
படங்கள்: கபில் கணேஷ்
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
``கிராமத்துப் பெண் கேரக்டர்னா நீங்க உங்க இயல்பான ஸ்கின் டோனோடவே நடிக்கலாம். அவங்க அப்படித்தான் இருப்பாங்க. ஆனா, அப்பர்மிடில் கிளாஸ் படிச்ச பெண் கேரக்டர்ல நடிக்கிறதால, உங்க ஸ்கின் டோனை கொஞ்சம் சிவப்பா காட்ட வேண்டியிருக்கு'ன்னு சொல்வாங்க. `குறிப்பிட்ட கேரக்டர்ல நான் நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. ஆனா, என் கலரை அதிகமா காட்டணும்னு நினைக்கிறீங்கன்னா ரொம்ப சாரி... அதுக்கான ஆள் நானில்லை'ன்னு சொல்லி மறுத்திருக்கேன். உங்களுக்குத் தேவை எங்க திறமையா, நிறமா?'' - நந்திதா தாஸ்
``மிஸ் வேர்ல்டு டைட்டில் ஜெயிச்சபோது என்னால அதை நம்ப முடியலை. யாராவது என்கிட்ட இருந்து கிரீடத்தைப் பறிச்சிடுவாங்களோன்னு அதோடவே தூங்கின நாள்கள் பல. கறுப்பான பெண்கள் அழகில்லாதவங்க என்பதை என் மனசுல பதிய வெச்சிருந்தாங்க. என் நிறத்துக்காக நான் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டிருக்கேன். உங்களை நீங்க நம்பினா, உலகமும் உங்களை நம்ப ஆரம்பிக்கும். அப்படித்தான் என் உலகம் ஒரு நாள் ஒரு நொடியில மாறுச்சு...'' - ப்ரியங்கா சோப்ரா

``என் கலர், என் தோற்றம், என் பர்சனாலிட்டின்னு எல்லாத்தையும் காரணம் காட்டி, `நீ ஹீரோயின் மெட்டீரியல் இல்லை... ஹீரோயின் ஃபிரெண்டா வந்துட்டுப் போ'ன்னு சொல்லியிருக்காங்க. கிராமத்துப் பொண்ணு கேரக்டருக்குக்கூட நார்த் இந்தியாலேர்ந்து ஹீரோயினைக் கூட்டிட்டு வந்து அவங்களை மாநிறமா மாத்தி நடிக்கவைக்கிறாங்களே தவிர, உள்ளூர்லயே இருக்குற மாநிற ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கொடுக்கத் தயங்கறாங்க. இந்த மனநிலையை எப்படிப் புரிஞ்சுக்கிறதுன்னே தெரியலை...'' - ஐஷ்வர்யா ராஜேஷ்
இப்படி இன்னும் எத்தனையோ குமுறல்களை உதாரணம் காட்டலாம். சாமானியப் பெண்கள் முதல் செலிப்ரிட்டி பெண்கள்வரை சந்திக்கும் சர்வதேசப் பிரச்னை இது. குறிப்பாக, கேமராவுக்கு முன் திறமையைக் காட்ட வேண்டிய வேலையில் இருப்போருக்கு, முதல் முக்கியத் தகுதியாக முன்வைக்கப்படுவது சிவந்த நிறம். `எங்களையெல்லாம் பார்த்ததும் பிடிக்காது... பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்' என்ற இலக்கணத்துக்குள்கூட வரத் தகுதியற்றவர்களாகவே கருதப்படுகிறார்கள் மாநிற, கறுப்பான சருமம் கொண்ட பெண்கள்.
செக்கச்சிவந்த சரும நிறமே என்ட்ரி பாஸ் என்பது மாடலிங் உலகின் எழுதப்படாத விதி. அதைத் தகர்த்து சர்வதேச அளவில் பூனை நடை (கேட் வாக்) அல்ல, சிங்க நடையே போட்டுக்கொண்டிருக்கிறார்கள் பலர். அப்படிச் சில கறுப்பு நிறத்தழகிகளின் கம்பீரப் பயணமும் பகிர்வும் உங்களுக்காக...

