சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே...

ப்ரியா பவானி ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரியா பவானி ஷங்கர்

கோயம்புத்தூர் சந்திப்பில் ரயில் வேகம் குறைக்கும்போது பெரும் கடலலை போல ஓசை ‘ஹோ’வென ஆர்ப்பரிப்புடன் கேட்கத் தொடங்கியது.

twitter.com/drkrvcvijay

ஒரு டாக்டர் எழுதுற மருந்து ஓரளவுக்கு எல்லா மெடிக்கல்ஸ்லயும் கிடைக்குதுன்னா, அது நல்ல பிரிஸ்கிரிப்ஷன்னு நான் சொல்லுவேன். நாம எழுதுற மருந்து, நம்ம கிளினிக்ல மட்டும் கிடைக்குதுன்னா, அது மக்கள கஷ்டப்படுத்துற மாதிரி!

twitter.com/gmkhighness

செம்மறியாடு வாழ்நாள் முழுவதும் தன்னை ஓநாய் சாப்பிட்டுவிடுமோ என்று பயந்துகொண்டே இருக்குமாம். கடைசியில் மேய்ப்பவன் குழம்பில் வெந்து கொண்டிருக்குமாம். அதேபோல் நாம் ஊருக்கு பயந்து வாழ்ந்து கடைசியில் குடும்ப பாரத்தால் அடித்து நொறுக்கப்படுகிறோம்.

twitter.com/selvu

“என்னங்க சொல்றீங்க, இவர் உங்க பையனா? உங்களையும் அவரையும் பார்க்கும்போது அண்ணன், தம்பியா இருப்பீங்கன்னு நினைச்சுட்டேன்!”

“சும்மா அடிச்சு விடாதீங்க. அவ்வளவு இளமையாவா தெரியுறேன்?”

“இல்ல. உங்க பையன் வயசானவர் மாதிரி தெரியுறார்னு சொல்ல வந்தேன்!”

Kajol: காபி காதல்!
Kajol: காபி காதல்!

twitter.com/imanojprabakar

ஒரு காலத்தில் அ.தி.மு.க-வில் கட்சிக் கருத்து மட்டுமே இருந்தது. சொந்தக் கருத்தெல்லாம் வாய்ப்பே இல்லை. இப்போது சொந்தக் கருத்து சொல்லுமளவு அங்கு ஜனநாயகம் வளர்ந்துள்ளதை வரவேற்க வேண்டும்.

twitter.com/gpradeesh

என்ன பி்சாத்து 15 மில்லியன்? உலகமே வேடிக்கை பாத்த கேசு. இந்த கேச வெப்சீரீஸா எடுக்க டெப்பும் & ஹெர்டும் நெட்ப்ளிக்ஸுக்கு ரைட்ஸ வித்து ஆளுக்கு 100 மில்லியனுக்குக் குறையாம சம்பாரிச்சுருவாங்க. சீரிஸையும் நாம குத்தவச்சு பாக்கத்தான் போறோம்.

twitter.com/Im_Revathy

பாலை டம்ளரில் சப்பிக் குடிச்சு நிமிர்ந்த தம்பியைப் பார்த்து, ‘ஹே, பால் மீசை வந்துருச்சு உனக்கு’ என அழகா சொல்லுது பெரிய குட்டி.... அக்காக்கள் எனும் இரண்டாவது அம்மாக்கள்!

twitter.com/SHIJA25

ராஜ்யசபா சீட் கிடைக்காததால் பா.ஜ.க-வை விமர்சிக்கிறார் பொன்னையன் - வி.பி.துரைசாமி

சார் யாரு தெரியுமா?! ராஜ்யசபா சீட் கிடைக்காததால் தி.மு.க-விலிருந்து விலகி பா.ஜ.க போனவரு.

twitter.com/deltatamilian

வரும் நாள்களில் வளைகுடா நாடுகள் வழக்கம்போல இந்தியாவுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்துவிடும். ஆனால், அங்கு வாழும் அரேபியர்களிடம் நம் நாடு மீதும், நாட்டு மக்கள் மீதும் கடுமையான வெறுப்புணர்வு பரவ ஆரம்பித்துவிட்டது. இது நம் மக்களுக்கு நல்லதல்ல.

facebook.com/gokul.prasad.

