
தாலிபன்களின் ஆதரவு நிழலில்தான் ஆப்கனில் அல்-கொய்தா அமைப்பு வளர்ந்தது. இந்த ஆதரவு நிலைப்பாட்டுக்காகத் தாலிபன்கள் கொடுத்த விலை அதிகம்.
அமெரிக்க இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்து உலகத்தையே அலறவிட்ட அமைப்பு அல்-கொய்தா. இன்று அது தடயமில்லாமல் முடங்கிக்கிடக்கிறது. அந்த இயக்கத்தின் தலைவர் அய்மன் அல் - ஜவாஹிரி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைவர் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாமல் அல்-கொய்தா மெளனம் காப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது!
2001-ம் ஆண்டு, அமெரிக்காவில் 3,000 பேரைப் பலிகொண்ட உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரத் தாக்குதலில், முதன்மைக் குற்றவாளியான அல்-கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன், 2011-ல் அமெரிக்கப் படைகளால் பாகிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்டார். அதன் பின்னர், ஒசாமாவுக்கு வலதுகரமாகச் செயல்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரியைத் தங்கள் தலைவராக நியமித்தது அல்-கொய்தா. அமெரிக்காவின் பல்வேறு தாக்குதல்களிலிருந்து பல ஆண்டுகளாகத் தப்பிவந்த ஜவாஹிரி 2022, ஜூலை 31-ம் தேதி ஆப்கனில் வைத்து அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும், அல்-ஜவாஹிரி மரணம் குறித்த எந்த விளக்கத்தையும் அல்-கொய்தா கூறவில்லை. மேலும், தங்கள் அமைப்புக்கு புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பையும் அது வெளியிடவில்லை. ஒசாமா மரணத்துக்குப் பிறகு ஜவாஹிரியைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்தி, தன்னைப் புதுப்பித்துக்கொண்ட அல்-கொய்தா, தற்போது ஜவாஹிரி மரணத்துக்குப் பிறகு இருக்குமிடமே தெரியவில்லை.

‘சதித் திட்டங்களைச் செயல்படுத்திவிடாதீர்கள்!' - தாலிபன்களின் கட்டுப்பாடு!
தாலிபன்களின் ஆதரவு நிழலில்தான் ஆப்கனில் அல்-கொய்தா அமைப்பு வளர்ந்தது. இந்த ஆதரவு நிலைப்பாட்டுக்காகத் தாலிபன்கள் கொடுத்த விலை அதிகம். அந்தத் தவற்றை மீண்டும் செய்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் தாலிபன் அமைப்பினர், 2021-ல் ஆப்கனில் ஆட்சியமைத்த பின்னர், `எங்கள் நாட்டில் அடைக்கலம் இருங்கள். ஆனால், எங்கள் நாட்டிலிருந்தபடி எந்தச் சதித் திட்டத்தையும் செயல்படுத்திவிடாதீர்கள்!' என அல்-கொய்தாவுக்குக் கட்டுப்பாடு விதித்தனர். இது பற்றி, பொருளாதாரத் தடைகளைக் கண்காணிக்கும் ஐ.நா-வுக்கான குழுவொன்று, ``ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிப்புறத் தாக்குதல்களைத் திட்டமிட அல்-கொய்தாவுக்கு தாலிபன் தடை விதித்திருக்கிறது’’ எனக் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இந்தக் கட்டுப்பாடுகளால், அல்-கொய்தா தனது துணை தீவிரவாதக் குழுக்களுடன் மீண்டும் ஒருங்கிணைய முடியாமல்போனது.
இது பற்றி அமெரிக்க தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன், ‘‘ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா மறுசீரமைக்கப்படவில்லை. அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்கள் ஒரு டஜனுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே ஆப்கானிஸ்தானில் இருக்கிறார்கள்’’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

ஜவாஹிரி உயிருடன் இருக்கும்போதே, அவரது மோசமான உடல்நிலை காரணமாக, அல்-கொய்தாவுக்கு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுத்தாகவேண்டிய தேவை அந்த இயக்கத்துக்கு ஏற்பட்டது. 2017-ம் ஆண்டு, ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சா பின்லேடனை அல்-கொய்தாவின் தலைவராக, ஜவாஹிரி நியமிக்கவிருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகின. சுதாரித்துக்கொண்ட அமெரிக்கா, ஹம்சா பின்லேடனையும் வான்வழித் தாக்குதலின்மூலம் கொன்றழித்தது. இந்தச் சம்பவம் அல்-கொய்தாவின் எதிர்காலத்துக்குச் சம்மட்டி அடி கொடுத்தது.
அல்-கொய்தாவின் அடுத்த தலைவர் யார்?
ஜவாஹிரியும் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அல்-கொய்தாவுக்கு சைஃப் அல்-அடெல் தலைமை தாங்கவிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. எகிப்து நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரியான சைஃப் அல்-அடெல், அல்-கொய்தா அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். ஒருகாலத்தில் ஒசாமா பின்லேடனின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்திருக்கிறார். 2001 முதலே அமெரிக்காவின் தேடப்படும் குற்றவாளி. 1993-ல் சோமாலியாவிலுள்ள அமெரிக்க ராணுவப் படைத்தளங்களைத் தாக்கி, 18 அமெரிக்கர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்த `Black Hawk Down' சம்பவத்தின் சூத்திரதாரியாக அறியப்பட்டவர்.
தற்போது, இரான் நாட்டில் மறைந்திருக்கிறார் அல்-அடெல். அங்கிருந்தபடியே அல்-கொய்தா அமைப்பை வழிநடத்துவதும், பிற நாடுகளிலிருக்கும் துணை அமைப்புகளை ஒருங்கிணைப்பதும் சாத்தியமில்லை என்கிறார்கள் மற்றொரு தரப்பினர். ஒருவேளை அவரைத் தலைவராக நியமித்தால், அவர் அல்-கொய்தா அமைப்பினரை ஏதோ ஒரு வழியில் தொடர்புகொள்ள முயல்வார். அப்போது அமெரிக்க ராணுவம் அவர் மறைவிடத்தைக் கண்டுபிடித்துக் கொல்ல, தாக்குதல் நடத்தலாம். இதற்காகவே அவர்கள் தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் கிளைபரப்பி, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை அச்சுறுத்திவந்த அல்-கொய்தா, இன்று தடயமின்றிக் கிடக்கிறது. பயங்கரவாதப் பாதையில் பயணிக்கும் இயக்கங்களின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு அல்கொய்தா சிறந்த உதாரணம்!