
சொந்த ஊரு தர்மபுரி. பொண்ணுன்னா வீட்டுக்குள்ளேயே கெடக்கணும்ங்கிற ஜனங்க வாழுற கூட்டத்துல வளர்ந்தவ நான்.
“நாட்டுப்புறப் பாட்டுக்கு ஒரு உணர்ச்சி இருக்கு. மக்களுடைய சோகம், மகிழ்ச்சி, பாரம்பர்யம், கொண்டாட்டம் மட்டுமல்லாம, நம்மை அடக்கி ஒடுக்குபவர்களுக்கு எதிரான குரலாகவும் ஓங்கி ஒலிச்சிருக்கு.
கண்ணு முன்னாடி நடக்குற அநீதியைப் பாட்டாப் பாட எல்லா மக்களுக்கும் உரிமை இருக்கு. என்னைப் பொறுத்தவரை எழுத்தும், குரலும் ஒரு ஆயுதம். அதுதான் என் போராட்ட வடிவம்’’ - ரோஜா ஆதித்யாவின் வார்த்தைகளில் அவ்வளவு உக்கிரம். சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக சமூகவலைதளங்களில் ஓங்கி ஒலிக்கும் குரல் ரோஜாவினுடையது. `மக்கள் பாட்டு’ என்ற பெயரில், சமூகப் பிரச்னைகளை கருவாகக் கொண்டு, நாட்டுப்புறப் பாடல்கள் பாடி சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். நாட்டுப்புறப் பாடலுக்கு ‘ராப்’ வடிவத்தைக் கொடுப்பது ரோஜாவின் இன்னொரு சிறப்பு.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ரோஜா பாடிய ‘அய்யா தூரம் போகணுங்க’ பாடலும், ‘ஆனா, கானா’ பாடலும் பெரிய ரசிகர் பட்டாளத்தை அவருக்கு உருவாக்கியது. ‘ஜிப்ஸி’ படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாகவும் உருவெடுத்த்திருக்கும் ரோஜாவுடன் ஒரு மாலை நேரத்தில் உரையாடினேன்.
”சொந்த ஊரு தர்மபுரி. பொண்ணுன்னா வீட்டுக்குள்ளேயே கெடக்கணும்ங்கிற ஜனங்க வாழுற கூட்டத்துல வளர்ந்தவ நான். என்னோட அடையாளத்துக்காக நிறைய போராடியிருக்கேன். நிறைய பேரை எதிர்த்திருக்கேன். எனக்கு ரெண்டு அக்கா. அப்பா இறந்ததுக்கு அப்புறம் என்னை வெளிய விடவே ரொம்ப பயந்தாங்க. பொண்ணுக்கு ஆசை, லட்சியமெல்லாம் இருக்கக் கூடாதாங்கிற கேள்வி நிறைய முறை மனசுக்குள்ள வந்துருக்கு. நான் பொண்ணுங்கிற அடையாளமே என் வளர்ச்சியைத் தடுத்த நேரத்துல கண்ணீர் விட்டதைவிட, சாதிக்கணுங்கிற வெறிதான் அதிகமாச்சு. வீட்ல சண்டை போட்டுருக்கேன். அந்தச் சூழலில் அக்காதான் துணையா நின்னாங்க. ’வெளிய போயி உலகத்தைப் பாரு. மத்தவங்க கேள்விக்கு உன்னோட சாதனையை பதிலா குடு’ னு தைரியமா என்னை வெளிய அனுப்புனாங்க. என் மேல விழுந்த ஏளனப் பார்வையை பெரிசா எடுத்துக்கிட்டது கிடையாது. தடையோ, பயமோ இல்லாம எல்லா இடத்துலயும் எனக்கான அடையாளத்தை விதைச்சுக்கிட்டே இருந்தேன். அதுக்கான பதிலைத்தான் இப்ப இந்தச் சமுதாயம் திருப்பிக் கொடுத்துருக்கு. இது