நாம் கொடுக்கிற காசுக்கு சினிமா என்ன திருப்பித் தருகிறது என்பதையே கணக்கில்கொள்ள வேண்டும். அதிலேயே திருப்தியடைய வேண்டும். நம் பணத்தில் ஒரு திரைப்படம் எவ்வளவு லாபம் ஈட்டுகிறது எனப் பூரிப்படைவதில் பொருளில்லை. முதலில் நாம் ரசிகர்கள், முதலீட்டாளர்கள் அல்ல. நாம் வெறும் பார்வையாளர்கள், நிதிப் பங்கீட்டாளர்கள் அல்ல. நாம் டிமாண்ட் செய்யும் இடத்தில் இருக்கிறோம். அதன்மூலம் தரமான பொருளுக்கான சந்தை மதிப்பை நிர்ணயம் செய்யும் பொறுப்பு நமக்கிருக்கிறது. இதை உணராவிட்டால் கலையும் டாஸ்மாக் மாதிரி ஆகிவிடும். போலிச் சரக்கை அநியாய விலைக்கு விற்றுக் கூடுதல் லாபம் பார்ப்பார்கள். நம்மையே புழு மாதிரி நடத்துவார்கள். தட்டிக்கேட்க முடியாத அவலநிலைக்குக் கொண்டுசெல்வார்கள். ‘டாஸ்மாக்கால் தமிழக அரசுக்கு இத்தனை கோடி வருமானம்’ என்கிற செய்தியைக் கேட்டு இன்புற்ற குடிகாரர்கள் எவரேனும் உண்டா? ரசிகர்களுக்கு மட்டும் ஏன் இந்த மானங்கெட்ட எண்ணம்?

Genelia: அதே சிரிப்பு!
Genelia: அதே சிரிப்பு!

twitter.com/maduraiboy0007

‘கைதி’யில வந்தவங்க ‘விக்ரம்’ல வராங்கல்ல... இதுக்குப் பேருதான் multiverse concept.

அம்மா: இது என்னடா பெரிய multiverse. பாக்கியலட்சுமி வீட்டுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வந்தாங்க பாரு!

twitter.com/rmuthukumar

தேங்காய்ச் சட்னின்னு சொல்லும்போதே ருசிக்கும். அதைப் போய் வொய்ட் சட்னி என பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதைச் சொன்னால் க்ரிஞ்சி, ப்ரிஞ்சி என்பார்கள்.

twitter.com/Geeeethuma

ஏதோ இந்த அஜித் - விஜய் ஃபேன்ஸ்தான் சின்னப் பசங்க ரசிக சண்ட போடுறாங்கன்னா, ஏழு கழுதை வயசில இருக்கிற ரஜினி, கமல் ஃபேன்ஸ் ரசிக சண்ட போட்டுட்டு இருக்காங்க!

twitter.com/Suyanalavaathi

நாம எந்த நேரத்துல என்ன சாப்பிடுவோம்னு வீட்டுக்காரம்மாக்குத் தெரியுதோ இல்லையோ, இந்த swiggy, zomato காரனுக்கு நல்லா தெரியுது. கரெக்டா டைமுக்கு remind பண்றான்!

twitter.com/sasitwittz

காதலிப்பவர்களுக்கு காதலிக்காகக் காத்திருப்பது மட்டும்தான் சுகம்... காதலி இல்லாதவருக்கு ஞாயிற்றுக்கிழமை கறிக்கடையில் காத்திருப்பதும்கூட சுகம்தான்...

twitter.com/VignaSuresh

சின்னதோ, பெரிசோ - எதிர்பார்ப்புன்றது நாம இன்னொருத்தர் மேல தூக்கி வைக்கற பாரம்.

twitter.com/saravankavi

அரசாங்கத்தை எங்களிடம் கொடுத்துவிடுங்கள் - அண்ணாமலை

அன்புமணி & சீமான் டு அண்ணாமலை: டேய் சரவணா, என்னடா என்னைய ஓவர் டேக் பண்ணிட்டுப் போற!

Dhoni: அன்பெனும் அற்புதம்!
Dhoni: அன்பெனும் அற்புதம்!

twitter.com/Greesedabba2

‘‘தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்வது அ.தி.மு.க-வுக்கு நல்லதல்ல...’’

‘‘அதனால கட்சியை விட்டு விலகப் போறீங்களா..?’’

