அலசல்
Published:Updated:

தம்பி டீ இன்னும் வரல! - “திருட்டுப் பயலுக புழங்கவா கட்டினாங்க சமத்துவபுரம்?”

 சிங்கம்புணரி
பிரீமியம் ஸ்டோரி
News
சிங்கம்புணரி

வேதனையில் சிங்கம்புணரி மக்கள்

ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் என்பது இந்தியாவின், தமிழகத்தின் மிகப்பெரிய கனவு. அதை நோக்கிய முயற்சிகளில் ஒன்றுதான் ‘சமத்துவபுரம்’ என்கிற முன்னெடுப்பு. கட்டி முடிக்கப்பட்ட சமத்துவபுர குடியிருப்புகளை மக்களுக்கு வழங்காமல், அதில் அரசியல் செய்து மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதும், பொறுப்புகளை அலட்சியப்படுத்துவதும் சிங்கம்புணரி மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது!

தம்பி டீ இன்னும் வரல! - “திருட்டுப் பயலுக புழங்கவா கட்டினாங்க சமத்துவபுரம்?”

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணமங்கலப்பட்டி ஊராட்சியில், ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் `பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்’ தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது.

10 ஏக்கர் நிலம் வனத்துறையிடமிருந்து பெறப்பட்டு சுமார் 6 ஏக்கரில் 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. ரேஷன் கடை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய இத்திட்டம் 2010-ல் தி.மு.க ஆட்சிக்காலத்தில் 80 சதவிகிதம் முடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, இந்தத் திட்டத்தைக் கைவிட்டது. பல்வேறு அழுத்தங்களால் 2011-ம் ஆண்டு மீண்டும் இதர பணிகள் முடிக்கப்பட்டு, திறப்புவிழாவுக்குத் தயாரானது. வீடுகள் ஒதுக்குவதில் குழப்பம் ஏற்படவே, மீண்டும் பூட்டுப் போடப்பட்டது. வீடற்ற ஏழை, எளிய மக்கள் பலரும் குரல் கொடுத்தும், மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. தற்போது, கருவேல மரங்களும் புதர்களும் நிறைந்த ஆபத்தான காடாக மாறிக்கிடக்கிறது இந்தச் சமத்துவபுரம். ஆடு மாடு மேய்க்கும் இடமாகவும், சமூக விரோதிகளின் இரவுநேரக் கூடாரமாகவும் அந்தக் குடியிருப்புகள் மாறியிருப்பது பெரும் கொடுமை.

தம்பி டீ இன்னும் வரல! - “திருட்டுப் பயலுக புழங்கவா கட்டினாங்க சமத்துவபுரம்?”

அலங்கோலமாகக் கிடக்கும் சமத்துவபுரத்துக்கு நாம் நேரில் சென்றோம். பல வீடுகளின் முன்பகுதி சேதமடைந்தும், கதவுகள் உடைக்கப்பட்டும், மின்கம்பிகள் அறுந்த நிலையிலும் கிடந்தன. ஆங்காங்கே மது புட்டிகள் உடைக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. முன்பிருந்த ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’ என்ற பெயர்ப் பலகையைக்கூட காணவில்லை. பிடுங்கிச் சென்று எடைக்குப் போட்டுவிட்டார்கள் போல. பிரமாண்ட தண்ணீர் டேங்க்கில் சொட்டுத் தண்ணீர் இல்லாமல் காய்ந்துகிடந்தது.

அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘இம்புட்டு வீடுக இருந்தும் யாருக்கும் பிரயோசனமில்லாம கெடக்கு தம்பி. தண்ணி வசதி, கரன்ட் வசதி, ரேசன் கடைகூட கட்டினாங்க. எம்புட்டு காசு... எல்லாம் வீணாப்போய்க் கெடக்கு. ஒரு வாரத்துல தொறந்துருவோம்னு சொன்னவுகல்லாம் எங்க போனாகனு தெரியல. கிட்டத்தட்ட பத்து வருசம் ஆகப்போகுது... தொறந்த பாடில்ல. தண்ணியடிக்கிற பயலுகளுக்கும், காசுக்கு பொம்பளைகள கூட்டிட்டு வர்ற பயலுகளுக்கும்தான் இது அதிகமா பயன்படுது. ராத்திரியில திருடப்போற பயலுகளுக்குக்கூட இந்த இடம்தான் கூடாரமா இருக்கு. அதுக்கா கட்டிப்போட்டுச்சு அரசாங்கம்... மக்க ஒண்ணுமண்ணா வாழணும்னு கட்டுன வீடுகள இப்பிடிப் போட்டா நியாயமா தம்பி... என்னத்த சொல்ல... இனி, இத திறப்பாங்கனு நம்பிக்கை இல்லாமப் போச்சு’’ என்றார் விரக்தி மேலிட.