கிருத்திகா பாபு
``எனக்குத் தமிழ் தெரியும்; புரியும். ஆனா, நான் தமிழ் பேசினா ஃபாரினர்ஸ் பேசற மாதிரி இருக்கிறதா சொல்றாங்க. ஸோ... ப்ளீஸ் எக்ஸ்கியூஸ்...'' டிஸ்கிளெய்மருடன் அழகான ஆங்கிலத்தில் ஆரம்பிக்கிறார் கிருத்திகா பாபு. ட்ரெஸமே, கணபதி சில்க்ஸ் உள்ளிட்ட பிரபல விளம்பரங்களிலும், ஃபேஷன் ஷோக்களின் `ராம்ப் வாக்'குகளிலும் பரிச்சயமான முகம்.
``சொந்த ஊர் பெங்களூரு... படிச்சது என்விரான்மென்ட்டல் சயின்ஸ். அப்பா டாக்டர், அம்மா யோகா இன்ஸ்ட்ரக்டர். தீபிகா படுகோன், அனுஷ்கா ஷர்மா உட்பட பல பிரபலங்கள் படிச்ச பெங்களூரு மவுன்ட் கேமல் காலேஜ்லதான் நானும் படிச்சேன். காலேஜுக்குள்ளேயே ஃபேஷன் போட்டோகிராபரும் க்ரூமரும் இருப்பாங்க. அப்படித்தான் மாடலிங் எக்ஸ்போஷர் எனக்கு ஆரம்பமாச்சு. ஆனா, அதுதான் என் புரொஃபஷனா மாறும்னு அப்போ நினைக்கலை...'' ஷார்ட் அண்ட் ஸ்வீட் பயோ சொல்லும் கிருத்திகா, 14 வருடங்களாக மாடலிங் துறையில் முன்னணியில் இருக்கிறார்.
``நம்ம சொசைட்டிலயும் சரி, ஃபேஷன் இண்டஸ்ட்ரியிலயும் சரி, சிவப்பா இருக்கிறவங்களுக்கான மரியாதையே வேற லெவல். சிவப்புதான் அழகுங்கிறதை விளம்பரங்களும் பதியவெச்சிருக்கு. மாடலிங்ல நுழையறவரைக்கும் எனக்கும் என்னோட மாநிறம் பத்தின கவலை இருந்தது. ஆனா, உள்ளே போனதும்தான் என்னோட ஸ்கின்டோன்தான் என் ப்ளஸ்னு தெரிஞ்சது. பெங்களூரிலும் மும்பையிலும் மாநிற மாடல்களைக் கொண்டாடறதைப் பார்த்து ஷாக் ஆயிட்டேன்.
வெளிநாட்டு மாடல்களுக்கு மட்டுமே வரவேற்பு இருந்த காலம் இப்போ இல்லை. கடந்த 15 வருஷங்கள்ல அந்தப் பார்வை ரொம்பவே மாறியிருக்கு. ஆனா, இதுக்கு நேரெதிரா இருந்தது சினிமா இண்டஸ்ட்ரி. சில வருஷங்களுக்கு முன்னாடிவரைக்கும் டார்க் ஸ்கின் பொண்ணுங்களை ஏத்துக்கிற மனோபாவம் சினிமாவுல இல்லை'' -நியாயமான கோபத்தை வெளிப்படுத்தினாலும், தனிப்பட்ட முறையில் அப்படி எந்த நிராகரிப்பையும் எதிர்கொண்டதில்லையாம் கிருத்திகா.
``மாடலிங்ல நுழைஞ்ச புதுசுல எனக்கு அந்த இண்டஸ்ட்ரி பத்திப் பெருசா எதுவும் தெரியாது. வாய்ப்பு வருமா, அதைத் தக்கவெச்சுக்க முடியுமான்னு எனக்குள்ள ஏகப்பட்ட கேள்விகள். எக்கச்சக்க போட்டிகள் இருந்துச்சு. `உன் திறமை இவ்வளவுதான்னு இதோட நிறுத்தப்போறியா, இல்லைன்னா என்னால இன்னும் முடியும்னு அடுத்த கட்டத்துக்கு வளரப் போறியா?' - இதுதான் எனக்கு நானே வெச்சுக்கிட்ட செக். `உனக்கு நீதான் பெரிய போட்டியாளர். உன்னை அடுத்த கட்டத்துக்கு வளர்த்துக்கிறதுதான் மிகப்பெரிய செயல்திட்டம்'னு எனக்கு நானே சவால் விட்டுக்கிட்டேன். உள்ளே வந்து ஒவ்வொண்ணா கத்துக்கிட்டேன். என் பலம், பலவீனம் புரிஞ்சது. வாய்ப்புகள் வர வர, என் திறமை வெளியே தெரியத் தெரிய, எல்லாம் ஈஸியாச்சு...'' ஜெயித்த கதை சொல்பவர், தெலுங்கு நடிகர் நாரா ரோஹித்துடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம். தமிழ்ப்பட வாய்ப்புகளுக்காக மேடம் வெயிட்டிங்.
