அலசல்
சமூகம்
Published:Updated:

‘பிரசவ வார்டு’ முதல் ‘பிணவறை’ வரை... தலைவிரித்தாடும் லஞ்சம்! - அரசு மருத்துவமனை அவலங்கள்

அரசு மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
News
அரசு மருத்துவமனை

சுகப்பிரசவமோ, ஆபரேஷனோ குழந்தை பொறந்தவுடனே அவங்க கேக்குற பணத்தைக் கொடுத்துடணும். அப்போதான், குழந்தையையே கண்ணுல காமிப்பாங்க.

‘அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலையுயர்ந்த மருந்துகள், உண்மையில் ஏழை மக்களைச் சென்றடைவதில்லை. அவற்றை மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களின் தனியார் க்ளினிக்குகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள்!’ - இது சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய வேதனைக் கருத்து!

நீதிமன்றத்தின் இந்தக் கருத்து எளிதில் நாம் கடந்துசென்றுவிட முடியாதது. அரசு மருத்துவ மனைகளில் பிரசவ வார்டில் தொடங்கி, பிணவறை வரை லஞ்சம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த லஞ்சக் குற்றச்சாட்டுகள் இல்லாத, மக்களிடம் நற்பெயர் பெற்ற பல அரசு மருத்துவமனைகளும் இருக்கின்றன. மதுரை தோப்பூர் அரசு காச நோய் மருத்துவமனை, சென்னை கோஷா மருத்துவமனை, சென்னை குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை கண் மருத்துவமனை போன்ற அரசு மருத்துவமனைகள் சில மாவட்டங்களில் மக்களுக்கான மருத்துவச் சேவையில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. இதேநிலை, தமிழகம் முழுக்க இருக்கும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இல்லை என்பதுதான் துயரம்!

‘பிரசவ வார்டு’ முதல் ‘பிணவறை’ வரை... தலைவிரித்தாடும் லஞ்சம்! - அரசு மருத்துவமனை அவலங்கள்

குழந்தை பிரசவமானால் காசு, குழந்தைகளின் முகம் பார்க்கக் காசு, அதிலும் ஆண் குழந்தை என்றால் கூடுதல் காசு, ஸ்ட்ரெச்சரில் தூக்கி வர காசு, வீல் சேர் தள்ள காசு, ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை வழங்கக் காசு, பிரேத பரிசோதனைக்குக் காசு, இறந்தவரின் உடலை ஒப்படைக்கவும் காசு எனத் திரும்பிய பக்கமெல்லாம் தலைவிரித்தாடுகிறது லஞ்சம். அரசு மருத்துவமனைகளின் நிலையறிய நேரடியாகவே களமிறங்கியது ஜூ.வி டீம். நாம் கண்ட, கேட்ட, விசாரித்த தகவல்கள் அனைத்தும்... அனஸ்தீசியா கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்த அதிர்ச்சியைத் தந்தன!

உடை மாற்றிவிட 200 ரூபாய்... பிரசவத்துக்கு 1,500 ரூபாய்... பட்டியல் போட்டு லஞ்சம்!

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை, மகப்பேறு மருத்துவத்துக்காகவே பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டது. பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு உள்ளே நுழையும்போதே தொடங்கிவிடுகிறது லஞ்சம். கர்ப்பிணிப் பெண்ணை ஸ்ட்ரெச்சர், வீல் சேர்களில் கொண்டுசெல்பவருக்கு 200 ரூபாய், உடை மாற்றிவிடுபவருக்கு 200 ரூபாய், ஆபரேஷன் தியேட்டரைச் சுத்தம் செய்வதற்கு 200 ரூபாய் எனப் பட்டியல்போட்டு களைகட்டுகிறது வசூல். பிறந்த குழந்தைகளின் உறவினர்களிடமிருந்து, ஆண் குழந்தை பிறந்தால் 1,500 ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் 1,000 ரூபாயும் கட்டாயம் வசூல் செய்யப்படுகிறது.

சமீபத்தில் மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்கள் சிலரின் உறவினர்களிடம் பேசினோம். “சுகப்பிரசவமோ, ஆபரேஷனோ குழந்தை பொறந்தவுடனே அவங்க கேக்குற பணத்தைக் கொடுத்துடணும். அப்போதான், குழந்தையையே கண்ணுல காமிப்பாங்க. ஆயா வேலை பார்க்கிறவர்களுக்குத் தனியாக 500 ரூபாய் கொடுக்கணும். தையல் போட்ட இடத்தை டிரெஸ்ஸிங் பண்றவங்க, கூட்டிப் பெருக்கறவங்களுக்கு அப்பப்ப 100, 200 ரூபாய்னு கொடுத்தாத்தான், நம்ம பக்கம் வருவாங்க. காசு வாங்குறதுலேயேதான் குறியா இருக்காங்களே தவிர, குடிக்கிறதுக்குச் சுடுதண்ணி வசதிகூட இல்லை” என்றனர் வேதனையுடன்.

