு முடிவெடுத்தப்ப, மத அடிப்படையிலான எந்தவித சடங்கோ சம்பிரதாயமோ இல்லாம ரொம்ப சிம்பிளா இருக்கணும்னு திட்டமிட்டோம். குறிப்பா, தாலி கட்டுறதுல எங்க ரெண்டு பேருக்குமே உடன்பாடு இல்லை. இதைச் சொன்னப்போ பத்மா குடும்பத்துல எல்லோருக்கும் ஓ.கே., ஆனா, ‘தாலி இல்லாம கல்யாணமா..?’னு எங்க வீட்ல அதிர்ச்சியானாங்க.

‘தாலிதாம்ப்பா ஒரு பொண்ணுக்குப் பாதுகாப்பு’ன்னு அம்மா சொன்னப்போ, ‘தாலி கட்டுனவங்களுக்கும், யூனிஃபார்ம் போட்ட பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும்கூட அநியாயம் நடக்குதே’ ன்னு சொல்லி அம்மாவுக்குப் புரிய வெச்சேன். அதோட, ‘அப்பா தவறுனப்போ, கணவனை இழந்த உங்களோட தாலியைக் கழட்டி, பூ, பொட்டெல்லாம் அழிச்சாங்க, கல்யாணம், காதுகுத்துன்னு போனாக்கூட தாலி இல்லாட்டி கொஞ்சம் தள்ளித்தானே வெக்கிறாங்க. அதே மாதிரி மனைவியை இழந்த ஆம்பளைங்களுக்குச் செய்ய முடியுமா? அப்போ, தாலிங்கிறது பெண்ணுக்கு மட்டும் அடிமையின் சின்னமாத்தானே இருக்கு? அதையும் மீறி, ‘தாலிதான் திருமணத்தின் அடையாளம்’ அப்படீன்னா, நானும் தாலி கட்டிக்கிறேன்’ அப்படீன்னு சொல்லி அம்மாவைப் புரிய வெச்சு சம்மதம் வாங்கினேன்” என்றவர், அம்மாவைக்கூட புரிய வெச்சுட்டேன். ஆனா, சொந்தக்காரங்கள தெளிய வெக்கிறதுதான் ரொம்பவே கஷ்டமாப் போச்சு” என்கிறார் விமல்ராஜ்.

மன்னார்குடியில் உள்ள பத்மாவின் வீட்டில் ரத்தபந்தங்கள் மற்றும் குழந்தைகள் என வெறும் ஏழே பேர் குழுமியிருக்க, பத்மாவின் தந்தையும் இலக்கியவாதியுமான பாண்டியன் முன்னிலையில், வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி வாசித்து, மிக எளிய முறையில் மாலை மாற்றி இனிதே நடைபெற்றது வரதட்சணை இல்லாத, தாலி கட்டாத அந்த அதிசயத் திருமணம். “மொத்தச் செலவே மேரேஜ் ரெஜிஸ்ட்ரேசனுக்கு ஆன 220 ரூபாதான் சார்” என்கின்றனர் ‘விமல்ராஜ் - பத்மா’ தம்பதியினர்.

ஆடம்பரத்தை அகற்றிய மணமக்களுக்கு வாழ்த்துகள்!