‘‘அது அநாவசியம்... அ.தி.மு.க-வை பா.ஜ.க-வோட இணைச்சுட்டா ரெண்டும் சேர்ந்து வளரலாம்னு சொல்ல வந்தேன்!”

twitter.com/karthikeyan581

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கேட்பது அவர்மீது உள்ள நல்லெண்ணம் கிடையாது. அவர் அமைச்சரானால் ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு போன்ற பலரின் மகனுக்கு அமைச்சர் பதவி வாங்கத்தான் இந்தக் கட்சித் தீர்மானங்கள். முதல்வர் இதற்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். உதயநிதிக்கு வயதும் காலமும் நிறைய உள்ளது.

facebook.com/sowmya.ragavan?__

ஆசிரியர்களை நமக்கு நினைவிருக்கிறது. அவர்களுக்கும் நம்மை இன்றும் நினைவிருந்தால் நாம் ஆகச்சிறந்த/மோசமான மாணவர் என்று பொருள்.

facebook.com/revathy.ravikanth?_

Make a monthly calendar 2022 - பையன் ஸ்கூல் அசைன்மென்ட்டு...

முருகர் படத்தையும் வரையணுமான்னு தெரிலையே?!

twitter.com/LAKSHMANAN_KL

இந்த உலகமே இந்தியாவின் பேச்சைக் கேட்கிறது - ராஜ்நாத் சிங்.

சத்தம் போட்டுச் சொல்லாதீங்க... சீனாவுக்குக் கேட்டுடப் போகுது..!

twitter.com/ayahdunas

அந்த ரெண்டு ஹீரோ படங்களவிட வேற ஹீரோ படம் நல்லா இருந்தா insecured ஆகிடறாங்க அவங்க ஃபேன்ஸ். ‘இதே என் ஹீரோ நடிச்சிருந்தா எப்படி இருக்கும் தெரியுமா’ன்னு தூக்கிட்டு வந்துடறாங்க. அதான் உங்க ஹீரோ நடிக்கலையேடா...

facebook.com/Santhosh Narayanan Chenthilkumar

ஃப்ரெண்ட் ஒருத்தன் கேரளா போனப்ப ஒரு மலையாளப்பட ஷூட்டிங்கை ஓரமா நின்னு வேடிக்கை பார்த்திருக்கான். ஷூட்டிங் முடிஞ்சு கிளம்பும்போது ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் என் ஃப்ரெண்ட் கிட்ட பேரென்னன்னு கேட்டு நோட் பண்ணியிருக்கார். அந்த மலையாளப்படம் ரிலீஸானப்ப தேங்க்ஸ் கார்டுல என் ஃப்ரெண்ட் பேரும் இருக்கிறதைப் பார்த்து அப்டியே ஷாக்காயிட்டானாம்.

Priya Bhavanishankar: மேகமோ அவள்!
Priya Bhavanishankar: மேகமோ அவள்!

facebook.com/SivaramanGanesan

ஆலப்புழாவிலிருந்து சென்னை திரும்ப மே முதல் வாரத்திலிருந்தே ரயில்களில் இடமில்லை. வேறு வழியின்றி வாரம் ஒருமுறை சிறப்பு ரயிலான எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸில் புக் செய்தோம். எர்ணாகுளத்திலேயே டிடிஇ, ‘‘கோயம்புத்தூர் வரும்போது பெர்த் எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணி லைட் ஆஃப் பண்ணிப் படுத்துடுங்க” என்றார். தூர ரயில்களில் அன்ரிசர்வ்டு பயணிகள், ரிசர்வேஷன் கம்பார்ட்மென்ட்டுகளில் ஆக்கிரமிப்பு செய்வது பற்றிய எச்சரிக்கை என்று புரிந்தது. அவர் சொன்னவாறே செய்தோம்தான். ஆனால் inquisitive mind இருக்கிறதே, அது அப்பர் பெர்த்தில் தூங்காமல் காத்திருந்தது.

கோயம்புத்தூர் சந்திப்பில் ரயில் வேகம் குறைக்கும்போது பெரும் கடலலை போல ஓசை ‘ஹோ’வென ஆர்ப்பரிப்புடன் கேட்கத் தொடங்கியது. ரயில் நின்றதோ இல்லையோ, ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்’ என்ற கம்பன் வர்ணனைக்கு ஈடாக சடேரெனக் கதவு திறந்தது மட்டும்தான் கேட்டது. இந்தப் பக்கத்திலிருந்து 50 பேர், அந்தப் பக்கத்திலிருந்து 50 பேர் இந்த கம்பார்ட்மென்டின் ஒரு கதவு வழிமட்டும் நுழைந்தனர். கடலலையின் ஓசை இன்னும் அதிகரித்தது போல பீகாரி, இந்தி கரைபுரண்டோடியது. ஒவ்வொருவர் வசமும் பெரிய பேரல்கள், பெரிய சூட்கேஸ்கள், பெரிய அட்டைப்பெட்டிகள், பெரிய மூட்டைகள் என சிறியதே தெரியாத லக்கேஜ்கள். எங்கள் செட் சீட்டுகளில் ஒரே ஒரு சைடு அப்பர் பெர்த் மட்டுமே காலியாய் இருந்தது.

