அரசியல்
அலசல்
Published:Updated:

அடாவடி வசூலில் தி.மு.க-வினர்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

இப்படி அடாவடியில் ஈடுபடுகிறவர்கள், தலைமையால் சரியாக கண்டிக்கவும்படுவதில்லை, தண்டிக்கவும்படுவதில்லை. தொழில்நுட்பச் சாத்தியங்களால் தற்போது அம்பலப்பட்டு நிற்பவர்களெல்லாம் சின்னச் சின்ன அயிரைக் குஞ்சுகள்தான்.

செய்தி ஊடகங்களை, சமூக ஊடகங்களைத் திறந்தால், தி.மு.க நிர்வாகிகளின் சர்ச்சை வீடியோக்களும், ஆடியோக்களும்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. கடலூர் மாவட்டம், மேல்கவரப்பட்டு தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் குமரகுரு மது பாட்டில்களைக் கையில் ஏந்தி, தனது காரில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு ஆரத்தி எடுக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. அதில், ‘ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போறாரு’ என்ற பேக்கிரவுண்ட் பாட்டுச் சத்தம் ஹைலைட்டாக ஒலித்தது. ஒருபக்கம் இப்படி ஃபன்னியான நிர்வாகிகள், கட்சி மானத்தைக் காற்றில் பறக்கவிடுகிறார்கள். அதிகார மமதையில் சிலர் மரியாதை இல்லாமல் பேசி சர்ச்சையில் சிக்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில், வசூல்வேட்டையில் ஈடுபட்டு பேரம் பேசுகிற, மிரட்டுகிற, ‘பலே’ நிர்வாகிகள் ஒருபக்கம் அடாவடி செய்கிறார்கள். அவர்களின் சூடான வீடியோக்கள் அடுத்தடுத்து வரிசைகட்டுகின்றன. அப்படியான உருட்டல் மிரட்டல் ஆடியோ, வீடியோ அட்ராசிட்டிகள் சில இங்கே...

அடாவடி வசூலில் தி.மு.க-வினர்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?

``40 உங்களுக்கு 60 எங்களுக்கு!’’

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன்படி திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்திலுள்ள ஒன்பது ஊராட்சிகளுக்கான டெண்டரில் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் பஞ்சாயத்து பேசப்போன ஆம்பூர் தி.மு.க

எம்.எல்.ஏ வில்வநாதன், “பேரமெல்லாம் பேச வேணாம்... உங்களுக்குப் பிரச்னை வந்தால் நான்தான் வந்து உட்காருவேன். திருப்பத்தூர் எம்.எ.ல்.ஏ வந்து உட்காருவானா... அந்தாளு என்ன செய்கிறார் என உங்களுக்குத் தெரியாது. 40 சதவிகிதம் உங்களுக்கு, 60 சதவிகிதம் எங்களுக்கு என முடித்துக்கொள்வோம்” என்று பேசியிருந்தார். இந்த வீடியோ மூலம் வில்வநாதன் மாட்டியது மட்டுமல்லாமல், திருப்பத்தூர் தி.மு.க எம்.எல்.ஏ நல்லதம்பியையும் வம்புக்கு இழுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக வலம்வருகிறது.

அடாவடி வசூலில் தி.மு.க-வினர்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?
அடாவடி வசூலில் தி.மு.க-வினர்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?

“என்னை மீறி ஒண்ணும் நடக்காது!”

கோவையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பேக்கரிகளிலிருந்து வரும் மாமூல் தொகை எந்தெந்த தி.மு.க நிர்வாகிகளுக்கெல்லாம் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று இமயநாதன், சிதம்பரம் ஆகிய இரண்டு நிர்வாகிகள் தொலைபேசியில் பேசும் ஆடியோ சமீபத்தில் லீக்கானது. இந்த ஆடியோ ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனக் கோவை மாவட்டத்தையே ஒரு கலக்கு கலக்கியது. தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே பாரம்பர்யமிக்க மனோரா கோட்டை இருக்கிறது. இதைப் புரனமைக்கும் பணியைச் சுற்றுலாத்துறை மேற்கொண்டுவருகிறது. ‘இதில் தனக்கு கமிஷன் வரவில்லை’ என்று அந்த ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் முகமது அலி ஜின்னா, ஒப்பந்ததாரரிடம் கொந்தளித்திருக்கிறார். ‘என்னை மீறி ஒண்ணும் நடக்காது, எவன் வந்து சொன்னாலும் கேட்க மாட்டேன்’ என்று அவர் வீரவசனம் பேசும் வீடியோ ‘ஆக்‌ஷன்’ பட்டாசு.

அடாவடி வசூலில் தி.மு.க-வினர்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?

“கை காலை உடைச்சுடுவேன்..!”

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் பிரமாண்டத் திருமண மண்டபம் கட்டிவருகிறார். ‘அதன் கட்டுமானப் பணிக்கு, சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளப்படுவதாக’ பால்வண்ணன் என்ற வழக்கறிஞர் மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்திருந்தார். ‘இது குறித்துப் புகார் அளிக்கக் கூடாது’ என்று எம்.எல்.ஏ தங்கபாண்டியன் தரப்பு வழக்கறிஞர் பால்வண்ணனிடம் சமாதானம் பேசும் ஆடியோவும் வெளியாகியிருக்கிறது. கோவை மாநகராட்சியின் 61-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ஆதிமகேஷ்வரியின் கணவர் திராவிடமணி. இவர் சுகாதார ஆய்வாளரின் இருக்கையில் அமர்ந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வுசெய்வதும், பணியாளர்களை மிரட்டும் தொனியில் பேசுவதுமாக வெளியான வீடியோ தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கிறது. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகேயிருக்கும் தனியார் நிறுவனத்துக்கும், நில உரிமையாளர் பூஜா கோயலுக்கும் தகராறு ஏற்பட, நில உரிமையாளருக்கு ஆதரவாக தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா பஞ்சாயத்து பேசச் சென்றிருக்கிறார். அப்போது, ‘கை காலை உடைச்சுடுவேன்... கம்பெனியை ஒரே நாள்ல இழுத்து மூடிடுவேன்...’ என்று எம்.எல்.ஏ ராஜா மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவ, வழக்கு பதிவுவரை சென்றிருக்கிறது விவகாரம்.

அடாவடி வசூலில் தி.மு.க-வினர்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?

இப்படித் தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்டுவரும் தி.மு.க-வினர் குறித்த பட்டியலோடு, ‘அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?’ என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம். “நீங்கள் குறிப்பிட்ட எல்லாவற்றையும் தலைவரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வளவுதான்... இதில் வேறெதுவும் கூறுவதற்கு இல்லை” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

“இப்படி அடாவடியில் ஈடுபடுகிறவர்கள், தலைமையால் சரியாக கண்டிக்கவும்படுவதில்லை, தண்டிக்கவும்படுவதில்லை. தொழில்நுட்பச் சாத்தியங்களால் தற்போது அம்பலப்பட்டு நிற்பவர்களெல்லாம் சின்னச் சின்ன அயிரைக் குஞ்சுகள்தான். பெரிய பெரிய முதலைகளெல்லாம் இன்னும் சிக்காமல் வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஒருநாள் நிச்சயம் சிக்குவார்கள்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!