
‘10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒன்றியப் பொறுப்பில் இருப்பவர்களையே மீண்டும் நியமிக்கிறார்கள். சில மாவட்டங்களில் பெரிய புகார்கள் இல்லாதவர்களையும்கூட மாற்றிவிட்டார்கள்.
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வில் தலைமைப் பொறுப்பை முன்வைத்து உட்கட்சிப் போர் வெடித்திருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் நடத்துவதில் பல பஞ்சாயத்துகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மீதான புகார்களை அள்ளிக்கொண்டு, பேருந்துகளிலும் கார்களிலும் உடன்பிறப்புகள் சாரை சாரையாக அறிவாலயத்தில் வந்து குவிந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் பஞ்சாயத்துகளைத் தீர்ப்பதற்காக, கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவும் இந்தப் புகார்களைத் தீர்த்துவைக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். சிலர் நியாயம் கேட்டு கட்சித் தலைமையைத் தாண்டி நீதிமன்றத்தை நாட, திக்கித் திணறுகிறது தி.மு.க தலைமை!

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்து, அதன் அறிக்கையைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி. எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வில் தலைமைக்கிடையே பிரச்னைகள் இருந்தும், பெரிய சண்டை, சச்சரவுகளின்றி உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்தனர். அதிலும், ஒன்றியச் செயலாளர்களுக்கான தேர்தல் இரண்டே நாள்தான் நடந்தது. ‘புதிதாக யாரையும் நியமிக்க வேண்டாம்... இருப்பவர்களே தொடரட்டும்’ என்று அந்தக் கட்சியில் முடிவெடுக்கப்பட்டு, சுலபமாகத் தேர்தலை முடித்துவிட்டனர். தி.மு.க-விலும், ‘தற்போது ஒன்றியப் பொறுப்புகளில் இருப்பவர்களே தொடரட்டும்... பெரிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை மட்டும் மாற்றினால் போதும்... பெட்டிவைத்து எங்குமே தேர்தல் நடத்த வேண்டாம். நியமனம் மட்டுமே போதும்’ என்று ஏறக்குறைய அதே அ.தி.மு.க ஃபார்முலாவைத்தான் பின்பற்றச் சொல்லியிருந்தது தி.மு.க தலைமை. ஆனால், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என ஒவ்வொருவரும் தலைமையின் இந்த உத்தரவைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு செயல்படவே, தமிழ்நாடு முழுவதும் பற்றிக்கொண்டது தீ.
‘10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒன்றியப் பொறுப்பில் இருப்பவர்களையே மீண்டும் நியமிக்கிறார்கள். சில மாவட்டங்களில் பெரிய புகார்கள் இல்லாதவர்களையும்கூட மாற்றிவிட்டார்கள். சில பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கும், சமீபத்தில் கட்சிக்கு வந்தவர்களுக்கும் வாய்ப்பளித்திருக்கிறார்கள்’ என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான புகார்கள் வரிசைகட்டுகின்றன. தி.மு.க-வில் நிகழும் இந்தப் பல்முனை அதிகார யுத்தத்தில், பாதிக்கப்பட்ட உடன்பிறப்புகள் புகார் மனுக்களை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு, அறிவாலயத்தை நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என உடன்பிறப்புகளிடமே விசாரித்தோம்...
தங்கமணி ஆதரவாளருக்குப் பொறுப்பு... பொங்கும் உடன்பிறப்பு!
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக இருக்கும் ராஜ்ய சபா எம்.பி-யான ராஜேஸ்குமார், நிர்வாகிகளைச் சரிக்கட்டி, அனைத்து ஒன்றியங்களிலும் தனது ஆதரவாளர்களைப் பொறுப்புகளில் நியமித்து வருகிறார். இதற்கு எதிராக ‘மோகனூர் கிழக்கு ஒன்றியப் பதவிக்கு, தன்னை நியமிக்க வேண்டும்’ என முன்னாள் ஒன்றியச் செயலாளரும், நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கத்தின் ஆதரவாளருமான வழக்கறிஞர் கைலாசம், மாவட்ட அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கட்சித் தலைமைக்கும் இது குறித்து புகார் அனுப்பினார். அவர் நம்மிடம் பேசும்போது, “மோகனூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராகப் போட்டியிடும் நவலடி, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் தங்கமணியோடு தொடர்பில் இருப்பவர். ஆனால், அவரையே மறுபடியும் ஒன்றியச் செயலாளராக்கப் பார்க்கிறார்கள். 256 உறுப்பினர்களின் ஆதரவு எனக்குத்தான் இருக்கிறது. நான் 15-ம் தேதியே நாமினேஷன் பண்ணிவிட்டேன். ஆனால், என்னைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக என்னை நிராகரித்துவிட்டார் ராஜேஸ். தேர்தல் ஆணையாளரிடம் புகாரளித்தும் பிரயோஜனம் இல்லாததால், விசாரணைக்குழுவிடம் புகாரளித்திருக்கிறேன்’’ எனக் கண்ணீர் வடிக்கிறார் கைலாசம்.

