Published:Updated:

இவர்கள் செய்த காரியம் தெரியுமா?

சமூக வலைதள பக்கங்களில்...
பிரீமியம் ஸ்டோரி
News
சமூக வலைதள பக்கங்களில்...

மும்மொழி பேசும் செம்மொழி தமிழிசை!

லாக்டௌன் காலத்துல, சமூக வலைதளங்கள்தான் நம்ம அரசியல்வாதிகளோட நவீன பிரசார மேடைகள். டிஜிட்டல் யுகத்துல இது தவிர்க்க முடியாத ஒண்ணா மாறிப் பல காலம் ஆயிருந்தாலும், இப்போ இன்னும் அதிகமாயிருக்கு. வழக்கமான அறிக்கைகள், அரசியல் கருத்துகளைத் தாண்டி, பல புதிய விஷயங்களையும் பகிர்ந்து வர்றாங்க. அப்படி ஒருசிலரோட சமூக வலைதள பக்கங்களில் நாம பார்த்த சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக...

புதிர் மருத்துவர்!

கடந்த சில மாதங்களாக, சுவாரஸ்யமான ஒரு தளமா மாறியிருக்கு மருத்துவர் ராமதாஸோட ஃபேஸ்புக். ராதா பாட்டி, சீதா பாட்டின்னு ஒரு விஷயத்தை எடுத்து, அதை உரையாடல் வடிவத்துல சொல்வது, தங்கர்பச்சான் பரிசா கொடுத்த ஆடியோ பிளேயர்ல பழைய பாடல்கள் கேட்டது குறித்த பதிவு, பசுமையான கடந்த கால நண்பர்களைப் பற்றி நினைவுகூர்வது எனப் பின்னி எடுக்குறாரு மருத்துவர். குறிப்பா, `பாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்’னு கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளை நேரில் சந்திக்க முடியாதது குறித்து, உருக்கமா ஒரு பதிவிட, அதுக்கு கட்சிக் காரர்கள் பதில் கமென்ட்கள், கவிதைகள்னு உருக, கண் கலங்கிட்டாரு மருத்துவர்.

ராமதாஸ்
ராமதாஸ்

யாரோ ஒரு தலைவர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துட்டு, ‘யார் இந்த அதிசய மனிதர்’னு, சஸ்பென்ஸ உருவாக்கி, அடுத்த நாள் அவர் மூத்த பெரியாரியல்வாதி வே.ஆனைமுத்துங்கிற ரகசியத்தை உடைக்கிறார். ‘யாரை நம்பினாலும் இவரை நம்பிடாதீங்கன்னு கலைஞர் என்னிடம் சொன்னார்’ என்று ராமதாஸ் போட்ட ட்வீட் செம வைரல். அவரா, இவரா என்று யூகங்கள் றெக்கை கட்டிப்பறக்க, ‘கலைஞர் குறிப்பிட்டது அ.தி.மு.க, தி.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் களையோ அல்ல’ என்று ராமதாஸ் ட்வீட் தட்டினார். ‘இந்தப் பட்டியலில் இல்லாத கட்சி பா.ம.கதான். அப்போ உங்களைத்தான் சொன்னாரா?’ என்று நெட்டிசன்கள் டாக்டருக்கே ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தார்கள்.

புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், பாரதியார், அறுபது வயதைக் கடந்து வாழ்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்கிற கற்பனையையும் மிக சுவாரஸ்யமாவே தீட்டிட்டு வர்றாரு. ஒவ்வொரு மாநிலத்துலயும் இட ஒதுக்கீட்டுப் போராட்டங்கள், போராடிய தலைவர்கள்னு இதுவரை கேள்விப்படாத விஷயங்களை எழுதி ஆச்சர்யப்படுத்துறாரு. அரசியல்ரீதியா எதிர்க்கருத்துகள் கொண்ட பலரும் இந்த இட ஒதுக்கீட்டு வரலாற்றுத் தொடருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் ஆகிட்டாங்க.

மும்மொழி பேசும் செம்மொழி தமிழிசை!

ஆன்லைன் ரிவியூவ் மீட்டிங், தொலைக் காட்சி நேர்காணல்கள், ராஜ்பவனில் நலத்திட்ட உதவிகள் கொடுக்குறதுன்னு ரொம்ப பிஸியா இருந்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் தவறாம செஞ்சிட்டு வர்றாங்க தமிழிசை சௌந்தர்ராஜன். தமிழ்நாட்டுல இருக்குற வரைக்கும், ஒரே வாசகத்தை, மூலை முடுக்கெல்லாம் சொல்லிட்டு வந்த தமிழிசை, தெலங்கானாவுக்குப் போன பிறகு, ‘ஒரு நிமிடக் கதைகள்’னு, ஒவ்வொரு நாளும் விதவிதமான தன்னம்பிக்கைக் கதைகளைச் சொல்லி அனை வரையும் ஆச்சர்யப்படுத்துறாங்க.

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்

ஏதாவது ஒரு விழா அல்லது முக்கிய தினங்கள் வந்தா மக்களுக்கு வாழ்த்து சொல்றது அரசியல் தலைவர்களோட வழக்கம்தான். ஆனா, அந்த வாழ்த்தையே, தமிழ், தெலுங்கு, இங்கிலீஷ்னு மூணு மொழியில சொல்லி வீடியோ போட்டு அசத்துறதுதான், நம்ம தமிழிசை யோட ஸ்டைலே. கொரோனாப் பாடல், பதுக்காமா டான்ஸு, ஒரு வரிக் கதைகள்னு தமிழிசை எங்கிருந்தாலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில அவங்கதான் இப்பவும் டிரெண்டிங் ஸ்டார்.

