
ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
சங்ககாலத்தில் வைகைக்கரையில் நகரப் பண்பாடு நிலவியது என்பதற்கான முதல் அகழ்வாய்வுச் சான்றைக் கீழடி வழங்கியுள்ளது; இந்த அகழ்வாய்வின் மூலம் தமிழர் எழுத்தறிவு தொடர்பான கால நிர்ணயம் கி.மு ஆறாம் நூற்றாண்டிற்கு நகர்ந்திருக்கிறது. சங்க இலக்கியம் வெறும் கற்பனையோ, புனைகதையோ அல்ல... அது அக்கால வாழ்வியல் முறை பற்றிய தெளிவான படப்பிடிப்பு என்பதைக் கீழடி ஆய்வுகள் தெளிவாக்குகின்றன. ஆனால், கீழடி ஆய்வின் முக்கியத்துவத்தைத் தீர்மானிப்பவை இவை மட்டுமல்ல. இந்த அகழ்வாய்வு இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டங்கள் பற்றிய இரண்டு புதிர் முடிச்சுகளின் மீது ஒரே நேரத்தில் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. புதிர் முடிச்சுகளா? ஆமாம். அவை பற்றித் தெரிந்துகொண்டால் இந்த ஆய்வு முடிவுகள் தரும் வியப்பை நம்மால் முழுமையாக உணர முடியும்.
இரண்டு புதிர்கள்!

சிந்துவெளி நகரப் பண்பாட்டை உருவாக்கிய மக்கள் பேசிய மொழி என்ன? சிந்துவெளிப் பண்பாடு எப்படி நலிவடைந்து சிதைந்தது? அப்பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் என்ன ஆனார்கள்? எங்கே போனார்கள்? இதுதான் வரலாற்று ஆய்வாளர்களுக்குக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் முதல் புதிர்.
இந்தியப் பண்பாட்டுப் பரப்பில் தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தையும், மிகத்தொன்மையான இலக்கண இலக்கிய மரபுகளையும் கொண்ட தமிழ்ப்பண்பாட்டுத் தொன்மங்களின் தோற்றப்புள்ளி எது? இது இரண்டாவது புதிர்.
இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டத்தின் தெளிவற்ற தன்மையை மாற்ற இந்த இரு கேள்விகளுக்கும் விடைகாண வேண்டிய தேவை உள்ளது. ஆனால், உண்மையில் இந்த இரு கேள்விகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை; இன்னும் சொல்லப் போனால் இவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த வரலாற்று உண்மையை உலகம் அறிவதற்கான ஒரு சிறிய பங்களிப்பைச் செய்கிறது கீழடி அகழ்வாய்வு.
சிந்துசமவெளிப் பண்பாடு அநேகமாகப் பழந்தமிழ்ப்பண்பாட்டோடு தொடர்புடையதாக இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தை வங்காள மொழியியல் அறிஞர் சுனித் குமார் சட்டர்ஜி 1924இல் வெளியிட்டார். அதுவே, சிந்துவெளிப் பண்பாட்டின் ‘திராவிடக் கருதுகோள்’ எனப்படும் கருத்தியலின் தொடக்கம்.
அதன் பின்னர், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட மொழிக்குடும்ப மற்றும் குறிப்பாகப் பழந்தமிழ்த் தொன்மத் தொடர்புகளை வலியுறுத்தும் வகையில் ஹீராஸ் பாதிரியார், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும், சிந்துவெளி நாகரிக மக்கள் பேசிய மொழி பற்றிய ஒருமித்த கருத்து இதுவரை ஏற்படவில்லை. சிந்துவெளி எழுத்துகளை ஐயத்திற்கு இடமின்றி இதுவரை வாசிக்கமுடியவில்லை என்பதே இதற்குக் காரணம்.
சிந்துவெளியும் சங்கவெளியும்!

தற்கால மதுரை நகரத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. மதுரையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிடைக்கும் சங்ககாலப் பெயர்களுடன் கூடிய தமிழ் பிராமி மற்றும் பழந்தமிழ்க் கல்வெட்டுகளும் ஏனைய சான்றுகளும் இதை வலியுறுத்துகின்றன. ஆனாலும் ஒரு விரிவான நகர நாகரிகத்தின் எச்சங்கள் என்று கூறத்தக்க அகழ்வாய்வுச் சான்றுகள் இதுவரை கிட்டாமல் இருந்தன.வைகையின் இரு கரைகளிலும் 293 இடங்களை அடையாளப்படுத்தியும் அகழ்வாய்வுகள் துரிதகதியில் நடக்கவில்லை என்பதே உண்மை. இந்தக் குறையைத் தீர்க்கும் திறன் கொண்டது கீழடி அகழ்வாராய்ச்சி. அதுமட்டுமன்றி அகழ்வாராய்ச்சிகள் பற்றிய பெரிய விழிப்புணர்வையும் கீழடி ஏற்படுத்தியுள்ளது.
