திருவண்ணாமலையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், சமூகச் செயற்பாட்டாளருமான ராஜ்மோகன் சந்திரா, 02.07.2012 அன்று காலை 6 மணியளவில், கிரிவலப் பாதையிலுள்ள சிங்கமுக தீர்த்தம் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார். காவல்துறையினர் மீதான மனித உரிமை மீறல் புகார்கள், நில அபகரிப்பு மாஃபியாக்களுக்கு எதிராக ராஜ்மோகன் சந்திரா சட்டப் போராட்டம் நடத்திவந்ததால், அவருக்கு அந்த நேரத்தில் நிறையவே எதிர்ப்புகள் இருந்திருக்கின்றன. இது தொடர்பான முன்விரோதப் போக்கில்தான் எதிரிகளால் அவர் தீர்த்துக் கட்டப்பட்டிருக்கிறார். இந்தக் கொலைவழக்கு தொடர்பாக, திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்கு பதிவுசெய்து, திருவண்ணாமலை, பெரும்பாக்கம் சாலை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரும், முன்னாள் நகர்மன்ற கவுன்சிலருமான திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன், அவர் தந்தை காசி என்ற வீராசாமி, அண்ணன் செல்வம், செல்வத்தின் மனைவி மீனாட்சி, நண்பர்கள் முருகன், சந்திரசேகர், அய்யப்பன், விஜயராஜ், சடையன், சுப்பிரமணி ஆகிய 10 பேரைக் கைதுசெய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கு நடைபெற்று வந்த சமயத்திலேயே, இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த திருப்பதி பாலாஜியின் அப்பாவும், மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த அவரின் அண்ணனும் உயிரிழந்துவிட்டனர். இருவரையும் தவிர்த்து, திருப்பதி பாலாஜி, அவர் அண்ணி மீனாட்சி உட்பட எட்டு பேர் மட்டுமே வழக்கு விசாரணைக்காக ஆஜராகிவந்தனர்.
இதனிடையே, கொலைசெய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் ராஜ்மோகன் சந்திராவின் மனைவி ஆலயம்மா ஜோசப் 2021-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதாவது, ‘‘என்னுடைய கணவர் காவல்துறை, வருவாய்த்துறை, வழக்கறிஞர்கள், மாஜிஸ்திரேட் உள்ளிட்டோரின் சட்டவிரோதச் செயல்களையும், கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு, மணல் கொள்ளை போன்ற திருட்டு தொடர்பான விஷயங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.

எனவே, அவருடைய கொலைத் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்; என் கணவர் அம்பலப்படுத்திய சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து உரிய முறையில் விசாரிக்க வேண்டும்; கணவரின் மரணத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருந்தார். மனைவி தொடர்ந்த அந்த வழக்கில் உயர் நீதிமன்றம், ‘‘பொதுமக்களின் நலனுக்காகப் போராடும் நபர்களின் கொலை வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்த வேண்டியது நீதிமன்றங்களின் கடமை. விசாரணையை தாமதிப்பது குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும். எனவே, விரைந்து இந்த வழக்கை முடிக்க வேண்டும்’’ என திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கொலையாளிகளான திருப்பதி பாலாஜி, அவர் அண்ணி மீனாட்சி உட்பட எட்டு பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி இருசன் பூங்குழலி. அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை நீட்டிக்கப்படும் என்ற உத்தரவையும் அவர் பிறப்பித்திருக்கிறார். இதையடுத்து, குற்றவாளிகள் எட்டு பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ரௌடிகள் பட்டியலில் அ.தி.மு.க பிரமுகர் :
சமூகச் செயற்பாட்டாளர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கில் முதல் குற்றவாளியான அ.தி.மு.க பிரமுகர் திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன் மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, தொழிலதிபர்கள், நில வணிகர்களை மிரட்டிப் பணம் பறித்தல், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல் உள்ளிட்ட சமூக விரோதச் செயலில் ஈடுபட்டுவந்ததாகப் புகார்கள் குவிகின்றன. இவரை ரௌடிகள் பட்டியலிலும் திருவண்ணாமலை தாலுகா போலீஸார் கடந்த 2008-ம் ஆண்டே சேர்த்திருக்கிறார்கள். திருவண்ணாமலை டவுன் காவல் நிலையத்தில் 10 வழக்குகளும், திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் ஒன்பது வழக்குகளும், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் என திருப்பதி பாலாஜி மீது 21 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. சமூகச் செயற்பாட்டாளர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கில் ஒரு முறையும், கனிமவளக் கொள்ளை வழக்கில் ஒரு முறையும் என இரண்டு முறை குண்டர் சட்டத்திலும் திருப்பதி பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்கிறது காவல்துறை.