ரோஜாவின் சமையல் மணம்!

ஜெகன் மோகன் ரெட்டிக்குப் பக்கபலமா காரசாரமான பேட்டிகள், சட்டமன்ற விவாதங்கள்னு இப்போ பிஸியா இருக்குற ரோஜா, லாக்டௌன் ஆரம்பிச்ச நாள்களிலிருந்து கடந்த மூன்று மாதமா, ‘மல்டி டேலண்ட் பெர்சனாலிட்டி’யா, பேஸ்புக்ல காட்டின மாஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

ரோஜா
ரோஜா

பீட்ரூட் சட்னியில ஆரம்பிச்சு, சிக்கன் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய்னு வெரைட்டி வெரைட்டியா பல டிஷ்களை சமைச்சு அதை வீடியோவா எடுத்துப் போட்டு அசத்தினாங்க... சமைக்கச் சொல்லித் தர்றது மட்டுமல்லாம, பீட்ரூட் ரத்த அழுத்தத்துக்கு நல்லது, சிக்கன்ல புரதம் இருக்கதால நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்... இந்தக் கொரோனா காலத்துல அது அவசியம்னு ஏகப்பட்ட மெடிக்கல் டிப்ஸ்களையும் அள்ளி வீசினாங்க. ரோஜாவோட ஒவ்வொரு வீடியோவையும் குறைஞ்சது, 30 லட்சம் பேராவது பார்த்திருக் காங்க... லைக், ஷேர்னு லட்சக் கணக்குல ரியாக்ட்டும் பண்ணுறாங்க. ஆரம்பத்துல ஒரு சில நெகட்டிவ் கமென்ட்ஸ்கள் வந்தாலும், போகப் போக, நீங்க ஒரு ஆல் ரவுண்டர் மேம், நீங்க ஜெயலலிதா மாதிரி மேம், கண்டிப்பா நீங்கள் ஆந்திராவோட உள்துறை அமைச்சராகணும் மேம்னு ஏகப்பட்ட என்கரேஜ்மென்ட் கமென்ட்ஸ்கள் தான், அதுல சில தமிழ் கமென்ட்ஸ் களையும் பார்க்க முடியுது. தன்னோட உதவியாளர் முதல் ஜெகன் மோகன் ரெட்டியின் அம்மா விஜய லெட்சுமி வரைக்கும் அனைவருக்கும் விதவிதமா பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி அசத்தியும் வர்றாங்க. அது மட்டுமல்லாமல், வீட்டுல உள்ள குட்டீஸ்கள், பெரியவங்களோட ஷட்டில் விளையாடுற வீடீயோக்கள், ஹோமம், பூஜை நடத்துற வீடியோக்கள், ராமநவமி வாழ்த்து வீடியோ, யுகாதி வாழ்த்து வீடியோ, மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டேக்கு வீடியோன்னு, எப்போதுமே என்கேஜ்டாவே இருக்கு ரோஜாவோட ஃபேஸ்புக் பேஜ்.

அந்தத் தளபதியை வாழ்த்திய இந்தத் தளபதி மைந்தன்!

கட்சிப் பணிகளையும் தாண்டி, அப்பப்போ ஒரு புத்தகத்தை எடுத்து, அதற்கு ஒரு சின்ன அறிமுகம் கொடுத்து, இளைஞரணித் தம்பிகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறாரு உதயநிதி ஸ்டாலின், ‘இது யாரா இருக்கும்’ என்று படிக்கும்போதே தோன்றும் யூகங்களும், மயக்கும் எழுத்து நடையும் ஒரே மூச்சில் வாசிக்க வைக்கிறது’ன்னு, வலம்புரி ஜானோட ‘வணக்கம்’ நூலுக்கு அவர் எழுதியிருந்த அறிமுகத்தைப் பார்த்து, ‘`நல்ல புத்தகங்களை வாசிப்பதும் பின்பு அந்தப் புத்தகத்தின் தனித்தன்மையைச் சொல்வ தோடு படிக்கத் தூண்டுவதும் தனிச்சிறப்பு அண்ணா’’, ‘`முத்தமிழறிஞர் கலைஞர் போன்று தாங்கள் ஆற்றல்களைப் பெற வேண்டும் அண்ணா’’ன்னு கமென்ட்களைப் பறக்க விடறாங்க உடன் பிறப்புகள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அதைவிட, அந்தப் புத்தகத்த யார் குடுத்த துன்னு அவங்களையும் டேக் பண்ணி அசத்தறாரு இளைய தளபதி. ‘நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர், எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்’னு, கடந்த வாரம் நடிகர் விஜய்க்குப் பிறந்த நாளுக்கு அவர் வாழ்த்துப் பதிவிட, அவரோட சேர்ந்து உடன் பிறப்புகளும் வாழ்த்து சொல்ல, பதிலுக்கு விஜய் அண்ணாவோட ரசிகர்கள், உதய் அண்ணாவுக்கு நன்றி சொல்லிக் கண்ணீர் மல்கியிருக்காங்க. சென்னை குறித்தான சென்டிமென்ட் பதிவு, சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனுக்குப் பாராட்டுப் பதிவு, கட்சியில இறந்துபோன தலைவர்களோட தனிப்பட்ட ரீதியான பழகிய அனுபவத்துடன் கூடிய இரங்கல் பதிவுன்னு அசத்திட்டு வர்றாரு. கடைசியா வி.பி சிங் பிறந்த தினத்துல, குடும்பத்தோடு அவரோட எடுத்துக்கிட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து லைக்ஸை அள்ளினாரு நம்ம உதயநிதி ஸ்டாலின்.