Published:Updated:

சொல் வழிப் பயணம்! - 4

சொல் வழிப் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் வழிப் பயணம்!

ஓவியங்கள்: மினிமலிக்ஸ்

சென்னையில் ரெஸ்டாரென்ட் ஒன்றில் நண்பரோடு சாப்பிட்டுவிட்டு வெளியேறினேன். பார்க்கிங்கில் TN 57 எண் கொண்ட வாகனத்தைப் பார்த்த நண்பர் முகத்தில் ஒரு பிரகாசம். ``எங்க ஊருக்காரங்க அண்ணே!'’ என்றார். வேலை நிமித்தமாக மாநிலத்தின் வேறொரு மூலையில் தங்கியிருப்பவர்களுக்கு இந்த TN 57, TN 32, TN 25 என்பவை வெறும் பதிவெண்கள் மட்டுமல்ல என்பது மற்றொரு முறை உண்மையானது. பிழைப்புக்காக தங்கள் ஊரை விட்டு வெவ்வேறு இடங்களுக்குச் செல்கிறவர்களின் சுமையின் கனம் அதன் தொலைவைப் பொறுத்து அதிகரித்துக்கொண்டே இருக்கும். ``கொஞ்ச நாள்ல நிம்மதியா ஊர்ல போய் செட்டிலாகிடணும் மாப்ள!’' என்ற புலம்பல்கள் அலைபேசியில் பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கடன், தங்கச்சி திருமணம், சொந்த வீடு, வாழ்க்கை மேம்பாடு என்பவை மனிதர்களை அரேபிய, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வீடுகளை வீடியோ கால்களுக்குள் அடக்கிவிடுகின்றன. `சித்திரை மாசம் திருவிழாவுக்கு வாரேன்!' என்ற உத்தரவாதங்கள் உறவுகளுக்குத் தரும் ஆனந்தம் அலாதியானவை.

ஆனால், திரும்பிச் செல்ல முடியாத புலம்பெயர்தல் எவ்வளவு கோரமானது. உலக வரைபடத்தின் கோடுகள் என்னை எப்போதும் பயமுறுத்துபவை. அதில், ஐரோப்பிய நாடுகள் எங்கிருக்கின்றன என்று எனக்குத் தெரியாது. அவை எனக்கு எட்டாத தூரங்கள். ஆனால், அந்த ஐரோப்பாவுக்கு நான் பயணித்தேன். அது மகிழ்ச்சிகரமான விஷயமா என அனுமானிக்க முடியவில்லை. பாரிஸ் விமான நிலையத்திலிருந்து எங்களை அழைத்துச் செல்ல அகரன் எனும் என் வாசகர் வருவார் என்றனர். அகரனிடம் நான் பேசியதுகூட இல்லை. அவருடைய தொலைபேசி எண்ணும் தரப்படவில்லை. அகரன் உங்களைச் சரியாகக் கண்டுபிடித்து அழைத்துச் செல்வார் என்ற தகவலுடன் மட்டும் நான் பாரிஸ் விமான நிலையத்திலிருந்தேன்.

அகரன், தன் மனைவி, மகள் சகிதம் பெரிய ரோஜாப் பூங்கொத்துடன் வரவேற்றார். வெர்சாய் எனும் இடத்திலிருந்த அவர் வீட்டுக்குச் சென்றோம். இருபது நாள்கள் நீடித்த அப்பயணத்தில் அகரன் எனக்குத் தம்பியாக, மகனாக மாறிப்போனான்.

அகரன், ஒரு இலங்கைத் தமிழர். இலங்கைத் தமிழர் என்ற வார்த்தையைச் சொல்லும்போதே, எங்கிருந்தோ ஒரு வலி வந்து நம் மனதில் படிந்துகொள்வதை நம்மால் உணர முடியும். ஏதோ ஒரு எதிர்பாராத தருணத்தில் அவர்களுடைய வாழ்க்கையில் கருமேகங்கள் சூழ்ந்துகொண்டன. ஒரு காகிதக்கப்பல் பேரலையில் அடித்துக்கொண்டு செல்வது போல், எங்கே ஒதுங்குவது என்று தெரியாமல், ஏதோ ஒரு கரையில் ஒதுங்கிப்போன பல லட்சம் மனிதர்களில் அகரனும் ஒருவர். அவருக்கு இப்போது நாற்பது வயதிருக்கலாம்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான் அகரன். அங்கு சிங்கள அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள், பேராசிரியர்கள் எனப் பலரும் காயமடைந்தனர்.

