
35,000 கோடி ரூபாய் ஒப்பந்தம்... 1,500 ஏக்கர் நிலம்...
நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகே, தூத்துகுடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், ராக்கெட் ஏவுதளத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்துமுடிந்துள்ளன. ஏவுதளம் அமைப்பதற்கான தொடக்கவிழாவும் விரைவில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்க இஸ்ரோ நிலம் கேட்டும், தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்தவர்களில் ஒருவர் சமூக ஆர்வலர் கண்ணன். இந்தப் பிரச்னை குறித்து அவரிடம் பேசினோம், ‘‘தற்போது ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோ நிறுவனம் ராக்கெட்டுகளை விண்வெளியில் செலுத்திவருகிறது. `குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட வேண்டும்’ என்பது தென்மாவட்ட மக்களின் பல ஆண்டுக் கோரிக்கை. தி.மு.க நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், அப்போது தமிழ்நாடு பா.ஜ.க-வின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனும் இதற்காக மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்கள். பல்வேறு தரப்பினரும் போராடியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

இதற்கிடையில், ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க இடம் கேட்டு தமிழக அரசிடம் இஸ்ரோ கோரிக்கை விடுத்தது. ஆனால், பத்து மாதங்களாகியும் தமிழக அரசிடமிருந்து பதில் இல்லை.
நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காகக் கையகப் படுத்தப்பட்ட 2,532 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு நான்கு நிறுவனங்கள் மட்டுமே இதுவரை வந்துள்ளன. அவையும்கூட இன்னும் தொழிற்சாலைகளை அமைக்கவில்லை. அந்த இடத்தில் ராக்கெட் உதிரி பாகங்களுக்கான தொழிற்சாலையை அமைத்தால், ஆயிரக் கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஒருவேளை நாங்குநேரியில் இடம் ஒதுக்க முடியவில்லையென்றால், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம் பகுதியில் நிலம் அளிக்கலாம். அங்கு வறட்சி காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பயன்பாடற்றுக் கிடக்கிறது.
இவற்றில் ஏதாவது ஓரிடத்தில் ராக்கெட் உதிரி பாகங்களுக்கான தொழிற்சாலை அமையப்பெற்றால், சுமார் இரண்டரை கோடி மக்கள்தொகை கொண்ட ஒன்பது தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படும்.
தென் மாவட்டங்களில், கடந்த காலங்களில் நடந்த சாதிக்கலவரங்களின்போது பல்வேறு விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டன. அவை அனைத்துமே, ‘போதிய வேலைவாய்ப்புகள் இல்லாததாலேயே இங்கு சாதிக் கலவரங்கள் அதிகம் நடக்கின்றன’ என்று சுட்டிக் காட்டியிருக்கின்றன. எனவே, மத்திய அரசு அளித்திருக்கும் இந்த வாய்ப்பைத் தமிழக அரசு உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் பேசினோம். ‘‘குலசேகரப்பட்டினம், பூமத்திய ரேகைக்கு மிக அருகே 8 டிகிரியில் இருக்கிறது. பூமத்திய ரேகைக்கு நெருக்கத்தில் இருப்பதால் விண்வெளியில் ராக்கெட் ஏவப்படும் சுற்றுப்பாதையின் தொலைவு குறையும். எரிபொருள் தேவையும் குறையும். அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவலாம். கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ஒரு ராக்கெட் தயாரிக்க ஒரு லட்சத்துக்கும் அதிகமான உதிரி பாகங்கள் தேவைப்படும். தற்போது அவற்றை வெளிநாடுகளிலிருந்து வாங்கி வருகிறோம். அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க முடியும். அதற்கான தொழிற்சாலைகளை அமைக்கவே 1,500 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசிடம் கேட்டிருக்கிறோம். குலசேகரப் பட்டினத்துக்கு அருகிலேயே ராக்கெட் உதிரி பாகங்களுக்கான தொழிற்சாலை அமைவதுதான் வசதியாக இருக்கும். நெல்லை அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் நிலம் கொடுத்தால் உதிரி பாகங்களைத் தயாரித்து, அருகிலிருக்கும் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திலேயே பரிசோதிக்க முடியும். பிறகு, ராக்கெட்டுகளை உருவாக்கி குலசேகரப்பட்டினத்துக்குக் கொண்டு சென்று ஏவுவதற்கும் வசதியாக இருக்கும்” என்கிறார்கள்.
‘ராக்கெட் உதிரி பாகத் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு நிலம் ஒதுக்குவதில் ஏன் இந்தத் தாமதம்?’ எனத் தொழில்துறை அமைச்சர் சம்பத்திடம் கேட்டோம், “ராக்கெட் ஏவுதளம் மற்றும் உதிரி பாகத் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக இஸ்ரோவுடன் ஏற்கெனவே 35,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. உதிரி பாகத் தொழிற்சாலைக்காக இஸ்ரோ கேட்டுள்ள நிலத்தை, நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில் ஒதுக்குவதில் நிர்வாகரீதியாக சில சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, இஸ்ரோ கேட்டுள்ள 1,500 ஏக்கர் நிலத்தை தூத்துக்குடி விமான நிலையம் அருகே கையகப்படுத்திக் கொடுக்க இருக்கிறோம்.” என்றார்.
ராக்கெட் ஏவுதளம் என்றால், பணிகள் ராக்கெட் வேகத்தில் நடைபெற வேண்டாமா!?