சமூகம்
Published:Updated:

நெஞ்சு பொறுக்குதிலையே!

நெஞ்சு பொறுக்குதிலையே!
பிரீமியம் ஸ்டோரி
News
நெஞ்சு பொறுக்குதிலையே!

கிராமத்தின் மையப்பகுதியிலுள்ள விநாயகர் கோயில் குளத்தில், பட்டியல் சமூகத்தினர் யாரும் குளிக்கக் கூடாது என்ற ஊர்க் கட்டுப்பாடு இருக்கிறது. அங்கிருக்கும் டீக்கடையில், பட்டியலினச் சமூகத்தினருக்குத் தனிக் குவளைதான்

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று முழங்கிய பாரதி மறைந்து ஒரு நூற்றாண்டு முடிந்துவிட்டது. ஆனால், சாதி எனும் கொடூரம், தீண்டாமை எனும் பாவச்செயல் இன்னும் இந்த மண்ணில் ஆழமாக வேறூன்றியிருப்பது மிகுந்த அவமானத்துக்குரியது. ‘நாம் நவீன மனிதர்கள்’ என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவர்களாக இந்த ஆண்டின் இறுதி நாள்களில் நின்றுகொண்டிருக்கிறோம்!

“இப்போல்லாம் யாருங்க சாதி பாக்குறா..?” என்கிற வாக்கியத்தைப்போல ஒரு பெரிய பொய் வேறில்லை. நடக்கும் பாதையில் தொடங்கி... டீக்கடைகளில், ஹோட்டல்களில், நீர்நிலைகளில், பள்ளிகளில், பணியிடங்களில், கோயில்களில், பேருந்தில், ரேஷன் கடைகளில், சலூனில்... அவ்வளவு ஏன், சுடுகாட்டில்கூட சக மனிதர்கள்மீது தீண்டாமையும் அடக்குமுறையும் ஏவப்படுவதை எப்படிச் சகித்துக்கொள்வது? எங்கோ எப்போதோ அல்ல... ‘சமூகநீதி வளர்த்த பெரியார் மண்’ என்று நாம் சொல்லிக்கொள்ளும் இன்றைய தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்தான் இந்த அவலங்கள் அன்றாடம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆணவச் செயல்களால் சிந்தப்படும் ரத்தத்தையும், கண்ணீரையும், வலியையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

நெஞ்சு பொறுக்குதிலையே!

சமீபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலினச் சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர் தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது. மலம் கலந்த அந்தத் தண்ணீரைக் குடித்த சிறுவர்கள் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட, அரசு அதிகாரிகளின் ஆய்வுக்குச் செல்ல, அதன் பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீஸார் விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள். புதுக்கோட்டை சம்பவத்தைத் தொடர்ந்து, “தமிழகத்தில் எங்கெல்லாம் தீண்டாமை மிக மோசமாகத் தலைவிரித்தாடுகிறது?” என விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல்களெல்லாம், நம்மை உறையவைத்தன!

நெஞ்சு பொறுக்குதிலையே!

“அவனுங்களை ஏன்டா உள்ள விட்ட?” - தலைவிரித்தாடும் தீண்டாமை!

குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வேங்கைவயல் கிராமத்துக்கு ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவிடமும், நூற்றாண்டுக்கால மனக்கொந்தளிப்பைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள் பட்டியலின மக்கள். “எங்க குலசாமி அய்யனாரைக்கூட பாக்க விடுறதில்லைங்கம்மா. நாலு தலைமுறையா கோயில் வாசலைக்கூட மிதிக்க விடாம ஒடுக்கப்பட்டிருக்கோம்” எனக் கண்ணீர்விட்டுக் கதறியிருக்கிறார்கள்.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பட்டியல் இன மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபடச் செய்தார். அப்போது கோயில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள், “டேய், அவனுங்களை ஏன்டா உள்ள விட்ட?” எனத் தொடங்கி, பட்டியலின மக்களை மிகவும் இழிவாக வசைபாடியிருக்கிறார். தன்மேல் சாமி வந்து ஆடி குறி சொல்வதாக, அவர் ஊர் மக்களை நம்பவைக்க முயன்றிருக்கிறார். நடப்பது நாடகம் என அதிகாரிகள் புரிந்துகொண்டனர். பட்டியலின மக்களை இழிவாகப் பேசிய சிங்கம்மாளையும், அதே பகுதியில் டீக்கடையில் இரட்டைக்குவளை முறையைச் செயல்படுத்தும் மூக்கையா என்பவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கிறது காவல்துறை. புதுக்கோட்டை மாவட்டத்தில், இன்னும் பல பகுதிகளிலும் இது போன்ற தீண்டாமைக் கொடுமைகள் வெவ்வேறு வடிவில் தாண்டவமாடுகின்றன.