போராடிக் கிடைச்ச வெற்றி, அடையாளம். நான் இப்போ சிறகு முளைச்ச பட்டாம்பூச்சி. ஆனா இன்னும் எத்தனையோ பொண்ணுங்க கனவைத் தொலைச்சுட்டு வாழப் பழகிட்டு இருக்காங்க. முன்னாடி படிப்புக்காகப் போராடுனாங்க. இப்ப படிப்பு கிடைச்சுருது... கனவுகளுக்காகப் போராட வேண்டியிருக்கு. பெண்களை இந்தச் சமூகம் எளிதா அங்கீகரிக்கிறதில்ல. வாழ்க்கையில் ஜெயிச்சு மாற்றத்தின் அடையாளமா நிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாடியும் நிறைய புறக்கணிப்புகள் இருக்கத்தான் செய்யும். மகள்களை தேவதையா கொண்டாடுற நிறைய அப்பாக்கள் மனைவியை மனுஷியாக்கூட மதிக்கிறது இல்ல. இந்த நிலையில் இருக்கிற பெண்கள் போராடணும். அடையாளத்தோட வெளியே வரணும், அவங்களுக்கான பாதையா நானும் என் பாட்டும் இருப்போம்’’ என்ற ரோஜா, கணீர்க் குரலுடன் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த பாடல் ஒன்றைப் பாடி சிலிர்க்க வைக்கிறார். அவருடைய குரல் மட்டுமல்ல, கருத்தும் காற்றில் கலந்து இதயத்தை அசைக்கிறது.

``நாட்டுப்புறக் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் இன்னும் நம்மோட மண்ணில் சரியான அங்கீகாரம் கிடைக்கல. நாட்டுப்புறப் பாடல் பாடுறேன்னு வாய்ப்பு கேட்டு போனா அவமானப்படுத்தி அனுப்புறாங்க. தமிழர்கள்கிட்ட ஒரு தனித்தன்மை இருக்கு. தமிழன்ங்கிற உணர்வை விதைச்சுட்டா போதும். உயிரைக் கொடுத்தாவது ஒண்ணு சேர்ந்து துணை நிப்பாங்க. அதை வெச்சுதான் இன்னைக்கு நிறைய கட்சிகள் இங்க வாழ்ந்துட்டுருக்கு. அந்த உணர்வைத்தான் நான் தட்டி எழுப்பிட்டுருக்கேன். நம்மோட நாட்டுப்புறப் பாடலை மீட்டெடுக்க எல்லாரும் ஒண்ணு சேரணும். உலகம் முழுக்கக் கொண்டு போகணும். அன்னைக்கு மத்த இசைகளைப் போல நாட்டுப்புறப் பாடலும் பறையுடன் சேர்ந்து உலகம் முழுக்க ஓங்கி ஒலிக்கும்’’ - வார்த்தைகளில் அவ்வளவு நம்பிக்கை.
“நாட்டுப்புறப் பாட்டைச் சில நிமிஷம் கேட்டுட்டுக் கடந்து போக முடியாது. ஒவ்வொரு வரியிலயும் உணர்ச்சிகள், பதிலை எதிர்நோக்கும் வீரியமான வார்த்தைகள், மண்வாசனைன்னு பாட்டு முழுக்க ரசனையும் உணர்வுகளும் புதைஞ்சுகிடக்கும். நாட்டுப்புறப் பாடல் பாட, சங்கீதம் முறைப்படி தெரிஞ்சிருக்கணுங்கிற அவசியமும் இல்ல. சாதித்தடை இல்ல. மனசுக்குள்ள போராட்ட உணர்வு இருக்கிற யாரு வேணுன்னாலும் நாட்டுப்புறப் பாட்டு பாடலாம். சாமிக்கும் பாடலாம், சாவுக்கும் பாடலாம்’’ என்கிற ரோஜா தன் இசைப் பயணம் தொடங்கியது பற்றிப் பகிர்கிறார்.
