மது, வரதட்சிணைக்கு நோ... பெண் குழந்தைகளுக்கு வெல்கம்! - அசத்தும் ஆலவிளாம்பட்டி கிராமம்

வழிகாட்டி
கிராமங்கள் என்றாலே விதவிதமான கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் ஆலவிளாம்பட்டி கிராம மக்கள் வகுத்திருக்கும் கட்டுப்பாடோ வியக்க வைக்கிறது. `கிராம மக்கள் யாரும் மது அருந்தக் கூடாது; மது அருந்தியவர்கள் யாரும் ஊருக்குள் நுழையக் கூடாது’ என்று கல்வெட்டுவைத்துக் கலக்குகிறார்கள், இந்த ஊர் மக்கள். மதகுபட்டியிலிருந்து கல்லல் செல்லும் சாலையில் இருக்கிறது ஆலவிளாம்பட்டி. ஊருக்குள் நுழைந்ததும் பிரமாண்ட ஆலமரம் நம்மை வரவேற்கிறது. ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டுகள், பிரதான இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராக்கள் என ஆலவிளாம்பட்டி, `அடடே’ அட்வான்ஸ் கிராமம்!

இந்த ஆச்சர்யமான கட்டுப்பாடுகள் குறித்து விசாரிக்கலாமென்றால், ஊருக்குள் ஆட்களையே காணவில்லை. நீண்டநேரத் தேடுதலுக்குப் பிறகு தென்பட்ட சிவப்புத் துண்டு பெரியவர் ராமசாமியிடம் பேச்சு கொடுத்தோம். “கிராமத்தில் வசிக்கிற யாரும் மது அருந்தக் கூடாது. மது அருந்திய யாரும் ஊருக்குள் வரக் கூடாது’ங்கிற கட்டுப்பாடு எங்க ஊரில் பல காலமா இருக்கு. 1282-ம் ஆண்டு, வடநாடு விட்டு தென்னாடு வந்த எங்கள் முன்னோர், எங்கள் குலதெய்வங்களான ஸ்ரீராமசுவாமி மற்றும் ஸ்ரீபொன்னழகி அம்பாளிடம், `நாங்கள் யாரும் மது அருந்த மாட்டோம்’ என்று சத்தியம் செய்துகொடுத்திருக்காங்க. அந்தச் சத்தியத்தைத் தலைமுறை தலைமுறையா நாங்க காப்பாத்திக்கிட்டு வர்றோம். எங்க ஊர்க்காரர்கள் யாரும் இந்தக் கட்டுப்பாட்டை மீற மாட்டார்கள்; மீறவும் முடியாது. மீறினால் கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். எனக்கு 90 வயசு. எனக்கு வெவரம் தெரிஞ்சதிலிருந்து, உள்ளூர்க்காரர்கள் யாரும் இந்தக் கட்டுப்பாட்டை மீறினதே இல்லை. ஏன்னா, `அந்தக் காலத்தில் கட்டுப்பாட்டை மீறின ஒரு சிலரை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதைமேல ஏத்தி யிருக்காங்க. சிலர் ஊரைவிட்டே ஒதுக்கிவைக்கப்பட்டிருக்காங்க'ன்னு சொல்லிச் சொல்லியே எங்களை எங்க முன்னோர் வளர்த்தெடுத்ததால சின்ன வயசுலேயே ஊர்க் கட்டுப்பாடு மனசுல ஆணி அடிச்சதுபோலப் பதிஞ்சிடுச்சு.

