
18 வயது நிறைவடையாத பெண்களுக்கும் 21 வயது நிறைவடையாத ஆண்களுக்கும் திருமணம் செய்வது குழந்தைத் திருமணச் சட்டப்படி குற்றம்.
கொரோனா நம் வாழ்க்கையில் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நினைக்கும்போதே துயரம் கவ்வுகிறது. குறிப்பாக அடுத்த தலைமுறையின் வாழ்க்கையில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிகளிலிருந்து விலகியிருக்கிறார்கள். பலர் குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியிருக்கிறார்கள். குழந்தைத் திருமணங்களும் இதனால் அதிகரித்துள்ளன. ஆசிரியர்களைக் கொண்டு அரசு நடத்திய கள ஆய்வில், 511 மாணவிகளுக்குத் திருமணம் முடிந்தது தெரியவந்திருக்கிறது. அவர்களில் +2 மாணவியர் இருவர்; +1 மாணவியர் 417 பேர்; 10ம் வகுப்பு மாணவியர் 45 பேர்; 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தவர்கள் 37 பேர்; 13 வயதே நிரம்பிய 8ம் வகுப்பு மாணவியர் 10 பேர்.
18 வயது நிறைவடையாத பெண்களுக்கும் 21 வயது நிறைவடையாத ஆண்களுக்கும் திருமணம் செய்வது குழந்தைத் திருமணச் சட்டப்படி குற்றம். தேசிய குடும்பநலக் கணக்கீட்டின்படி, இந்தியாவில் 18 வயதுக்குக் கீழுள்ள பெண்களில் 24% பேர் குழந்தைத் திருமணத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதேபோல 7% பதின்பருவப் பெண்கள் கருவுறும் அவலமும் நடக்கிறது. மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சராசரியாக 40 சதவிகிதத்துக்கு மேல் குழந்தைத் திருமணம் நடக்கிறது. தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகம் இந்த விஷயத்தில் 19-வது இடத்தில் இருக்கிறது.

‘‘கொரோனாவால் பலர் வேலை இழந்திருக்கிறார்கள். நிறைய பிள்ளைகள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள். பலர் பள்ளியிலிருந்து இடைநின்றிருக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால் கடந்த இரண்டாண்டுகளில் குழந்தைத் திருமணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன’’ என்கிறார்கள் களத்திலிருக்கும் ஆய்வாளர்கள். ‘‘511 குழந்தைத் திருமணங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் எண்ணிக்கை வெகு சொற்பம். உண்மையில் இது பலமடங்கு அதிகமாக இருக்கும்’’ என்கிறார்கள் அவர்கள்.
‘‘2021 ஜூன் மாதம், ஆசிரியர்களைக் கொண்டு அரசு ஓர் ஆய்வு நடத்தியது. படித்த பள்ளியோடு தொடர்பு அறுந்துபோன 4.5 லட்சம் மாணவர்கள் குறித்த தகவல்கள் அதில் சேகரிப்பட்டன. சுமார் 3 லட்சம் மாணவர்கள் ஒரு பள்ளியில் டிசி வாங்கி இன்னொரு பள்ளியில் சேர்ந்திருந்தார்கள். பள்ளி திறக்கப்பட்டபின் மீதமிருக்கும் 1.34 லட்சம் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். இவர்களில் 16,000 பேர் பற்றிய தகவல்களைக் கண்டறிய முடியவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைத் தொழிலாளர்களாகியிருக்கலாம் அல்லது திருமணமாகிச் சென்றிருக்கலாம்’’ என்கிறார் கல்வியாளர் ஜெயஸ்ரீ தாமோதரன்.
குழந்தைத் திருமணம் நடந்தால் மணமக்களின் பெற்றோர், திருமண மண்டபத்தில் நடந்தால் அதன் உரிமையாளர், கோயிலில் நடந்தால் கோயில் பூசாரி, திருமணத்துக்கு வந்தவர்கள் உட்பட அனைவரையும் கைது செய்யமுடியும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 21 வயது நிறைவடைந்த ஆண், 18 வயது பூர்த்தியாகாத பெண்ணைத் திருமணம் செய்தால் போக்ஸோ சட்டப்படியும் நடவடிக்கை பாயும்.
