கட்டுரைகள்
Published:Updated:

சமூக இடைவெளி சாதியை நியாயப்படுத்திவிடக்கூடாது!

விஜய் மில்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் மில்டன்

இப்படியே பழகிருச்சினா சூழல் சரியானதுக்கு அப்புறமும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பாங்கன்னு தோணுது.

கொரோனாச் சூழலால் தற்போது கடைப்பிடிக்கப்படும் சமூக இடைவெளி என்பது காலத்துக்கும் நிரந்தரமாகிவிடுமோ என அச்சம் தெரிவித்திருந்தார் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன். இவரின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்திருக்கும் நிலையில் அவரிடம் பேசினேன்.

‘`நம்ம வீட்டுக்குப் பால்காரர், பேப்பர் போடுபவர், துப்பறிவுப் பணியாளர்கள் எனப் பலபேர் அன்றாடம் வந்து போயிட்டு இருப்பாங்க. இவங்க எல்லார்கிட்டயும் எந்த சோஷியல் டிஸ்டன்ஸும் நாம காட்டுனது இல்லை. ஆனா, இப்போ இந்தக் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பிறகு இவங்களை முன்ன மாதிரி நம்மால் ஹேண்டில் பண்ண முடியல. நமக்காக இல்லைன்னாலும் வீட்டுல இருக்குற பெரியவங்க, சின்னப் பசங்களுக்காக சமூக இடைவெளியை கவனிக்க வேண்டிய சூழல். என் வீட்டுல என் அம்மா, அப்பா இருக்காங்க. அவங்க வயசு 80க்கும் மேல. இதனால, ஏதாவது தொற்று வந்துட்டா என்ன பண்றதுன்னு பயம் வருது. சமூக இடைவெளியைப் புரிஞ்சிக்கிட்டவங்ககிட்ட இதை ஃபாலோ பண்றப்போ பயம் வர்றதில்லை. ஆனா, இதைச் சரியாப் புரிஞ்சிக்காதவங்க நம்மை ஒதுக்குறாங்களோ எனத் தப்பா நினைக்கிறாங்க. அவங்க மனசுக்குள்ள நினைக்கிறதை நம்மால் உணரமுடியுது. ‘ஓ இதுதான் தீண்டாமையா... இப்படித்தான் அந்தக் காலத்துல பண்ணியிருப் பாங்களா... எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டவங்க ஃபீல் பண்ணியிருப் பாங்க’ன்னு ஆயிரம் கேள்விகள் மனசுக்குள்ள ஓடுது. இப்படியே பழகிருச்சினா சூழல் சரியானதுக்கு அப்புறமும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பாங்கன்னு தோணுது.

இந்தச் சமூக இடைவெளி இப்போதைய ஆரோக்கியத்துக்கான தற்காலிக ஏற்பாடுன்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும். இது சாதியையும் தீண்டாமையையும் நியாயப்படுத்துற விஷயமா மாறிடக்கூடாது. ஏன்னா, நாளைக்கே கொரோனா வைரஸ் மாதிரியே வேற ஏதாவது வைரஸ் வந்துட்டா என்ன பண்றதுன்னு எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். இதுதான் என்னோட சமூகப் பொறுப்புன்னு சொல்லிட்டு இருக்க ஆரம்பிச்சிடுவோம். இந்த மனப்பான்மை நம்மகுள்ளகூட வந்துடுமோன்னு பயம் வருது.

விஜய் மில்டன்
விஜய் மில்டன்

அதுமட்டுமல்ல, ஏற்கெனவே எல்லோரும் வீட்டுக்குள்ளேயே சுருங்கிப்போயிட்டோம். பக்கத்து வீட்டுல ஏதாவது வேணும்னா பேசுறோம். எப்படியிருக்காங்கன்னுகூட விசாரிக்க மாட்டோம். இந்தக் குற்றவுணர்ச்சி ரெண்டு பேருக்குமே இல்லாம வாழ்ந்துட்டு வர்றோம். இப்போ சமூக இடைவெளியும் சரிதான் அப்படின்ற நிலைமை வந்துட்டா, குழந்தைகளும் இப்படியே வளர்ந்துட்டா, எதிர்காலத்துல என்ன ஆகும்னு தெரியல. ரோட்ல ஒருத்தர் விபத்துக்குள்ளாகியிருந்தா பக்கத்துல போய் என்னாச்சுன்னு தொட்டுப் பார்த்துட்டு ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுவோம். ஆனா, இனிமே இதுவும் பண்ணாம ஒரு மீட்டர் இடைவெளில நின்னு, போட்டோ எடுத்து சோஷியல் மீடியால அப்லோடு பண்ணிட்டு, லொகேஷன் ஷேர் பண்ணிட்டுப் போய்க்கிட்டே இருப்போம்னு தோணுது. மனிதத்தன்மை குறைஞ்சி போயிரும். சரி இதுக்கெல்லாம் என்ன பண்ணலாம்னு பார்த்தா அதுக்கும் நம்மகிட்ட பதில் இல்லை. சமூக இடைவெளின்ற விஷயத்தைக் கொஞ்சம் கவனமாதான் பார்க்கணும்னு தோணுது.’’

‘`இந்தக் கொரோனா நாள்களில் நேரத்தை எப்படிச் செலவு பண்றீங்க?’’

‘`சினிமால இருக்குறவங்க தங்கள் குடும்பத்தோடு இருக்க போதிய நேரம் எப்பவும் இருக்காது. மனசுக்குள்ள எந்நேரமும் ஏதாவது ஒரு கதை ஓடிக்கிட்டே இருக்கும். வீட்ல ஏதாவது நடந்தாக்கூட இதை நம்ம படத்துல யூஸ் பண்ணுனா சரியா இருக்குமான்னு தோணும். சென்னையில் மழை வெள்ளம் வந்ததுக்குப் பிறகு இப்போதான் குடும்பத்தோடு முழுநேரமும் இருக்கேன். வீட்டுல மனைவிக்கு ஒத்தாசையா இருக்கேன். பசங்ககூட விளையாடுறேன். பரீட்சையெல்லாம் இல்லாததனால பசங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. கூடவே படத்துக்கான ஸ்க்ரிப்ட் எழுதிட்டிருக்கேன். விஜய் ஆண்டனிகூட பண்ற படம் ஏப்ரல் 14 ஷூட்டிங் தொடங்குறதா இருந்துச்சு. இப்போ இந்த வைரஸால் தள்ளிப் போகுது. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்னு நம்புவோம்.’’