சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரில் பாதாளச் சாக்கடைப் பணிகள், சாலைப் பணிகள் என மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் எதுவும் முடிவடையாத சூழலில், மக்கள் சிரமத்தைச் சந்தித்துவருகின்றனர். குண்டும் குழியுமான சாலைகளும், பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளுமாகக் காட்சியளிக்கிறது காரைக்குடி நகராட்சி.

பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவருமான கே.ஆர்.ராமசாமி பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சமூக ஆர்வலர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளைக் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தை முன்னெடுத்த தமிழக மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ச.மீ.இராசகுமார் நம்மிடையே பேசும் போது, ``சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி பல்வேறு சிறப்புகளைக்கொண்டது. இதில் மகர்நோன்புப் பொட்டலும் ஒன்று. இங்குதான் மகாத்மா காந்தி, தந்தை பெரியார், காமராசர், கருணாநிதி, ஜெயலலிதா எனப் பல தலைவர்கள் பேசக்கூடிய புகழ்பெற்ற பொதுக்கூட்டத் திடல் இருக்கிறது. அதனால்தான் இந்தப் பகுதிக்கு `காந்தி சதுக்கம்’ என்ற பெயரும் உண்டு. இங்கு பல சினிமா பிரபலங்களுக்கான விருது வழங்கும் விழாக்களும் நடந்திருக்கின்றன. இன்று, காந்தி சதுக்கம் குப்பைக்கிடங்காகக் காட்சியளிக்கிறது.

இந்த இடம் மட்டுமன்றி, காரைக்குடி முழுவதும் ஆங்காங்கே சாலை ஓரங்களில் குப்பைகளைக் குவித்துவைத்து, நகரமே சுகாதாரக் கேடாகக் காட்சியளிக்கிறது. இதைச் சுத்தம் செய்யக் கோரி காரைக்குடி நிர்வாகத்திடம் பலமுறை அறிவுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மக்கள் மன்றத்தினர் ஒன்று சேர்ந்து மகர்நோன்புப் பொட்டலில் குவித்துவைத்திருந்த குப்பைகளை அள்ளிச் சென்று, காரைக்குடி நகராட்சி வாசலில் கொட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இதனால் அங்கு வந்த காரைக்குடி காவல்துறை ஆய்வாளர் சுந்தரம் மகாலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் எங்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். நகராட்சி நிர்வாகம், மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

இது தொடர்பாக காரைக்குடி நகராட்சி அதிகாரிகளிடம் பேசினோம். ``பாதாளச் சாக்கடை தோண்டும் பணியின்போது அள்ளப்பட்ட மண்ணை மட்டுமே ஆங்காங்கு கொட்டிவைத்திருக்கிறோம். விரைவில் அது சரிசெய்யப்படும். மகர்நோன்பு பொட்டல் முன்பு இருந்ததைப்போலவே பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்!” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.