அக்கொடுமையைத் தாங்க முடியாமல், மாணவர்கள் மத்தியில் நடந்த ஒரு கூட்டத்தில் அகரனும் ஐந்து நிமிடம் பேசுகிறான். அந்த ஐந்து நிமிடப் பேச்சுதான், அகரனை ஒரு கிழிந்த காகிதமாக உலக வரைபடங்களிலுள்ள தண்ணீரில் மிதக்க வைத்தது. அந்த ஐந்து நிமிடம் பேசாமல் அந்தக் கொடுமையைக் கடந்து சென்ற இன்னொரு நபர், வாழ்க்கையில் வெற்றியடைந்த மனிதராய்க் கருதப்படலாம். அவர் ஒருவேளை இப்போது கொழும்பிலேயேகூட சகல வசதிகளோடும் இருக்கலாம்.

சொல் வழிப் பயணம்! - 4

ஆனால் அகரன் அந்த நேர்க்கோட்டிலிருந்து விலகியவர். சமூகத்தை நேசிப்பவர். அதனால் தான் அந்த ஐந்து நிமிடப் பேச்சு, அந்த உரை அகரனை எல்லோரிடமும் கவனப்படுத்தியது. முக்கியமாக இலங்கை ராணுவத்தை கவனிக்க வைத்தது. புலிகள் இயக்கத்தவரை கவனிக்க வைத்தது. அரசியல் இயக்கங்களையும், போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களையும் கூர்ந்து கவனிக்க வைத்தது. அவர்களுக்கு இன்னொரு தோழன் கிடைத்துவிட்டான்.

ஒரு கட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் அகரனை அழைத்துச் சென்று, `நீ எங்களுடனே இருந்துவிடு! உன்னை எப்படியும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றுவிடும்' எனக்கூறி தங்களுடன் இருத்திக் கொள்கிறார்கள்.

அகரனின் அம்மா ஏதோ ஒரு தொலைதூர கிராமத்திலிருக்கிறார். அப்பா இல்லாத அவனை வளர்த்து ஆளாக்கிய அம்மாச்சிகள் இன்னொரு ஊரில் இருக்கிறார்கள். இவன் வவுனியா காட்டிற்குள் விடுதலைப்புலிகள் இயக்கத் தோழர்களுடன் இருக்கிறான். வாழ்க்கை எத்தனை விசித்திரமானது?

அம்மாவிடம் மட்டும் இறுதியாகச் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன் எனக் கூறி, மூன்று நாள்கள் அவகாசம் வாங்கிக்கொண்டு தன் அம்மாவைப் பார்க்க வருகிறான். மனம் முடிவெடுக்க முடியாமல் அலைவுறுகிறது.

இப்போது அவன் முன்னே இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, இலங்கை ராணுவத்திடம் மாட்டிச் செத்துப் போவது அல்லது சிறைக்குப் போவது. மற்றொன்று புலிகளுடன் சேர்ந்து இலங்கை ராணுவத்திற்கு எதிராக சண்டையிடுவது. இரண்டு முடிவுகளிலுமே மையப்புள்ளி மரணம் மட்டுமே.

மூன்றாவதாக இன்னொரு வழி தோன்றுகிறது. அது அவனுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிய கனவல்ல, மரணத்தைத் தவிர்த்த ஒரு வாழ்வு.

போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியாவிற்குச் செல்கிறான். அங்கிருந்து அடர் காட்டுவழி நடைப்பயணத்தால் தாய்லாந்து செல்கிறான். பாங்காக்கில் ஒரு அடைக்கப்பட்ட கதவிற்குள் இரண்டு நாள்கள், செத்துப்போன பிணம்போல் கிடக்கிறான். வாழ்க்கை, ஒரு கல்லூரி மாணவனை ஈவு இரக்கமில்லாமல் சிதைத்துவிடுகிறது. பசியும் பட்டினியுமாக அங்கிருந்து வியட்நாம், வியட்நாமிலிருந்து சீனா, சீனாவிலிருந்து ஒரு சிறு எல்லை வழியாக மூன்று முறை ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச்செல்ல முயல்கிறான்.