குழந்தைத் திருமணங்கள் குறித்துத் தகவல் தெரிந்தால் காவல் துறையிலோ, 1098 என்ற ஹெல்ப் லைன் எண்ணிலோ புகார் செய்யலாம். பல நேரங்களில் ஹெல்ப்லைன் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகப் புகார் உண்டு. தனிநபர் புகார் செய்தால் காவல்துறையினர் மோசமாக நடத்தி மன அழுத்தத்துக்கு உள்ளாக்கிவிடுகிறார்கள். இதுதவிர, சம்பந்தப்பட்டவர்களின் பகைவேறு. இதுபோன்ற காரணங்களால் குழந்தைத் திருமணம் நடப்பது தெரிந்தாலும் பொதுமக்கள் கண்டுகொள்வதில்லை.
‘‘தமிழகத்தைப் பொறுத்தவரை குழந்தைத் திருமணம், இரண்டாம் தலைமுறைப் பிரச்னையாக மாறியிருக்கிறது. வறுமையின் காரணமாகப் பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்வது முதல் தலைமுறைப் பிரச்னை. ஆனால் இப்போது வறுமையைத் தாண்டி தங்கள் பெண்கள் காதலிப்பார்களோ, சாதிமறுப்புத் திருமணம் செய்துவிடுவார்களோ என்ற பயத்திலேயே குழந்தைத் திருமணங்கள் செய்துவைத்து விடுகிறார்கள்.
தமிழகத்தில் இளவயது கர்ப்பம் அதிகரித்து வருவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பெண் குழந்தைகளுடனும் பெற்றோருடனும் தொடர்ந்து உரையாடுவதன் மூலம்தான் இத்தகைய பிரச்னைகளைச் சரி செய்யமுடியும். வகுப்பறையில் இதற்கான வெளியை அரசு உருவாக்கவேண்டும்...’’ என்கிறார் ஜெயஸ்ரீ.
குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைத் திருமணத் தடுப்புக்கென மாவட்ட அளவில் ஏராளமான அமைப்புகள் இருக்கின்றன. குழந்தைத் திருமண அதிகரிப்பென்பது, இவையெல்லாம் செயல் இழந்துகிடப்பதையே காட்டுகிறது. வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை போன்ற துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இருப்பதேயில்லை. தற்போது அந்த நிலை மாறியிருப்பது சற்று ஆறுதல்.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து அளவிலும் வட்டார அளவிலும் குழந்தைப் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பஞ்சாயத்துக் குழுவுக்கு ஊராட்சி மன்றத் தலைவரே தலைவர். கிராம நிர்வாக அலுவலர் செயலாளர். தலைமையாசிரியர், அங்கன்வாடிப் பணியாளர், கிராம சுகாதார செவிலியர், சுய உதவிக்குழுப் பெண்கள், தொண்டு நிறுவனத்தினர், காவல்துறைப் பிரதிநிதிகள் தவிர இரண்டு குழந்தைகளும் குழுவில் உறுப்பினர்களாக இருக்கவேண்டும்.
வட்டார அளவிலான குழுவுக்கு ஒன்றியத் தலைவர் தலைவராக இருப்பார். வட்டார வளர்ச்சி அலுவலர் செயலாளராகச் செயல்படுவார். 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி இந்தக்குழுக்கள் விவாதிக்கவேண்டும். இந்தக் குழுக்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்தாலே குழந்தைத் திருமணங்களை முழுமையாகத் தடுத்துவிடமுடியும். ஆனால் பெரும்பாலான பகுதிகளில் இவை வெறும் ஆவணங்களில் மட்டுமே செயல்படுகின்றன. நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இப்படி குழுக்கள் உருவாக்கப்படவேயில்லை.
‘‘குழந்தைத் திருமணங்களைத் தடுக்க சமூக நலத்துறை, ஸ்டேட் ஆக்ஷன் பிளான் ஒன்றைச் செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட ஆய்வில் சேலம், பெரம்பலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கோவை, தர்மபுரி, தேனி, விருதுநகர், வேலூர், ஈரோடு, திருச்சி, கரூர், திருவண்ணாமலை, மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடப்பது கண்டறியப்பட்டது. இந்தப்பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத் தப்பட்டுள்ளன.