இதேநிலைதான், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நிலவுகிறது. நம்மிடம் பேசிய மானாமதுரையிலிருந்து வந்திருந்த பெண்கள் சிலர், “கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாவாடை, சட்டையைப் புதுசா வாங்கி வரச் சொல்லுவாங்க. ஆஸ்பத்திரிக்குள்ளேயே நர்ஸ்ஸுங்கதான் கடையை மறைமுகமா வெச்சுருப்பாங்க. அங்க ஒரு பாவாடை 450 ரூபாய், சட்டை 550 ரூபாய்னு சொல்லுவாங்க. இதை வாங்கிக் கொடுத்தாத்தான், ஆபரேஷன் தியேட்டருக்குள்ளேயே கூட்டிட்டுப் போவாங்க. ‘ஆபரேஷனுக்கான கத்தி, கத்தரிக்கோல் எல்லாத்தையும் சுத்தப்படுத்தி வெக்கணும். 200 ரூபாய் எடுங்க’னு அதுக்கும் பணம் பறிப்பாங்க. தையல் போட்ட இடத்துல தடவ அரசாங்கம் இலவசமா மருந்து தருது. அதை முழுசா வாங்க, வார்டு நர்ஸுக்கு 50 ரூபாய் ஒவ்வொரு முறையும் கொடுக்கணும். கடைசியா, ‘டிஸ்சார்ஜ் சம்மரி’னு ஒரு ரிப்போர்ட் கொடுப்பாங்க. 500 ரூபாய் கொடுத்தாத்தான் அந்த ரிப்போர்ட் கிடைக்கும். குழந்தை பெத்த பெண்ணையும், குழந்தையையும் இலவசமா வீடு வரைக்கும் கொண்டுபோய்விட மினி பஸ் வசதியை அரசு கொடுத்திருக்கு. ஆனா, டிரைவருக்கு 300 ரூபாய் கொடுத்தாத்தான், பஸ் படிக்கட்டைக்கூட நாம மிதிக்க முடியும். இப்படி... ஒரு குழந்தை பிறந்து வீடு வந்து சேர்றதுக்குள்ள 5,000 ரூபாய்க்குக் குறையாம லஞ்சம் கொடுக்கவேண்டியிருக்கு. ஏழைப்பட்டவங்க எங்க போவாங்க..?” என்றனர் ஆற்றாமையுடன்.

“காசு கொடுக்கலைன்னா... நாயைவிட மோசமா நடத்துறாங்க!”

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிலை படுமோசம். மருத்துவமனையின் ஸ்கேன் சென்டரில் காத்திருந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தோம். “ஸ்கேன் சென்டர்ல 50 பேர் வரிசையில வந்தாலும், 10 பேருக்கு மட்டும் எடுத்துட்டு, ‘நாளைக்கு வாங்க’னு சொல்லிடுறாங்க. ‘அவசரம்’னு சொன்னா, ‘வெளிய ஒரு ஸ்கேன் சென்டர் இருக்கு. அங்க போய் எடுத்துட்டு வா’னு எகத்தாளமா சொல்லுறாங்க. அங்க ஸ்கேன் செய்ய 500 ரூபாய் கேக்குறாங்க. அம்புட்டு காசு இருந்தா, நான் ஏன் இங்க வந்து நாள்கணக்கா காத்துக் கெடக்கப்போறேன். எதுக்கெடுத்தாலும் காசு, காசுன்னு நச்சரிக்கிறாங்க. காசு கொடுத்தா கொஞ்சம் மரியாதையா நடத்துறாங்க. காசு கொடுக்கலைன்னா நாயைவிட மோசமா நடத்துறாங்க...” என்று கண்கலங்கினார்.

