தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறையை மாணவ மாணவிகள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை நாள்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது.

ஆனால், ஊட்டி எட்டின்ஸ் சாலையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முழு நேர வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு விடுமுறையைக்கூட கொண்டாடவிடாமல் மாணவிகளுக்கு மனஅழுத்தம் ஏற்படும் வகையில் வகுப்புகள் நடைபெற்று வருவதாக பெற்றோர்கள் சிலர் நம்மைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். அதையடுத்து நேரில் சென்று பார்த்தோம். அப்போது, பள்ளியின் பின்வாசல் வழியாக மாணவிகளை அனுமதித்து வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. சீருடையில் இருந்த மாணவிகள் மாலை 4:15 மணியளவில் அதே பின்வாசல் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய பெயர் கூற விரும்பாத பெற்றோர் சிலர், ``10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் நடத்துகிறார்கள். காலை 9:30 மணியிலிருந்து மாலை 4:30 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. தற்போது கடுமையான பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. கடுமையான குளிர் நிலவுகிறது. இதைக்கூட கண்டுகொள்வதில்லை. விடுமுறையே இல்லாமல் வகுப்புகள் நடத்தினால் குழந்தைகள் மனநிலை எப்படி இருக்கும்" என புலம்பினர்.

விதிமீறி வகுப்புகள் நடத்துவது குறித்து ஊட்டியைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசினோம், ``இந்த தேர்வு விடுமுறையில் வகுப்புகள் நடத்தக்கூடாது என மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. அதையும் மீறி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.