``என்னை மாதிரி ஸ்லிம்மா, உயரமா, மாநிறமா இருக்குற பொண்ணுங்களை தமிழ் சினிமா ஏத்துக்குமா..?'' சத்தமாகவே கேட்கிறார். யோகா, வெயிட் லிஃப்டிங், சர்ஃபிங், டான்ஸ் என ஏகப்பட்ட திறமைகளைக் கற்றுவைத்திருப்பதால், எதிர்காலம் குறித்த பயமில்லையாம் இவருக்கு.
``உங்களுக்கு மாடலிங் பண்ணணும்னு ஆசையா? மாநிறமா இருக்கறதை நினைச்சுக் கவலையே படாதீங்க. இன்னிக்கு இந்தியாவுல மாநிறத்துக்குதான் மவுசு அதிகம். ஆரம்பக்காலம் போராட்டமாதான் இருக்கும். உங்க முகம் இண்டஸ்ட்ரில உள்ளவங்களுக்குப் பதியணும். நீங்க நல்ல மாடல்னு அவங்க நம்பணும். ராம்ப் ஷோஸ் பண்றதுல தயக்கமே இருக்கக்கூடாது. முதல்ல நல்ல ஏஜென்சியைக் கண்டுபிடிங்க. இன்டர்நேஷனல் மார்க்கெட்ல இந்தியன் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அந்த வாய்ப்புகளை மிஸ் பண்ணிடாதீங்க. மாடலா இருக்கிற அனுபவத்தையும்...'' என்று தெளிவாக அட்வைஸ் கொடுக்கிறார் அழகி!

பல்லவி சிங்
``டெல்லில பிறந்து பெங்களூருல வளர்ந்தவள் நான். வாழ்க்கையில எந்த இலக்கும் இல்லாம சுத்திட்டிருந்த என்னை பிரசாத் பிடப்பான்னு ஒருத்தர் கண்டுபிடிச்சார். என் மேல எனக்கில்லாத நம்பிக்கை, அவருக்கு என் மேல இருந்தது. என்னை நம்பி, என்னை டிரெயின் பண்ணினார். பெங்களூரைச் சேர்ந்த மாடலிங் கோ ஆர்டினேட்டர் முபினாவோட அறிமுகம் கிடைச்சது. அங்கேதான் என் வாழ்க்கை யு டர்ன் எடுத்தது.... ஃபேஷன் டிசைனிங் படிச்ச நான், பிசியான மாடலாயிட்டேன்...'' அம்சமாக, அழகாக இருக்கிறார் பல்லவி சிங். பாராசூட், டி.வி.எஸ் ஸ்கூட்டி, ட்ரெஸமே ஹேர், மிந்த்ரா உள்ளிட்ட விளம்பரங்களின் கவனஈர்ப்பு தேவதை.
``வந்தாரை வாழவைக்கும் சென்னைதான் எனக்கான முதல் வாசலையும் திறந்து வரவேற்றது. யெஸ்... என் முதல் டி.வி கமர்ஷியல் ஷூட் சென்னை, ஏ.வி.எம் ஸ்டூடியோவுலதான் நடந்தது. சென்னையில வொர்க் பண்ணுனது கனவு நனவான தருணம்னே சொல்லலாம். இங்க உள்ள மக்கள், அவங்க கொடுக்குற மரியாதை, டெக்னாலஜின்னு சென்னை நிஜமாவே வேற லெவல்...'' சென்னைக்குக் குளிரேற்றுகிறார் பார்பி டால் பல்லவி.
