சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

“வீடுதோறும் தறிச்சத்தம் என் லட்சியம்!” - சிவகுருநாதன்

சிவகுருநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகுருநாதன்

பாரம்பர்யம்

`தாகமுள்ளவன் தண்ணீரைத் தேடுகிறான், தண்ணீரும் தாகமுள்ளவனைத்தான் தேடிச் செல்கிறது.’

- கோ.நம்மாழ்வார்

றைந்துவரும் நெசவுக் காலனிகளைத் தேடத் தொடங்கிய ஓர் ஐடி இளைஞனின் கதை இது. 33 வயதான சிவகுருநாதன், ஐந்து வருடங்களுக்கு முன்னர்வரை சென்னையின் பிரபல ஐடி நிறுவனமொன்றில் 60,000 ரூபாய்க்குமேல் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர். சொந்த ஊர் ஈரோடு. அப்பா, தாத்தா காலத்தில் நெசவுத் தொழில் செய்துவந்த குடும்பம். பொருளாதாரத் துக்கு அது கைகொடுக்காததால், ஐடி-க்கு அனுப்பப்பட்டவர். ஆனால், `நீர் நோக்கித்தான் வேர் படரும்’ என்பதுபோல அவரை நெசவுத் தொழில் நோக்கி நகரவைத்தது அவருடைய தேடல். நிலையான சம்பளம், விசாலமான அப்பார்ட்மென்ட் எனச் சென்னையில் வசித்து வந்தவர், தற்போது நிலையில்லாத வருமானத்துடனும் கொள்ளைக் கனவுகளுடனும் ஈரோட்டில், ஒரு லைன் வீட்டில் தன் மனைவி ரூபா மற்றும் இரண்டு வயது மகள் புவியாளுடன் வசித்துவருகிறார்.

சிவகுருநாதன்
சிவகுருநாதன்

“இந்த மாற்றத்திற்கான எனது பயணம் நெடியது. சென்னையிலிருந்து வார இறுதியில் ஈரோடு வரும்போதெல்லாம் அப்பாவிடம் நெசவு தொடர்பான நுணுக்கங்களைக் கேட்டுக்கொள்வேன். அப்போதெல்லாம் நான் இந்தத் துறைக்கு மாறவிருக்கும் திட்டம் அவருக்குத் தெரியாது. என் மனைவி கர்ப்பமாக இருந்தது உறுதியான சமயத்தில்தான் நான் துறை மாறும் முடிவை குடும்பத்துக்கு அறிவித்தேன். என் மனைவி அதற்கு ஆதரவாக இருந்தாலும், எங்கள் வீட்டில் முதலில் அதற்கு வரவேற்பு இல்லை. `ஐடி-யில் கம்ப்யூட்டர்களை இயக்கிக்கொண்டிருந்தவனால், தறியை இயக்க முடியுமா?’ என்ற பிராக்டிகலான கேள்வி அவர்களிடமிருந்தது.

முதலில் ஜவ்வாது மலை அடிவாரத்திலிருக்கும் `குக்கூ’ காட்டுப்பள்ளியில், நெசவு ஆசிரியராகப் பணியாற்றி பிள்ளைகளுக்கு நூற்பு செய்யக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் கர்நாடகா மாநிலம், மேல்கோட்டையின், `ஜனபடா சேவா சங்கமு’ம் அதன் நிறுவனர் சுரேந்திர கௌலோகியும் நண்பர் ஒருவர் வழியாக எனக்கு அறிமுகமானார்கள். சுரேந்திர கௌலோகி, வினோபா பாவேயின் நேரடிச் சீடர். நிறுவனமய மாக்கப்பட்ட ஜவுளித் துறையால் முற்றிலும் அழிந்துவிட்ட காதியை மக்களிடையே எடுத்துச் செல்வதற்காக ஜனபடா அமைப்பின் வழியாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். சுரேந்திரன் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் மறைந்தார். சுரேந்திர கௌலோகியிடம் என் திட்டங்களைச் சொன்னதும், அவரிடமிருந்து கிடைத்த பதில், `மற்ற எந்தத் துறையையும்போல இதில் ஃபேஷனாக நுழைய முடியாது. இதில் லாபம் பார்த்து வேலை செய்ய முடியாது. பொறுமை அதிகம் தேவை’ என்றார். அவரிடம் பேசியதுதான் ‘நூற்பு’க்கு அடித்தளமிட்டது. நூற்பு என்பதற்கு, `ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்கு மாறுவது’ எனப் பொருள். என் வாழ்க்கையும் நூற்புதான். சென்னையில் ஓர் ஐடி ஊழியனாக இருந்ததிலிருந்து தற்போது எனது வாழ்க்கை முற்றிலும் வேறு வடிவத்துக்கு மாறியிருக்கிறது’’ என்கிறார் சிவகுருநாதன்.