திருவிழா நேரத்தில் இந்த ஊரின் கட்டுப்பாடு தெரியாம வெளியூர்க்காரர்கள் யாரும் சாராயம் குடிச்சிட்டு ஊருக்குள்ள வந்துட்டா, அவங்களை அலேக்கா தூக்கி பள்ளிக்கூடத்துல அடைச்சுவெச்சிருவோம். மறுநாள் எல்லோருக்கும் அபராதம் விதிச்சு, அதைக் கட்டின பிறகுதான் அனுப்புவோம். பெரும்பாலும் எங்க ஊர்க் கட்டுப்பாடு சுத்தியுள்ள எல்லா ஊர்க்காரர்களுக்கும் தெரியும்கிறதால குடிக்காமல் இருக்கவங்கதான் எங்க ஊர் எல்லைக்குள்ள காலடி எடுத்து வைப்பாங்க. காலப்போக்குல இந்தக் கட்டுப்பாடு மறந்துபோயிடக் கூடாதுன்னு ‘மது அருந்தக் கூடாது’ என்று கிராமத்தின் சார்பாகப் பட்டயம் எழுதியதுபோல கல்வெட்டு வெச்சிருக்கோம்’’ என்றபடி அழைத்துச் சென்று அந்தக் கல்வெட்டைக் காட்டியவர், ``இதுமட்டுமல்ல, வரதட்சிணை வாங்கும், கொடுக்கும் பழக்கமும் இந்த ஊரில் கிடையாது. எங்களோடது விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமம். அடிக்கடி கஷ்ட நஷ்டங்கள் வந்து போகும். வசதி என்பது நிலையானது கிடையாது. அதனால் வரதட்சிணை வாங்கவும் கொடுக்கவும் கூடாதுங்கிற கட்டுப்பாடும் எங்கள் ஊரில் இருக்கிறது. இதனால் எங்கள் கிராமத்திலுள்ள எந்தக் குடும்பமும் பெண் குழந்தைகளைச் சுமையாகப் பார்ப்பது கிடையாது” என்கிறார் கர்வம் கலந்த குரலில்!

கிராமத்தின் இளவட்டங்கள் சார்பாகப் பேசிய பிரேம், “இந்த ஊரில் 250 தலைக்கட்டு மக்கள் வாழறாங்க. இதில் ஒருத்தருக்குக்கூடக் குடிப் பழக்கம் கிடையாது. கேட்கவே ஆச்சர்யமா இருக்குல்ல... எங்க முன்னோர் வழியில நாங்களும் ஏதாச்சும் செய்யணும்கிற எண்ணத்தில் ஊரின் பாதுகாப்புக்காக பிரதான இடங்களில் சி.சி.டி.வி கேமராக் களை கிராமத்து இளைஞர்கள் சார்பாகப் பொருத்தியிருக்கிறோம்”் உணர்ச்சி பொங்கச் சொல்கிறார்.

``இங்கேயே பிறந்து, இங்கேயே வாக்கப்பட்டேன் என்ற முறையில நான் ரொம்ப கொடுத்துவெச்சவ...’’ - பேச ஆரம்பிக்கும்போதே சுபாவின் குரலில் பெருமை பொங்கி வழிகிறது.
“ `டாஸ்மாக் கடையை மூட வேண்டும்’னு தமிழ்நாடு முழுக்கப் பெண்கள் போராட்டம் நடத்தினப்போ, நான் அதிர்ந்திட்டேன். நியூஸ் சேனலில் கொதிப்போட பெண்கள் பேட்டி கொடுத்ததைப் பார்க்கும்போதுதான் `குடியினால பெண்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுறாங்க’ன்னு தெரிஞ்சுது. அந்தப் பெண்களை நினைச்சு வருந்தின அதேவேளையில எங்க ஊரை நினைச்சு நான் ரொம்பவும் பெருமைப்பட்டேன். இங்க, பெண்கள் பாதுகாப்புக்குச் சின்னச் சிக்கல்கூட கிடையாது. மது அருந்தாததாலும், வரதட்சிணை இல்லாததாலும் நாங்கள் ரொம்பவும் சந்தோஷமாக வாழுறோம். வீண் பிரச்னைகளுக்கு வேலையே இல்லை. `பெண்ணாகப் பிறப்பதற்கே தவம் செய்ய வேண்டும்’ என்பார்கள். இந்தக் கிராமத்தில் பெண்ணாகப் பிறப்பதற்குப் பெரும் தவம் செய்திருக்க வேண்டும். நான் அப்படி என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை” என்று நெகிழ்கிறார் சுபா.

ஒவ்வோர் ஊரும் ஆலவிளாம் பட்டியாக மாறினால்..? மாற வேண்டும் என்பதே நம் பேராசை!