``நான் கறுப்புதான்.... அதுல எனக்குப் பெருமைதான். ஃபேஷன் இண்டஸ்ட்ரி என்கிட்ட கருணையாதான் நடந்திட்டிருக்கு. என் கலரைவெச்சு என்னை நிராகரிக்கலை.... மாறா அந்த உலகமே என்னைக் கொண்டாடுது. கலரைவெச்சு வாய்ப்பு கொடுக்கிறதெல்லாம் இந்தியாவுக்குள்ளதான். வெளிநாடுகள்ல கறுப்பான இந்தியப் பெண்களுக்குத் தனி வரவேற்பு இருக்கு.
கலரைவெச்சு வாய்ப்புகள் மறுக்கப்படற அவலம் பொண்ணுங்களுக்கு மட்டுமல்ல, பசங்களுக்கும் நடக்கிறதுதான். ஒரு துறைக்குள்ள அறிமுகமாகிறபோது எல்லாரும் நமக்கு பொக்கே கொடுத்துப் புன்னகையோட வரவேற்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது. அவமானப்படுத்துவாங்க... கறாரா நடந்துப்பாங்க. அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டோம்னா நம்ம கனவுகள் கனவுகளாவே காணாமப்போயிடும். அவங்க பண்றதைப் பண்ணட்டும். நாம நம்மை எப்படி இம்ப்ரூவ் பண்ணிக்கலாம்னு போயிட்டே இருக்கணும். எந்த மாற்றமும் ஒரே ராத்திரில நடந்துடாது. தன்னம்பிக்கையோட தொடர்ந்து போராடினா, ஒருநாள் வெற்றி உங்க வசமாகும். அந்தப் பொறுமை இருந்தா யு ஆர் வெல்கம்....'' போல்டு அண்ட் பியூட்டிஃபுல் ஸ்டேட்மென்ட் விடுப்பவர், வாய்ப்புகளுக்கு ஓகே சொல்ல டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் வைத்திருக்கிறார்.
``முதல்ல அந்த அசைன்மென்ட் என்னை எக்ஸைட் பண்ணணும். அந்த டீம்ல உள்ள போட்டோகிராபர்லேருந்து, பிராண்டு, ஷோ டைரக்டர்னு எல்லாமே எனக்குப் பிடிக்கணும். அதையெல்லாம் தாண்டி, ஏதோ ஒரு நல்ல காரியத்துக்காக பண்ற ஃபேஷன் ஷூட்டுனு தெரிஞ்சா தயங்காம யெஸ் சொல்லிடுவேன்...'' கறாராகச் சொல்பவர், தமிழ் சினிமா என்ட்ரிக்காக ஈகர்லி வெயிட்டிங்... மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டுமாம்.
``மாடலிங் துறைக்குள்ள காலெடுத்து வைக்கணும்னா உங்களுக்கான முதல் முக்கியத் தகுதி தன்னம்பிக்கையும் மன உறுதியும். மற்ற வேலைகளைப் போல இதுல எல்லா நாள்களும் ஒரே மாதிரி இருக்காது. ஒரு மாசம் பயங்கர பிசியா இருப்போம். திடீர்னு வேலையே இருக்காது. அப்படி வேலையே இல்லாதபோது ஏமாற்றத்துக்குள்ள போயிடக்கூடாது. அடுத்த பாய்ச்சலுக்கு உங்களைத் தயார்படுத்திக்கறதுக்கான தகுதிகளை வளர்த்துக்கணும். ஜெயிக்கிறதுக்கு ஒரு ட்ரிக் சொல்லவா? உங்ககூட இருக்குற யாரையும் போட்டியாளரா பார்க்காதீங்க. அதுக்கு பதிலா அவங்களை இன்ஸ்பிரேஷனா பாருங்க. அவங்க உங்க ஜூனியரோ, சீனியரோ... ஏதோ ஒண்ணைஅவங்ககிட்ட கத்துப்பீங்க...'' எக்ஸ்ட்ரா எனர்ஜியோடு சொல்பவர், என்றைக்கு எந்தக் கண்டத்தில் இருப்பார் என்றே கணிக்க முடியாத அளவு பிஸி.
