
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வைவிட நாம் தமிழர் கட்சியினர்தான் எங்கள் தலைவரை முழு நேரமாக ஃபாலோ செய்து அவதூறு பரப்புவதையே வேலையாக வைத்திருக்கின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான வன்னி அரசுவுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்குமான சமூக வலைதள மோதல்கள் நாளுக்கு நாள் உக்கிரமாகிக்கொண்டே வருகின்றன. ``எங்கள் தலைவர் திருமாவளவன் மீது வேண்டுமென்றே நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்புகின்றனர்’’ என வன்னி அரசும், ``எங்கள் அண்ணனைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சிக்கிறார்’’ என நாம் தமிழர் கட்சியினரும் மாறி மாறிக் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர். என்னதான் பிரச்னை என விசாரித்தோம்...
திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் பெருவாரியான விஷயங்களில் ஒரே கொள்கையைக் கடைப்பிடிப்பவைதான். ஈழம், காவிரி, எழுவர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் வன்னி அரசும், சீமானும் ஆரம்பகாலம்தொட்டு ஒன்றாகப் பயணித்தவர்கள்தான். “நாம் தமிழர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேடைகளில் பலமுறை பேசியிருக்கிறேன்” என சீமானே பல இடங்களில் பேசியிருக்கிறார். தற்போதும்கூட, `அண்ணன் திருமாவளவன்’ என சீமானும், `அண்ணன் சீமான்’ என வன்னி அரசும் அழைத்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகப் பழகிவருபவர்கள். ஆனால், சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியை ‘ஆர்.எஸ்.எஸ் முகாம்’ எனவும், பஞ்சாங்கம் விவகாரத்தில் நடிகர் மாதவனை விமர்சிக்கும்போது ‘அண்ணன் இயக்கிய தம்பி’ எனவும் அடையாளப்படுத்தி மிகக் கடுமையாக விமர்சித்துவருகிறார் வன்னி அரசு.

நாம் தமிழர் கட்சியினருடன் அப்படி என்னதான் பிரச்னை... அவரிடம் பேசினோம். ``ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அந்த அறை மிகச்சிறிய இடமாக இருந்ததால், எல்லோருக்கும் பின்னால் தலைவர் நின்றுகொண்டிருந்த வகையில் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அதை வைத்துக்கொண்டு மிகத் தரக்குறைவாக நாம் தமிழர் கட்சியினர் விமர்சனம் செய்துவருகின்றனர். இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் வீட்டில் நடக்காத ஒரு சம்பவத்தை முன்வைத்து ‘பிளாஸ்டிக் சேர்’ எனச் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். நாங்கள் கொள்கைரீதியாக வெளிப்படையாக அறிவித்துவிட்டு தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கிறோம். ஆனால், என்னை ‘அறிவாலயத்தின் கொத்தடிமை’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, தரக்குறைவாக விமர்சனம் செய்துவருகிறார்கள். என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கையும் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வைவிட நாம் தமிழர் கட்சியினர்தான் எங்கள் தலைவரை முழு நேரமாக ஃபாலோ செய்து அவதூறு பரப்புவதையே வேலையாக வைத்திருக்கின்றனர். இதை முழுக்க முழுக்கச் சாதிய வன்மத்தின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன். சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். வெளியில் `அண்ணன், அண்ணன்’ என எங்கள் தலைவரை சீமான் சொன்னாலும், அவரின் தூண்டுதலின் பேரில்தான் இது நடப்பதாக நான் கேள்விப்படுகிறேன். தி.மு.க கூட்டணியிலிருந்து எங்கள் கட்சியைப் பிரிக்க வேண்டும், திராவிடக் கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ்-ஸின் அஜண்டாவுக்காக இந்த வேலை நடக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்-ஸில், மாணவர்களிடம் வேலை செய்ய ஏ.பி.வி.பி., பழங்குடி மக்களிடம் வேலைசெய்ய ஆதிவாசி கல்யாண் இயக்கம், பண்பாட்டுத்தளத்தில் வேலைசெய்ய விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் இருப்பதைப்போல, தமிழ்த் தேசியக்குழுக்களைச் சீர்குலைக்க வேலை செய்யும் அமைப்புதான் நாம் தமிழர் கட்சி. ஒரு தமிழ்த் தேசியனாக, இதை அம்பலப்படுத்துவதை என் கடமையாக நினைக்கிறேன். அதனால்தான் விமர்சிக்கிறேன்’’ என்றார் வன்னி அரசு.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் பேசினோம். ``வன்னி அரசு சொல்லும் எதுவுமே உண்மை இல்லை. அவர் வேறோர் உலகத்தில் வாழ்ந்துவருகிறார் என்று நான் நினைக்கிறேன். நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை, அரசியல்ரீதியாக அண்ணன் திருமாவளவனை எதிர்த்ததே கிடையாது. எங்கள் கட்சி பொறுப்பாளர்களோ, தம்பிகளோ அது போன்ற காரியங்களில் ஒருபோதும் ஈடுபடுவது கிடையாது. கட்சிக்கு வெளியிலிருந்து எங்களை ஆதரிக்கும் சிலர், விடுதலைச் சிறுத்தைகளை, அண்ணன் திருமாவை விமர்சிக்கிறார்கள். அவர்களை எங்கள் கட்சியினர் என நினைத்துக்கொண்டு வன்னி அரசு அவதூறு பரப்புகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏன் தமிழ்நாட்டுக்குத் தேவை என்பதை நாங்கள் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறோம்.

ஆனால், நாங்கள் ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவுக்கு வேலை செய்கிறோம் என்று சொல்வது அடிப்படை ஆதாரமற்ற அவதூறு. நாம் தமிழர் கட்சியை எதிர்ப்பதன் மூலமாக பா.ஜ.க-வை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் வேலையை வன்னி அரசுதான் செய்துவருகிறார் என்று நாங்களும் குற்றம்சாட்ட முடியும். தி.மு.க-வினரை திருப்திப்படுத்தவே இது போன்ற காரியங்களில் அவர் ஈடுபடுகிறார். ஒரு தம்பியாக அவருக்கு எங்களின் வேண்டுகோளெல்லாம், எங்களை அரசியல்ரீதியாக விமர்சித்துக்கூட பலனடைந்துகொள்ளுங்கள். ஆனால், தயவுசெய்து ஆர்.எஸ்.எஸ் அஜண்டா என்று சொல்லி எதிரியின் பக்கம் எங்களைத் தள்ளும் வேலையைச் செய்யாதீர்கள். அதை நாங்கள் கேவலமாக உணர்கிறோம். அண்ணன் திருமாவளவனுக்கு எதிராக அர்ஜுன் சம்பத், ஹெச்.ராஜா போன்றவர்கள் கடுமையாகப் பேசும்போது, அதை முதலில் எதிர்ப்பது அண்ணன் சீமானும், நாம் தமிழர் கட்சியும்தான். அதை நாங்கள் கடைசிவரை தொடர்வோம்’’ என்கிறார்.
விமர்சனங்கள் அரசியலில் தவிர்க்க முடியாதவை. அதிலும் கண்ணியம் காப்பது அவசியம்!