``சின்ன வயசுல இருந்தே பாட்டு மேல ஆர்வம். முறைப்படி கத்துக்கிட்டேன். படிப்பு முடிச்சு சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில வேலை. அப்ப ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்துச்சு. வீட்டுக்குத் தெரியாம போராட்டத்துல கலந்துக்கிட்டேன். அந்தக் களத்துல விவசாயம் பத்தி நான் பாடுன பாட்டு நிறைய பேருக்கு பிடிச்சுப்போச்சு. புதுத் தெம்பு கிடைச்சுது. ஐ.டி வேலையை விட்டுட்டேன். தனியார் தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சியில் வாய்ஸ் வோக்கலாக சேர்ந்தேன். சமூக வலைதளங்களில் பாடல்கள் பாடி வெளியிட ஆரம்பிச்சேன். எனக்கு கர்நாடக சங்கீதம், வெஸ்டர்ன், ராப் பாடல்கள் பாடத் தெரியும். ஆனா மனசுக்கு நெருக்கமானதுன்னா அது நாட்டுப்புறப் பாடல்கள்தான். நிறைய பேர் என்னை ‘பொழைக்கத் தெரியாத பொண்ணு’ன்னு கிண்டல்கூட பண்ணியிருக்காங்க. ஆனா அதை அவமானமா எடுத்துக்கிட்டது கிடையாது.எனக்குப் பிடிச்சதை நான் பண்ணுறேன்னு கடந்துபோயிருவேன். என்னோட குரல் நல்லா இருக்கும். ஆனா சமுதாயத்தில் நடக்குற அநீதியைப் பாட்டில் கொண்டு வந்து மக்களோட உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பணும்னா அதுக்கு அழுத்தமான வரிகள் தேவைப்பட்டுச்சு. அதுக்கு சமூக வலைதளங்கள் மூலமே நிறைய நண்பர்கள் உதவ ஆரம்பிச்சாங்க. கவிஞர்கள், கவிதை எழுதிக் கொடுத்துருவாங்க. நான் மெட்டு சேர்த்துப் பாட்டு பாடுறேன். நானும் எழுதப் பழகிட்டு இருக்கேன். எனக்கு ஸ்டூடியோ, ரெக்கார்டிங் தியேட்டர் வசதிகள் கிடையாது. இப்போ ஒலிக்கிற பாடல்கள் எல்லாமே நண்பர்கள் பறையிசைக்க, மொபைலில் ரெக்கார்டு செஞ்சதுதான். நாட்டுப்புறப் பாடலை கொஞ்சம் மாத்தி மேல்நாட்டுப் பாணியில் நான் பாடுன ராப் பாடல்களுக்கு நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் கொடுத்தாங்க. இப்போ சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பிச்சிருக்கு. ’ஜிப்ஸி’ படத்துல தாலாட்டுப் பாட்டு பாட, ராஜுமுருகன் சார்கிட்ட இருந்து போன் வந்தப்போ வானத்துல மிதக்குற மாதிரி இருந்துச்சு. படம் வெளிய வர்ற வரை யார்கிட்டேயுமே நான் சினிமாவில் பாடுறேன்னு சொல்லவே இல்ல. தியேட்டரில் என் பாட்டைக் கேட்டுட்டு அக்காவும், அம்மாவும் அழுதாங்க. என்னால் நிறைய இடங்களில் தலைகுனிஞ்ச அவங்களுக்கு ஒரு சின்ன சந்தோஷத்தைக் கொடுத்திருக்கேன். என் கனவு முடிஞ்சிடல. இன்னும் போக வேண்டிய தூரமும், சந்திக்க வேண்டிய மனிதர்களும், போராடவேண்டிய விஷயங்களும் நிறைய இருக்கு” - கைகுலுக்கி விடைபெறுகிறார் ரோஜா.