
இந்தியா, தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானுடன் நல்லுறவில் இருந்துவரும் தேசங்களில் ஒன்று.
ஆப்கானிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகளை உலகமே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானிலுள்ள பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் வெளிநாட்டவர்களை, அங்கிருந்து அவர்களின் நாடுகளை நோக்கி அனுப்ப இன்னும் சில மாதங்கள் ஆகலாம். விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், போர் விமானங்கள் மற்றும் நேட்டோ விமானங்களின் மூலம் தொடர்ந்து அருகிலுள்ள நாடுகளில் வெளிநாட்டவர்கள் இறக்கிவிடப்படுகிறார்கள். தூதரகங்கள் மூடப்பட்டு, அவை செயலிழந்திருக்கும் நிலையில் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த மக்கள் யாரைத் தொடர்புகொள்வது, எங்கே செல்வது என்று அறியாமல் தவித்துவருகின்றனர்.
ஆப்கனைச் சேர்ந்த வசதி படைத்தவர்கள், அதிகாரிகள், அமெரிக்க நிறுவனங்களின் ஒப்பந்தக்காரர்களாகச் செயல்பட்டவர்கள் என ஒரு பெரும் கூட்டம் நாட்டைவிட்டு வெளியேற எல்லா வழிகளிலும் முயன்றுவருகிறது.
இந்தியர்கள் பலர் ஏர் இந்தியா உள்ளிட்ட கிடைத்த விமானங்களில் தஜிகிஸ்தான் மற்றும் தோஹாவில் தரையிறங்கி, அங்கிருந்து இந்தியா திரும்பினார்கள். ஆனால் இன்னும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார்கள், அவர்களில் திரும்பி வர விருப்பம் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு, அடையாளம் சரிபார்த்து அழைத்துவருவது இந்தியாவுக்கு முன்னுள்ள முக்கியச் சவால்களில் ஒன்று. அதேநேரம் இந்தியாவின் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களுக்கு இங்கே புகலிடம் தர மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அமெரிக்கா அவசர அவசரமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி, அங்கிருக்கும் நேட்டோ படைகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த நாடுகள் அனைத்துக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. அமெரிக்கா தனது தூதரகத்தைக்கூட முறையாக மூடாமல், அந்த அலுவலகங்களிலிருக்கும் முக்கிய ஆவணங்களையெல்லாம் அழித்துவிடும்படி அதன் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டது. அமெரிக்கத் தூதரகங்களை தாலிபன்கள் சேதப்படுத்தினால் வருங்காலத்தில் எந்த நிதிகளும், உதவிகளும் பெற இயலாமல் போகும் என்று அமெரிக்க அரசு மிரட்டல் விடுத்துள்ளது. ஆனால், தாலிபன் படைகள் அமெரிக்கத் தூதரகங்களை முற்றிலும் கைப்பற்றிவிட்டன என்றே தகவல்கள் வெளியாகின்றன. இந்தியத் தூதரகங்களும் தாக்கப்பட்டு, அங்கிருந்து ஆவணங்கள், வாகனங்களெல்லாம் தாலிபன்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டதாகவே தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்தியா செலவழித்த ஆயிரக்கணக்கான கோடிகள் என்னவாகும்?
இந்தியா, தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானுடன் நல்லுறவில் இருந்துவரும் தேசங்களில் ஒன்று. 2001-க்குப் பிறகும் இந்தியா தனது பழைய பாரம்பர்யத்தின் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியது. ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் 400-க்கும் மேற்பட்ட திட்டங்களைத் தொடங்கியது. பள்ளிகள், மருத்துவமனைகள், அணைக்கட்டுகள், மின்சாரத் திட்டங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் திட்டங்கள் என ஆப்கனின் எதிர்காலத்துக்கான பல திட்டங்களை நிறுவியும் செயல்படுத்தியும் வருகிறது இந்தியா. அந்த நாட்டுடன் நேரடி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காகவே இரானின் சாபாஹாரில் பெரும் துறைமுகத்தை இந்திய அரசு கட்டியது.
ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான பாராளுமன்றத்துக்கு 2005-ல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய ஆப்கன் ஜனாதிபதி ஹமித் கர்ஸாய் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார். அதை 2015-ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி முன்னிலையில் திறந்துவைத்தார்.
ஹேரத் மாகாணத்தில் கட்டப்பட்ட பெரிய திட்டங்களில் ஒன்று சல்மா அணை. இந்த அணையிலிருந்து 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள், 200-க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள், அங்குள்ள மாநகராட்சிகள், ஊராட்சி நிர்வாகத்துக்கான 105 வாகனங்கள், ஆப்கன் ராணுவத்துக்கு 285 கனரக வாகனங்கள் ஆகியவை இந்தியாவால் வழங்கப்பட்டன.
இந்தியா சமீபத்தில் கட்டி முடித்த ஸரஞ்ஜ்- தெலாராம் நெடுஞ்சாலை ஆப்கனின் முக்கியச் சாலைகளில் ஒன்று. இன்று சல்மா அணை, சரஞ்ஜ்- தெலாராம் நெடுஞ்சாலை உள்ளிட்டவை தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இந்தியா Mi-35 ஹெலிகாப்டர்களை வழங்கியது. இவையும் இன்று தாலிபன்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்டன. நிச்சயம் இதை தாலிபன்களால் ஒருபோதும் இயக்க முடியாது. இந்தியா அங்கே தொடர்ந்து செலவிட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணமும் ஒரே நொடியில் ஆவியானதுபோலவே காட்சியளிக்கிறது.
