சினிமா
Published:Updated:

‘அன்பை மீட்டியவளும் என்னை மீட்டவளும் அவள்தான்!’

அன்பை மீட்டியவளும்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பை மீட்டியவளும்

அப்பத்தான் இந்தப்பொண்ணு கீதா முகநூலில் தென்படுறாங்க. நட்பு வட்டத்தில் இணைய அழைப்பு அனுப்ப, ஆமோதிக்கிறார்.

யக்கும் தமிழும் காதலின் மீதான தனிப்பெரும் கருணையும் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் கவச குண்டலங்கள். காதலியும் மனைவியுமான கீதாவோடு செல்லம் கொஞ்சிக்கொண்டிருக்கிறார். குட்டி நந்தலாலா மௌனியோடு இருந்தபோது அவர்கள் இரண்டு பேர் முகமும் ஆகக் கனிந்திருந்தது அத்தனை இயல்பு. காதலைப் பேசினால் ஒரு ஞானியைப் போலவே பேசத்தொடங்குகிறார் கார்த்திக்.

“நான் காதலை ஆணுக்கும் பெண்ணுக்கு மானதாக மட்டும் பார்க்கல. அன்போட பரிமாணத்தை காதல், காமம், நட்பு என்று சின்னச் சின்ன படிக்கட்டுகளாகத்தான் பார்க்கிறேன். அன்பு எல்லா இடத்திலும் இருக்கு. அந்த அன்பை இயங்க வைக்கிற கருவியாகத்தான் என் கவிதைகளைப் பார்க்கிறேன்.

‘உங்களை இம்ப்ரஸ் பண்ணி வாழ்றதுதான் இங்கே அன்பு’ன்னு சொல்லிக்கொடுத்தாச்சு. அது இல்லை என்று காலப்போக்கில் அனுபவத்தில் தெரிஞ்சுடுச்சு. யாரை வேண்டுமானாலும் நேசித்துவிடுகிற, யாரையும் நேசிக்க வைத்துவிடுகிற அன்பின் அடிநாதமாய் இருக்கிற ஜனநாயகப் பண்பு எனக்கு வருமான்னு ஏங்குறேன். கவிதை, மொழி, சமூகம், நண்பர்கள் அறிமுகமாவதற்கு முன்னமே எனக்கு போதை அறிமுகம் ஆயிடுச்சு. சாராயம் குடிச்சு, போதை ஊசி போட்டுப் பழகிட்டேன். வளர வளர மனசு பக்குவப்பட, புரிஞ்சுக்கிட்டது அன்பை மட்டும் தான். இப்ப போதை அதோட எதிரின்னு தெரிஞ்சது. அதை உணர்ந்த கணத்திலிருந்து எழுந்தவன்தான் இப்ப நீங்க பார்க்கிற இந்தக் கார்த்தி.

‘அன்பை மீட்டியவளும் என்னை மீட்டவளும் அவள்தான்!’

உங்களை எந்த எல்லைக்கும் இந்த வாழ்க்கை கொண்டு போகலாம். அத்தனை பேரும் அன்புக்கும் காதலுக்கும் அலையறதுதான் உலக நியதி. காதல்ங்கிற அற்பமான, அற்புதமான சந்தோஷம் இருப்பதால் தான் இந்த சமூகமே வாழ்கிறது. நம்மோட அன்றாடங்களில் ஒருவர் கவனம் வைக்கிறபோது, அக்கறைப்படுகிற போது, தானாக மேலெழும்புகிறது பிரியம். ‘என் இனிய பொன் நிலாவே’ன்னு பாட்டு கேட்கிறேன். பிரதாப் பாட எதிரே ஒரு பொண்ணு கேட்டுட்டு இருக்கு. அந்த ஷோபா பொண்ணை அப்படிப் பிடிச்சுப் போகுது. அந்த நீள முகமும், துண்டு சிரிப்பும், கழுத்தை சாய்த்துப் பார்க்குறதையும் பார்க்க மனசு கொள்ளை போகுது. அப்படியே இருக்கிற தமிழ் டீச்சர், துளசி, வீட்டுக்குப் பக்கத்தில் சித்தாள் வரைக்கும் மனசுக்குள் வர்றாங்க.

அப்பத்தான் இந்தப்பொண்ணு கீதா முகநூலில் தென்படுறாங்க. நட்பு வட்டத்தில் இணைய அழைப்பு அனுப்ப, ஆமோதிக்கிறார். பரஸ்பரம் புரிந்து, நம்பிக்கை வளர்த்து எல்லாம் ஓர் அலைவரிசையில் அப்படியே மனதால் இணைந்தோம். அந்த நீள முகத்தில் ஏதோ பூரணம். ‘நாம் திருமணம் செய்துகொள்ளலாமா’ என்று கேட்கிறேன். நல்ல வழித்துணையாக இருப்பாங்கன்னு மனசு காட்டித் தருது.