‘பிரசவ வார்டு’ முதல் ‘பிணவறை’ வரை... தலைவிரித்தாடும் லஞ்சம்! - அரசு மருத்துவமனை அவலங்கள்

தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனையில், சென்டிமென்ட்டாகப் பேசி, சிசிடிவி கேமராவில் சிக்காமல் லஞ்சம் பறிக்கும் வித்தைக்காரர்கள் நிரம்பியிருக்கிறார்கள். நம்மிடம் பேசிய ஒரத்தநாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், “குழந்தை பிறந்தவுடனேயே, ‘குழந்தையை வாங்கும்போது யார் மனசும் கோணாம வாங்குங்க. மேலே சிசிடிவி கேமரா இருக்கு. அதனால, குழந்தைக்குக் கீழ பணத்தை மடிச்சுவெச்சு கொடுங்க’ என்று சொல்லிவிடுவார்கள். பிரசவ அறையிலிருந்து வார்டுக்கு மாற்ற 100 ரூபாய், பொது வார்டுக்கு மாற்ற 200 ரூபாய், பிரசவமான பெண்களைப் பராமரிக்கும் பணியாளர்களுக்கு ஒரு வேளைக்கு 100 ரூபாய் வீதம் தினமும் 300 ரூபாய், யூரின் டியூப் ரிமூவ் செய்வதற்கு 100 ரூபாய், டிஸ்சார்ஜ் ஆகும்போது 100 ரூபாய் எனக் கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டும்” என்றார்.

ஆள் பிடித்துத் தர ஏஜென்ட்டுகள்... வடமாநிலத் தொழிலாளர்களிடம் வசூல்!

தமிழக - கேரள எல்லையிலுள்ள குமுளி, போடிமெட்டு சுற்றுவட்டார மக்கள் அனைவருமே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வருகிறார்கள். வெளி நோயாளிகளுக்கு மருந்து எழுதிக்கொடுக்க நோட்டு வாங்கி வரச் சொல்கின்றனர். 10 ரூபாய் மதிப்புடைய அந்த நோட்டை, மருத்துவமனை கேன்டீனில் 25 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டிய நிலை இருக்கிறது. மருத்துவமனையில் பணிபுரியும் பெரிய மருத்துவர்களின் தனியார் க்ளினிக்குக்கு ஆள் பிடித்துத் தர, ஏஜென்ட்டுகள் ஏராளமாக இருக்கிறார்கள். சிகிச்சைக்கு வருபவர்களிடம், “இங்க சரியா வைத்தியம் பாக்க மாட்டாங்க. நான் சொல்ற இடத்துக்குப் போ, பெருசா செலவே இருக்காது. உங்ககிட்டதான் முதலமைச்சர் காப்பீடு திட்டம் இருக்குல்ல” என்று மூளைச்சலவை செய்து அந்தத் தனியார் க்ளினிக்குகளுக்கு அனுப்புகிறார்கள். ஆட்களுக்குத் தக்க கமிஷன் கிடைப்பதால், ஏஜென்ட் தொழில் களைகட்டுகிறது.

தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகக் கடந்த ஜனவரி மாதம்தான் தரம் உயர்த்தப்பட்டது. சிகிச்சைக்கு வரும் தமிழ் தெரியாத வடமாநிலத் தொழிலாளர்களிடம் பணம் பறிப்பதற்காகவே, ஒருசிலர் மருத்துவமனை வளாகத்தில் இருக்கின்றனர். மருத்துவப் பணியாளர்களிடம் ஏற்கெனவே பேசிவைத்துவிட்டு, புறநோயாளிகள் சீட்டை உடனடியாகப் பெறுவது, மருத்துவரிடம் காண்பிப்பது, மருந்துகள் வாங்கித் தருவது போன்ற வேலைகளைச் செய்துவிட்டு, வடமாநிலத் தொழிலாளர்களிடமிருந்து தலைக்கு 200 ரூபாய் வரை பெற்றுக்கொள்கின்றனர்.

‘பிரசவ வார்டு’ முதல் ‘பிணவறை’ வரை... தலைவிரித்தாடும் லஞ்சம்! - அரசு மருத்துவமனை அவலங்கள்

ஈரோடு அரசு மருத்துவமனையில், சி.டி ஸ்கேனுக்கு 500 ரூபாய் பில் போட்டுவிட்டு 700 ரூபாய் வாங்குவதையும், கான்ட்ராஸ்ட் ஸ்கேனுக்கு 1,200 ரூபாய் வரை வசூலிப்பதையும் கண்கூடாகக் காண முடிந்தது.

விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், லேப் டெக்னீஷியன்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் ரத்த மாதிரி முடிவுகள் கிடைப்பதற்குக் குறைந்தபட்சம் மூன்று நான்கு நாள்கள் ஆகின்றன. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, தலைக்காயத் தீவிர சிகிச்சை உட்பட முக்கிய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இடவசதி இருந்தும் அறுவை சிகிச்சை எந்திரங்கள் இல்லாததால், மதுரை மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவு அமைந்துள்ள பகுதியில்தான் செவிலியர் தங்கும் விடுதி இருக்கிறது. இங்கு பயிற்சி செவிலியர்கள் 300 பேர் தங்கியிருக்கின்றனர். இவர்களின் தேவைக்காக ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதால், அவசர சிகிச்சைப் பிரிவில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறைக்குத் தண்ணீர் வழங்கப்படுவது திடீர் திடீரென நிறுத்தப்படும் அவலமும் ஏற்படுகிறது.

அவருக்கு 200, இவருக்கு 100... பிணவறையிலும் லஞ்சம்!

பிரசவ வார்டு, சிகிச்சைப் பிரிவுகளில் மட்டுமல்ல, பிணவறையிலும் தலைவிரித்தாடுகிறது லஞ்சம். கோவையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் தினம்தோறும் சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் அவுட்சோர்ஸிங் முறையில் நியமிக்கப்பட்டவர்கள்தான். ஸ்ட்ரெச்சர், வீல்சேர் தள்ளிச் செல்ல 300 – 500 ரூபாய் வரை அந்த ஊழியர்கள் கறாராக வசூலிக்கிறார்கள். கோவை அரசு மருத்துவமனையின் ஊழல் நெட்வொர்க்கில் முக்கியமானவர்கள் வொயிட் அண்ட் வொயிட் சீருடையில் வலம்வரும் அரசு ஊழியர்கள்தான். இறந்த பிறகு வழங்கப்படும் (Declaration) Form 4A சான்றிதழுக்காக 4,000 – 5,000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது.

‘பிரசவ வார்டு’ முதல் ‘பிணவறை’ வரை... தலைவிரித்தாடும் லஞ்சம்! - அரசு மருத்துவமனை அவலங்கள்

நம்மிடம் பேசிய கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், “பிணவறையில், பிரேத பரிசோதனை இல்லாத இறந்த உடலைக் கொடுப்பதற்கு 500 – 1,000 ரூபாய், பிரேத பரிசோதனை செய்த உடல்களைக் கொடுக்க 1,500 – 3,000 ரூபாய் வரை லஞ்சப் பட்டியல் வைத்து வசூலிக்கிறார்கள். உடல் உறுப்புகளை எடுத்து வைப்பதற்கு பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்கள், பிணவறையில் பணிபுரிபவர்கள் குடிப்பதற்கு மது எனச் சகலமும் கேட்பார்கள். மன உளைச்சலில் இருக்கும் சாமானியர்கள் எங்கே அதையெல்லாம் தேடி வாங்கி வர முடியும்... நம் சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு, அதற்கேற்ப பணம் வாங்கிக்கொள்வார்கள். எல்லாம் முடிந்து, உடலை ஸ்ட்ரெச்சரில் கொண்டுவந்து ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு முன்பாகக்கூட, ‘அவருக்கு 200 ரூபாய், இவருக்கு 100 ரூபாய், அந்தப் பையனுக்கு 100 ரூபாய்’ எனக் கடைசி நிமிட வசூலும் அரங்கேறுகிறது. இறந்தவர்களின் உறவினர்களை உளவியல்ரீ தியான அழுத்தத்துக்கு உள்ளாக்கி நடக்கும் இந்தக் கொள்ளை, கொடுமையின் உச்சம். பெயரே ‘இலவச அமரர் ஊர்தி.’ அந்த ஊர்தியில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லவும் ஆயிரம் ஆயிரமாகக் கொட்டினால் மட்டுமே வாகனத்தின் டயர் நகர்கிறது” என்று நொந்துகொண்டனர்.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையிலும் இதே நிலைதான். பிணவறையில் விரைவாக உடற்கூறாய்வு செய்துகொடுக்க 500 முதல் 1,000 ரூபாய் வரையும், ‘டெத் டிக்ளரேஷன் சர்டிஃபிகேட்’ உடனே வாங்க 2,000 முதல் 3,000 ரூபாய் வரையும் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்கென தனி டாக்டர் கிடையாது. உதவியாளர் ஒருவர்தான் இருக்கிறார். அவரும் அவ்வப்போது பர்மிஷனில் சென்றுவிடுவதால், போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் உடல்கள் தேங்குவது தொடர்கதையாகியிருக்கிறது. மேலும், பல மாவட்ட மருத்துவமனைகளில், சிறப்பு மருத்துவர்களே இல்லை. இதனால், குறிப்பிட்ட நோய்களுக்குச் சிகிச்சை கிடைக்காமல், வேறு மருத்துவமனைகளுக்குச் செல்ல மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

