அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அம்மாவும் சாமியாரும் டிரெஸ் இல்லாம இருந்தாங்க... அப்புறம்...

சாமியார் ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
சாமியார் ராமகிருஷ்ணன்

- வக்கிர சாமியாரிடம் சிக்கிய சிறுவன், சிறுமி!

பரிகார பூஜை என்ற பெயரில், தாய் கண்முன்னாலேயே, சிறுவன், சிறுமியை நிர்வாணப்படுத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கிர சாமியார் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 11 வயதில் மகன், 9 வயதில் மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இவரின் கணவர் சென்னையில் வேலை பார்த்துவருகிறார். இந்த நிலையில், ‘சிவகங்கை மாவட்டம், வேட்டங்குடிப்பட்டியைச் சேர்ந்த சாமியார் ராமகிருஷ்ணன் என்ற முடியரசனிடம் குறிபார்த்து பரிகாரம் செய்தால், குடும்பப் பிரச்னைகள் தீரும்’ என்று உறவினர்கள் சிலர் காயத்ரியிடம் கூறியுள்ளனர். இதை நம்பி, சாமியார் ராமகிருஷ்ணனின் சித்தர் பீடத்துக்கு அடிக்கடி சென்றுவந்திருக்கிறார் காயத்ரி. நாளடைவில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், திருமணம் மீறிய உறவாக மாறியிருக்கிறது.

சாமியார் ராமகிருஷ்ணன்
சாமியார் ராமகிருஷ்ணன்

இந்த நிலையில், “காரைக்குடி, மானகிரி காட்டுப் பகுதியிலுள்ள எனது வீட்டில் உன்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து இரவு பூஜை நடத்தினால்தான், உன்னுடைய குடும்பக் கஷ்டங்கள் நீங்கி, பணம் பெருகி, நினைத்ததெல்லாம் ஈடேறும்” என்று கூறி காயத்ரியைப் பிள்ளைகளுடன் தனது வீட்டுக்கு வரவைத்திருக்கிறார் சாமியார் ராமகிருஷ்ணன். பின்னர் காயத்ரியின் உதவியோடு குழந்தைகள் இருவரையும் நிர்வாணப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

மிரண்டுபோன குழந்தைகள், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பாட்டியிடம் கூறியதை அடுத்தே, இந்தக் கொடுமைகள் அனைத்தும் வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கின்றன.

இதையடுத்து ஓடைக்கல் கிராமத்திலுள்ள, சிறுவர்களின் பாட்டியைச் சந்தித்துப் பேசினோம். “என் மூத்த மகனும், காயத்ரியும் காதலித்துத்தான் திருமணம் செய்துகொண்டனர். மகனுக்கு வேலை கிடைத்ததும், மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு சென்னைக்குச் சென்றுவிட்டான்.

காயத்ரி, பிள்ளைகளுடன் அடிக்கடி அவளது அம்மா வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவாள். அதுதான் இவ்வளவு பெரிய பிரச்னையில் கொண்டுவந்து விட்டிருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களாகவே பேத்தியையும் பேரனையும் என்னுடன் அதிகம் நெருங்கவிடவில்லை. தீபாவளிக்கு இரண்டு நாளைக்கு முன்பு, இரவு 7 மணிக்கு, அவசர அவசரமாக பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கிளம்பினவள், அடுத்த நாள் அதிகாலை 5:30 மணிக்கு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்தாள். பேத்தியின் முகம் பேய் அடித்த மாதிரி இருந்ததும் எனக்கு சந்தேகம் வந்து விசாரித்தேன். தயங்கியபடி பேசிய பேத்தி, ‘சாமியார் ஒருத்தர்கிட்ட அம்மா கூட்டிக்கிட்டுப் போணுச்சு. நைட் ரூமுக்குள்ள போனதும் கதவ அடைச்சுட்டாங்க. அம்மாவும் சாமியாரும் டிரெஸ் இல்லாம இருந்தாங்க. அப்புறம் என்னோட...’ (அச்சில் ஏற்ற முடியாத வகையிலான ஆபாச வக்கிர சம்பவம் அது) என்று சொன்னதும் என் ஈரக்குலையே நடுங்கிவிட்டது.

எந்த ஊரிலாவது பெற்ற தாயே, பிள்ளைகளை இப்படியெல்லாம் செய்ததுண்டா... அவள் எக்கேடு கெட்டுப் போயிருந்தாலும் நாங்கள் கவலைப்பட்டிருக்க மாட்டோம். பிள்ளைகளைச் சித்ரவதைப்படுத்தியதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்றார் கோபத்தோடு.

சித்தர் பீடம் அமைந்திருக்கும் வேட்டங்குடிப்பட்டிக்குச் சென்று சாமியார் ராமகிருஷ்ணன் குறித்து விசாரித்தோம். ‘‘ராமகிருஷ்ணனின் சித்தப்பாதான் ஆரம்பத்தில் குறி சொல்வது, ஜோசியம் பார்ப்பது என்றிருந்தார். அவர் இறந்துபோன பிறகு ராமகிருஷ்ணனே தனது பெயரை முடியரசன் என்று மாற்றிக்கொண்டு, சித்தர் பீடம் உருவாக்கி, சாமியாராகக் குறிபார்க்க ஆரம்பித்துவிட்டார்.

அம்மாவும் சாமியாரும் டிரெஸ் இல்லாம இருந்தாங்க... அப்புறம்...

உள்ளூர் ஆட்கள் யாரும் அவரைப் பார்க்கச் செல்வதில்லை. ஆனால், செவ்வாய், வெள்ளிகளில் வெளியூரிலிருந்து வரும் கூட்டம் அலைமோதும். அவர்களிடம் ரசமணி கொடுப்பது, பரிகார பூஜைகள் செய்வது என்று பணம் கறந்துவந்தார். சில பூஜைகளுக்கு 40,000 ரூபாய் வரை வசூலித்திருக்கிறார். பூஜைக்கு வருகிற பெண்கள் பார்ப்பதற்குக் கொஞ்சம் அழகாக இருந்தால் போதும்... ‘மானகிரி வீட்டில் வைத்துப் பரிகாரம் செய்ய வேண்டும்’ என்று கூறி அழைத்துச் சென்றுவிடுவாராம். கொஞ்சம் சுமார் என்றால், வேட்டங்குடிப்பட்டியுடன் முடித்துவிடுவாராம். சமீபத்தில் காரைக்குடியிலிருந்து குறிபார்க்க வந்த ஒரு பெண்ணை, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு இரவு பூஜைக்கு வரச் சொல்லியிருக்கிறார். ‘கணவரையும் கூட்டிக்கொண்டு வருகிறேன்’ என்று அந்தப் பெண் சொல்லவும், ‘கணவர் வந்தால், அந்த பூஜை பலிக்காது’ என்று சொல்லிப் பின்வாங்கிவிட்டாராம்’’ என்று சாமியார் ராமகிருஷ்ணனின் லீலைகளைப் பட்டியலிட்டனர்.

சிவகங்கை மாவட்ட எஸ்.பி செந்தில்குமாரிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம், “சிறார்களின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் விசாரித்து, சாமியார் ராமகிருஷ்ணனையும், சிறுவர்களின் தாயாரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறோம். ராமகிருஷ்ணன் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. புகாரும் வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். புகார்கள் ஏதும் கிடைக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

எத்தனையோ ஏமாற்றுகள் நடந்தும்கூட, இன்னும் மக்களுக்கு போலிச் சாமியார்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய அவசியம் இருப்பதையே இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன!