சமூகம்
அலசல்
Published:Updated:

“உயிரோடு புதைக்குறாங்க!” - கதறும் விவசாயிகள்... தூங்கும் ஸ்டாலின்?

திருவையாறு
பிரீமியம் ஸ்டோரி
News
திருவையாறு

பச்சைப் பசேலெனப் பயிர்கள் வளர்ந்திருந்த வயலுக்குள், ஜே.சி.பி இயந்திரத்தை இறக்கி, மண்ணை நிரவி சமன் செய்திருந்தனர்

கொடுத்த வாக்குறுதியை மாற்றிப் பேசுபவர்களைக் குறிப்பிடுவதற்காக, “மங்கம்மா காலத்துப் பேச்சு; எங்கம்மா காலத்துல போச்சு...” என கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆளுங்கட்சியான தி.மு.க-வின் நடவடிக்கையும் அதுபோலத்தான் மாறியிருக்கிறது. எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தபோது, விவசாயிகள் நலன் சார்ந்த விஷயங்களில் அவர்கள் போட்ட சத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. சேலம் எட்டுவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகக் குரல் கொடுத்தது தொடங்கி, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகைப் போராட்டம் வரை, தி.மு.க தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவளித்து, களத்தில் நின்றது. எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, “சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தின் மூலம், பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். லட்சக்கணக்கில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. போராடும் மக்களிடம் கருத்தைக் கேட்ட பின்னர் நடைமுறைப்படுத்துங்கள் என்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இருந்துகொண்டு, அனைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் எட்டுவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுவதாகச் சொல்கிறார். விமான நிலையத்தில் இப்படிக் கூறுபவர், அந்த மக்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று இதுபோல பேட்டி கொடுக்கத் திராணி இருக்கிறதா?” என்று ஆவேசம் காட்டினார். அந்த ஆவேசம் ஆட்சிக்கு வந்தவுடன் எங்கே போனது என்பதுதான் விவசாயிகளின் கேள்வியாக இருக்கிறது!

ஸ்டாலின்
ஸ்டாலின்

திருவையாறில், புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சாலை அமைக்கும் பணியாளர்கள், வயலில் விளைந்து நிற்கும் 60 நாள் சம்பா நெற்பயிர்கள்மீது புல்டோசரைக்கொண்டு மண்ணைக் கொட்டி மூடுகிறார்கள். பயிர்கள் பிடுங்கி எறியப்படுகின்றன. “இன்னும் 40 நாள்ல பயிர் அறுவடைக்கு வந்துரும். அதுக்குள்ள எங்க வாழ்வாதாரத்தை அழிச்சிடாதீங்கய்யா” எனக் காலில் விழும் விவசாயிகளை அதிகாரிகள் உதாசீனப்படுத்துகிறார்கள். கொதித்தெழும் விவசாயிகளை, “அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தா புடிச்சு ஜெயில்ல போடுவோம்” என மிரட்டுகிறது காவல்துறை. இத்தனை களேபரங்கள் நடக்கும் நிலையில், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் என ஒருவர்கூட அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. ஒருகாலத்தில், “மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரில் செல்லத் தயாரா?” என எடப்பாடியைக் கேள்வி கேட்ட ஸ்டாலின், திருவையாறு விவசாயிகளின் கதறலுக்கு இன்னும் வாய் திறக்கவில்லை. ‘முதல்வர் தூங்குகிறாரா?’ என்று கேட்கிறார்கள் போராட்டத்துக்கு ஆதரவாகக் களத்தில் நிற்பவர்கள்.

பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை (எண்-226), திருவையாறு நகர்ப்பகுதி வழியே செல்கிறது. திருவையாறில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, ரூபாய் 191 கோடியில் ஏழு கி.மீ நீளத்துக்குப் புறவழிச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு, 2019-ம் ஆண்டில் அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இது மத்திய அரசின் திட்டம்தான் என்றாலும், மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் வரும் ‘ஹைவே விங்’தான், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை ஏற்றிருக்கிறது. 76 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவதால், திட்டத்தை எதிர்த்து அப்போதே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தை அளப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. கடந்த மூன்று வருடங்களாகத் தொடரும் இந்தப் போராட்டம், கடந்த நவம்பர் 30-ம் தேதி விவசாயிகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் மீண்டும் தீவிரமடைந்தது. இந்தச் சூழலில்தான், புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக, விளைந்து நிற்கும் வயல்களின்மீது பொக்லைன்கள்கொண்டு மண்ணைக் கொட்டி பயிர்களைச் சமாதி ஆக்கியிருக்கிறார்கள் சாலை அமைப்பவர்கள்.