தீக்குளிக்க முயன்ற நிர்வாகி... ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்!
நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனுக்கும் தற்போதைய சபாநாயகர் அப்பாவுவுக்கும் இடையில் அதிகாரப் போட்டி அனல்பறப்பதாகச் சொல்கிறார்கள். பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு அப்பாவுவுக்கு நெருக்கமான சிவந்திப்பட்டி தங்கப்பாண்டியனின் ஆதரவாளர் ராஜவல்லிபுரம் காளியும், ஆவுடையப்பன் ஆதரவாளர் வேலன்குளம் கண்ணனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், காளியின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, வேலன்குளம் கண்ணனை ஒன்றியச் செயலாளராக அறிவிக்க ஆவுடையப்பன் திட்டமிட்டதால், மாவட்டச் செயலாளர் அலுவலகத்துக்குச் சென்ற காளி, உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, காளி பேசும்போது, ``நான் கடந்த நாற்பது வருடங்களாகக் கட்சியில் இருக்கிறேன். கட்சி சார்பாக நடந்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்திருக்கிறேன். எனக்கு ஒன்றியத்திலுள்ள 68 ஓட்டுகளில் 45 பேரின் ஆதரவு இருக்கிறது. ஆனாலும், எனது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, எதிர்த்து போட்டியிடுபவரை ஒன்றியச் செயலாளராக அறிவித்துள்ளனர். அதைக் கண்டித்தே தீக்குளிக்க முயன்றேன்” என நா தழுதழுத்தார் காளி.
தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களிலுள்ள ஒன்றியங்களில், மாவட்டச் செயலாளர்கள் சிவபத்மநாபன், செல்லத்துரையின் ஆதரவாளர்களே பதவியைப் பிடித்துள்ளனர். தென்காசி தெற்கு மாவட்டத்தில், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடந்தது. இதில், ‘கட்சி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, தேர்தலை மீண்டும் முறைப்படி நடத்த வேண்டும்’ என கல்லூத்து முருகன் என்பவர் ஆலங்குளம் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் பதிலளிக்க, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஓரங்கட்டப்பட்ட முபாரக்... விசுவாசத்துக்குப் பரிசளித்த அமைச்சர்!
நீலகிரி மாவட்ட தி.மு.க-வில் மூன்று ஒன்றியச் செயலாளர்களை அதிரடியாக மாற்றியிருப்பது, மாவட்டத்துக்குள் மிகப்பெரிய பிரளயத்தை உண்டாக்கியிருக்கிறது. கீழ்கோத்தகிரி ஒன்றியச் செயலாளராக இருந்த மாவட்டச் செயலாளர் முபாரக்கின் ஆதரவாளர் ராஜேந்திரனை காரணமின்றி தூக்கிவிட்டு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தனது தீவிர விசுவாசியான பீமன் என்பவரை அந்தப் பதவியில் நியமித்துவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. “2016 சட்டமன்றத் தேர்தலில், ராமச்சந்திரனுக்கு சீட் கொடுக்கப்படாததைக் கண்டித்து பீமன் போராட்டம் நடத்தியதோடு, சமாதானம் பேச வந்த ஆ.ராசாவை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார். அதனால், பீமனின் ஒன்றியச் செயலாளர் பதவியைத் தலைமை பறித்தது. அந்த விசுவாசத்தை மறக்காத அமைச்சர், நன்றிக்கடனாக பீமனுக்கு அதே ஒன்றியச் செயலாளர் பதவியைத் தற்போது மீண்டும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதேபோல், மேலூர் ஒன்றியத்துக்கும், ஊட்டி வடக்கு ஒன்றியத்துக்கும் அமைச்சர் தனது ஆதரவாளர்களையே நியமித்திருக்கிறார். இது முழுக்க முழுக்க மாவட்டச் செயலாளர் முபாரக்கை ஓரங்கட்டும் செயல்” என்கிறார்கள் முபாரக் தரப்பினர்.

ஸ்வீட் பாக்ஸ் பெற்ற அமைச்சர்... கடத்தப்பட்ட கிளை நிர்வாகிகள்!