சிந்துவெளியின் பழந்தமிழ்த் தொடர்பு பற்றிப் பேச்சு வந்தாலே அதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட முதல் வாதமே கால, நில இடைவெளிதான். அதாவது, சிந்து வெளிப் பண்பாட்டு நிலப்பகுதிக்கும் சிந்துவெளிப் பண்பாட்டுக் காலத்திற்கும் சங்க இலக்கிய காலத்திற்கும் இடையே உள்ள இடைவெளி. இந்த இடைவெளியை அகழ்வாய்வுகள் நிரப்ப வேண்டும். அதுமட்டுமன்றி, சங்க இலக்கியங்கள் பற்றிய சரியான அறிதலும் இதற்குத் துணை புரியும். சிந்துவெளி ஒரு நகர்மயப் பண்பாட்டின் உச்சக் கட்டம் என்றால், சங்க இலக்கியம் இந்தியாவின் நகர்மய இலக்கியத்தின் கம்பீரமான தொடக்கம்.
சங்க இலக்கியங்கள் பேசும் வாழ்வியலையும் கடந்த கால மீள் நினைவுகளையும் சங்ககாலத் தமிழ் அரசியல் எல்லைக்குள் அடக்கிவிட முடியாது. அதற்கும் அப்பால் உள்ள நிலப்பரப்புகள்; வாழ்வியல் அனுபவங்கள், தொல் நிகழ்வுகளுக்கும் சாட்சியமாக இருக்கும் ஒரே இலக்கியம் சங்க இலக்கியம்தான். அதனால் தான் பாலைவனத்தில் பசி தாங்காமல் எலும்பு தின்ற ஒட்டகத்தைப் பற்றி அவ்வளவு தெளிவாகச் சங்க இலக்கியத்தால் பேச முடிகிறது. பரந்த கடல் சார்ந்த வாழ்வியலையும் பரந்த பாலைவனத்தையும், மலைகளையும், மழைக்காடுகளையும் வயற்காடுகளையும் ஆற்றங்கரை நாகரிகத்தையும் ஒரே மூச்சில் பேசும் ஐந்திணை இலக்கியம் சங்க இலக்கியம் மட்டுமே. நகர்மய வாழ்வியலை, கடல் வணிக மரபை, ‘கலம் செய்யும் கோ’-வான குயவரை, கைவினைக் கலைஞர்களை, கல்விப் பரவலாக்கத்தை, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று நேசம் வளர்க்கும் வாழ்வியலைக் கொண்டாடும் சங்க இலக்கியமும் அதன் உலகப்பார்வையும்தான் இந்தியப் பண்பாட்டு மரபில் சிந்துவெளி உன்னதத்தின் தொடர்ச்சிக்குச் சான்றளிக்க முடியும். அந்தத் தொடர்ச்சிக்குக் கீழடி கண்கூடான சாட்சியமாகிறது.
கீழடிப் பகடை

கீழடியில் தந்தத்தாலும் சுடுமண்ணாலும் செய்த சில பகடைக்காய்கள் கிடைத்துள்ளன. இந்தப் பகடைக் காய்களையும், ஹரப்பா, லோத்தல் ஆகிய சிந்துவெளிப் பண்பாட்டுக் காலத்துப் பகடைக்காய்களையும் ஒரு மேஜையில் வைத்துக்கொண்டு சங்க இலக்கியத்தில் கலித்தொகையின் 136-வது பாடலைப் படித்தாலே போதும், சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்பதும் அந்த வேர்நிலைத் தொடர்பிற்கு வெளிச்சம் தருவது கீழடி என்பதும் உடனே புரிந்துவிடும். பகடை விளையாட்டில் ‘பத்து உருவம்’, அதாவது பத்து என்ற எண் பெற்றவன் மனம் எப்படி மகிழ்வடையும் என்பது கலித்தொகைக் காட்சி. ‘பகடைக்காய் உருட்டி பத்து பெறலாம்’ என்பதற்கு ஒன்று முதல் ஆறு சிறுவட்ட அச்சுக்கீறல்கள் கொண்ட கன சதுர வடிவிலான கீழடிப் பகடை சாட்சி. அதைப்போலவே லோத்தல், ஹரப்பா பகடைகளும் சாட்சி. இரண்டாயிரம் மைல் இடைவெளியை உருட்டி விளையாடுகிறது இந்தப் பகடை. உண்மையில் சிந்து வெளிப் பண்பாட்டையும் இந்தியாவின் தொன்மங்களையும் அறிய கீழடியும் சங்க இலக்கியமும் உருட்டிவிட்டிருக்கிற புதிய பகடைகள் இவை.
