அலசல்
Published:Updated:

தூய்மையற்ற தொழில் என தமிழக அரசே இழிவாகச் சொல்லலாமா?

தூய்மைப் பணியாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தூய்மைப் பணியாளர்கள்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனப் போராடியதால், திட்டத்தை 6 ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறார்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாகத் தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்பட்டுவருகிறது.

இதற்காக, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணையதளம் மற்றும் விளக்கக் காணொலியில் தூய்மைப் பணியாளர்கள் என்ற பிரிவை, தூய்மையற்ற தொழில்(Unclean occupation) எனக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

தூய்மையற்ற தொழில் என தமிழக அரசே இழிவாகச் சொல்லலாமா?

“இது மத்திய அரசின் திட்டம் என்பதால் அவர்களின் குறிப்பை அப்படியே பயன்படுத்தியிருக்கிறோம்” என்று அதிகாரிகள் தரப்பு கூறுகிறது. ஆனால், “திட்டம் மத்திய அரசினுடையதாக இருப்பினும், கல்வி பெறும் குழந்தைகளை இழிவான அடையாளப்படுத்துவதில் மாநில அரசுக்கு உடன்பாடு இருக்கிறதா” என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதுதொடர்பாகப் பேசிய வி.சி.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், “கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனப் போராடியதால், திட்டத்தை 6 ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறார்கள். பல போராட்டங்களைக் கடந்து கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்திற்கான இணையதளத்திலும், விளக்கக் காணொலியிலும் தூய்மைப் பணிகள் ‘சுகாதாரமற்ற தொழில்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது சாதிய மனநிலையின் வெளிப்பாடுதான். கடந்த காலங்களில் ஊனமுற்றவர் மறுவாழ்வுத்துறை என்றிருந்ததை ‘மாற்றுத்திறனாளிகள் நலத் துறை’ என மாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இலவசத் திட்டங்களை ‘விலையில்லா திட்டங்கள்’ என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாற்றியமைத்தார். எனவே, மத்திய அரசு பயன்படுத்தும் சொற்களைத் தமிழ்நாடு அரசு மாற்றியமைக்கலாம். இதற்குத் தனிக் கோரிக்கை வைக்க வேண்டிய தேவையில்லை. இது நுண்ணறிவு தொடர்புடையது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உறைக்க வேண்டியது” என்றார்.

தூய்மையற்ற தொழில் என தமிழக அரசே இழிவாகச் சொல்லலாமா?

இதுதொடர்பாக பா.ஜ.க-வைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் வெங்கடேசன் பேசும்போது, “சுத்தம் செய்யும் தொழில்கள், கழிவுகளை அகற்றுவது, தோல் பதனிடுதல், குப்பை அள்ளுவது, கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்வது எனும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை ‘தூய்மைப் பணிகள்’ எனக் குறிப்பிட்டால், தோல் பதனிடுவோர் அந்த வகையில் இடம் பெற மாட்டார்கள். மத்திய அரசு இதனை இந்தியில் ‘சஃபாய் கரம்சாரி’ எனக் குறிப்பிடுகிறது. அதற்கு ‘க்ளீனர்ஸ்’ என்பதே பொருள். தமிழ்நாடு அரசு இந்தியைப் பொருட்படுத்துவதில்லை. ஆங்கிலத்தில், Unclean என்றிருப்பதை அப்படியே மொழிபெயர்த்திருப்பது பலரின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக இருக்கிறது. கண்ணியமான வார்த்தையை அரசு பயன்படுத்தவேண்டும்” என்றார்.

ரவிக்குமார், வெங்கடேசன், ஆனந்த்
ரவிக்குமார், வெங்கடேசன், ஆனந்த்

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் ஆனந்த், “மத்திய அரசு பயன்படுத்தும் சொற்களே பயன்படுத்தப்பட்டது. இதுபற்றி எங்கள் கவனத்துக்கு வந்ததும் அதை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ‘சுகாதாரமற்ற தொழில்’ என்பதற்குப் பதிலாக ‘அபாயகரமான தொழில்’ எனக் குறிப்பிடப்படும்” என்றார்.

கல்விக் கதவைத் திறந்து வைக்கும்போது, அவர்களை அடையாளப்படுத்துவதிலும் அக்கறை வேண்டாமா!