Published:Updated:

அங்கன் வாடிகளில் சிட்டுக்குருவிக் கூடுகள்... `கீச்கீச்’ முயற்சி!

`கீச்கீச்’ முயற்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
`கீச்கீச்’ முயற்சி!

‘கூடுகள்’ அமைப்பின் நிறுவனர் கணேசனிடம் பேசினோம். ``நகரங்களில் சிட்டுக்குருவிகளை அதிகரிக்கும் நோக்கில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வடசென்னைப் பகுதியில் உள்ள ராயபுரத்தில் மரத்தால் ஆன கூடுகள் வைக்கப்பட்டன

உயிர்ச்சங்கிலியில் ஒன்றையொன்று சார்ந்தவையே அனைத்து உயிரினங்களும். அந்த வகையில் நாய், பூனை, காகம் உள்ளிட்ட பறவைகள் என மனிதனை அண்டியே வாழும் உயிரினங்கள் பல. குறிப்பாக, சிட்டுக்குருவிகள். நம் வீடுகளிலோ வீடுகளை ஒட்டிய பகுதிகளிலோ வாழக்கூடியவை.

முன்பெல்லாம் வீடுகளில் சிட்டுக்குருவிகளை அதிகம் பார்த்திருப்போம். இப்போது அவற்றைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது. சிட்டுக்குருவிகளை நம் வசிப்பிடங்களில் மீள் குடியமர்த்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் தொடர்ந்து முயன்றுவருகின்றனர். அந்த வகையில், அங்கான்வாடி மையங்களில் சிட்டுக்குருவிக்களுக்கான மரப்பெட்டிக் கூடுகளை வைக்க முன்வந்துள்ளது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை (ICDS - Integrated Child Development Services). ‘கூடுகள்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, அந்தந்த மாவட்ட ஐ.சி.டி.எஸ் திட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் `கூடு’ பெட்டிகளை நிறுவ இது அனுமதி வழங்கியுள்ளது.

அங்கன் வாடிகளில் சிட்டுக்குருவிக் கூடுகள்... `கீச்கீச்’ முயற்சி!

‘கூடுகள்’ அமைப்பின் நிறுவனர் கணேசனிடம் பேசினோம். ``நகரங்களில் சிட்டுக்குருவிகளை அதிகரிக்கும் நோக்கில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வடசென்னைப் பகுதியில் உள்ள ராயபுரத்தில் மரத்தால் ஆன கூடுகள் வைக்கப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளில் வடசென்னைப் பகுதிகளில் `கூடு’ பெட்டியை நிறுவியுள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஜோடி குருவிகளாவது வந்து தங்குகின்றன. சில இடங்களில் கிட்டத்தட்ட 50 சிட்டுக்குருவிகள் வரை வருகின்றன. குருவிக்கூடுகளால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளோம். இதைக் கண்டு, மாநிலத்தில் உள்ள ஒவ்வோர் அங்கன்வாடிக்கும் ஐந்து கூடு பெட்டிகளை விநியோகிக்க முன்வந்துள்ளது ஐ.சி.டி.எஸ்.

மேலும், எங்கள் அமைப்பின் சார்பில் நன்கொடையாளர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் 5,000 கூடுகளை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலருக்கும் வழங்கியுள்ளோம். பசுமை விகடனோடு இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். 3,000 கூடுகள் வடசென்னைப் பகுதிகளில் அமைக்கப்பட்டன. வேளச்சேரி, தாம்பரம் போன்ற பகுதிகளில் சிட்டுக்குருவிகள் அதிக அளவில் இருப்பதாக எங்கள் அமைப்பு கண்டறிந்துள்ளது. அங்கெல்லாம் கூடுதல் கூடுகளை வைக்கவிருக்கிறோம். வடசென்னை போலவே தென் சென்னையிலும் சிட்டுக்குருவி எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று நம்புகிறோம். கொளத்தூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளில் காணப்படும் சிட்டுக்குருவிகளையும் ஆவணப்படுத்தி வருகிறோம்.

அங்கன் வாடிகளில் சிட்டுக்குருவிக் கூடுகள்... `கீச்கீச்’ முயற்சி!

இதேபோல், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சரணாலயங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிட்டுக்குருவிகள் பற்றிப் புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வுக் கூட்டங்களையும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தி வருகிறோம். இதைத் தொடர்ந்து முன்னெடுத்தால்தான் சிட்டுக்குருவி இனம் அழியாமல் பாதுகாக்க முடியும். தற்போது தமிழகம் முழுவதும் 26 பள்ளிகள் மற்றும் தாம்பரத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளுடன் இணைந்து, மாணவர்களுக்குக் கூடு பெட்டிகள் தயாரிப்பதற்கும், சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பணியாற்றி வருகிறோம். தமிழக அரசுடன் இணைந்து முன்னெடுத்திருக்கும் இந்த அங்கன்வாடி முயற்சி சிறப்பான விழிப்புணர்வையும், பலனையும் தரும் என நம்புகிறோம்’’ என்றார்.

பறவையே எங்கு இருக்கிறாய்!