மூன்றாவது முறை சீன ராணுவத்திடம் பிடிபடுகிறான். அப்போது அவனுடன் மேலும் இருவர் பிடிபடுகிறார்கள். மூன்று பேரிடம் தனித்தனியே விசாரணை நடக்கிறது. மூவரும் இலங்கையிலிருந்து தப்பித்தவர்கள் என்ற உண்மை ஊர்ஜிதமாகிறது. அகரனும் அந்த இரண்டு பேரும் சேர்ந்து உடனே அந்த ராணுவ அதிகாரியின் காலில் விழுந்து கதறுகிறார்கள். “ஐயா எங்களுக்கு எதுவுமே தெரியாது. எப்படியாவது உயிர் பிழைத்து ஐரோப்பாவிற்குச் செல்லலாம் என வந்தோம். எங்கள் நாடு எங்களை வாழவிடாமல் துரத்துகிறது’’ எனக் கண்ணீருடன் முறையிடுகின்றனர்.

``எல்லை கடந்த இக்குற்றத்திற்காக குறைந்தது 15 வருடம் சிறைத்தண்டனை நிச்சயம்’’ என்று அந்தச் சீன ராணுவ அதிகாரி சொல்லும்போது அகரனுக்கு வயது இருபது. எல்லோர் வாழ்விலும் அரிதாக நிகழும் ஓர் அதிசயம் அகரனுக்கு நிகழ்ந்திருக்கிறது.

இறுகிப்போன முகமுடைய அச்சீன ராணுவ அதிகாரியின் முகம் ஏதோ ஒரு கணத்தில் இளகுகிறது. யாருமே எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அந்த அதிகாரி அகரனைக் கட்டித்தழுவுகிறான். அந்தச் சீன அதிகாரியின் அளவற்ற கருணையாலும், ஒரு மியான்மர் ராணுவப் பெண் அதிகாரியின் தாய்மையாலும்தான் அகரனால் எங்களை பாரிஸ் விமான நிலையத்திற்கு ரோஜாப்பூக்களோடு வந்து தன் வீட்டிற்குக் கூட்டிப்போக முடிந்தது.

பாரிஸிலிருந்து வெர்சாயிக்கு காரில் போகும்போது அதன் ரம்மியத்தில் குதூகலமுற்ற என் மகன் வம்சி, ‘‘அகரனண்ணா, நான் இங்க வந்து உங்ககூட இருந்திடட்டுமா?’’ எனக் கேட்டான். அந்த நொடியில் கார் ஓட்டிக்கொண்டிருந்த அகரன் எங்கள் பக்கம் திரும்பி, “ஏன் தம்பி, உனக்குத்தான் சொந்தமாக நாடிருக்கிறதே” என்றான். அதைக் கேட்டபோது எனக்குள் எழுந்த நடுக்கம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

மாலை ஆறு மணி வாக்கில் வெர்சாயில் அகரன் வீட்டை அடைந்தபோது கண்ட காட்சி எங்களை மேலும் வியப்பூட்டியது. முதல் மாடியில் அகரன் வீடு. வாசலை அடைத்து இருபுறமும் திறந்தவெளி மதுவகமும் உணவகமும், வரிசை வரிசையாய் பிரெஞ்சுக்காரர்கள். ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. மிக நவீனமான உடைகள். இரவெல்லாம் குடிப்பது, உண்பது, புகைப்பது, பேசுவது, குதூகலிப்பது. முதல் மாடியில் அகரன் வீட்டு ஜன்னலைத் திறந்தால் அந்தப் பேரிரைச்சல் சத்தத்தில் இன்னொரு மனிதனால் தூங்கவே முடியாது.

“இதை எப்படித் தாங்கிக்கொள்கிறீர்கள் அகரன்..?”

``எங்கட நாட்டில் ஜன்னலைத் திறந்தால் கேட்கும் வெடிச்சத்தங்களுக்கும், துப்பாக்கி சுடுதலுக்கும் பழக்கப்பட்ட இக்காதுகள் வெள்ளைக்காரர்களின் கொண்டாட்ட சத்தங்களுக்கும் தங்களை ஒப்புக்கொடுத்துவிட்டன பவா அண்ணா..!’’