தீண்டாமைச் சுவர்
தீண்டாமைச் சுவர்

“உன் அப்பன் தொழிலைத்தான்டா நீயும் பாக்கணும்..!”

கறம்பக்குடி அருகே இருக்கிறது கருப்பட்டிப்பட்டி கிராமம். கிராமத்தின் மையப்பகுதியிலுள்ள விநாயகர் கோயில் குளத்தில், பட்டியல் சமூகத்தினர் யாரும் குளிக்கக் கூடாது என்ற ஊர்க் கட்டுப்பாடு இருக்கிறது. அங்கிருக்கும் டீக்கடையில், பட்டியலினச் சமூகத்தினருக்குத் தனிக் குவளைதான். அதையும், அவர்கள் தரையில் அமர்ந்துதான் குடிக்க வேண்டும். பெஞ்ச்சில் உட்காரக் கூடாது என்பது எழுதப்படாத விதி. அதை மீறும்போது பலமுறை பட்டியல் சமூகத்தினர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். “இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் பலமுறை போலீஸில் புகாரளித்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் ‘இதையெல்லாம் மாத்த முடியாது. போய் ஒழுங்கா பொழப்பப் பாருங்க’ என்று போலீஸ் எங்களைத்தான் மிரட்டி அனுப்புகிறார்கள்” என்றார்கள் அந்த மக்கள் அப்பாவியாக.

ஆலங்குடி அருகே, வானக்கண்காடு கிராமத்தில் சுமார் 20 பட்டியலினக் குடும்பங்கள் உள்ளன. அவர்கள், ஆதிக்கச் சாதியினரின் வயல்களிலும் வீடுகளிலும்தான் பெரும்பாலும் வேலைசெய்து வருகிறார்கள். அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த வரான கருப்பையா என்பவர் இறந்துவிட, அவரின் மகன் செந்தில் “நான் வேற வேலைக்குப் போறேன். என் அப்பா மாதிரி நான் இந்த வேலையைச் செய்ய விரும்பல” என்று மறுத்திருக்கிறார். ஆனால், ஆதிக்கச் சாதியினர், “உன் அப்பன் தொழிலைத்தான்டா நீயும் பார்க்கணும். ஒழுங்கா வந்து வேலையைப் பாரு” என டார்ச்சர் கொடுத்திருக்கிறார்கள். தொல்லை தாங்காமல், சொந்த ஊரைவிட்டு குடும்பத் தினருடன் வெளியேறியிருக்கிறார் செந்தில்.

நெஞ்சு பொறுக்குதிலையே!

செந்திலிடம் பேசினோம். “ஆதிக்கச் சாதியினர் வீடுகள்ல எல்லா வேலையும் செய்யச் சொல்றாங்க. சரியான கூலிகூட தர மாட்டாங்க. அப்பா அப்படியே பழகிட்டாரு. நான் முடியாதுனு சொன்னேன். என்னை ரொம்ப மிரட்டுனாங்க. சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்துனாங்க. ஒரு கட்டத்துல, ஊரைவிட்டே ஒதுங்கி வந்துட்டேன். இப்பவும் நிம்மதியா வாழவிடாம என்னை விரட்டுறாங்க” என்றார் வேதனையுடன்.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, சிலட்டூர், தாந்தாணி, கருக்காகுறிச்சி, கன்னியான்கொல்லை, களபம் எனப் பல கிராமங்களிலும் இன்றும் இரட்டைக்குவளை முறை உட்பட பல வகைகளில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. நமது நேரடிக் கள ஆய்வில் அந்தக் கொடுமைகளைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

“நாங்களும் அவனுங்களும் ஒண்ணா நிக்குறதா?”

