தனியொருத்தி - 15 - “கல்யாணம் மட்டுமே வாழ்க்கையில்லை... வாழ்க்கையில அது ஒரு பகுதி மட்டும்தான்!”

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள் - பினா போவஸ்
இழப்பு என்பது ஒன்றின் இறுதியாகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை... இன்னொன்றின் ஆரம்பமாகவும் இருக்கலாம்!
‘நான் யாருங்கிறதை மறந்திருந்தேன்... மறுபடி அது ஞாபகம் வந்ததும் என் வாழ்க்கை மாறுச்சு...’’ அடையாளத்தைத் தொலைத்து, மீட்டவராக, மீண்டவராகப் பேசுகிறார் பினா போவஸ். சென்னையிலுள்ள பள்ளி ஒன்றின் தாளாளர். சிங்கிள் பேரன்ட்டாக இவரது 21 வருட வாழ்க்கையில் எக்கச்சக்க திருப்பங்கள், திகில்கள், திக்திக் தருணங்கள்...
‘`கல்யாணத்தைப் பத்தி எதிர்பார்ப்புகளை வெச்சுக்கிறதுதான் இந்திய பெண்கள் பண்ற மிகப்பெரிய தவறுன்னு நினைக்கிறேன். அந்தத் தவற்றை நானும் பண்ணேன். சந்தோஷமான, கலகலப்பான குடும்பச் சூழல், எல்லோர்கிட்டயும் நல்ல அந்நியோன்யம், அமைதியான வாழ்க்கை... இவ்வளவுதான் என் எதிர்பார்ப்புகள். ஆனா, நடந்தது அதுக்கு நேரெதிர்... '' பினாவின் சன்னமான குரல் பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. உளவியலில் முதுகலைப் பட்டம் முடித்தவர் பினா. ஆனால் அந்த உளவியல், சொந்த வாழ்க்கைக்குப் பயன்படாமல் போனதுதான் சோகம்.
‘`கணவரோட வேலை காரணமா கல்யாணமான சில நாள்கள்லயே அமெரிக்கா போயிட்டோம். அமெரிக்க வாழ்க்கையில உச்சகட்ட தனிமையை அனுபவிச்சேன். ஃபிரெண்ட்ஸ்கூட பேசவோ, பழகவோ என் கணவர் அனுமதிக்கலை. சில நேரங்கள்ல உடல்ரீதியான வன்முறைகளையும், பல நேரங்கள்ல உணர்வுரீதியான வன்முறைகளையும் சந்திச்சேன். குடும்ப விஷயங்களை வெளியில சொல்லக்கூடாதுங்கிற மனநிலையில வளர்ந்திருந்ததால யார்கிட்டயும் மனசுவிட்டுப் பேசவும் முடியலை. எனக்கு கல்யாண மான பத்து நாள்ல எங்கப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்தது. அந்தச் சூழல்ல அவர்கிட்ட எதையும் சொல்ல வேண்டாம்ங்கிற பயமும் ஒரு காரணம். சைக்காலஜி படிச்சவளாச்சே... கணவரோட கோபத்தையும் வன்முறையையும் அவருடைய குழந்தைப் பருவம், வளர்ப்புனு பல விஷயங்களோட தொடர்புபடுத்தி, அதனாலதான் அப்படி இருக்கார்போலன்னு எனக்கு நானே சமாதானமும் சொல்லிக்கிட்டேன். இன்னிக்கு சரியாயிடும், நாளைக்கு சரியாயிடும்னு காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தேன். கல்யாணமாகி ஏழு வருஷங்கள் கழிச்சு என் மகன் பிறந்தான். அப்படியொரு குடும்பச் சூழல்ல என் குழந்தை வளர்றது சரியானதா இருக்காதுன்னு தோணுச்சு. இனிமே இந்த வாழ்க்கை வேண்டாம்னு முடிவெடுத்தபோது பதிமூணு வருஷங்கள் ஓடிப்போச்சு...’’ வன் முறையிலிருந்து விடுபட்ட பினாவுக்கு வேறு சவால்களுடன் காத்திருந்தது வாழ்க்கை.
