சமூகம்
Published:Updated:

‘அறிகுறியற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை!’

கொரோனா பரிசோதனை
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா பரிசோதனை

அரசின் முடிவால் கொந்தளிக்கும் செயற்பாட்டாளர்கள்

`கொரோனாவை எதிர்கொள்ளப் பரிசோதனை செய்துகொண்டே இருங்கள்’ என உலக நாடுகளுக்குத் தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் கோவிட்-19 பாசிட்டிவ் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நிலையிலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வில்லை. மாறாக, `கொரோனா அறிகுறி உள்ளவர்களை மட்டுமே பரிசோதனை செய்வோம்’ என்கிறது அரசு.

‘தமிழகத்தில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ‘கொரோனா தொற்றாளர்கள்’ அறிகுறிகள் அற்ற ‘ஏசிம்டமேட்டிக்’ வகையினர் என்கின்றன தரவுகள். அப்படியிருந்தும், ‘அறிகுறிகள் உள்ளவர்களைத்தான் பரிசோதனை செய்வோம்’ என்று அரசு சொல்வது எந்த வகையில் சரி?’ எனக் கொந்தளிக்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.

‘அறிகுறியற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை!’

இதுகுறித்து தமிழகத்தின் கொரோனா சிறப்பு மருத்துவக்குழுவைச் சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் குகானந்தனிடம் பேசினோம். ‘‘கோவிட்-19 வைரஸின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால், பரிசோதனை வரையறைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், கான்டாக்ட் ட்ரேசிங்கில் அறிகுறிகளற்ற நபர்களுக்கு இப்போது பரிசோதனை செய்யப்படுவ தில்லை. காரணம், அறிகுறிகளற்ற கொரோனா பாசிட்டிவ் நபர்களை நோயாளியாகக் கருத வேண்டியதில்லை. அவர்களைக் கிருமித் தொற்றாளர்கள் என எடுத்துக்கொண்டால் போதும். இவர்கள் அறிகுறிகள் உள்ளவர்களைப்போல ஆபத்தானவர்கள் இல்லை. அன்றாட நடவடிக்கைகளில் சில மாற்றங்களைப் பின்பற்றினாலே நோயைப் பரப்பாமல் இருக்கலாம்.

அறிகுறிகள் அற்றவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அவசியம் இல்லை. ஏனெனில், கொரோனாவுக்கான சிகிச்சையே ‘சப்போர்ட்டிவ் கேர்’ எனப்படும் அறிகுறிகளுக்கான சிகிச்சைதான். அப்படிப் பார்த்தால், அறிகுறிகள் இல்லாதவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவே முடியாது. நாளடைவில் தொற்று தானாகவே நீங்கிவிடும். அதிகபட்சமாக சத்து மாத்திரைகள் தருவது, ஓய்வெடுக்கப் பரிந்துரைப்பது, பொது இடங்களில் புழங்காமல் இருக்கச் சொல்வது, சுத்தத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வலியுறுத்துவது போன்றவற்றைத்தான் பரிந்துரைப்போம். `கொரோனாவுடன் வாழப் பழகுங்கள்’ என்று சொல்வதன் பின்னணி இதுதான்.

அறிகுறிகள் தெரியவந்தால், பரிசோதனையும் மருத்துவ உதவியும் தேவை. அறிகுறிகள் தெரியாவிட்டால் சிகிச்சையே தேவையில்லை எனும்போது, பரிசோதனை எதற்கு? அதிக அளவில் இருக்கும் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்கள், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கட்டுக்கோப்புடன் பின்பற்றினால் நோயைப் புறக்கணிக்கலாம். அந்த வகையில், அரசைவிட மக்களின் பங்களிப்பே இதில் முக்கியம்” என்றார்.

சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவரும் செயற்பாட்டாளருமான ஜி.ஆர்.ரவீந்திரநாத், அரசு தரப்பு விளக்கத்தை மறுக்கிறார். “ `நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது’ என்ற பிம்பத்தைக் கட்டமைக்கவே பரிசோதனைகளைக் குறைக்கும் தந்திரத்தை அரசு கையிலெடுத்துள்ளது’’ என்றார் கடுமையாக.

‘அறிகுறியற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை!’

மருத்துவச் செயற்பாட்டாளர் புகழேந்தி, “நோயை ஆரம்பநிலையிலேயே கண்டறியத் தவறியதே தமிழகத்தில் சமீபத்தில் அதிகரித்த கோவிட்-19 மரணங்களுக்குக் காரணம். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் களுடன் தொடர்பிலிருந்த குடும்பத்தினருக்கு பரிசோதனை அவசியம். அது அவர்களின் அடிப்படை உரிமை. ஆனால், ‘அறிகுறிகள் இல்லை’ என்று காரணம் சொல்லி அவர்களுக்குப் பரிசோதனை செய்ய மறுக்கிறது அரசு. ஒருவேளை அவர்கள் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் மூலம் தொற்று பரவாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா? எனவே, `அறிகுறிகள் இல்லை’ என்ற காரணத்தைச் சொல்லிப் புறக்கணிக்காமல், நாள்பட்ட நோய், வயது மூப்பு எனப் பரிசோதனை செய்வதற்கான காரணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்’’ என்கிறார்.

அறிகுறிகளற்ற நபர்களுக்கான பரிசோதனையில் தான் இத்தனை சிக்கல்கள் என்றால், அறிகுறிகளுடன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் சிகிச்சையில் பல சிக்கல்கள் உள்ளன. அப்படி இன்னலுக்கு ஆளான ஒருவர் குறித்து, பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், ‘தனக்குத் தெரிந்த இளம்பெண் ஒருவருக்கு அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், சென்னையின் முன்னணி அரசு மருத்துவமனைகள், `நீங்கள் எங்கள் மருத்துவமனை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர் இல்லை. உங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட மருத்துவமனைக்குச் செல்லுங்கள்’ என்று கூறி அனுமதிக்க மறுத்து விட்டார்கள். குழப்பத்தைத் தவிர்க்க உடனடியாக மண்டலங்கள் - அரசு மருத்துவமனைகள் பட்டியலை வெளியிட வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

தமிழகப் பொது சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குநர் வடிவேலிடம், இதுகுறித்து விளக்கம் கேட்டோம். ‘‘கொரோனா நோயாளிகளுக்கான அட்மிஷனில் மண்டலவாரியான மருத்துவமனை என்ற வரையறை எதுவும் இல்லை. அரசு மண்டலங் களைப் பிரிப்பது, தடுப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகத்தானே தவிர, `இந்த மண்டலத்தினர் இந்த மருத்துவமனையில் சேர வேண்டும்’ என்ற நிர்பந்தம் எதுவும் இல்லை. மருத்துவர் ருத்ரன் கூறும் சம்பவம் நிகழ்ந்திருக்கும்பட்சத்தில், நிச்சயம் அது தவறு. விசாரிக்கிறோம்’’ என்றார்.

கொரோனா சிகிச்சையில் குளறுபடிகளுக்குக் குறைவே இல்லை!

- ஜெ.நிவேதா, பா.கவின்