மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்வைச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி இளைஞர் உதயகுமார். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என்று எந்த ரத்தச் சொந்தங்களும் இல்லாத நபராக இருந்துவருகிறார்.

நிழல்போல தெரியும் மெல்லிய பார்வையைக் கொண்டு முறுக்கு, பாப்கார்ன் போன்றவற்றை கொட்டாம்பட்டி பேருந்துநிலையத்தில் சில்லறை விற்பனை செய்துவருகிறார். பேருந்துநிலையத்தில் கொசுக் கடியில் படுத்துக்கொண்டு மணப்பாறை, மதுரை ஆகிய இடங்களிலிருந்து பொருள்கள் எடுத்து வந்து வியாபாரம் செய்கிறார்.
இந்நிலையில், ``கண்ணு தெரியாது... ஆனா, நீங்க நினைக்கறத கண்டுபிடிச்சுருவேன்!" - நெகிழவைக்கும் `முறுக்கு' உதயகுமார்!" என்ற தலைப்பில் உதயகுமார் பற்றி சில மாதங்களுக்கு முன் விகடன் இணையத்தில் விரிவான கட்டுரை வெளியிட்டோம். இந்தக் கட்டுரையை அடுத்து உதயகுமாருக்கு அரசு சலுகைகள் கிடைத்துள்ளன.

உதயகுமாருக்கு அரசு சலுகைகள் கிடைக்க உதவிய பெண் சத்யா கூறுகையில், ``நான் கொட்டாம்பட்டி பகுதியில் முயல் பண்ணை வைத்துள்ளேன். எனக்கு உதயகுமாரை முன்னரே தெரியும். ஆனால் அவனுடைய வலிகளும் கஷ்டங்களும் விகடனில் வெளியான கட்டுரையில் வெளிப்பட்டது.
அதைப் பார்த்த உடன் கண்ணீர் வடிக்காத குறையாக வருத்தப்பட்டேன். உதயகுமாருக்கு எதாவது செய்ய வேண்டும் என அவனின் ஆவணங்களைத் திரட்டி அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

அதன்படி உதயகுமார் பெயரில் 100% பார்வையில்லா சான்றிதழ், வங்கி பாஸ்புக், பார்வையில்லாத நபர் பயன்படுத்தும் ஸ்டிக், அரசு சலுகை பஸ்பாஸ், ரயில் பாஸ், மாத உதவித்தொகைக்கான ஆணை, லோன் வழங்கும் ஆணை உள்ளிட்ட பல விசயங்களை பெற்றுக்கொடுத்துள்ளேன்.
இதற்குக் கடந்த செப்டம்பர் முதல் கடும் சிரமத்திற்கு இடையில் பலமுறை மதுரைக்குச் சென்று உதயகுமாருக்கு உதவிகள் பெற்றுத் தந்துள்ளேன். என்னுடைய தம்பி போல் உதயகுமார் மாறிவிட்டான். அவனுக்குத் தேவையான உதவியைத் தொடர்ந்து செய்வேன். நான் வாழ்க்கையில் பல அடிகளைத் தாண்டி முன்னேறியுள்ளேன். என்னைப் போல் கஷ்டப்படும் நபர்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறேன்" என்றார்.

மாற்றுத்திறனாளி உதயகுமார் கூறுகையில், ``என்னுடைய கட்டுரை விகடனில் வெளியானதைத் தொடர்ந்து என்னை 500க்கும் மேற்பட்ட நபர்கள் உற்சாகப்படுத்திப் பாராட்டினர். சிலர் எனக்கு உதவிகளும் செய்கின்றனர். முயல் சத்யா அக்கா செய்த உதவி அளப்பரியது. இதை வாழ்நாளில் மறக்க மாட்டேன்" என்றார்.