சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

நிறைந்த அன்புடன் நம் குழந்தைகளுக்காக... சென்னப்பட்டணம் பொம்மைகள்!

சென்னப்பட்டணம் பொம்மைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னப்பட்டணம் பொம்மைகள்

பொம்மை என்பது குழந்தைகள் கையிலெடுத்து புழங்குற பொருள். அவங்களை அறியாம அதை வாயிலவெப்பாங்க. இன்னைக்கு வர்ற பொம்மைகள்ல வண்ணங்களுக்காக ஏகப்பட்ட ரசாயனங்கள் சேர்க்குறாங்க.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் பிரதான சாலையில் 60-வது கிலோமீட்டரில் இருக்கிறது, சென்னப்பட்டணம். இந்த சிறுநகரின் நுழைவாயிலிலேயே `Welcome to Land of toys' என்ற பிரமாண்ட போர்டு வரவேற்கிறது. நகரத்தின் உள்ளே இருபுறங்களிலும் சிறிதும் பெரிதுமாக ஏராளமான பொம்மைக்கடைகள். வட்ட வடிவ முகத்தோடு, ஈர்க்கும் வண்ணத்தில் மலர்ந்து புன்னகைக்கும் மர பொம்மைகள். வாழிடங்களுக்குள் நுழைந்தால் எல்லா திசைகளிலும் எந்திரங்கள் தேயும் சத்தம். பெரும்பாலும் எல்லா வீடுகளின் முகப்பிலும் சீராக வெட்டி அடுக்கப்பட்டுள்ளன மரக்கட்டைகள்.

சென்னப்பட்டணத்தில் தயாராகும் மரபொம்மைகளுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு. வடிவம் குலையாத அழகும் பளபளப்பும்கொண்ட இந்த பொம்மைகள், குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் ஈர்க்கும். பிளாஸ்டிக்கிலும் தகரங்களிலும் தரமற்றுச் செய்யப்படும் பொம்மைகளைப் போலன்றி, குழந்தைகள்மேல் அக்கறையோடும் அன்போடும் செய்கிறார்கள் சென்னப் பட்டணம் கைவினைக் கலைஞர்கள். இந்த பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கி மரபைக் காப்பாற்றியிருக்கிறது மத்திய அரசு.

சென்னப்பட்டணத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் பொம்மை தயாரிக்கிறார்கள். நம்மூரில் வீட்டுக்கு வீடு தறி எந்திரம் இருப்பது போல இங்கு எல்லா வீடுகளிலும் மின்சாரத்தில் இயங்கும் டை எந்திரம் சுழன்று கொண்டேயிருக்கிறது. இந்தச் சின்ன நகரத்தில் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கி மொத்த விற்பனை செய்யும் கடைகள் மட்டும் 30-க்கும் மேல் உள்ளன. சில்லறை பொம்மைக் கடைகள் தனி. ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வர்த்தகத்தை தம்முள் வைத்திருக்கின்றன சென்னப்பட்டணம் பொம்மைகள். இந்தியாவெங்குமிருந்து பொம்மைகள் வாங்கக் குவியும் மக்களால் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது, இந்த நகரம்.

சென்னப்பட்டணம் பெரும் வரலாறுகொண்ட தொழில் நகரம். விஜயநகரப் பேரரசுக்குக் கீழ் இந்நகரை குறுநில மன்னன் ஒருவன் ஆட்சிசெய்திருக்கிறான். கர்நாடக வரலாற்றில் அதிக போர்களை சந்தித்த நகராக இது பதிவாகியிருக்கிறது. யுத்தங்களால் சிதைவுற்ற நகரத்தை, தங்கள் திறனாலும் உழைப்பாலும் பொம்மைகளின் நகரமாக மாற்றியிருக்கிறார்கள் இங்குள்ள மக்கள்.

நிறைந்த அன்புடன் நம் குழந்தைகளுக்காக... சென்னப்பட்டணம் பொம்மைகள்!

அப்படியென்ன சென்னப்பட்டணம் பொம்மைகளின் சிறப்பு?