சிவகுருநாதன்
சிவகுருநாதன்

இரண்டு வருடங்களுக்கும் மேலாக சிவகுரு ஈரோட்டில் ‘நூற்பு’ என்னும் பெயரில் கைத்தறி நெசவுத் தொழிலை நடத்திவருகிறார். முழுக்க முழுக்க பருத்தி மற்றும் கதர் மட்டுமே நூற்பில் நெசவு செய்யப்படுகிறது. சிவகுருவுக்கு உறுதுணையாக, சென்னிமலை 1010 நெசவாளர் காலனியைச் சேர்ந்த நெசவாளர்களும் அவருடன் இணைந்து நெசவுசெய்து தருகிறார்கள். அவர்களைச் சந்திக்க சிவகுருவுடன் பயணம் செய்தோம். சிவகுரு, நெசவுக்கு உறுதுணையாக ஆட்களைத் தேடியதன் பின்னணியிலும், 1010 நெசவாளர் காலனியின் பின்னணியிலும் பெரும் கதை இருக்கிறது. பொருளாதாரம், ஆட்கள் குறைப்பு மற்றும் நேரச் சேமிப்பு காரணமாக முழுக்க முழுக்க மெஷின் தறிக்கு மாறிவிட்ட உலகில், கைத்தறி நெசவு செய்பவர்களைக் கண்டுபிடிப்பது சிவகுருவுக்கு பெரும் போராட்டமாகவே இருந்திருக்கிறது.

``ஈரோட்டின் சிறுவளூர் அருகேயிருக்கும் கரிச்சிபாளையத்தில் இரண்டு கைத்தறித் தொழிலாளர்களைச் சந்தித்தேன். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். காந்தி அந்த ஊருக்கு வந்தபோது அவர்மீது செருப்பு எறியப்பட்டிருக்கிறது. ஆனால், காந்தி மென்புன்னகையோடு கடந்து சென்றிருக் கிறார். அதனால் அந்தக் காலத்திலிருந்தே தறி நெசவு செய்யும்போது, ‘காந்தியைப்போல் ஒரு சாந்த சொரூபனைக் காண்பதும் எளிதாமோ...’ என்று பாபநாசம் சிவனின் பாடலைப் பாடிக்கொண்டே நெசவு செய்வார்கள். நெசவில் செழித்து வளர்ந்திருந்த அந்த ஊரில், தற்போது அந்த இரண்டு நெசவாளர்கள் மட்டுமே வாழ்ந்துவருகிறார்கள். ராட்டையில் நூல் சுற்றுவதற்காகவே பெயர் போன சென்னிமலை ராட்டைச் சுற்றிப்புதூர் கிராமத்தில் இன்று ராட்டை சுற்றுபவர்களே அடியோடு குறைந்துவிட்டார்கள். அவர்களை யெல்லாம் சந்தித்த பிறகு, `நம்மால் இந்தத் துறையில் காலூன்ற முடியுமா?’ என்கிற அச்சம் இருந்தது. இங்கு நெசவு செய்பவர்களின் வயது சராசரியாக ஐம்பதுக்கு மேல்தான். நெசவு செய்வதும், கைத்தறியை வீட்டில் வைத்திருப்பதும் இழிவாகப் பார்க்கப்பட்டதாலும், நெசவும் அவர்களைக் கைவிட்டதாலும் கிட்டத்தட்ட எழுபது சதவிகித நெசவாளர்கள் அருகிலிருக்கும் கம்பெனிகளுக்கு வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில்தான் 1010 நெசவாளர்கள் காலனியைச் சேர்ந்த நெசவாளர்கள் எனக்கு அறிமுகமானார்கள்’’ என்கிறார் சிவகுரு.

அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே 1010 நெசவாளர் காலனியை வந்தடைந்திருந்தோம். ‘தகு தகு’ எனக் கைத்தறி இசைச் சத்தத்துடன் நெசவாளர் காலனி நம்மை வரவேற்றது. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, ஒரு காலத்தில் 1,010 நெசவாளர் வீடுகளைக்கொண்டிருந்த ஊர், தற்போது வெறும் அடையாளத்தை மட்டுமே தாங்கியிருக் கிறது. அதிகபட்சமாக, தற்போது ஐம்பது குடும்பங்கள் மட்டுமே அங்கே நெசவு செய்கின்றன. தறியை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகப் போர்வை நெசவு செய்கிறார்கள். இங்கிருந்து இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர், சிவகுருவுடன் இணைந்து கைத்தறி மற்றும் கதர்த் துணிகளை நெசவு செய்கிறார்கள். யாரேனும் சிறப்பு ஆர்டரில் கேட்டால், இயற்கைச் சாயம் ஏற்றிய துணிகளையும் நெசவுசெய்து தருகிறார்கள்.

“அடுத்த தலைமுறையை நெசவைக் கையிலெடுக்கச் செய்து, இதே நெசவாளர் காலனியின் ஒவ்வொரு வீட்டிலும் மீண்டும் தறிச் சத்தம் இசைக்கச் செய்வதுதான் என் பயணத்தின் நோக்கம். ஒட்டுமொத்தமாக ஒரே தினத்தில் இந்த நிலை மாறிவிடுமா எனத் தெரியவில்லை. ஆனால், சிறிய அளவிலேனும் மாற்றத்தை என்னால் உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்குப் பிறந்திருக்கிறது” என்கிறார் சிவகுருநாதன்.

நூலைப்போலவே சேலை, எண்ணம்போலவே கனவுகளும் பலிக்கட்டும்!