சினிமா
Published:Updated:

தமிழர் தொன்மை உணர்த்தும் தங்கக் காதணி!

அகழ்வாய்வுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அகழ்வாய்வுகள்

சிவகளையில் தற்போது 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடக்கின்றன. 5 கி.மீ பரப்பளவில் அகழ்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 78 குழிகளில் 123 முதுமக்கள் தாழிகள், 411 படையல் கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வாய்வுகள் வரலாற்றில் புதிய புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சியபடி இருக்கின்றன. வரலாறு வடக்கிலிருந்தே தொடங்குகிறது என்ற கற்பிதத்தை ஆதிச்சநல்லூரும், கீழடியும் உடைத்தெறிந்த நிலையில், சிவகளை இன்னும் தூரத்துக்குத் தமிழக வரலாற்றை நகர்த்திச்சென்றிருக்கிறது.

உலக வரலாற்றில் மனிதன் முதன்முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு. இதுநாள் வரை பேரளவில் செம்பால் செய்யப்பட்ட பொருள்கள் ஏதும் தமிழகத் தொல்லியல் மேடுகளில் கண்டெடுக்கப்படவில்லை. முதன்முறையாக சிவகளையில் செம்பாலான பொருள்களோடு தங்க ஆபரணங்களின் பகுதிகளும் கிடைத்துள்ளன. தமிழகத்தின் மிகத்தொன்மையான செம்புக்கால வரலாற்று நகராகச் சிவகளையை வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள்.

தமிழர் தொன்மை உணர்த்தும் தங்கக் காதணி!
தமிழர் தொன்மை உணர்த்தும் தங்கக் காதணி!

தமிழகத்தின் வரலாற்றுத் தொட்டிலாக இருக்கிற ஆதிச்சநல்லூருக்கும் கொற்கைக்கும் நடுவில் இருக்கிறது சிவகளை. 2,600 ஆண்டுக்கால கீழடிக்கும், 2,950 ஆண்டுக்கால ஆதிச்சநல்லூருக்கும் முந்தைய வரலாற்று ஆதாரங்களை நிரப்பி வைத்திருக்கின்றன சிவகளைத் தொல்லியல் மேடுகள். கீழடி கடைச்சங்க காலம் என்றால், சிவகளை நடுச்சங்க காலம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

சிவகளையின் பழைய பெயர் செய்விளை. அதுவே ‘செவளை’ என மருவி ‘சிவகளை’ என்றாகிவிட்டது. தொடக்கத்தில் வைகுண்டம், குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியின் வரலாற்றுத்துறை ஆசிரியர் மாணிக்கம் தம் மாணவர்களுடன் சிவகளைக்குக் களப்பயணம் சென்றபோது, சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவுள்ள தொல்லியல் களம் இருப்பதைக் கண்டறிந்தார். ‘இப்பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும்' என மத்திய, மாநிலத் தொல்லியல் துறைகளுக்குப் புகைப்பட, வீடியோ ஆதாரங்களுடன் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து ஆய்வுசெய்த மத்திய, மாநிலத் தொல்லியல் துறை அதிகாரிகள் சிவகளையில் மிகப்பெரிய தொல்லியல் களம் இருப்பது உண்மை என்று அறிக்கை தந்தனர். ‘ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்’ என்ற நூலின் ஆசிரியரான முத்தாலங்குறிச்சி காமராசு, ஆசிரியர் மாணிக்கம் இருவரும் சிவகளையில் அகழாய்வு செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்கள். இதனையடுத்து அகழ்வு செய்யும் பணிகள் தொடங்கின.

தமிழர் தொன்மை உணர்த்தும் தங்கக் காதணி!
தமிழர் தொன்மை உணர்த்தும் தங்கக் காதணி!

“சிவகளையில் தற்போது 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடக்கின்றன. 5 கி.மீ பரப்பளவில் அகழ்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 78 குழிகளில் 123 முதுமக்கள் தாழிகள், 411 படையல் கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வாழ்விடப் பகுதிகளில் இரும்பு ஆயுதங்கள், செம்பு நாணயங்கள், சங்கு ஆபரணங்கள், தமிழி எழுத்துகள், பானைக் கீறல்கள், ஆட்டக்காய்கள், செம்புச் சீன நாணயங்கள், பீங்கான், சங்கு வளையல்கள், செம்புச் சலங்கை முத்து, இரும்பு உருக்கு, புகைபிடிக்கும் குழாய், தக்கலி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. ஆதிச்சநல்லூர் இரும்புத் தொல்லியல் களம் என்றால், சிவகளை செம்புத் தொல்லியல் களமாக உள்ளது. படையல் கிண்ணங்களில் இருந்த நெல்மணிகளை ஆய்வு செய்ததில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தையவை எனத் தெரியவந்துள்ளது. சமீப ஆய்வில் 0.03 கிராம் எடையுள்ள தங்கமும் கிடைத்துள்ளது. அது காதணியின் ஒரு பகுதியாக இருக்கலாம்’’ என்கிறார், சிவகளை அகழாய்வின் இயக்குநர் பிரபாகரன்.

தோண்டத் தோண்ட மேலெழுந்துகொண்டே வருகிறது தமிழர்களின் வரலாறு!

தமிழர் தொன்மை உணர்த்தும் தங்கக் காதணி!
தமிழர் தொன்மை உணர்த்தும் தங்கக் காதணி!

விருதுநகர் மாவட்டத்தில் வைப்பாற்றின் வடக்குக்கரையில் உள்ள வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் ஆய்வாளர்கள் வேதாச்சலம் மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரால் தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு தற்போது தமிழகத் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொண்டுவருகிறது. அகழ்வு செய்த 15 குழிகளில் நுண்கற்காலம் முதல் இடைக்கற்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன. சுடுமண்ணாலான பகடைக்காய், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண், காளை உருவங்கள், சுடுமண் விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, கோடரி உட்பட 2,400 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1 கிராம் அளவிலான தங்கக் காதணியொன்றும் அடக்கம்.

‘‘இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள். தற்போது கிடைத்துள்ள பொருள்கள் நுண்கற்காலத்தைச் சேர்ந்தவை. குழிகளின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க, மேலும் பழைமையான பொருள்கள் கிடைக்குமென எதிர்பார்க்கிறோம்’’ என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கர்.