தூத்துக்குடி மாவட்டத்தில், வடக்கு மாவட்டப் பொறுப்பாளரான அமைச்சர் கீதா ஜீவன், சுமுகப் பேச்சுவார்த்தையிலேயே தனது பகுதியில் எந்தப் பிரச்னையுமின்றி ஒன்றியத் தேர்தலை முடித்துவிட்டார். ஆனால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வசமிருக்கும் தெற்கு மாவட்டத்தில்தான் பிரச்னை வெடித்திருக்கிறது. தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட 15 ஒன்றியங்களில், 13-ல் அமைச்சரின் ஆதரவாளர்களே ஒன்றியச் செயலாளர்களாகத் தேர்வாகிவிட்டனர். தேர்தல் நடக்காத தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்துக்கு மாப்பிளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணக்குமாரை அனிதா களமிறக்க, கட்சியின் சீனியர்கள், முன்னாள் கிளைச் செயலாளரான அம்புரோஸை போட்டி வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். அதேபோல, மேற்கு ஒன்றியத்துக்கு புதூர் சுப்பிரமணியனை அனிதா பரிந்துரைக்க, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான சித்திரைச்செல்வன் போட்டி வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருக்கிறார். “இரண்டு ஒன்றியங்களிலும் எதிர்த் தரப்பினருக்கே ஆதரவு அதிகமிருப்பதால், பெற்ற ஸ்வீட் பாக்ஸ்களைத் திருப்பிக்கொடுக்கும் நிலையிலிருக்கிறார் அனிதா” என்கிறார்கள் எதிர்த் தரப்பினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் எம்.பி பழநிமாணிக்கம், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் எனத் தனித்தனியே கோஷ்டிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். ஒன்றியச் செயலாளருக்குப் போட்டியிடுபவர்கள், தங்கள் மெஜாரிட்டியைக் காட்டுவதற்காகக் கிளைச் செயலாளர்கள், கிளைப் பிரதிநிதிகளைக் கடத்திச்சென்ற கொடுமையும் நடந்திருப்பதாகப் புலம்புகிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.
சிவசேனாபதி vs சாமிநாதன்... டி.ஆர்.பி.ராஜா Vs பூண்டி கலைவாணன் - உச்சத்தில் அதிகாரப் போட்டி!
திருப்பூர் மாவட்டத்தில், தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கும், அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி உச்சத்தை அடைந்திருக்கிறது. காங்கேயம் வடக்கு ஒன்றியத்தில், கார்த்திகேய சிவசேனாபதியின் ஆதரவாளரும், தெற்கு ஒன்றியத்தில் அமைச்சர் சாமிநாதன் ஆதரவாளரும் ஒன்றியச் செயலாளர்களாக இருந்தனர். தற்போது உட்கட்சித் தேர்தலில், தெற்கு ஒன்றியத்தில் இருவருக்கும் சம்பந்தம் இல்லாத ஒருவரை ஒன்றியச் செயலாளராக நியமித்துவிட்டது தலைமை. இதையடுத்து வடக்கு ஒன்றியத்தில் தனக்கு வேண்டப்பட்ட ஒருவரை ஒன்றியச் செயலாளராக நியமிக்க சாமிநாதன் காய்நகர்த்தி வருகிறார். கடுப்பான சேனாபதி ஆதரவாளர்கள், ஐந்து பேருந்துகளில் அறிவாலயத்துக்குப் படையெடுத்து அமைச்சர் சாமிநாதன் மீது புகார் அளித்திருக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில், மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனுக்கும், எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜாவுக்கும் இடையே பிரச்னை மூண்டிருக்கிறது. தேர்தல் நடத்த வேண்டாம் என்கிற கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பெட்டி வைத்து தேர்தல் நடந்திருக்கிறது. நீடாமங்கலம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் பதவிக்கு பூண்டி கலைவாணனின் ஆதரவாளர் அண்ணாதுரையும், டி.ஆர்.பி.ராஜாவின் ஆதரவாளர் ஆனந்த்தும் போட்டியிட்டனர். தேர்தலில் அண்ணாதுரை அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால், ``அரசு ஊழியரை மிரட்டியதாக அண்ணாதுரை தி.மு.க-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர். அதனால்தான், ஒன்றியச் செயலாளர் பதவியும் அப்போது பறிக்கப்பட்டது. கட்சித் தலைமையால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், கட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடக் கூடாது என்றிருக்கும் விதிமுறையை மீறி, அண்ணாதுரை போட்டியிட்டிருக்கிறார்’’ எனப் புகார் வாசிக்கிறார் ஆனந்த். இது குறித்து எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா விசாரணைக் குழுவிடம் புகாரளித்திருக்கிறார்.