``பொம்மை என்பது குழந்தைகள் கையிலெடுத்து புழங்குற பொருள். அவங்களை அறியாம அதை வாயிலவெப்பாங்க. இன்னைக்கு வர்ற பொம்மைகள்ல வண்ணங்களுக்காக ஏகப்பட்ட ரசாயனங்கள் சேர்க்குறாங்க. தவிர பிளாஸ்டிக், தகரம்னு பிஞ்சுக் குழந்தைகளை பாதிக்கிற பொருள்கள்ல செஞ்சுதான் நிறைய பொம்மைகள் வருது. சென்னப்பட்டணம் பொம்மைகள் முழுக்க முழுக்க இயற்கையான வெஜிடபுள் வண்ணங்களால தயாரிக்கப்படுது. பாலைமரக் கட்டைகள்லதான் பொம்மைகளைச் செய்யறோம். அந்தக்காலத்துல வெள்ளைக்காரங்க இந்தக் கட்டையை வெச்சுத்தான் ரயில்களைச் செஞ்சுருக்காங்க. அந்த அளவுக்கு உறுதியான கட்டை. அதேநேரம், மருந்து மாதிரி. குழந்தைகள் வாயில பட்டாலும் எந்தக் கேடும் செய்யறதில்லை. சின்னக் குழந்தைகள் எடுத்து விளையாடுற பொம்மைகள்ல இருந்து, பம்பரம், சொப்புச் சாமான்கள், ரிங்செட், கிலுகிலுப்பைகள், நடைவண்டிகள், பானைகள், பாத்திரங்கள், வண்டிகள், வாகனங்கள்னு பலநூறு வகை பொம்மைகள் செய்யறோம். விளையாட்டு, படிப்பு, நுண்ணறிவுன்னு எல்லாம் இங்கே தயாராகுது. அதேமாதிரி சென்னப்பட்டணத்து பொம்மைகள் உருவத்துக்கு பேருபோனவை. ராஜா ராணி, பானை சுமக்குற பெண், உழவர் தம்பதி, வாத்திய கோஷ்டி, கோயில் பூசாரி குடும்பம், பாம்பாட்டி, நடனமாடுற பெண்கள், கிருஷ்ணர், ராமர், அனுமன்னு அதிலயும் நூறு வகைக்கு மேல இருக்கு. இங்கே மட்டும்தான் ரோஸ்வுட் மரங்கள்ல மரப்பாச்சி பொம்மை செய்யறோம்'' என்கிறார், சென்னப்பட்டணத்தில் உள்ள அம்பேகால் கிருஷ்ணன் கோயில் வாசலில் பொம்மைக்கடை வைத்திருக்கும் ராமச்சந்திரன்.

நகரம் முழுக்க பொம்மைக்கடைகள் இருந்தாலும் கோட்டைப் பகுதிதான் பொம்மை உற்பத்தி மையம். பெரும்பாலும் இங்கிருக்கும் எல்லாக் குடும்பங்களுமே பொம்மை உற்பத்தி அல்லது விற்பனையைச் சார்ந்தே வாழ்கின்றன.

``பாலை மரம் காட்டுல இருந்து மொத்தமா வாங்கிடுவோம். தோதுக்கேத்த மாதிரி வெட்டி காயப்போட்டுருவோம். காயக் காய உறுதி அதிகமாகும். பால் மரம்... மச்சுப்போகாது. ஆரம்பத்துல இந்தத் தொழில் நசிஞ்சு போச்சு. பொம்மை தயாரிச்சவங்கள்லாம் தூக்கிப்போட்டுட்டு வேற வேலை பார்க்கப் போயிட்டாங்க. கவர்மென்ட் நிறைய சலுகைகள் தந்து இந்தத் தொழிலுக்கு உயிர் கொடுத்திருக்கு. தொழில் தெரிஞ்ச யாரும் இப்போ எளிமையா லோன் போட்டு டை மெஷின் வாங்கிடலாம்'' என்கிறார் சேகர். சென்னப்பட்டணம் புதிய நீதிமன்றத்துக்கு எதிரில் பிரமாண்டமான பொம்மைக்கடை வைத்திருக்கிறார்.