‘பிரசவ வார்டு’ முதல் ‘பிணவறை’ வரை... தலைவிரித்தாடும் லஞ்சம்! - அரசு மருத்துவமனை அவலங்கள்

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனைகள், சாம்பிள்கள்தான். தமிழகத்தின் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளின் நிலை இதுதான். இந்த அவலங்கள் குறித்து, மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதுதான், பிரச்னைகள் தொடர முக்கியக் காரணம்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, மருத்துவத்துறைச் செயலாளர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்டோம். “தமிழக அரசு மருத்துவமனைகளில் ‘ஜீரோ கரப்ஷன் பாலிசி’யைச் செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம். மருத்துவமனைகள் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தி, கண்காணிக்கவும் அறிவுறுத்தியிருக் கிறோம். துறைசார் நடவடிக்கைகளையும் மீறி சிலர் லஞ்சம் பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் வருகின்றன. அப்படிக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் குடிநீர் முதல் கழிப்பறை வரை தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க வலியுறுத்தியிருக்கிறோம். கழிப்பறைகளை ஊழியர்கள் சுத்தம் செய்வது ஒருபுறம் இருந்தாலும், அங்கு வரும் பொதுமக்களும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம். அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் பெறுவது குறித்து மக்கள் ‘104’ என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட நபர் யாராக இருந்தாலும், விசாரணை நடத்தி கட்டாயம் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

‘பிரசவ வார்டு’ முதல் ‘பிணவறை’ வரை... தலைவிரித்தாடும் லஞ்சம்! - அரசு மருத்துவமனை அவலங்கள்

எங்கே செல்வார்கள் ஏழைகள்?

பணம் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லை. அவர்களைச் சலாம் போட்டு வரவேற்க, எத்தனையோ வசதியான பெரும் தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றன. ஆனால், சாமானியர்களின் ஒரே நம்பிக்கை... போக்கிடம்... அரசு மருத்துவமனைகள் மட்டும்தான். நோய்களோடு, ரத்தக் காயங்களோடு, உயிருக்குப் போராடியபடி எனச் சாதாரண காய்ச்சலிலிருந்து ஹார்ட் அட்டாக் வரை கண்ணீரோடு அவர்கள் போய் நம்பி நிற்கும் இடம், அரசு மருத்துவமனைகள்தான். அதுவும் அவர்களை அச்சுறுத்தினால், ஏமாற்றினால், சுரண்டினால், வஞ்சித்தால்... என்ன செய்வார்கள்?

ஆசிய கண்டத்தில், மெடிக்கல் டூரிஸத்தின் பெருமை முகம் தமிழகம். ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘இன்னுயிர் காப்போம்... நம்மைக் காக்கும் 48’ போன்ற பல முன்னோடித் திட்டங்களைத் தமிழக அரசு முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், கோடிக்கணக்கான சாமானியர்களை பாதித்து, அரசு மருத்துவமனைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம், அலட்சியம் எனும் கொடிய நோய்மைகள், இந்தப் பெருமைகளின்மீது பரவும் புற்று. அதைத் தமிழக அரசு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும்!

ஆபரேஷனை ஆரம்பிப்பாரா முதல்வர்?

*****

இங்கேயும் பிரச்னைதான்!

* புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூளை நரம்பியல் பிரச்னைக்குச் சிகிச்சையளிக்கப் போதுமான மருத்துவர்கள் இல்லை.

* தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவில், ஒன்றரைக் கோடி மதிப்பில் வாங்கப்பட்ட நவீன அறுவை சிகிச்சைக் கருவி பயன்படுத்தாமல் வீணாக்கப்படுகிறது.

* திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உள்நோயாளிகள் சிகிச்சை பெறக்கூடிய வார்டுகள் பகுதிக்கு அருகிலேயே கழிவுநீரும் குப்பைகளும் தேங்கிக்கிடக்கின்றன.

* திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 32 மணி நேரம் வரை வேலை பார்க்கக்கூடிய சூழல் இருக்கிறது. பிரசவ வார்டில் போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால், பச்சிளம் தாய்மார்கள் தரையில் படுக்கும் அவலம் நடக்கிறது.

* கோவில்பட்டி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், தீக்காயச் சிகிச்சைப் பிரிவுக்கு எனத் தனி அரங்கு இருந்தும், அதற்கென தனி மருத்துவர்கள் இல்லை.