``உலகம் முழுக்க சுத்தலாம்ங்கிறதுதான் இந்த ஃபீல்டுல பெரிய ப்ளஸ். நிறைய மனிதர்களோட நட்பை, அனுபவங்களைச் சம்பாதிக்கலாம். சுயமா இயங்கறதுக்கான தகுதியை வளர்த்துக்கலாம். ஆனா, அதுக்கெல்லாம் விலையா சில விஷயங்களைக் கொடுக்கணும். என்னைப் பொறுத்தவரை என் ஃபேமிலியை மிஸ் பண்றதுதான் நான் கொடுக்கிற மிகப்பெரிய விலை. வாழ்க்கையில ரொம்ப கஷ்டமான விஷயம் அது...'' ஹோம்சிக்கில் சிக்கியிருப்பவர், மாநிற மக்களுக்குச் சொல்ல மெசேஜ் வைத்திருக்கிறார்.
``மாநிறம்ங்கிறது மகத்தான கலர். உங்க ஸ்கின் கலரை நீங்க ஏத்துக்கவும் ரசிக்கவும் பழகுங்க. அடுத்தவங்களோட கமென்ட்ஸைக் காதுல போட்டுக்காதீங்க. நீங்க நீங்களா இருங்க.''

பலாக் குப்தா
உள்ளூரில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் பலாக் குப்தாவின் முகம் பிரபலம். இங்கிலீஷ் லிட்ரேச்சர் பொண்ணு. மார்க்கெட்டிங் அண்ட் அட்வர்டைசிங்கில் எக்ஸ்ட்ரா குவாலிஃபிகேஷன். சப்யா சாச்சி, தருண் தஹிலியானி, அனிதா டாங்ரே, ராகுல் மிஸ்ரா என முன்னணி டிசைனர்களின் ஃபேவரைட். மிந்த்ரா, லாக்மே, ஜபாங் விளம்பரங்களின் பாசிட்டிவ் முகம்.
``ஹாய்... ஐம் பலாக் சுரேஷ் குப்தா... சுரேஷ் குப்தா என் அப்பா. நான் டெல்லி பொண்ணு. காலேஜ் படிச்சிட்டிருந்தபோது ஒரு மாடலிங் ஏஜென்சி கண்ல பட்டு அவங்க மூலமா மாடலிங் ஃபீல்டுக்குள்ள வந்தேன். எந்த ப்ளானும் இல்லாம எதேச்சையா மாடலான நான், இன்னிக்கு இன்டர்நேஷனல் ஃபேமஸ். இப்போ நியூயார்க், பாரிஸ்னு செம பிஸி...'' ஸ்வீட்டாகச் சிரிக்கிறார்.
``சேலை விளம்பரம்தான் மாடலிங்ல எனக்கு முதல் சான்ஸ். என்ன செய்யணும்னு எதுவும் தெரியாமதான் போனேன். ஆனா, மாடலான பிறகு அப்படி ஐடியா இல்லாமக் காலந்தள்ள முடியாதுன்னு சீக்கிரமே புரிஞ்சுக்கிட்டேன். அதுவரைக்கும் எங்கம்மா சேலைகட்டிப் பார்த்திருக்கேனே தவிர, எனக்கு சேலை கட்டற ஐடியாவே இருந்ததில்லை. முதல் அசைன்மென்ட்டுக்காக நான் சேலை கட்டினபோதுதான் அதோட அழகு புரிஞ்சது. என்னை நான் பேரழகியா ஃபீல் பண்ணுனது சேலையிலதான்...'' என்று `சேலை கட்டும் பெண்ணுக்கொரு...' மொமென்ட்டில் சிலிர்க்கிறார் மிஸ் குப்தா.