நிறைந்த அன்புடன் நம் குழந்தைகளுக்காக... சென்னப்பட்டணம் பொம்மைகள்!

சென்னப்பட்டணம் பொம்மைகளின் நகரமாக மாறியதற்குப் பின்னால் நீண்ட வரலாறு இருக்கிறது.

``அந்தக்காலத்துல பாலை மரங்கள்ல பாத்திரங்கள் செய்யறது, குழந்தைகள் உக்காந்து விளையாடுற குதிரைகள் செய்யறதுதான் இந்தப் பகுதி மக்களோட தொழிலா இருந்திருக்கு. திப்பு சுல்தான் மைசூர் மன்னரான பிறகு நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தார். கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை உருவாக்கினார். ஒருமுறை சென்னப்பட்டணம் கைவினைஞர்கள் தாங்கள் தயாரிச்ச மரப்பொருள்களை அவருக்குப் பரிசா கொடுத்திருக்காங்க. அதைப் பார்த்து வியந்த திப்பு சுல்தான், பெர்சியா நாட்டுலருந்து கைவினைஞர்களை வரவழைச்சு இங்கே பயிற்சி கொடுத்திருக்கார். இந்தத் தொழிலை மேம்படுத்துற பொறுப்பை பாவாஸ் மியான்ங்கிறவர்கிட்ட கொடுத்திருக்கார். அவர் உற்பத்தி, விற்பனையில நிறைய உதவிகள் செஞ்சு இந்தத் தொழில் மேம்பட பெரிய அளவுல பணியாற்றியிருக்கார். அவரைத்தான், `சென்னப்பட்டணம் பொம்மைகளோட தந்தை’னு சொல்றாங்க. அன்னைக்கு ஆரம்பிச்ச தொழில் இன்னைக்கு வரைக்கும் பேரும் புகழுமா வளர்ந்துக்கிட்டிருக்கு'' என்கிறார், முத்தாப் பாஷா. சென்னப்பட்டணத்தின் பெரிய மொத்த பொம்மை வர்த்தகர்.

பெரும்பாலும் எல்லோரும் சிறு உற்பத்தியாளர்கள். மூன்று அல்லது நான்கு டை மெஷின் போட்டு தொழில் செய்பவர்கள். பெரிய உற்பத்தியாளர்கள் பொம்மைகளின் பாகங்களை வெவ்வேறு உற்பத்தியாளர்களிடம் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள். கோட்டையில் வசிக்கும் முகமது மிஸ்மில், ஆறு பேரைவைத்து வேலை வாங்குகிறார். இவர் சிறு குழந்தைகளுக்கான கிட்கிட்டி, நடைவண்டி இரண்டு மட்டுமே செய்கிறார்.

``இந்த டை மெஷின் சுத்திக்கிட்டே இருக்கும். அதுல கட்டையைச் சொருகிட்டு, உளியைவெச்சுக் கீறி தேவையான வடிவத்தைக் கொண்டு வந்துடலாம். கிட்கிட்டியில மொத்தம் நாலு பாகம். சக்கரம், மணி, கப், கடிக்குச்சி. நாலையும் தனித் தனியாத்தான் செய்யணும். பெரும்பாலும் பேஸ்ட் வெச்சு ஒட்ட மாட்டோம். ஏன்னா, குழந்தைகளுக்கு ஒத்துக்காமப் போயிடும். சொருகிற டைப்லதான் செய்வோம். அதேமாதிரி கம்பிகள், ஆணிகளைப் பெரும்பாலும் பயன்படுத்த மாட்டோம்'' என்கிற மிஸ்மில், ``நாலு பேர் சேர்ந்து ஒரு நாளைக்கு 200 கிட்கிட்டி செய்யலாம்'' என்கிறார்.