காதலிக்கும்போது எந்தக் காதலர்களும் தங்கள் பலவீனங்களைக் காட்டிக்கிறதேயில்லை. நான் கீதாகிட்ட பலவீனங்களாக ஒரு நூறாவது அடுக்கினேன். கீதாவுக்கு அந்த இயல்பு பிடிச்சிருக்கணும். இரண்டு நாள் சத்தம் போடாமல் யோசிச்சுட்டு அப்புறமா பேசினாங்க. சின்னச் சின்னதாக அழகாகக் கோத்து பேசுனாங்க. தரை பிளந்து கீழே போற மாதிரி இருக்கு. அப்படியே கிறங்கி விழணும் போல வருது. அப்படி போதையில விழுந்து பழக்கம். அன்பு வசப்பட்டு விழுந்ததில்லையே பிரதர்!

அப்ப நான் திருந்தி வருகிற கட்டம். குடும்பம், கலை, சுயமரியாதை, வேலை அத்தனையும் குடியால் கெடுங்கறதுக்கு நான்தான் அப்ப சாட்சி. இப்பதான் இந்தக் காதல் கிடைச்சு, உணர்ந்து, அறிந்து, ஆழமாக விலகி நின்னு மனசும் புத்தியும் அடிச்சு உதைச்சு உருட்டி விட்டப்பதான் முழிச்சுக்கிட்டேன்.

மனைவியுடன் கார்த்திக் நேத்தா
மனைவியுடன் கார்த்திக் நேத்தா

‘போதுமடா சாமி’ன்னு திருந்தி இந்தப் பொண்ணுக்காக வந்துட்டேன். அன்பும் உழைப்பும்தான் ஆயுசுக்கும் போதைன்னு அடிச்சுப் பிடிச்சு வந்துட்டேன். எல்லாத்துக்கும் இந்த மனுஷிதான் காரணம்.

முன்னாடியெல்லாம் பெண்களை ஒருபடி கீழேதான் மனசு வெச்சிருந்தது. இப்ப அந்த அகந்தை அடிமட்டத்துக்குப் போய்விட்டது. என்னைப்பற்றி எல்லார்க்கும் தெரிய, அதற்கும் பிறகுமான அவள் அன்புதான் ஆகச் சிறந்தது. இப்ப கீதா நான் தினமும் உச்சரிக்க நெனச்ச பெயர். அது கிடைச்சிருக்கு. அதை என்னிக்கும் இழந்துவிடக் கூடாதுன்னு தெளிவா இருந்தேன்... இருக்கேன்...” கார்த்திக் சொல்லச் சொல்ல கனிகிறார் கீதா. “நீயும் பேசேன்’’ எனப் பிரியத்தில் சொன்னதும் இன்னும் மலர்கிறார்.

“நான் ஊர்ல தமிழ் டீச்சர். பாடம் நடத்தின நேரம்போக அப்பப்ப முகநூலில் தட்டுப்படுவேன். கவிதைகள் எழுதுவதும் இலக்கியம் படிப்பதுமே விருப்பம். அப்பத்தான் இவரை முகநூலில் சந்திக்கிறேன். பேசிக்கொள்கிறோம். இப்படி ஒரு நல்ல மனிதனை மேலே கொண்டு வரமுடியாதான்னு நினைக்கிறேன். அப்பப் பார்த்து இவர் திருமணம் பத்திப் பேச, அன்றைக்கே காதல் விதை விழுந்திருக்கலாம். வெறும் பிரியமா, மேலான அக்கறையா, அதையும் தாண்டிய பேரன்பா... இதுவே காதலா? எங்களுக்கே ஒண்ணும் இன்னும் புரியலை.

ஆனால் எனக்கு இங்கே குறைகள் இல்லை. ஆசைப்படுவதற்கு முன்னே அறிந்து எதையும் கொடுத்துவிடுகிறார். ஆக ஆசைகளும் இல்லை. இப்போது எந்த நாளில் உயிர் போனாலும் நிறைவோடு நான் போவேன். கனிந்து பெருகி நிற்கிற கார்த்திக் அன்புக்கு ஈடானதாக எதையும் சொல்லிவிட முடிவதில்லை. ஒவ்வொரு குழந்தையின் முதல் சிரிப்பில் ஒரு செடி பூக்கிறது. மேகம் உருவாகுது. ஒரு இசைக் குறிப்பு தோன்றுகிறது. சொர்க்கத்தில் ஒரு ஜன்னல் திறக்குதுன்னு சொல்வாங்க. அப்படி எங்கள் மெளனி பிறந்து எங்களை சந்தோஷத்தின் பிடியில் வைத்திருக்கிறான்” என்கிறார் கீதா.

“உண்மைதானே... ஒரு பொண்ணு எங்கே வேணும்னாலும் தேவதையாகலாம். ஆனால் ஒரு குழந்தையை வைத்துக் கொஞ்சும்போதுதான் அவள் தெய்வமாகிறாள்” என மனைவி முகம் பார்த்து சிரிக்க, அழகாக வெட்கப்படுகிறார் கீதா.

காதல் கற்றுத் தரும்... எல்லாம் தரும்..!