இந்தியா இனி என்ன செய்ய வேண்டும்?
1990-களில் இன்றைய ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படைகள் விலகியபோது இருந்ததைவிட இன்று நிலைமை மோசமாகக் காட்சியளிக்கிறது. ரஷ்யப் படைகள் வெளியேறியபோது, ஆப்கன் மக்களுக்கு முகம்மது நஜிபுல்லா என்கிற ஒரு தலைவர் நம்பிக்கையின் பிம்பமாக இருந்தார். ஆனால், இன்று அங்கே ஜனநாயக சக்திகள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானின் மூன்று லட்சம் வீரர்களைக் கொண்டு பல நாடுகளின் துணையுடன் உருவாக்கப்பட்ட ராணுவம் காணாமல் போய்விட்டது.
USMIL, CIA, DIA, NDS, ANDSF என்கிற உலகின் மிக முக்கிய உளவு நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவந்த சூழலில், அவர்களின் காலடியிலேயே எப்படி அந்த நாட்டையே வீழ்த்திக் கைப்பற்றும் ஆற்றலை தாலிபன்கள் பெற்றார்கள் என்கிற கேள்வி எழுந்தவண்ணம் உள்ளது. இந்தக் கேள்விக்கான விடைகளிலிருந்து இந்தியா கற்கவேண்டியவை நிறையவே உள்ளன.
அமெரிக்காவின் உளவுத்துறைகள் ஆப்கனில் இருந்தவரை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குத் தகவல் பரிமாற்றம் இருந்தது. ஆனால், இன்று அங்கு 20 ஆண்டுகளாக வேலைசெய்த நாடுகளின் கைகளிலிருந்து ஆப்கானிஸ்தான் நழுவிச் சென்றுவிட்டது. இனி ஆப்கன் அடிப்படை வாதத்தின் தலைநகரமாக மாறுமா... தீவிரவாத குழுக்களை உற்பத்திசெய்யும் நிலமாக மாறுமா... இந்தக் குழுக்களின் உருவாக்கத்துக்குப் பின்புலமாக யார் செயல்படப்போகிறார்கள்... யார் இவற்றுக்கு நிதியளிக்கப்போகிறார்கள்?
தாலிபன்களுடன் சீனா, இரான், பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தொடர்பில் இருந்துவருகின்றன. ஆனால், இந்தியா தொடர்ச்சியாக `தாலிபன்கள் ஒரு தீவிரவாத இயக்கம் என்பதால், அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட மாட்டோம்’ என்கிற நிலையில் உறுதியாக இருந்தது. சமீப மாதங்களில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, தாலிபன்களின் தலைமையுடன் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தொடர்பில் இருக்கிறார்கள் என்கிற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்தியா, ஆப்கன் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது. இந்தியா, தாலிபன்களால் நிறுவப்படும் அரசுடன் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும். மீண்டும் வர்த்தக உறவுகள், திட்டங்கள் என அனைத்தையும் முன்பைப்போலவே இந்தியா செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன. இந்தியா, தாலிபன்களின் அரசுடன் சமரசமாக ராஜாங்க உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறதா அல்லது அங்கே ஒரு ஜனநாயக அரசு நிறுவப்படும்வரை காத்திருக்கப்போகிறதா?
தாலிபன்கள் ரஷ்யா, சீனா, பாகிஸ்தானின் உதவியுடன் ஆப்கானிஸ்தானை முற்றிலும் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அமெரிக்காவை வெளியேற்ற நினைக்கிறார்கள் என்றால், அவர்கள் இந்தியாவையும் அவ்வாறே ஒதுக்கிவைக்கவே நினைப்பார்கள். இந்தியாவுக்கு இனி இந்தப் பிராந்தியத்தில் அதன் பங்காற்றும் வாய்ப்பு உண்டா, எதிர்காலம் உண்டா?
தோஹா பேச்சுவார்த்தைகளில் பங்காற்ற இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, இந்தியா சம்மதித்து அங்கே சென்றது. அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்ட அன்றைய நிகழ்வின் தொடக்கவிழாவில், இந்தியா ஒதுக்கி வைக்கப்பட்டது.
பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன என்பதை இனி இந்திய அரசு உற்றுப்பார்க்க வேண்டும். பாகிஸ்தானின் ஒவ்வோர் அசைவையும் வெளியுறவு அமைச்சகம் கணக்கில்கொள்ள வேண்டியது அவசியம். இந்தியாவும் இரானும் 2021 வரையிலான ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக இருந்ததாலேயே, இந்த இரு நாடுகளும் ஆப்கானிஸ்தானால் ஒதுக்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம் ஒரு படுதோல்வியைச் சந்தித்தபோதும், இந்த 20 ஆண்டுகள் போரின் மூலம் அமெரிக்காவின் பெரிய பெரிய நிறுவனங்களெல்லாம் கோடிக்கணக்கான டாலர் சம்பாதித்திருக்கின்றன. `போர் என்பது வர்த்தகம்தான்’ என்பதை, தீவிரவாதத்துக்கு எதிரான போர் முற்றிலும் உண்மையாக்கிச் சென்றிருக்கிறது. இந்தியாவின் முடிவுகளில்தான், இந்தியா இதுவரை அங்கே செயல்படுத்திவந்த 400 பெரிய திட்டங்களின் எதிர்காலமும் இருக்கிறது அல்லது அமெரிக்க நிறுவனங்களைப் போலவே இந்தியப் பெரு நிறுவனங்களுக்கும் இது ஒரு லாப வேட்டையாக மட்டுமே மிஞ்சும்!