வண்ணங்கள்தான் சென்னப்பட்டணம் பொம்மைகளின் தனித்தன்மை. பெரும்பாலும் சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள் அனைத்துக்கும் வெஜிடபிள் வண்ணம்தான். பெரிய உருவங்களுக்கு வாட்டர் கலர் பயன்படுத்துகிறார்கள். அரக்கை சூடுபடுத்தி வெஜிடபுள் வண்ணங்களைக் கலந்து இரண்டு மரக்கட்டைகளால் நன்கு தோய்த்து, குச்சிபோலச் செய்து வைத்துக்கொள்கிறார்கள். டை மெஷினில் பொம்மைகள் வார்த்து முடித்ததும் உப்பு காகிதம் வைத்துத் தேய்த்து, அதேவேகத்தில் வண்ணக்குச்சியை வைத்து பொம்மைக்கு வண்ணம் தீட்டுகிறார்கள். பிசிறுகள் குழந்தைகளுக்கு உறுத்தக் கூடாது என்பதற்காக, வண்ணம் தீட்டிய பகுதிகளைத் தாழை இலையால் துடைக்கிறார்கள். துளி தேங்காய் எண்ணெயை பொம்மையின் மேல் தடவி மென்மையாக்குகிறார்கள். பளபளப்பாக மாறிவிடுகிறது. இந்தப் பொம்மைகளுக்கு 12 வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நிறைந்த அன்புடன் நம் குழந்தைகளுக்காக... சென்னப்பட்டணம் பொம்மைகள்!

``சின்னக் குழந்தைங்க விளையாடுற பொம்மைகளுக்கு இதுக்குமேல எந்த வேலையும் இல்லை. ஆனா உருவ பொம்மைகள், வண்டிகள், வாகனங்களுக்கு வாட்டர் கலர் அடிச்சாத்தான் வடிவா இருக்கும். அதுக்குன்னே இங்கே 100-க்கும் மேல ஆர்டிஸ்ட்டுகள் இருக்காங்க. பொம்மைகளை செஞ்சு கொடுத்துட்டா, அவங்களே அழகா முகம், உடையெல்லாம் வரைஞ்சு தருவாங்க...'' என்கிற சிவலிங்கய்யா, 40 ஆண்டுகளாக பொம்மைகள் செய்கிறார். தவிர, இந்தியா முழுவதும் கண்காட்சிகள், நிகழ்ச்சிகளில் பொம்மை விற்பனையும் செய்கிறார்.

குண்டூசி வியாபாரத்தில்கூட சீனா தன் மூக்கை நுழைக்கும். இவ்வளவு பெரிய பொம்மை மார்க்கெட்டை விடுமா... சென்னப்பட்டணத்திலேயே போலி பொம்மைகள் இரண்டறக் கலந்திருக்கின்றன. சிறு பொம்மைக்கடைகள் முதல் பெரிய மொத்த வணிகக்கடைகள் வரைக்கும் எல்லா இடங்களிலும் கலப்பு. தரமற்ற வண்ணம், கார்ட்போர்டு அட்டைகளில் செய்யப்பட்ட சீன பொம்மைகள் அச்சு அசலாக சென்னப்பட்டணம் பொம்மைகள்போலவே இருக்கின்றன. பொம்மைகளில் வரையப்பட்டுள்ள கண்களைக் கூர்ந்து பார்த்தால் மட்டுமே அடையாளம் காண முடியும். சென்னப்பட்டணம் பொம்மைகளில் பெண்களின் கண்கள் தென்னகத்தின் சாயலில் இருக்கும். சீன பொம்மைகளின் கண்களில் சீனாவே தெரியும்.

``இந்தத் தொழிலுக்கு மிகப்பெரிய இடைஞ்சலே சீனாதான். அச்சு அசலா இங்கே செய்யற அதே ஸ்டைல்ல செய்யறாங்க. ஆனா இதுல பாதி தரம்கூட இருக்காது. பளபளப்புக்காக நிறைய கெமிக்கல் சேர்க்கிறாங்க. கடைக்காரங்களுக்கு அதுல லாபம் ஜாஸ்தி. நேர்மையான சில கடைக்காரங்க இது சீனான்னு சொல்லி விப்பாங்க. பல பேர் சொல்றதேயில்லை. எதைக் கேட்டாலும் இது இந்த ஊரு தயாரிப்புதான்னு சொல்லி ஏமாத்திருவாங்க...'' என்கிற ஜமீர் அகமது, மூலப்பொருள்களின் விலையேற்றமும் கொரோனாவும் தொழிலை பெரிய அளவில் பாதித்துவிட்டதாகச் சொல்கிறார்.