``மாடலிங் ஃபீல்டுங்கிறது பெரிய கடல். ஆனா, இந்தியாவைப் பொறுத்தவரை கமர்ஷியல் மாடலிங், ஃபேஷன் மாடலிங்னு ரெண்டு பிரிவுகள்தான். நான் இந்தத் துறைக்குள்ள வந்தபோது மாநிற மாடல்களுக்கு நிறைய டிமாண்ட் இருந்தது. மாநிறமா இருந்ததாலதான் எனக்கு ஃபேஷன் மார்க்கெட்ல வரவேற்பு கிடைச்சதுன்னும் சொல்லலாம். ஆனாலும் ஒரு பொண்ணு கமர்ஷியல் மாடலா இந்தியாவுல ஜெயிக்கி றதுங்கிறது இன்னும் சவாலானதா தான் இருக்கு. அந்த ஸ்டீரியோடைப் கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சி ருக்குன்னாலும், அந்த மாற்றம் முழுமையா வர இன்னும் 10 வருஷங்களுக்கு மேல ஆகலாம். கறுப்பான பெண்களை அழகான பெண்கள்னு ஏத்துக்கிற பக்குவம் இந்தியாவுக்கு வர இன்னும் பல வருஷங்கள் ஆகும். அதுக்குள்ள எனக்கு வயசாயிடும்னு நினைக்கி றேன். என் கலரைக் காரணம் காட்டி எனக்கு கமர்ஷியல் மாடலிங் வாய்ப்புகள் நிறைய மறுக்கப்பட்டிருக்கு. படங்கள்ல நடிக்கிற வாய்ப்புகளையும் மிஸ் பண்ணியிருக்கேன். இங்கே கமர்ஷியல் ஹீரோயினா சக்சஸ் பண்ணணும்னா கலரா இருக்கணுமாம். ஆனா வெளிநாடுகள்ல வொர்க் பண்ற எனக்கு என்னோட டஸ்கி ஸ்கின்தான் பெரிய ப்ளஸ்ஸே. ஒருவேளை நான் மாடலா ஆகாமப் போயிருந்தா, இன்னி வரைக்கும் நான் அழகா இல்லைன்னுதான் நம்பிட்டிருந்திருப்பேன். இந்தத் துறைக்குள்ள வந்தபிறகுதான், என் மாநிற ஸ்கின் டோன்தான் என் மிகப்பெரிய பலம்னு புரிஞ்சது...'' தன்னை உணர்ந்தவருக்கு இண்டஸ்ட்ரியில் கறுப்பி என்பது செல்லப் பெயர்.
``ஹிந்தியில `காலி'ன்னா கறுப்பு. நான் பிரவுன் ஸ்கின்டோன் கொண்டவள்னாலும் என்னை பலரும் காலின்னுதான் அடையாளப் படுத்துவாங்க. அதுல எனக்கெந்த வருத்தமும் இல்லை. அப்படிக் கூப்பிடறதுல எனக்கு சந்தோஷம்தான்...'' என்கிறார். சரிதான்!
ஸ்கின் கலரை மேம்படுத்தும் தயாரிப்புகள், சருமத்தைச் சிவப்பாக்கும் தயாரிப்புகள் என சரும நிறத்தோடு தொடர்புடைய விளம்பரங் களுக்கு மாடலிங் செய்வதில்லை என்பது பலாக் குப்தாவின் கொள்கை. அதனால் அவர் இழந்த வாய்ப்புகள் எக்கச்சக்கம்.
``எனக்குப் பெரிய ஆசைகள் கிடையாதுங்க. சின்னச் சின்ன ஆசைகள்தான். அதுல ஒண்ணு ராஜமௌலி டைரக்ஷன்ல விஜய்தேவர கொண்டா ஜோடியா ஒரு படத்துல நடிக்கிறது...'' பிரமாண்ட கனவுடன் காத்திருக்கிறார்.
``மாடலிங் கரியருக்கு ஆயுள் கம்மிதான்... ஆனாலும் இப்போ அந்த நிலைமையும் மாறிட்டு வருது. இப்போ பிசியா, பரபரப்பா ஓடிட்டிருக்கேன். இது எதுவும் இல்லாம, புகழ் வெளிச்சமே படாத சாதாரண வாழ்க்கையும் என்னால வாழ முடியும். எனக்கு இன்னொரு முகம் இருக்கு... யெஸ்... நான் ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டும்கூட!'' என்று `பிளான் பி'யுடன் தயாராக இருக்கிறார்.