தம்பி டீ இன்னும் வரல! - “திருட்டுப் பயலுக புழங்கவா கட்டினாங்க சமத்துவபுரம்?”

இது குறித்து திருப்பத்தூர் எம்.எல்.ஏ-வான பெரிய கருப்பனிடம் பேசினோம். ‘‘என் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்தான் இந்தச் சமத்துவபுரம் வருகிறது. இந்தத் தொகுதியில் தொடர்ந்து தி.மு.க வெற்றிபெற்று வருவதால், வேண்டுமென்றே சமத்துவபுரம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இது குறித்துச் சட்டமன்றத்தில் இரண்டு முறை பேசியிருக்கிறேன். ஆனால், எந்தப் பயனுமில்லை. ‘சாதிய பாகுபாடு இல்லாமல் சமத்துவம் பெற வேண்டும்’ என்று கலைஞரால் கொண்டுவரப்பட்ட முத்தாய்ப்பான திட்டம் இது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க அரசு வேண்டுமென்றே கிடப்பில் போட்டிருக்கிறது. ‘இந்த வீடுகளை யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள்... அது அ.தி.மு.க-காரர்களாக இருந்தாலும் பரவாயில்லை’ என்றுகூடத் தெரிவித்துவிட்டேன். இன்னும்கூடச் செயல்படுத்த அவர்களுக்கு மனம் வரவில்லை’’ என்றார் வருத்தத்துடன்.

இது குறித்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஜி.பாஸ்கரனிடம் பேசினோம். ‘‘இந்தத் திட்டம் என் கவனத்துக்கு வரவேயில்லை. நீங்கள் சொல்லித்தான் சமத்துவபுரம் ஒன்று திறக்கப்படாமல் இருக்கிறது என்பதே தெரியவருகிறது. சிங்கம்புணரி பகுதியில் நடக்கும் எத்தனையோ நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருகிறேன். இதுவரை என்னிடம் யாரும் சொல்லவில்லை. தொகுதி எம்.எல்.ஏ-வோ, பொதுமக்களோகூட என்னிடம் சொல்லவில்லை. நியாயமான விஷயமாக இருந்தால், அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று திறக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார்.

செந்தில்நாதன் - பெரிய கருப்பன் - பாஸ்கரன்
செந்தில்நாதன் - பெரிய கருப்பன் - பாஸ்கரன்

அ.தி.மு.க-வின் சிவகங்கை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான செந்தில்நாதனிடம் கேட்டோம். ‘‘அந்தச் சமத்துவபுரத் திட்டத்தை தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே முழுமையாக முடித்திருக்கலாம். ஆனால், கட்டடப் பணிகளைப் பாதியிலேயே விட்டுவிட்டனர். போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல், குடிநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகளையே முழுமையாகச் செய்யாமல் விட்டுவிட்டனர். தி.மு.க ஆட்சிக்காலத்தில் வேலைகளையும் முழுமையாக முடிக்கவில்லை; பயனாளிகளுக்கு வீடுகளையும் முறையாக ஒதுக்கவில்லை. அதுதான் அடிப்படைப் பிரச்னையே. தி.மு.க கிளைச் செயலாளர்களுக்கு வீடுகளை ஒதுக்கியிருப்பதாக அப்போதே பொதுமக்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். அந்தக் குழப்பத்தால்தான் திறக்கப்படாமல் போனது. ஆனாலும், பணிகள் முழுமையடைந்துவிட்டதால், அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அங்கு மராமத்துப் பணிகள் செய்து விரைவில் திறக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

சமத்துவமான வாழ்வு ஒரு பெருங்கனவு... அதில் புதர்மண்டிப் போகும்படிச் செய்யாதீர்கள் ஆட்சியாளர்களே!