
“நான் எழுதவில்லை, என்னுடைய அட்மின் எழுதிவிட்டார்!”
- தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்த டயலாக் இது. பெரியார் சிலை விவகாரத்தில் பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஒரு கருத்திற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பவே, மேலே குறிப்பிட்டுள்ள டயலாக்கைச் சொல்லி அதிரவைத்தார். அந்த வகையில் ‘அட்மின்’ என்கிற வார்த்தையை அனைத்துத்தரப்பு மக்களையும் பேசவைத்த பெருமை ராஜாவையே சேரும்.
அதன்பிறகுதான் ஒவ்வொரு தலைவரும் அவர்களின் பெயர்களிலான சமூகவலை தளங்களைக் கையாள அட்மின்கள் வைத்திருக்கிறார்கள் என்கிற விவரமே தமிழக மக்களுக்குத் தெரியவந்தது. இப்போது செய்தித்தாள்களில் வெளிவரும் அறிக்கைகளைவிட சமூக வலைதளங்களில் வெளியாகும் அறிக்கைகளுக்கு உடனடி ரியாக்ஷன் இருப்பதால் சமூக வலைதளங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தலைவர்கள் விரும்புகிறார்கள். தலைவர்கள் வீட்டிலிருந்து காரில் ஏறுவதில் தொடங்கி, கட்சிக்காரர்களின் கல்யாணம், காதுகுத்து வரை அனைத்தையும் ஃபேஸ்புக் மூலம் ‘லைவ்’ செய்யவும், தலைவர்கள் மேடையில் பேசும்போது சொல்லும் ‘பன்ச்’ டயலாக்குகளை ட்விட்டரில் பதிவிடவும் ஒவ்வொரு தலைவரின் பின்னாலும் ஒரு குழுவே செயல்படுகிறது.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாமல் இன்று அரசியல் செய்யவே முடியாது என்கிற நிலையை அனைத்துத் தலைவர்களுமே நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஒருகாலத்தில் தலைவர்களின் பி.ஏ-க்களுக்கு இருந்த மரியாதை, இப்போது அந்தத் தலைவர்களின் அட்மின்களுக்கும் இருக்கிறது. தமிழகத் தலைவர்களின் சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் அட்மின்கள் யார் யார் என்ற விசாரணையில் இறங்கினோம்.
எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில்தான் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். குறிப்பாக அ.தி.மு.க-வின் ஐ.டி விங் ‘தனியாக நீங்கள் கணக்கு ஆரம்பித்துக் கருத்துகளை வெளியிடுங்கள்’ என்று அறிவுறுத்திய பிறகே தன் பெயரில் கணக்கு ஆரம்பிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

முதல்வரின் கருத்துகளைக் கேட்டு, அதை கன்டென்டாகத் தயார்செய்து மீண்டும் அவருடைய ஒப்புதலுக்கு அனுப்பி ஓகே வாங்கி அதன்பிறகு சமூகவலைதளங்களில் பதிவிடு கிறார்கள். இந்தப் பணியை அ.தி.மு.க-வின் ஐ.டி.விங் பொறுப்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்துவருகிறார். இவருக்குக் கீழ் ஒரு டீமும் செயல்பட்டுவருகிறது.
ஓ.பன்னீர்செல்வம்
தர்மயுத்தம் தொடங்கிய பிறகுதான் சமூக வலைதளங்களில் பன்னீர்செல்வத்திற்குக் கணக்கும் தொடக்கப்பட்டது. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு திரட்ட அப்போது ஓ.பி.எஸ் அணியில் இருந்த சிங்கை ராமச்சந்திரன் இதற்காகவே தனி டீம் ஒன்றைக் கட்டமைத்தார். அப்போது முதல் இப்போது வரை பன்னீரின் ட்விட்டர் கணக்கை நிர்வாகித்துவருவது ராமச்சந்திரன் தான்.

எடப்பாடிக்கும் இதே டீம்தான் சமூக வலைதளங்களை நிர்வகிக்கிறது என்பது பலருக்கும் இன்னும் ஆச்சர் யமான விஷயமாய் இருக்கிறது.
ஸ்டாலின்
தமிழகத் தலைவர்களிலேயே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் அதிக ஆக்டிவ்வாக இருக்கும் நபராக இருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ஐந்தாண்டுகளுக்கு முன்பே சமூக வலைதளங்களில் கணக்குகளை ஆரம்பித்து இப்போது அதை அசுர வளர்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளனர் ஸ்டாலினின் அட்மின்கள். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றிலும் ஸ்டாலினுக்குக் கணக்கு உள்ளது.

இவரின் சமூக வலைதளங்களை நிர்வகிப்பது ஓ.எம்.ஜி குழு. ஸ்டாலின் பேசும் வீடியோக்கள் முதல் அவருடைய அறிக்கையை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வெளியிடுவதுவரை அனைத்தையும் இந்தக் குழுவே பார்த்துக்கொள்கிறது. உடனடியாக பதில் அளிக்கவேண்டிய கருத்துகளை ஸ்டாலினின் உதவியாளர் தினேஷ் ட்விட்டர் மூலம் பதிவிடுகிறார்.
வைகோ
சமூக வலைதளங்களில் கணக்கே இல்லாத ஒரு தலைவர் என்றால் அது வைகோதான். தன் பெயரில் சமூக வலைதளங்களில் எந்தக் கணக்கும் தொடங்கவேண்டாம் என்பதில் இன்றுவரை உறுதியாக இருக்கிறார்.