நுழைந்த வேகத்தில் இரண்டு கடோத்கஜன்கள் ஒரே தாவலில் அதில் ஏறினர். பின்னாலேயே வந்த சிறிய ஓமக்குச்சி நரசிம்மன், அவர்களினூடே ஒரு நீச்சல் குளத்தில் குளிக்கும் லாகவத்தோடு கைகளை மேலே பரப்பி எம்பி ஏறினான். இந்த மூன்று பேருக்கு முன்பே சீட்டைப்பிடிக்க நினைத்த இன்னொரு ஜாம்பவான், தன் கையிலிருந்த பெரிய தண்ணீர் பாட்டிலை வீசியெறிந்தான். அங்கே அவர்களுடனான சண்டை தொடர்ந்துகொண்டிருக்க, கம்பார்ட்மென்ட்டில் மிச்சமிருக்கும் அத்தனை சீட்டுகளையும் எப்படியேனும் பிடித்துவிட ஆங்காங்கே குடுமிப்பிடி நடந்துகொண்டிருந்தது. இதற்குள்ளேயே தரையில் ஒரு கடுகு விழுந்தாலும் நுழையமுடியாதபடி, நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்துகொள்ள இன்னொரு கூட்டம் ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தது

இரண்டே நிமிடங்கள்தான் ரயில் நின்றது. அதற்குள்ளாக சில ஆயிரம் பீகாரிகளையாவது அந்த ரயில் ஏற்றியிருக்கும் என்று தோன்றியிருந்தது. பலரிடம் ஒரு அன்ரிசர்வ்டு டிக்கெட் இருந்தது. சிலரிடம் அதுவும் இல்லை. ‘அதனால் என்ன, எங்கள் ஊருக்குப் போகும் ரயில் என்னுடைய ரயில்தானே’ என்ற சொந்த ஊர்ப்பாசம் கொண்ட மக்கள்.

கோயம்புத்தூரில் ரிசர்வேஷன் செய்து அடுத்ததாக ஏறிய ஒவ்வொருவரும் இவர்களை சீட்டிலிருந்து இறக்கி, தங்கள் நியாயமான இடத்தைப் பெற்றுக்கொள்ளப் பெரும் போராட்டம் செய்ய வேண்டியிருந்தது. அந்த இரவிலும் இரண்டு ஊர் தள்ளியும் கேட்கும் உரத்த உரையாடல்கள், ஸ்பீக்கரில் ஒலிக்கும் இந்திப் பாடல்கள், கம்பார்ட்மென்ட்டின் இடுக்குகளெல்லாம் எங்களுக்கே சொந்தமென கிடத்ததை விரித்தும், டாய்லெட் கதவை முதற்கொண்டு முழுமையாய் ஆக்கிரமித்தும் எங்கெங்கும் தலைகள். டிடிஇ, ரயில்வே காவல் என ஒருவரும் தலைகாட்டக்கூட இல்லை. இதில் அடுத்தகட்டப் பெருஞ்சோகம், ரயில் திருப்பூரில் நின்றபோது கோயம்புத்தூர்க் காட்சிகள் திரும்பவும் மறு ஒளிபரப்பாயின. அந்த ரயில் சென்னை வந்து சேரும்வரையில் சற்றே பயத்தைக் கையில் பிடித்துக்கொண்டுதான் பயணித்தோம்.

இத்தனை வருடங்களாகிவிட்டன. இவ்வளவு புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இன்னமும் ஏன் இத்தனை மெத்தனம்? இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ரயிலில் வரும் ரயில்வே போலீசாருக்கு இதைத்தாண்டியும் என்ன பெரிய வேலை இருக்கப்போகிறது அந்த இரவில்? இவர்களில் எவனிடமேனும் ஆயுதங்கள் ஏதேனும் இருந்து வாக்குவாதம் முற்றினால், அசம்பாவிதங்களுக்கு யார் பொறுப்பு? எதற்கும் விடையில்லை.