``கலரைப் பத்திக் கவலைப்படாதீங்க. உங்ககிட்ட பெஸ்ட் விஷயம் எதுன்னு கண்டு பிடிச்சு, அதை கேமரா முன்னாடி எப்படி யூஸ் பண்ண முடியும்னு யோசிங்க. எப்படி போஸ் பண்ணணும், எந்த போஸ்ல நீங்க அழகா தெரிவீங்கன்னு உணர்ந்துக்கோங்க. கறுப்பா இருக்கீங்களா... அதுதான் உங்க யு.எஸ்.பி-ங்கிறதை மறந்துடாதீங்க...'' மயக்கும் கண்களால் கைது செய்கிறார் பலாக் குப்தா.

ப்ரீத்தி கரன்
லண்டன் ஃபேஷன் வீக்கில் வாக், நம்பர் ஒன் டிசைனர்களின் புராஜெக்ட், ஹை டிசைன், சலானி ஜுவல்லரி, நல்லி, உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ், மன்யவார், நாயுடு ஹால் விளம்பரங்கள்... ப்ரீத்தியின் கால்ஷீட் டைரி இப்படிப் பல விஷயங்களால் எப்போதும் அட்வான்ஸாக புக் ஆகிறது. விழுப்புரம் பொண்ணு, விஸ்காம் ஸ்டூடன்ட்...
``ரொம்ப விளையாட்டுத்தனமான பொண்ணு நான். டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசை மட்டும் இருந்தது. ஆனா, என் விளையாட்டுத்தனம் அதுக்கு சரியா வராதுன்னு என் அக்கா சொன்னதால விஸ்காம் படிச்சேன். போட்டோகிராபியில இயல்பாவே ஓர் ஆர்வம் இருந்தது. அட்வர்டைஸ்மென்ட் போட்டோகிராபருக்கு அசிஸ்டன்ட்டா கிட்டத்தட்ட 400 ஷூட்டுக்கு வொர்க் பண்ணியிருக்கேன். ஷூட்டுக்குப் போகும்போதெல்லாம், `நீங்க ஏன் ஆன் ஸ்கிரீன்ல வரக்கூடாது... மாடலாகிறதுக்கான உயரம், லுக், ஃபீச்சர்னு எல்லாமே இருக்கு... ட்ரை பண்ணு'ன்னு சொன்னாங்க...'' பக்குவமாகப் பேசும் ப்ரீத்தியின் குரல் அவரைப் போலவே அவ்வளவு அழகு.
``நான் அசிஸ்டன்ட்டா வொர்க் பண்ணின போட்டோகிராபர் மணிகண்டன்தான் என் போர்ட்ஃபோலியோ பண்ணினார். குமரன் ஸ்டோர்ஸுக்கான ஷூட்தான் முதல் ஆஃபர். அந்த போட்டோஸ் வெளியில வந்தபோது என்னை ரொம்ப ப்ரைட்டா காட்டியிருந்தாங்க. அது எனக்கு செயற்கையா பட்டது. மூணு, நாலு டோன் அதிகமா காட்டியிருந்தாங்க. அதுல எனக்கு வருத்தம். சின்ன வயசிலிருந்தே என்னைப் பார்க்கிறவங்க `உன் கண் அழகா இருக்கு, உன் லிப்ஸ் அழகா இருக்கு'ன்னு என் தனித்தன்மையைப் பாராட்டுவாங்க. யாரும் என் மாநிறத்தைக் குறையா சொன்னதில்லை. அதனாலயோ என்னவோ என் ஸ்கின் கலரை நினைச்சு நான் வருத்தப்பட்டதில்லை. ஒருவேளை நான் கலரா இருந்திருந்தா, அழகான பொண்ணுன்னு அறியப்பட்டிருப்பேனே தவிர, தனிச்சுத் தெரியறவளா இருந்திருப்பேனான்னு தெரியலை.
நான் போட்டோகிராபர் அசிஸ்டன்ட்டா வொர்க் பண்ணுனபோது, கொஞ்சம் கலர் கம்மியான பொண்ணுங்களுக்கு ரெண்டு டோன் ஏத்துங்கன்னு சொல்வாங்க. மேக்கப்ல பயங்கர கலரா அவங்க வெளியே வருவாங்க. அதுக்கு அவங்க சிவப்பான மாடலையே கூப்பிட்டிருக்கலாமேன்னு தோணும். ஆனா, நார்த் இந்தியாவுல பிரவுன் ஸ்கின் மாடல்களுக்கு வரவேற்பு அதிகரிக்க ஆரம்பிச்சது. சினிமா இண்டஸ்ட்ரி அப்படியே தலைகீழா ஃபேர் ஸ்கின் பொண்ணுங்களை மட்டும்தான் வரவேற்குது. என் சக மாடல்களே சினிமாவுக்கு முயற்சி செய்யும்போது கலரை இம்ப்ரூவ் பண்ண ஸ்கின் ட்ரீட்மென்ட் எடுக்கிறதையெல்லாம் பார்த்திருக்கேன்.