அவர் பேசுகிற விஷயங் களை வைத்து சமூக வலை தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் தாறுமாறாக மீம்ஸ் போட்டாலும் அவரிடமி ருந்து மிகவும் மெதுவாகவே ரியாக்ஷன் வரும். காரணம், சமூக ஊடகங்களை அவர் பயன்படுத்துவதுமில்லை, பார்ப்பதுமில்லை என்பதுதான். சங்கொலி பெயரில் உள்ள ஃபேஸ்புக் பக்கத்துக்கு அட்மினாக இருந்து அறிக்கைகள் பதிவிடுபவர் வைகோவின் உதவியாளர் அருணகிரி.
ரஜினி
ரஜினி ஏதாவது ஒரு டயலாக் விட்டாலே அது இரண்டு நாள்களுக்கு மீடியாக்களுக்குப் பெரும் தீனியாகிவிடும். அதேபோல அவர் ஏதாவது ட்விட்டரில் பதிவிடுகிறாரா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் எப்போதும் கண்விழித்துக் காத்துக்கொண்டிருக்கும். அவர் யாரையாவது வாழ்த்தினாலும் விமர்சித்தாலும் அதுவே அன்றைக்கு செய்தித் தொலைக்காட்சிகளுக்கான விவாதப்பொருளாகிவிடும்.

அவர் ட்விட்டரில் பதிவிட்ட பல விஷயங்கள்தான், அவருக்கு பா.ஜ.க சாயம் பூசின என்பது ஊரறிந்த சேதி. அவருடைய சமூக வலைதளப் பக்கத்தைக் கவனித்துக்கொள்வது அவரின் இளைய மகள் செளந்தர்யா. சமீபகாலமாக ரஜினியே நேரடியாக ட்விட்டரில் டைப் செய்து பதிவேற்றம் செய்வதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

டி.டி.வி.தினகரன்
தினகரனின் ட்விட்டர் பக்கத்தை அவருக்கு உதவியாளராக இருக்கும் ஜனாவே நிர்வகித்து வருகிறார். இதைத்தவிர தனியாக ஐ.டி விங் ஒன்று தினகரனின் அரசியல் வளர்ச்சிக்காகச் செயல்பட்டுவருகிறது.
ராமதாஸ்
ஜெயலலிதா குறித்த ஒரு மினி தொடரையே தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியவர், பின்பு அதைப் புத்தகமாகவும் வெளியி்ட்டார். சமூக வலை தளங்களைக் கையாளுவதில் அதிக ஆர்வம் உள்ளவர் ராமதாஸ். இவருடைய பிரதான அட்மின்கள் அருள் மற்றும் நடராஜ். அருள் தொழில் நுட்பத் திறன் வாய்ந்தவர்.

நடராஜ் இவரின் உதவியாளர். ராமதாஸ் சொல்லச் சொல்ல டைப் செய்து அதை முகநூலில் பதிவிடும் பணியை இவர்கள் செய்துவருகிறார்கள்.
ஹெச்.ராஜா
அட்மின் புகழ் ராஜாவிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர் பட்டாளமும் அதிகம் உண்டு. சமீபத்தில் தனியாகவே வீடியோப் பக்கம் ஒன்றையும் தொடங்கி யிருக்கிறார். ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், என அனைத்துத் தளங்களிலும் கலக்கிவரும் ராஜாவின் அட்மின் யார் என்பதை அறிய தமிழகமே ஆர்வமாய் இருந்திருக்கிறது.

அவரின் ஒட்டுமொத்த சமூக வலைதளப் பக்கங்களையும் ஒரு டீமே நிர்வகிக்கிறது. அதை மேற்பார்வையிடுவது ராஜாவின் மருமகன் சூர்யா.

திருமாவளவன்
திருமாவின் சமூக வலைதளப் பக்கங்களை விடுதலைச் சிறுத்தைகளின் தமிழ்மண் அமைப்பு நிர்வகித்தாலும், முழுப்பொறுப்பேற்றுப் பதிவிடும் பணியைச் செய்துவருவது அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் பாலாஜிதான்.
சீமான்
சமூக ஊடகங்களில் பேசியும் எழுதியுமே கட்சியை வளர்க்கமுடியும் என்று தமிழக அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தியது நாம் தமிழர் கட்சிதான். யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து விதமான சமூக ஊடகங்களிலும் சீமானின் தம்பிகள் சடுகுடு ஆடுகிறார்கள்.

சீமானின் பேச்சுகளை யூடியூபில் பதிவிடுவது, ஃபேஸ்புக்கில் வீடியோ போடுவது, ட்விட்டரில் கருத்துப்பதிவேற்றம் செய்வது என்று சகலத்தையும் நிர்வாகிப்பது ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் பாக்கியராசன்.சே என்பவர். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்த இவரே சீமானின் ஆதர்ச அட்மினாக இருந்துவருகிறார்.
கமல்
எப்போதுமே டெக்னாலஜியில் முன்னோடியாக இருக்கும் கமல்ஹாசன், நடிகராக இருந்த போதே சமூக விஷயங்கள் குறித்து அடிக்கடி சமூகவலை தளங்களில் கருத்து வெளியிட்டு வந்திருக்கிறார். ஆனால் கட்சி ஆரம்பித்தபிறகு தான் இவருடைய சமூக வலைதளப் பக்கங்களைப் பல லட்சம் பேர் பின்தொடரத் தொடங்கினார்கள்.

இன்றைய நிலையில், கமலின் ட்விட்டர் பக்கத்தை இப்போது ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள். கமலின் சமூக வலைதளப் பக்கங்களைக் கையாள்வது அவருடைய கட்சி அலுவலகத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள சத்தியமூர்த்தி.