ஆண்கள், பெண்களென அவர்கள் மேலிருந்து எழும் வாசனையும், மதுபான வாசனையும் ஒருமித்து ஒரு வித சொல்லப்படாத போதையை அந்த இடம் முழுக்க வியாபிக்க வைத்திருக்கும். இதற்குப் பத்தடிக்கு மேல்தான் அகதி என்று முத்திரையிடப்பட்டு நாடு நாடாய் துரத்தியடிக்கப்பட்ட அகரனின் வசிப்பிடமிருக்கிறது. இதுவும்கூட தற்காலிகம் தான். ஏதோ ஒரு நள்ளிரவில் அகரனின் வீட்டின் படியேறி ஒரு ராணுவ பூட்ஸ் காலோ, போலீஸ் பூட்ஸ் காலோ ஏதோ காரணத்துக்காகக் கதவைத் தட்டக்கூடும். அதுவரை வாழ்ந்து கொள்ளலாம்.

‘‘மனைவியும் மகளும் எங்கே?’’

‘‘இந்தச் சிறுவீட்டில் அவர்களும் இருக்க முடியாதில்லையா? அதனால் பக்கத்துத் தெருவில் உள்ள என் நண்பரின் வீட்டிற்குப் போய்விட்டார்கள். விடியும்போது இங்கிருப்பார்கள்.” பலரின் இரவுகள் எப்போது விடிவது?

பல லட்சம் மனிதர்கள் தன்விருப்பமில்லாமலேயே இடம் பெயர்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அது ஊர் விட்டு ஊரோ, மாநிலம் விட்டு மாநிலமோ, தேசம் விட்டு தேசமோ, தினம் தினம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. இன்றைக்கும் திருவண்ணாமலைப் பேருந்து நிலையத்தை நள்ளிரவில் யாராவது கடந்து போனால், பத்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவது பெட்டி படுக்கையுடன் தரையில் படுத்து, வரப்போகும் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவர்களெல்லாம் பெங்களூருக்குத் தற்காலிகமாக இடம் பெயர்க்கிறவர்கள்.

ஏதோ ஒரு நிலப்பரப்பில் அவர்கள் விரும்பாத ஒரு இடத்தில் ஊன்றப்பட்டு, அதில் துளிர்த்து வர முடியாமல் கருகிப்போகிற மனிதர்கள் எத்தனை எத்தனை பேர். நமக்குக் காட்டப்படுகிற உலகம்‌ ஒன்று. நாம் சுற்றுலாப் பயணிகளாகப் பெற்றுக்கொள்ளும் உலகம் வேறொன்று. அதன் இன்னொரு பக்கத்தில் ஒரு நிஜ வாழ்க்கை, ஒரு நிஜ நகரம், ஒரு நிஜ தேசம் தெரிகிறது. அந்த நிஜம் நம் முகத்தில் அறைகிறது.

காலம் முழுக்க இந்த இடப்பெயர்வு எல்லா இனக் குழுக்களுக்கும், எல்லா மனிதர்களுக்கும் எல்லா நிறம் உள்ளவர்களுக்கும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் எல்லா மனிதர்களுக்கும் ‘இது நம் சொந்த நிலமில்லை, என்றாவது ஒரு நாள் நாம் இங்கிருந்து துரத்தி அடிக்கப்படுவோம்; அல்லது நாமே புறப்பட்டுவிடுவோம்’ என்கிற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். கொரோனாப் பெருந்தொற்றின்போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கிக் குழந்தைகளுடன் பாதம் வெடிக்க நடந்துபோன காட்சிகள் இன்றும் நிழலாடுகின்றன.

உக்ரைன் போர் நடந்துகொண்டிருக்கையில், நாங்கள் ஜெர்மனியில் ஒரு நண்பர் வீட்டில் இருந்தோம். நாங்கள் தங்கியிருந்த வீட்டு ஜன்னலைத் திறந்தால் எதிரே ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. அந்தக் குடியிருப்பு முழுக்க உக்ரைனிலிருந்து அகதிகளாக்கப்பட்டு வந்திருப்பவர்கள் தங்கியிருந்தார்கள்.