சிறுமிகள் மட்டுமன்றி சிறுவர்களும் திருமணத்துக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். பெற்றோரை கொரோனாவுக்குப் பறிகொடுத்த பல சிறுவயதுப் பிள்ளைகளுக்குத் திருமணம் நடந்துள்ளது. 16 முதல் 18 வயதுக்குள்ளான பள்ளிப் பிள்ளைகள் விரும்பிச் சென்று திருமணம் செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகமானதை ஆய்வில் கண்டறிந்துள்ளோம். சில மாவட்டங்களில், குழந்தைத் திருமணங்களுக்கு அடிப்படையாக சாதி இருக்கிறது. வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் காதலிப்பது தெரிந்தால் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்று ஓடிப்போகிறார்கள். சிலநேரம், வேறு சமூகப் பையனைக் காதலித்துவிடுவாளோ என்ற அச்சத்தில் வயதுக்கு வந்ததும் பெற்றோரே அவசரமாகத் திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள். இந்த இரண்டு விஷயங்களையும் கையாளவே முடியவில்லை.
181 என்ற பெண்கள் உதவி எண்ணுக்கு குடும்ப வன்முறையென வரும் அழைப்புகள் பெரும்பாலும் 18 வயதுக்குமுன் திருமணம் செய்தவர்களுடையதாகவே இருக்கிறது. குழந்தைத் திருமணம் செய்தவர்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் வாய்ப்புகள் இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது’’ என்கிறார், மாநில கருவூல மையத்தின் குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் பூரணி.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையைக் குற்றமாகப் பார்க்கிறது சமூகம். குழந்தைத் திருமணமும் இதற்கிணையான குற்றம்தான். கிராமங்களில் மட்டுமல்ல... தலைநகருக்கு அருகில் இருக்கிற செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற குடியேற்றப்பகுதிகளிலும் குழந்தைத் திருமணம் சர்வசாதாரணமாக நடக்கிறது. சாதி, அரசியல் தலையீடு, அறியாமை, ஏழ்மை என இதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. அரசு தீவிரமாக கவனம் கொள்ளவேண்டிய தருணம் இது!
******

கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடப்பதாகச் செய்திகள் வந்த நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் எடுத்த முன்னெடுப்பு மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. ‘இளந்தளிர் இல்லம்' என்ற திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள 210 பள்ளிகளில் 9, 10, +1, +2 படிக்கும் 26,000 மாணவிகளின் வீடுகளுக்கும் குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் கோரிக்கைக் கடிதம், பெற்றோர் உறுதிமொழிப் படிவம், குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களுடன் மரக்கன்று ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டன. வீட்டில் ஸ்டிக்கரை ஒட்டி, மரக்கன்றை நட்டு செல்ஃபி எடுத்து ஒரு வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆட்சியர் பிரபுசங்கரும், தன் பெண் குழந்தையை மரக்கன்று நடவைத்து, செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிந்தார். இதுதவிர, கிராமம்தோறும் ‘கிராம விழிப்புணர்வுக் குழுக்கள்' அமைக்கப்பட்டன. இக்குழுவுக்கு பஞ்சாயத்துத் தலைவர்கள் தலைவர்களாகவும், வி.ஏ.ஓ-க்கள் செயலாளர்களாகவும் இருக்கிறார்கள். இதுகுறித்து வி.ஏ.ஓ-க்களுக்கு ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமையன்று பயிற்சி கொடுக்கப்படுகிறது. இந்தக் குழு, குழந்தைத் திருமணத் தடுப்பு, பாலியல் வன்கொடுமை, இடைநிற்றல் போன்றவற்றைக் கண்காணிக்கிறது.
‘‘இதுமட்டுமன்றி, கொரோனா காலத்தில் குறிப்பிட்ட 40 கிராமங்களில் அதிகமாகக் குழந்தைத் திருமணங்கள் நடப்பதாகத் தெரிய வந்தது. அதைத் தடுக்க, கோயில் பூசாரிகள், புரோகிதர்கள், அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்களை அழைத்து, ‘குழந்தைத் திருமணங்கள் நடக்கத் துணைபோனால் என்னென்ன சட்டங்களின்கீழ் வழக்குப்பதிவு செய்யமுடியும்’ என்று எச்சரித்தோம். அதோடு, திருமணம் செய்ய வி.ஏ.ஓக்களிடம், ‘பெண் 18 வயது நிரம்பியவர்' என்ற தடையில்லாச்சான்று வாங்கவேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவந்தோம். இதன் காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன’’ என்கிறார் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.