இதுதவிர, புதுக்கோட்டை மாவட்டத்தில், அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, எம்.பி அப்துல்லா, எம்.எல்.ஏ முத்துராஜா, மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் என அனைவரும் தனித்தனி கோஷ்டிகளாகச் செயல்பட்டுவருவது உட்கட்சித் தேர்தலிலும் எதிரொலிக்கிறது. அதேபோல, விழுப்புரம் வடக்கு மாவட்டத்துக்கு தலைமைக் கழகத் தேர்தல் பிரதிநிதியான சுகவனம் விருப்பமனுக்களை வழங்குவதற்கு முன்பாகவே, அமைச்சர் செஞ்சி மஸ்தான் விருப்பமனு வழங்கியது சர்ச்சைக்குள்ளானது. அதேபோல, மயிலம் வடக்கு ஒன்றியத்துக்கு பா.ம.க-விலிருந்து வந்த மணிமாறனையும், தெற்கு ஒன்றியத்துக்குப் பலத்த போட்டிக்கிடையே முன்னாள் எம்.எல்.ஏ சேதுநாதனையும், மத்திய ஒன்றியத்துக்குச் செழியனையும் ஒன்றியச் செயலாளர்களாக அறிவித்துவிட்டார் மஸ்தான். கன்னியாகுமரியில் முன்னாள் மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜன் தனி கோஷ்டியாகவும், அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயரும் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான மகேஷ் இருவரும் தனி கோஷ்டியாகவும் செயல்படுகிறார்கள். குறுந்தங்கோடு கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருந்த பேரூராட்சித் தலைவர் குட்டிராஜனை எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லாமலேயே நீக்கிவிட்டு, சுரேந்திரகுமார் என்பவரை அமைச்சர் தரப்பு நியமித்திருக்கிறது. குமரியில் மொத்தமுள்ள ஒன்பது ஒன்றியங்களிலும் சுரேஷ் ராஜன் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஒன்றியங்களையும் கைப்பற்ற, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்துக்கும் இடையே மல்லுக்கட்டு நடக்கிறது. ராஜகண்ணப்பனுக்கு எதிரானவர்களை மாவட்டப் பொறுப்பாளர் தரப்பும், காதர்பாட்ஷாவுக்கு எதிரானவர்களை அமைச்சர் தரப்பும் தங்கள் பக்கம் இழுக்க முயன்றுவருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில், செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் தவிர மற்ற 17 ஒன்றியங்களிலும் கடும் போட்டி நிலவுகிறது. மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் தனது ஆதரவாளர்களுக்குப் பதவி கொடுக்க, சிலரை ஓரங்கட்ட நினைப்பதால் பிரச்னை வெடித்திருக்கிறது. இப்படி தமிழ்நாடு முழுக்க திமுக-வில் நியமனப் பிரச்னை அனலடிக்கிறது.

இந்தப் பஞ்சாயத்துகள் குறித்து தி.மு.க தலைமையால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். “15-வது முறையாக உட்கட்சித் தேர்தலை நடத்துகிறோம். இந்தப் பிரச்னைகள் ஒன்றும் புதிதல்ல, எல்லாக் கட்சிகளிலும் நடப்பதுதான். நியமனங்கள் என்றபோதும் வேட்புமனுக்களைப் பெற்று, பேச்சுவார்த்தை மூலம் காம்ப்ரமைஸ் செய்துகொள்கிறார்கள். ஆளுங்கட்சியாக ஆன பிறகு தேர்தல் நடந்தால் பிரச்னைகள் வருமென்பதால் கூடுமானவரை தேர்தலைத் தவிர்க்கிறோம். ஆனால், தேர்தல் அவசியம் என்றால் நடத்தச் சொல்லியிருக்கிறோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் பாதிக்கப்பட்டவர்கள் தலைமையிடம் புகாரளிக்கிறார்கள், நாங்கள் விசாரித்துச் சமாதானப்படுத்தி அனுப்புகிறோம். எங்களால் முடியாதபட்சத்தில் தேர்தலைத் தள்ளிவைக்கிறோம்” என்றார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, கடைசியாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை வெற்றிவாகை சூடிய தி.மு.க தலைமை, தன் கட்சியின் அமைப்புத் தேர்தலை நடத்த முடியாமல் திணறுவது தெளிவாகத் தெரிகிறது. தேர்தலை நடத்தினால், எங்கே சண்டை, சச்சரவுகள் வந்து ஆளுங்கட்சியின் பெயர் கெட்டுவிடுமோ என நியமன முறையைத் தீர்வாகக் கையிலெடுத்தது தி.மு.க தலைமை. ஆனால், எதிர்பார்க்காத அளவுக்கு மாவட்டம்தோறும் புதுப்புது பஞ்சாயத்துகள் வெடித்துக்கொண்டேயிருக்கின்றன. அதிருப்தி நிர்வாகிகளின் கூட்டத்தால் திணறுகிறது அறிவாலயம். நிர்வாகிகளின் பதவி எதிர்பார்ப்புகளைத் தாண்டி, மாவட்டங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட மா.செ-க்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், மாநில நிர்வாகிகள் போடும் அதிகார குஸ்தியை எப்படிச் சமாளிக்கப்போகிறார் ஸ்டாலின்?