
தீ விபத்துச் சம்பவத்தால் தொடங்கிய போராட்டத்தின் செய்தி, சமூக வலைதளங்கள் மூலம் ஒட்டுமொத்த சீன மாகாணங்களுக்கும் பரவியது.
ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் பரவிய தீ, ஆயிரக்கணக்கான சீன மக்களை அரசுக்கு எதிராகப் போராட்டத் தீ ஏந்தவைத்திருக்கிறது. பல்வேறு மாகாணங்களில் மக்களை சாலைகளில் இறங்கியும், பல்கலைக்கழக மாணவர்களை வகுப்புகளைப் புறக்கணித்தும், தொடர் போராட்டத்தில் ஈடுபட வைத்திருக்கிறது. `ஜீரோ கோவிட்’ எனும் பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீன அரசு மேற்கொண்டுவரும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.
கொடுமையான ஊரடங்கு... பரவிய போராட்டம்!
நவம்பர் 29-ம் தேதி தரவுகள்படி, சீனாவில் 71,310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அதிபர் ஜி ஜின்பிங் தீவிரப்படுத்தியதால், மக்கள் வீடுகளைவிட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு பகுதி, கொரோனா கட்டுப்பாடுகளால் பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 24-ம் தேதி, உயரமான அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பிலிருக்கும் மக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு குடியிருப்பை விட்டு வெளியேறினர். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளால் பூட்டப்பட்டுக்கிடந்த குடியிருப்புப் பகுதியில், மக்கள் வெளியேற வழியில்லாமல் அங்கேயே சிக்கிக் கொண்டனர். அவர்களில் 10 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், `இந்தக் கோரச் சம்பவத்துக்குக் காரணம், ஆளும் அரசின் கொடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுதான்’ எனக் குற்றம்சாட்டி போராட்டத்தில் குதித்தனர்.

தீ விபத்துச் சம்பவத்தால் தொடங்கிய போராட்டத்தின் செய்தி, சமூக வலைதளங்கள் மூலம் ஒட்டுமொத்த சீன மாகாணங்களுக்கும் பரவியது. ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கும், அதிபர் ஜி ஜின்பிங் அரசுக்கும் எதிராக, பீஜிங், நான்ஜிங், ஷாங்காய், வூஹான், ஜின்ஜியாங் உள்ளிட்ட பல மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். அவர்களுடன் அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் கைகோத்தனர்.
ஓங்கிய கோஷம்... ஒடுக்கிய சீன காவல்துறை!
`கொரோனா ஊரடங்கைத் திரும்பப் பெற வேண்டும்! அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும்! கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி கீழிறங்க வேண்டும்!’ என்ற கோஷங்கள் ஒவ்வொரு வீதியிலும் ஒலித்தன. போராட் டங்கள் மிக அரிதாக நிகழும் சீன தேசத்தில், மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டம் வெடித்ததை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்க்கவில்லை. `தீ விபத்துச் சம்பவத்துக்கும், கொரோனா கட்டுப்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ எனக் கூறி போராட்டத்தை ஒடுக்கும் வேலைகளில் சீன அரசு இறங்கியது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது தடியடி நடத்தியும், சிறையில் அடைத்தும் கடுமையாக நடந்துகொண்டது சீனக் காவல்துறை. போலீஸ் அடக்குமுறையைக் கையாண்டும், போராட்டம் ஓயவில்லை.

சீனாவின் முக்கிய நகரங்களின் வீதிகளில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். மக்கள் கூடுவதைத் தடுத்து, தடியடி நடத்திக் கலைத்துவருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக, மாணவர்களைக் கட்டாயமாக வீடுகளுக்கு அனுப்பிவருகிறது சீன அரசு. இது தவிர, நாடு முழுவதும் போராட்டம் பரவியதற்குச் சமூக ஊடகங்கள் மூலம் வீடியோக்கள், செய்திகள் பகிரப்படுவதுதான் முக்கியக் காரணம் என்பதால், அவற்றைத் தடுக்க `இணையதள சென்சார்கள்’ மூலம் போராட்டம் தொடர்பான தகவல்களை சீன அரசு அழித்துவருகிறது. சமூக ஊடகங்கள் மட்டுமல்லாமல், சீனாவில் தடை செய்யப்பட்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டேட்டிங் ஆப்கள் மூலமும் சீன மக்கள் போராட்டம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துவருவதால், சீன காவல்துறை போராட்டக்காரர்களின் செல்போன்களையும் பரிசோதனை செய்து, தகவல்களை அழிக்க ஆரம்பித்திருக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஜி ஜின்பிங் மீண்டும் பதவியேற்ற சில நாள்களிலேயே இந்த மக்கள் போராட்டம் வெடித்திருப்பதால், அவரது தலைமையைக் கேள்விக்குள்ளாக்கும் பல சந்தேகங்கள் முளைத்திருக்கின்றன. “இந்தப் போராட்டத்தில் வெளிநாட்டுச் சதி ஒளிந்திருக்கிறது” என சீன அரசுக்கு ஆதரவான கருத்துகளும் சமூக வலைதளங்களில் பேசப்படாமல் இல்லை. ஆனாலும், தனது சொந்த நாட்டு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தை, இரும்புக்கரம் கொண்டு சீன அரசு ஒடுக்க முற்படுவதைத்தான் யாராலும் ஏற்க முடியவில்லை. போராட்டத்தில் சதி ஒளிந்திருக்கிறதோ, இல்லையோ... மக்களின் உரிமைக்குரல் ஒடுக்கப்படும்போது, அது தீவிரமடையத்தான் செய்யும். இனியாவது சீன அரசு விழித்துக்கொண்டு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லையென்றால், ஆபத்து அவர்களுக்குத்தான்.