விழுப்புரம் மாவட்டத்திலும் இதே போன்ற தீண்டாமைச் சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.அவனம்பட்டு கிராமத்தில், பட்டியல் சமூகத்தவர் இறந்துவிட்டால், உடலை மயானத்துக்கு எடுத்துச்செல்ல பாதையே இல்லை. ரெட்டணை கிராமத்தில், கல்யாண மண்டபங்களில் பட்டியல் சமூகத்தவர்களுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதிப்பதில்லை. இதைவிடக் கொடுமையாக, திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி சுற்றுவட்டாரங்களிலுள்ள கிராமங்களில், நியாயவிலைக் கடைகளில் மாற்றுச் சமூகத்தவர் பொருள்களை வாங்கும் தினத்தன்று, பட்டியல் சமூகத்தவருக்கு அனுமதி கிடையாது. “நாங்களும் அவனுங்களும் ஒண்ணா நின்னு அரிசி பருப்பு வாங்குறதா?” என ஆதிக்கச் சாதியினர் முரண்டுபிடிப்பதால், ரேஷன் பொருள்களை வாங்க, பட்டியலின மக்கள் வேறொரு நாளில் செல்லவேண்டிய அவலம் நடக்கிறது. 100 நாள் வேலையிலும் இதே நிலைதான். ``நாங்கள் வேலை செய்யாத நாள்களில்தான் தலித் சமூகத்தினர் வேலை செய்ய வேண்டும். எங்களோடு அவர்களை அனுமதிக்க முடியாது’’ என்கிறார்கள். குறிப்பாக, பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில், மாற்றுச் சமூகத்தினர் “100 நாள் வேலை செய்ய முடியாது” என்று மறுத்துவிடுகிறார்கள்.

தீண்டாமை சலூன்
தீண்டாமை சலூன்

கரூர் மாவட்டம், கொக்கம்பட்டி கிராமத்திலுள்ள பட்டியலின மக்கள், மாற்றுச் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் செருப்பணிந்து செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. பாகநத்தம், தாளியாப்பட்டி, ஜல்லிவாட நாயக்கனூர், வெடிக்காரன்பட்டி, பூலாம்பட்டி, மாமரத்துப்பட்டி கிராமங்களிலும் இதே நிலைதான். சின்னமநாயக்கன் பட்டியில், அரசுக்குச் சொந்தமான சமுதாயக்கூடத்தையே பட்டியலின மக்கள் பயன் படுத்த அனுமதி இல்லை. கந்தசாரப்பட்டி, மணல்மேடு, நொச்சிப்பட்டி கிராமங்களிலுள்ள டீக்கடைகளில் இரட்டைக்குவளை முறை உள்ளது. இந்தக் கிராமங்களிலுள்ள பேருந்து நிறுத்தங்களில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அமரக்கூடத் தடை இருப்பது தீண்டாமையின் உச்சம்.

நெஞ்சு பொறுக்குதிலையே!

“ஹோட்டலில் உட்கார முடியாது... - சலூன்களில் அனுமதி இல்லை!”

ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், அந்தியூர் போன்ற தாலுகாக்களில் தீண்டாமை பெரிய அளவில் இருக்கிறது. குறிப்பாக, கிராமங்களில் டீக்கடைகள், ஹோட்டல்களில் பட்டியல் இனத்தவர்களை உட்காரவிடுவதில்லை. சலூன் கடைகளிலும் அனுமதிப்பதில்லை.

நம்மிடம் பேசிய ஆதித்தமிழர் பேரவையின் மேற்கு மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி, “ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கொண்டப்பநாயக்கன்பாளையம், உக்கரம், மில்மேடு, பெரியார் நகர் போன்ற பகுதிகளில் தீண்டாமைக் கொடுமை சகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. சதுமுகை, கரளயம், உலியம்பாளைம், அரேப்பாளையம், மாக்கம்பாளையம் போன்ற கிராமங்களிலும் இதேநிலைதான். எவ்வளவோ போராடுகிறோம்... சின்னச் சின்ன விஷயங்களில் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடிந்திருக்கிறது. தொடர்ந்து நடக்கும் தீண்டாமைப் பிரச்னைகளை நினைத்தால் பெருங்கவலையாக இருக்கிறது” என்றார்.

மரணத்தின் பின்னும் தொடரும் தீண்டாமை!

தமிழகத்திலேயே அதிகமும் தீண்டாமைக் கொடுமை நடக்கும் இடமாக கொங்கு மண்டலம் இருக்கிறது. ஆனால், சத்தமே வெளியில் வராது. அந்த அளவுக்குப் பட்டியலின, பழங்குடி மக்கள் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில், ஏ.டி.காலனி, புதுகாலனி என்று காலனியுடன் முடியும் பெயர்கள்தான் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளின் அடையாளமாக இருக்கின்றன. 2019-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில், தீண்டாமைச்சுவர் இடிந்து விழுந்து 17 பட்டியலின மக்கள் உயிரிழந்தது பெரும் பேசுபொருளானது; தமிழ்நாடே கொந்தளித்தது. ஆனால், அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சிவசுப்பிரமணியம் என்பவர் ஜாமீனில் வெளியே வந்து, அரசு அனுமதியுடன் அதே இடத்தில் மீண்டும் சுவர் எழுப்பிவிட்டார்.

