சினிமா
Published:Updated:

“இனி நாங்கள் அடிமைகள் இல்லை!”

செங்கல் சூளை
பிரீமியம் ஸ்டோரி
News
செங்கல் சூளை

ஒருகாலத்தில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் அதிக அளவில் இருந்த மாவட்டம் இது. கடுமையான விதிமுறைகள், விழிப்புணர்வு மூலம் இன்று மிகப்பெரிய அளவில் அது கட்டுக்குள் வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வாடிக்கொண்டிருந்த இருளர் பழங்குடியின மக்கள், தமிழக அரசின் நடவடிக்கையால் இன்று செங்கல் சூளை முதலாளிகளாக உயர்ந்திருக்கின்றனர். கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 300 இருளர் பழங்குடியின மக்களுக்காக, திருத்தணியை அடுத்த வீரகநல்லூர் கிராமத்தில் ‘சிறகுகள்’ என்ற செங்கல் சூளையை, ஏப்ரல் 13 அன்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்துவைத்தார். தமிழக அரசின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இதை நிகழ்த்தியிருக்கின்றன.

கடனாக வாங்கிய சிறுதொகைக்காகத் தங்கள் வாழ்க்கையையே செங்கல் சூளையில் அடமானம் வைத்து வதங்கிக்கொண்டிருந்த மக்களை மீட்டு, அதே செங்கல் சூளை மூலம் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்திருக்கும் இந்தச் செயல் ஓர் முன்னுதாரண நடவடிக்கை.

“இனி நாங்கள் அடிமைகள் இல்லை!”

“எனக்கு ஊரு ராமகிருஷ்ணாபுரம். கூலி வேலதான் செஞ்சிட்டிருந்தேன். அரசாங்கம் கொடுத்த இடத்துல வீடு கட்ட கொஞ்சம் பணம் கடனா வாங்குற நிலை ஏற்பட்டுச்சு. அதுக்குக் கடன் கொடுத்தவங்க செங்க சூளைல வேலை பார்க்கணும்னு சொன்னாங்க. வேலைக்கு வேலையும் ஆச்சு, கடனும் தீரும்னு நம்பி வேலைக்குப் போனேன். அங்க போன பிறகுதான் தெரிஞ்சது, திரும்ப வரவே முடியாதுங்கிறது. ராப்பகல், மழை வெயில்னு பாக்காம எல்லா நேரமும் கல்லு அறுக்குறது, கல்லு ஏத்துறது இறக்குறது, சூளைக்குப் போறதுன்னு ஓய்வே இல்லாம கொடுமைப்படுத்தினாங்க. ஒரு நாளைக்கு 1,500 கல்லு போடுவோம். ‘எப்படியாவது உங்கக் கடன அடைச்சிடுறோம். எங்கள விட்டுடுங்க’ன்னு கெஞ்சுவோம். ‘அதெல்லாம் முடியாது, வேலைய முடிச்சிட்டுப் போ... கல் அறுக்காம விட்டுட்டுப் போனா எதுனா பண்ணிடுவோம், நீ வாங்குன காசுக்கு சும்மா விட்ருவோமா’ன்னு மிரட்டினாங்க. நான் ஒன்னும் லட்சக்கணக்குல வாங்கிடல, இருபத்தஞ்சாயிரம்தான் வாங்குனேன்” என்று விலகாத மிரட்சியுடன் கூறும் வெங்கடேசனின் மனைவி கோவிந்தம்மாளும் அவரோடு சூளையில் கொத்தடிமையாக இருந்தவர் என்பது சோகம்.

“இனி நாங்கள் அடிமைகள் இல்லை!”

“நான் தினமும் வயித்து வலில துடிச்சிட்டு இருப்பேன், ‘என் சம்சாரத்துக்கு முடியலங்கய்யா, ஆஸ்பத்திரிக்குப் போணும்’னு என் வீட்டுக்காரர் கேட்டா, ‘அதெல்லாம் முடியாது. மாத்திர வாங்கிக் குடுத்துட்டு வேலைய பாரு’ன்னு சொல்லுவாங்க. கொடுமை தாங்காம நானும் வீட்டுக்காரரும் எத்தனையோ ராத்திரி குடிசையில அழுதுருக்கோம். செத்துப் போயிடலாம்னுகூட தோணும். அந்தச் சமயத்துலதான் அரசாங்கம் வந்து எங்களை மீட்டுச்சு, இன்னிக்கு எங்களுக்கு இந்தச் சூளை கிடைச்சிருக்கு. எங்களுக்கே சிறகு முளைச்ச மாதிரி இருக்கு” என்று கண்கலங்கிச் சிரிக்கிறார் கோவிந்தம்மாள்.

ஆல்பி ஜான் வர்கீஸ்
ஆல்பி ஜான் வர்கீஸ்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ‘சிறகுகள்’ முன்னெடுப்பு குறித்துப் பேசினார். “ஒருகாலத்தில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் அதிக அளவில் இருந்த மாவட்டம் இது. கடுமையான விதிமுறைகள், விழிப்புணர்வு மூலம் இன்று மிகப்பெரிய அளவில் அது கட்டுக்குள் வந்துள்ளது. கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் பல்வேறு வேலைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த வேலைகளில் அனுபவம் இல்லாததால், அவர்களால் அதில் நீடிக்க முடியவில்லை. எனவே, அவர்களுக்குத் தெரிந்த செங்கல் உருவாக்கும் தொழிலையே ஏற்படுத்திக் கொடுப்பது என்று முடிவெடுத்தோம். அதன்படி, இந்த இடத்தைத் தேர்வுசெய்து மின்சாரமும், போர்வெல் வசதியும் உருவாக்கிக் கொடுத்தோம்; மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் தங்குமிடம் ஒன்றும் கட்டப்படவிருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்காக வாங்கப்படும். மேலும், இத்திட்டத்தின் அங்கமாக விறகு வெட்டும் திறனுள்ளவர்களுக்கு காட்டுக் கருவேல மரங்களை வெட்டி, சூளைக்குக் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 100 குடும்பங்களின் வாழ்வாதாரமாக இந்தத் திட்டம் விளங்குகிறது... மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேலையில் இறங்கியிருக்கின்றனர்” என்றார்.

இருளர் வாழ்வில் வெளிச்சம் பிறக்கிறது!