எல்லாத் தொழிலையும்போலவே இந்த பொம்மை தொழிலிலும் வியாபாரிகள்தான் கோலோச்சுகிறார்கள். உற்பத்தியாளர்களுக்கு கிடைப்பதென்னவோ ஒன்றுக்குப் பாதி கூலிதான். உதாரணத்துக்கு முஸ்மில், தான் தயாரிக்கும் நடைவண்டியை 280 ரூபாய்க்கு வியாபாரியிடம் விற்கிறார். நூறடி தள்ளியிருக்கும் பொம்மைக்கடையில் அதை 550 ரூபாய் என்கிறார்கள். இணையத்தில் 750 முதல் 1,100 ரூபாய் வரை விலை.

நிறைந்த அன்புடன் நம் குழந்தைகளுக்காக... சென்னப்பட்டணம் பொம்மைகள்!

`ஒரு டன் பாலைமரம் 4,500 ரூபாய். மூணு வருஷம் முன்னாடி கிலோ 950 வித்த அரக்கு இப்போ 1,650 ரூபா. ஆனா நாம தயாரிச்சு விக்குற பொருளுக்கு விலை ஏறவேயில்லை. வியாபாரிங்க சொல்றதுதான். நம்மகிட்ட வாங்கி நம்ம கண்ணு முன்னாடியே ரெண்டு, மூணு மடங்கு அதிக விலைவெச்சு விப்பாங்க. அவங்க தயவு வேணுங்கிறதுக்காக வெளியாட்களுக்கு விக்காம வியாபாரிங்க கேக்குற விலைக்கு விக்குறோம். மற்றபடி இது மரபுத் தொழில். தலைமுறை தலைமுறையா எங்க குடும்பம் செஞ்சது. நம்ம காலத்துல விட்டுறக் கூடாதுல்ல...'' என்கிறார் கரீம்.

சென்னப்பட்டணத்தில் ஓவியர்களுக்கு பெரிய மவுசு. தொழிற்சாலைகளில் தயாராகும் எல்லா பொம்மைகளும் ஓவியர்களைத் தேடித்தான் போகின்றன. மூத்த ஓவியர் முனவர் கான் வீடே வண்ணங்களால் நிறைந்திருக்கிறது. தரையெல்லாம் பெயின்ட் சிதறல்கள். வீட்டின் எல்லா அறைகளிலும் பாதியும் முழுமையுமாக பொம்மைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. குடும்பத்தோடு அமர்ந்து ராஜா, ராணி பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருக்கிறார் முனவர் கான்.

``எங்க தாத்தா காலத்துல இருந்து எங்க கைக்கு வந்த தொழில் இது. எங்க அப்பா இப்ராஹிம் கான் இந்தப் பகுதியில பெயரெடுத்த ஆர்ட்டிஸ்ட். சென்னப்பட்டணம் பொம்மைகளுக்குன்னு சில டிசைன்ஸ் இருக்கு. இப்போ கொஞ்சம் மாறிடுச்சு. புதுசு புதுசா டிசைன்ஸ் கொண்டு வர்றாங்க. எதுவா இருந்தாலும் அடிப்படை ஒண்ணுதான். பாலமரக் கட்டை, வெஜிடபுள் பெயின்ட்... இதையெல்லாம் இன்னும் யாரும் காப்பி அடிக்கலே. அரசாங்கம் நல்லவிதமா இந்தத் தொழிலை டெவலப் பண்ண ஆரம்பிச்சிருக்கு. அதனால அடுத்த தலைமுறை ஆர்வமா உள்ளே வருது...'' என்கிறார் முனவர் கான்.

கலை அன்பிலிருந்துதான் பிறக்கிறது என்பார்கள். சென்னப்பட்டணம் மக்கள் அன்பு குழைத்து, அக்கறையோடு முகமறியா குழந்தைகளுக்காக பொம்மைகளைச் செய்கிறார்கள். அந்த அன்பும் அக்கறையும்தான் உலகம் முழுக்க அவர்களுக்கு அடையாளம் தேடித் தந்திருக்கிறது.