நெஞ்சு பொறுக்குதிலையே!

அன்னூர் ஒன்னக்கரசம்பாளையத்தில் சுடுகாடு வரை தீண்டாமை நீள்கிறது. அங்கிருக்கும் காலனியில், பட்டியலினத்தைச் சேர்ந்த 102 வயதான ரங்கம்மாள் என்ற மூதாட்டி சமீபத்தில் இறந்துவிட்டார். அவரது உடலை அங்குள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்யச் சென்றபோது, ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரங்கம்மாளின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்தே, ரங்கம்மாளின் உடல் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. வாழும்போது மட்டுமல்ல, இறந்த பிறகும்கூட ஒரு பட்டியலின உடல், ஒடுக்குமுறைகளைச் சந்திப்பது சமூக அவலத்தின் உச்சம்.

சத்துணவு முட்டையிலும் சாதி!

நீலகிரி மாவட்டத்தில், சாதியத் தீண்டாமைக் கொடுமைகள் மிக நுட்பமாக நடக்கின்றன. கோத்தகிரி அருகிலுள்ள பூபதியூர் எனும் தலித் கிராமத்துக்குச் செல்லும் நடைபாதை தடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தடுப்பை அகற்றுமாறு உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும் அரசு அதிகாரிகள் இன்றளவும் மௌனம் காக்கிறார்கள். நீலகிரியிலுள்ள சில பள்ளிகளில், அரசு வழங்கும் சத்துணவு முட்டைகளைக்கூட மாணவர்களுக்குக் கிடைக்கவிடாமல் தடுத்து வருகின்றனர் ஆதிக்கச் சாதியினர். மாற்றுச் சாதியினரைக் காதலித்து திருமணம் செய்வோர் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களின் பெற்றோரின் இறுதிச் சடங்குகூட ஊருக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. நீலகிரியில், சமீபத்தில் அரசுப் பள்ளிகள் கலைவிழா நடந்தது. அதில் பழங்குடி மாணவர்கள் முதலிடத்துக்கு முன்னேறியதைச் சகித்துக்கொள்ள முடியாமல், சில சாதி ஆணவச் சிந்தனைகொண்ட அதிகாரிகள் வேறு பள்ளிக்கு முதல் பரிசு அறிவித்ததாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது. துறைசார் விசாரணையும் நடந்துவருகிறது.

நெஞ்சு பொறுக்குதிலையே!

“அவங்க ஆடு, மாடுகூட நம்ம பகுதியில மேயக் கூடாது!”

தீண்டாமையின் நச்சு வேர்கள் தஞ்சை மாவட்டத்தில் மிக ஆழமாக வேர்விட்டு, கிளை பரப்பியிருக்கிறது. ஒரத்தநாடு அருகேயுள்ள கிளாமங்கலம் கிராமத்தில் இன்றுவரை, டீக்கடைகளில் இரட்டைக்குவளைதான். பட்டியலின மக்களுக்கு மளிகைக்கடையில் பொருள்கள் தருவதில்லை. “எங்க பெண்கள் அவசரத்துக்கு நாப்கின் கேட்டால்கூட தர மாட்றாங்க” என்கிறார்கள் அந்த மக்கள். சமீபத்தில், அந்தப் பகுதி ஆதிக்கச் சாதியினர் ஒரு கூட்டம் போட்டு, “அவங்களுக்கு எந்தப் பொருளும் வழங்கக் கூடாது. அவங்க ஆடு, மாடுகூட நம்ம பகுதியில மேய அனுமதிக்கக் கூடாது. மீறி நடந்தா, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கணும்” என்று தீர்மானம் எடுத்திருக்கிறார்கள். பூதலூர் தாலுகாவிலுள்ள வளம்பக்குடி கிராமத்தில், திருவிழா மண்டகப்படியில் பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது காலங்காலமாக இருந்துவரும் சம்பிரதாயம். அந்த மரியாதை, பட்டியலின மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காக, பல ஆண்டுகளாக அங்கு திருவிழாவே நடத்தப்படவில்லை. திருவையாறு பகுதியைச் சுற்றியுள்ள வீரசிங்கம்பேட்டை, வரகூர் உள்ளிட்ட பல ஊர்களில், அனைத்து வகை தீண்டாமையும் நிலவுகிறது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் தலைவர் செல்லக்கண்ணுவிடம் இது குறித்துப் பேசினோம். “சேலம் மாவட்டம், சன்யாசிகுண்டு அருகே கட்டுமரம் குட்டை என்ற பகுதியில் 40-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்துவருகிறார்கள். அவர்கள் வசிக்கும் தெருவுக்குப் போகும் பாதையில் ஒரு தீண்டாமைச் சுவர் எழுப்பியிருக்கிறார்கள். அந்தச் சுவரை இடிக்கப் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகேயுள்ள பட்டியலின மக்களைப் பறை அடிக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள் ஆதிக்கச் சாதியினர். அவர்கள் மறுக்கவே, 31 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அடித்து உதைத்திருக்கிறார்கள். இது குறித்துப் புகார் கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே மாவட்டத்தில், பூரிவாக்கம், நெய்வேலி தாலுகா, ஊத்துக்கோட்டைப் பகுதிகளிலும் இதே தீண்டாமை அவலநிலை இருக்கிறது.