பானைக் கீறல்கள்
சிந்துவெளி எழுத்துப் பொறிப்புகளை இதுவரை வாசிக்க இயலவில்லை. அதற்குப் பின்னால், வாசிக்க முடியும் என்ற நிலையில் நம் கவனத்திற்கு வருவது தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகளும் வடநாட்டு பிராமி எழுத்துகளும்தான். சிந்து வெளி எழுத்துப் பொறிப்பிற்கும் அசோகர் கல்வெட்டுக்கும் இடையிலான காலகட்டத்தில் எழுத்தறிவுக்கு என்ன கதி நேர்ந்தது என்று யாருக்கும் தெளிவான விடை தெரியாது. ஆனால் சிந்துவெளிக் கீறல்களைப் போன்ற வடிவ ஒற்றுமை கொண்ட பானைக்கீறல்கள் சிந்துவெளியோடு தொடர்புடையவை, அவையே பிராமி போன்ற எழுத்து வடிவங்களுக்கு முன்னோடி என்ற கருத்து இப்போது வலுப்பெறுகிறது. அத்தகைய பானைக் கீறல்களில் 75 சதவிகிதம் தமிழ்நாட்டில் தான் கிடைத்துள்ளன என்பதைப் புறக்கணித்துக் கடந்துசெல்ல முடியாது. கீழடியில் தமிழகத் தொல்லியல்துறை நடத்திய அகழ்வாய்வில் மட்டுமே 1001 பானைக்கீறல்கள் கிடைத்துள்ளன. அவற்றில் பல சிந்துவெளிக் குறியீடுகளுடன் அச்சு அசலாகப் பொருந்துகின்றன. இதை எதேச்சையானது என்று சொல்லிவிட முடியாது. இதுகுறித்த விடிவான ஆய்வுகள் தேவை.
கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்
சிந்துவெளி நிலப்பகுதிகளில் இன்றுவரை நிலைபெற்றுள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி உள்ளிட்ட தமிழ்த்தொன்மங்களோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான ஊர்ப் பெயர்கள் இந்தத் தொப்புள்கொடி உறவுக்கு சாட்சிகள். சிந்துவெளிப் பகுதிகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் பகுதிகளில் இன்றும் இந்தத் தமிழ்ப்பெயர்களில் உள்ள ஊர்கள் அப்படியே உள்ளன. இப்பெயர்களுக்குத் தமிழ்ப்பண்பாட்டு மரபுகளைத் தவிர வேறு யாரும் உரிமை கொண்டாடவில்லை; வேறு எந்தப் பண்டைய இலக்கியங்களும் இப்பெயர்களை அறியவில்லை என்பதையும் மறந்துவிட முடியாது.
சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்பது முழக்கம் அல்ல; உண்மை. சிந்துவெளி அகழ்வாய்வுத் தடயங்களையும் கீழடிபோன்ற புதிய தடயங்களையும் இணைக்கும் புள்ளி சங்க இலக்கியம்தான். ஏனெனில் சங்க இலக்கியங்கள், இந்தியத் துணைக்கண்டத்தில் செழித்த ஓர் உயர்பண்பாட்டின் பட்டறிவை மீள்நினைவைப் பத்திரப்படுத்திய ஆவணக் களஞ்சியம். அதுவே நமது பண்பாட்டின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் விழா மேடை.
ஒருவகையில் வைகை தாமிரவருணிக் கரைகள் இன்னும் முழுவதுமாக வாசிக்கப்படாத சங்க இலக்கியங்கள்... சங்க இலக்கியம், இன்னும் முழுவதுமாகத் தோண்டப்படாத கீழடி.
“மண்பானைத் தடம் எங்கள்
பண்பாட்டின் ஆழம்
சிந்துக்குள் சிதைந்தாலும்
கீழடியில் மீளும்”
என்பது எதிர்பார்ப்பு அல்ல; யதார்த்தம்.