இலங்கையிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்திருந்த ஒருவர் வீட்டில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். இன்று அவர்கள் நல்ல நிலையில் உள்ளார்கள். அவர்கள் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைப் பார்த்து “பயமாக இருக்கிறது! இவர்களெல்லாம் ஏதோ ஒரு நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அகதிகள். எங்கள் வீட்டிற்கு முதலில் ஒரு இரும்பு கேட் போட வேண்டும்’' என்றனர். தாங்கள் இனி அகதிகள் இல்லையென அவர்கள் உணரத்தொடங்கியதே ஒரு மகத்துவம்தான். ஆனால், புதிதாக இன்னொரு நாட்டிலிருந்து தற்போது வந்தவன் அகதியாகத் தெரிகிறான்.

எல்லா மனிதர்களும் ஆங்காங்கே சிதறித்தான் கிடக்கிறோம். அதில் சக மனிதன்மீது ஏன் விழுகிறது நம் குரோதப் பார்வை. தமிழர்கள் மட்டுமல்லாது வட இந்தியாவில் இருந்து வந்தவர்களும் தென்னிந்தியா முழுக்கப் பரவிக் கிடக்கிறார்கள். வட மாநிலத் தொழிலாளர்கள் அனைத்து உணவகங்களிலும் லாட்ஜ்களிலும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

சொல் வழிப் பயணம்! - 4

இந்த மனிதர்கள் பலர் நெருப்பின் மீதுதான் நின்றுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாரும் விரும்பி, சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதாக எனக்குத் தெரியவில்லை. அவர்களில் ஒற்றை மனிதர் செய்கிற ஒரு தவறு, ஒட்டுமொத்தமாக அந்த இனத்தின் தவறாகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகும். அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு தூண்டப்பட்டு, பல அப்பாவிகளின் வாழ்க்கை அந்தரத்தில் தவித்து நிற்கும். சமீபத்தில் இப்படி ஒரு பதற்றத்தில் வடமாநிலத்தவர் பலரும் சொந்த ஊர் செல்வதற்காக ரயில் நிலைய பிளாட்பாரங்களில் குவிந்தனர். எவ்வளவு பயம் அந்த மனங்களில் நிறைந்திருக்கும்!

காவிரிப் பிரச்னை சர்ச்சையாகிற போதெ0ல்லாம் கர்நாடகாவில் உள்ள தமிழர்களை நினைத்து ஒரு கணம் மனம் பதறுகிறதுதானே! சென்னையின் பூர்வகுடிகளை நகருக்கு வெளியே அனுப்பும்போதெல்லாம் எழுகிற அழுகுரல் அத்தனை எளிதில் அடங்கிவிடக்கூடியதா? பொருளீட்டுதல் வாழ்வின் அதிமுக்கியமான பொழுதிலேயே மனிதன் தேசங்களைக் கடக்கத் துணிகிறான். எல்லையற்ற கடல்போல பிரபஞ்சம் பொதுவானதென நம்புகிறான். மாப்பிள்ளை சிவகங்கை, பொண்ணு மெல்போர்ன் என செய்தித்தாள்களில் இடம்பெறும் புகைப்படப் புன்னகைகள் எல்லோருக்கும் சாத்தியப்பட்டு விடுவதில்லை. ஆனால், ஏதோ ஒரு நம்பிக்கை கொடுக்கிறது.

புதுமைப்பித்தனின் `செல்லம்மாள்' கதையில் செல்லம்மாள் தன் கணவனிடம், ‘‘நான் செத்துட்டா என்னை எப்படியாவது கொண்டு போய் தாமிரபரணி ஆற்றங்கரையில் வச்சிருங்க’’ எனக் கண்ணீர் மல்கக் கோரிக்கை வைப்பார். தன் சொந்த நிலத்தில் வாழ வேண்டும், சொந்தக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. எது சொந்த நிலம், எந்தக் காற்று சொந்தக் காற்று எனக் கேள்வி எழுகையில் `யாவரும் கேளிர்' என்ற சொற்கள்தானே ஆறுதலளிக்கின்றன.

- கரம்பிடித்துப் பயணிப்போம்