சமீபத்தில், மதுரை பேரையூர் பகுதியில், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலைப் புதைக்கப் பெரும் போராட்டமே நடந்தது. போராடிய பெண்கள் உட்பட 34 பேரைக் கைதுசெய்தது காவல்துறை. மனித உரிமை ஆணையம் தலையிட்டதால், பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதிலும் இருவர்மீது பொய் வழக்கு பதிவுசெய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். இன்றுவரை அவர்களுக்கு ஜாமீன்கூட கிடைக்கவில்லை. இவையெல்லாம் சிறு சிறு உதாரணங்கள்தான்” என்றார்.

நெஞ்சு பொறுக்குதிலையே!

நாம் களத்தில் கண்ட காட்சிகள், மக்களிடம் விசாரித்த செய்திகள், எந்தவொரு அற உணர்ச்சியுள்ள மனிதரையும் கலங்கச் செய்துவிடும். கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை இந்தச் சாதியக் கொடுமைகள் சிறிதும் பெரிதுமாக நீக்கமற நிறைந்திருக்கின்றன. பள்ளிகளுக்குச் செல்லும் பட்டியலின, பழங்குடியினக் குழந்தைகள் முதல்... இடுகாட்டுக்குச் செல்லும் இறந்த உடல்கள் வரை கடுமையான தீண்டாமைக் கொடுமைகளை அனுபவிக்கின்றன. பொதுத்தெருவில் நடக்க, தெருவில் வாகனம் ஓட்ட, செருப்பணியத் தடை... டீக்கடை, ஹோட்டல், மளிகைக்கடை, சலூன், கோயில், குளம், பேருந்து, ரேஷன் கடைகளில் அவமதிப்பும் அனுமதி மறுப்பும்... பள்ளிகளில், பணியிடங்களில் பாரபட்சம், சாதி மறுப்புத் திருமணம் செய்தால் ஊரைவிட்டு விரட்டுதல், கொலைசெய்தல், தலித் கிராமத்து ஊராட்சித் தலைவர்களை அவமதித்தல், செயல்படத் தடுத்தல், அதன் நிதிகளை மடைமாற்றுதல் எனக் குற்றப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இந்த அநீதிகளுக்கும் அவலங்களுக்கும் யார் பொறுப்பேற்பது? அந்தந்தப் பகுதிக் காவல்துறையா... கிராம நிர்வாகமா... மாவட்ட ஆட்சியரா... சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களா... அரசியல்வாதிகளா... ஆளும் மத்திய, மாநில அரசுகளா... நீதிமன்றங்களா... எல்லோரும்தான்; எல்லாமும்தான். மாற்றம், நம் ஒவ்வொரு தனிமனிதரின் இதயத்திலிருந்தும் தொடங்க வேண்டும். ஒரு புதிய ஆண்டை வரவேற்கும் இந்தத் தருணத்தில், இனி ஒருவர்கூட தீண்டாமையால் பாதிக்கப்படக் கூடாது என்று உறுதியேற்போம். மானுட அன்பால், சமத்துவத்தால் இணைந்திருப்போம்!