தென்னிந்தியப் பொண்ணுங்க பெரும்பாலும் மாநிறமாதான் இருப்பாங்க. நார்த் இந்தியன் மாடல்களைக் கூட்டிட்டு வந்து அவங்க கலரை கம்மி பண்ணி நடிக்க வைக்கிறாங்க. அவங்களுக்கு மொழி தெரியாது, கதை புரியாது. ஆனாலும் அவங்கதான் வேணும்னு நினைக்கிறது என்ன மாதிரியான மனநிலைன்னு புரியலை. அந்த வாய்ப்பை நம்மூர் பொண்ணுங்களுக்குக் கொடுக்கலாமே...'' மாநிறத்தவர்களின் மனசாட்சியாகப் பேசுபவர், இயக்குநர் மிஷ்கினுடன் `கட்டுமரம்' என்ற இண்டிபெண்டென்ட் படத்தில் நடித்திருக்கிறாராம்.
``ஃபேஷன் மாடலிங் வேற... சினிமா வேற... ரெண்டுக்குமான தேவைகள் வேறவேற. ஃபேஷன் மாடல்னா ஒல்லியா இருக்கணும், ஃபீச்சர்ஸ் ஷார்ப்பா இருக்கணும்... சினிமாவுக்கு ஓரளவுக்கு உடம்பு பூசின மாதிரி இருக்கணும். இது ரெண்டுக்கும் பேலன்ஸ் கண்டுபிடிக்கிறதுதான் எங்களுக்கெல்லாம் பெரிய சவாலே. எனக்கு சினிமா சான்ஸ் வந்தபோதெல்லாம் `நீங்க மாடல் மாதிரி இருக்கீங்க, ரொம்ப ஒல்லியா இருக்கீங்க'ன்னு சொன்னாங்க. வெயிட் போடச் சொன்னாங்க. வெயிட் போட்டா என்னால மாடலா கன்டின்யூ பண்ண முடியாது. ரொம்பவும் குண்டாவோ ரொம்பவும் ஒல்லியாவோ இல்லாம ஒரு உடல்வாகை மெயின்டெயின் பண்ணணும்.'' கிளாமர் உலகக் கஷ்டங்கள் பகிர்பவருக்கு நல்ல படங்களில் நடிக்கும் பெருங்கனவு இருக்கிறது. இவரது ஃபேவரைட் ஹீரோக்கள் வரிசையில் தனுஷும் பஹத் ஃபாசிலும் இருக்கிறார்கள்.
மாடலிங் கனவிலும், `அது சாத்தியமாகுமா' என்ற ஏக்கத்திலும் இருக்கும் பெண்களுக்கு, ப்ரீத்தி சொல்லும் மெசேஜ் நம்பிக்கை தரும்.
``டஸ்க்கி ஸ்கின்னை பலவீனமா பார்க்காதீங்க. இன்னிக்கு ஃபேஷன் இண்டஸ்ட்ரியில டார்க் அண்ட் டஸ்கி ஸ்கின் பொண்ணுங்களுக்குத்தான் பெரிய வரவேற்பு இருக்கு. அது மட்டுமல்ல, சரியான ஷேப்ல இல்லாதவங்க, மாற்றுத்திறனாளிகள், ஸ்கின் பிரச்னைகள் உள்ளவங்ககூட இன்னிக்கு மாடலாக முடியும். உங்களுக்குத் தேவை தன்னம்பிக்கை மட்டும்தான். திறமைகளை வளர்த்துக்கோங்க. ஃபேஷன்ல அப்டேட் ஆகுங்க. சரியான நபர்கள் மூலமா வாய்ப்பு தேடுங்க... உங்களுக்கான வாசல் நிச்சயம் திறக்கும்.''