‘`அப்போ நாங்க அமெரிக்காவுலேருந்து சிங்கப்பூருக்கு ஒரு வருஷ கான்ட்ராக்ட்ல போயிருந்தோம். இன்னும் ஒரு வருஷம் பொறுத்துக்கலாமே... அப்புறம் இந்தியா வுக்குப் போய்ப் பார்த்துக்கலாம்னு யோசிச் சேன். இன்னும் ஆறு மாசம், இன்னும் ரெண்டு மாசம்னு அந்த முடிவை தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்தேன். அன்னிக்கு காலையில என் கணவர் வழக்கம்போல கோல்ஃப் விளையாடக் கிளம்பினார். திடீர்னு ஓர் எண்ணம்... ‘இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படியே பொறுத்துக்கிட்டுப் போகப் போறேன்...’னு தோணுச்சு. அப்பாவுக்கு போன் பண்ணினேன். ‘இங்கே ஒண்ணும் சரியில்லப்பா... நான் வந்துடலாம்னு இருக் கேன்’னு மட்டும் சொன்னேன்.‘சரிம்மா... வந்துடு’ன்னு சொன்ன அப்பா அதுக்கு மேல ஒரு கேள்விகூட கேட்கலை. கணவர் கோல்ஃப் விளையாடிட்டு வர அஞ்சு மணி நேரமாகும். அந்த நேரத்துல எனக்கும் என் மகனுக்குமான பொருள்களை பேக் பண்ணினேன். ஃபிரெண்ட்ஸ் உதவியோடு ஏர்போர்ட் போனோம். ஃபிளைட்ல ஏறி சென்னைக்கே வந்துட்டோம். அடுத்த நாளே என் கணவரும் வந்துட்டார். அதுக்குள்ள நாங்க போலீஸ்ல கேஸ் கொடுத்திருந்தோம். ஸ்டேஷனுக்கு வந்தவர், ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா... நாங்க சரி பண்ணிக்கிறோம்’னு ரொம்ப சாதாரணமா சொன்னார். அப்படி எதுவும் சரியாகாதுன்னு எல்லாருக்கும் தெரியும். அதுக்கு மேலயும் அங்கே இருக்கிறது சரி யில்லைனு யு.எஸ் சிட்டிசன்ஸான நானும் என் மகனும் அன்னிக்கு ராத்திரியே அமெரிக்கா போயிட்டோம்...’’ முதல் கிளை மாக்ஸுடன் அங்கிருந்து வேகமெடுத்திருக் கிறது பினாவின் பயணம்.
‘`அத்தனை வருஷங்களா வீடு மட்டுமே உலகம்னு வாழ்ந்த எனக்கு அடுத்து என்ன செய்யணும், யாரைப் பார்க்கணும்னு எல்லாமே புது அனுபவமா இருந்தது. ஜட்ஜ் சொன்னதன் பேர்ல மறுபடி மூணு பேரும் சிங்கப்பூருக்கே போனோம். பையன் பாதி நாள் என்கூடவும் பாதி நாள் அவங்கப்பா கூடவும் இருந்தான். அப்படியே ஒரு வருஷம் போச்சு. திடீர்னு ஒருநாள் பையனைக் கூட்டிட்டு மறுபடி அவர் அமெரிக்கா போயிட்டார். வேற வழியில்லாம நானும் அங்கே போனேன். தங்க இடமும் இல்லை, வேலையும் இல்லைங்கிற சூழல்ல கோர்ட், கேஸையும் பார்த்துக்கிட்டு கடினமான அந்த நாள்களையும் கடந்து வந்தேன்.
‘அப்பாவுக்குத்தான் வேலை இருக்கு, வீடு இருக்கு’ன்னு டைவர்ஸ் வழக்குல என் மகன் அவங்கப்பாகிட்ட வளர்றதுதான் சரின்னு தீர்ப்பு வந்திருச்சு. அத்தனை நாள் நான் பட்ட கஷ்டங்களுக்கு அர்த்தமே இல்லாமப் போயி டுமே, எது நடக்கக்கூடாதுனு நினைச்சேனோ, அது நடந்துடுமோனு எனக்குப் பேரதிர்ச்சி. நான் என் குழந்தையைப் பார்த்துடக் கூடாதுன்னு திடீர்னு என் கணவர், என் மகனைத் தூக்கிட்டு தலைமறைவாயிட்டார். மறுபடி போலீஸ் கேஸ், கம்ப்ளெயின்ட்டுனு அலைய ஆரம்பிச்சேன். ரெண்டு மாசம் கழிச்சு அவர் மலேசியாவுல இருக்கிறது தெரிஞ்சது.
என் சம்மதத்தோடதான் அவர் பையனைக் கூட்டிட்டு வந்த மாதிரி போலி டாகுமென்ட் ரெடி பண்ணிருந்தார். சட்டத்தை ஏமாத்தினது தெரிஞ்சதும் அவருக்கு குழந்தைக்கான கஸ்டடி மறுக்கப்பட்டுச்சு. எல்லாம் கைகூடி வந்து, என் மகனை நிரந்தரமா என்கூட அழைச்சுக்கிற நேரம் வந்தபோது என் வக்கீலுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி, படுத்த படுக்கையாயிட்டார். மறுபடி வேற ஒரு வக்கீலைப் பிடிச்சு சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்தேன்...’’ ஹாலிவுட் படங்களை மிஞ்சும் விறுவிறுப்பும் பரபரப்புமாக இரண்டாவது கிளைமாக்ஸுடன் நகர்ந் திருக்கிறது இவரது போராட்டம்.
‘`சட்டப்படி எல்லா டாகுமென்ட்ஸும் என் கைக்கு வந்ததும், என் மகனை என்னோடு கூட்டிட்டு வர, அவன் ஸ்கூலுக்கு போனேன். அப்போ நான் அவனை சந்திச்சு 14 மாசங்கள் ஆகியிருந்தது. ‘உன்னைக் கூட்டிட்டுப் போக உங்கம்மா வந்திருக்காங்க... அவங்ககூட போறியா’னு என் பையன்கிட்ட கேட்டாங்க. 14 மாசங்கள்ல அவங்கப்பா அவன்கிட்ட என்னவெல்லாம் சொல்லி வெச்சிருப்பார், அவன் என்கூட வருவானா, ஒருவேளை மறுத்துட்டான்னா என்ன பண்றதுன்னு எனக்குள்ள ஏகப்பட்ட கேள்விகள். ஆனா, என் பையன் என்கூட வர தயாரா இருந்தான். அது பொறுக்காம மறுபடி அவங்கப்பா என் மேல கேஸ் போட, மறுபடி பிரச்னை ஆரம்பமாச்சு.
ஒரு கட்டத்துல குழந்தையை யாரோட அனுப்பறதுனு மலேசிய நீதிபதிக்கே குழப்ப மாயிடுச்சு. ‘இந்த விஷயத்துல குழந்தையே முடிவெடுக்கட்டும். அவனுக்கு யார்கூட போக விருப்பமோ, அவங்ககூடவே இருக் கட்டும்’னு சொல்லிட்டார். மறுபடி என் முன்னாடி அதே கேள்விகள், அதே சந்தேகம், பயம் எல்லாம்... கேஸ் ஹியரிங்குக்கு முன்னாடி என் பையனைக் கூப்பிட்டு ‘நான் சொன்னபடி செய்யலைனா உங்கம்மாவைக் கொன்னுடு வேன்’னு அவங்கப்பா மிரட்டினதையும் பார்த்தேன். எட்டு வயசுக் குழந்தையை ஜட்ஜ் தனியா கூட்டிட்டுப் போனார். எல்லாம் முடிஞ்சு வெளியே வந்த லாயர்ஸ், ‘பையன் அவங்கம்மாகிட்டதான் இருப்பேன்னு சொல் லிட்டான்’னு சொன்ன பிறகுதான் எனக்கு உயிரே வந்தது...’’ திக் திக் தருணங்கள் சொல் லும்போது நமக்கும் இதயத்துடிப்பு எகிறி அடங்குகிறது.
``பிரிவுக்குப் பிறகு வாழ்க்கையில நிறைய அமைதி கிடைச்சது. படிச்சேன், வேலைக்குப் போனேன். நான் ஆசைப்பட்டபடியே என் மகனை நல்ல சூழல்ல வளர்த்தேன். படங் களுக்குப் போறது, டான்ஸ் கிளாஸ் போறதுனு நானும் என் மகனும் அடுத்த அஞ்சு வருஷங்கள் அழகான நாள்களை அனுபவிச்சோம். எங்கப் பாவுக்கு உடம்புக்கு முடியாமப் போனதால மறுபடி இந்தியாவுக்கே வந்தோம்’’ என்று சொல்லி பெருமூச்சுவிடுகிறார் பினா. அவரின் மகன் தற்போது அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். அவருக்கு வயது 27.
‘`கல்யாண வாழ்க்கையில பிரச்னைகள் வர்றது சகஜம்தான். ஆனா அதையெல்லாம் சரியாக்க முயற்சிகள் எடுத்தும் சரியாக லைன்னா, குழந்தைகளுக்காக பொறுத்துக் கிட்டு வாழறேன்னு சொல்றதுல அர்த்த மில்லை. நல்லது பண்றதா நினைச்சுட்டு நீங்க உங்க குழந்தைங்களுக்கு கஷ்டங்களைத்தான் கொடுக்கறீங்க. சண்டை, சச்சரவுகளும், பயமும் டென்ஷனும் உள்ள சூழல்ல எந்தக் குழந்தையும் வளரக் கூடாது. கல்யாணம் மட்டுமே வாழ்க்கையில்லை. வாழ்க்கையில அது ஒரு பகுதி, மட்டும்தான். கல்யாணத்துக்கு முன்னாடியே படிப்பு, வேலைனு பெண்கள் தங்களை நிலை நிறுத்திக்கணும். எதிர்காலத்துல வாழ்க்கை எப்படி மாறினாலும் படிப்பும் பொருளாதார சுதந்திரமும் உங்ககூட இருக் கும். ஸ்ட்ரெஸ் இல்லாத குடும்பச் சூழல்தான் நீங்க உங்க குழந்தைகளுக்குக் கொடுக்கிற மிகப் பெரிய கிஃப்ட். அதைக் கொடுக்குற நீங்கதான் பெஸ்ட் அம்மா’’ - ஆகச் சிறந்த அம்மாவாக பினா தரும் அட்வைஸ் அனைத்துப் பெற் றோருக்குமானது.
- வெற்றிக்கதைகள் தொடரும்...