“உயிரோடு புதைக்குறாங்க!” - கதறும் விவசாயிகள்... தூங்கும் ஸ்டாலின்?

“உயிரோடு புதைக்குறீங்களே... நியாயமா?”

அந்தப் புறவழிச்சாலை அமைக்கப்படும் இடத்துக்கு நாமும் நேரில் சென்றோம். திட்டமிடப்பட்டிருக்கும் 7 கி.மீ புறவழிச்சாலையில், கிட்டத்தட்ட 3 கி.மீட்டருக்கு மேல் மண் கொட்டியுள்ளனர். பச்சைப் பசேலெனப் பயிர்கள் வளர்ந்திருந்த வயலுக்குள், ஜே.சி.பி இயந்திரத்தை இறக்கி, மண்ணை நிரவி சமன் செய்திருந்தனர். அடுத்தடுத்து மண்ணைக் கொட்டுவதற்காக, 10 சக்கர லாரிகள் வரிசைகட்டி நின்றிருந்தன. “எங்க உசுரைக் கொடுத்து வளர்த்த பயிர்களை இப்படி புதைச்சுட்டீங்களே...” எனத் தலையிலடித்துக்கொண்டு பெண்கள் வைத்த ஒப்பாரியும் ஓலமும் சூழலை அனலாக்கின.

உடைந்த குரலில் முருகேசன் என்ற விவசாயி நம்மிடம் பேசினார். “எனக்கு 60 வயசுக்கு மேல ஆகுதுங்க. மனைவி கழுத்துல கிடந்த தாலியை அடகுவெச்சு, எனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் வயல்ல சம்பா பயிரை நடவு செஞ்சேன். இந்த நிலத்தை நம்பித்தான் நானும் என் மனைவியும் வாழுறோம். எங்களை நம்பியிருக்கும் எங்க மகளுக்கும் இந்த நிலம்தான் ஆதாரம். விவசாயம் பண்ண ஆரம்பிச்ச சமயத்துல, ‘ரோடு போடப்போறோம். நடவு நடாதீங்க’னு யாரும் வந்து தடுக்கல. எந்தப் புழு, பூச்சியும் தாக்காம பயிரைச் செழிப்பா வளர்த்தோம். தெனமும் வந்து தண்ணி பாய்ச்சிட்டு, களை எடுத்துட்டு, பயிரைத் தொட்டு தொட்டுப் பார்த்துட்டுப் போவோம். பார்த்துப் பார்த்து வளர்த்த அந்த பயிர்ல அஞ்சு ஜே.சி.பி வண்டிகளைக் கொண்டுவந்து மண்ணைக் கொட்டி, மொத்தமா மூடிட்டாங்க. அன்னைக்கே நான் செத்துட்டேன்.

ரோடு போட்டவங்ககிட்ட, ‘பயிரை உயிரோடு புதைக்குறீங்களே இது நியாயமா.. இன்னும் 40 நாள்ல அறுவடை செஞ்சுருவேன். அதுவரை இருக்கட்டும். விடுங்கய்யா’னு கெஞ்சினேன். அதை அவங்க கண்டுக்கவே இல்ல. என்ன, ஏதுன்னு கேட்கக்கூட அதிகாரிங்க யாரும் வரல. இந்த நிலம் எங்க பிள்ளை மாதிரி. வாழ்க்கை முழுக்க எங்க வயித்துப் பாட்டுக்கு ஆதாரமா இருக்குற சாமி. அதை ஒருவாட்டி பணம் கொடுத்துட்டு மொத்தமா கொல்றதை எப்படிங்க ஏத்துக்க முடியும்?” என்று கண்ணீர் வடித்தார்.

“உயிரோடு புதைக்குறாங்க!” - கதறும் விவசாயிகள்... தூங்கும் ஸ்டாலின்?

“விவசாயிகளுக்கு ஒரு பைசாகூடத் தரவில்லை... மணல் மாஃபியாக்களுக்கான திட்டமா?”

இதே குமுறலும் கண்ணீரும், கையில் பயிரோடு நிலைகுலைந்து நின்றிருந்த எல்லா விவசாயிகளிடமும் இருந்தன. காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் துணைச் செயலாளர் திருப்பந்துருத்தி சுகுமாறனிடம் பேசினோம். “இந்தப் புறவழிச்சாலை... திருவையாறு, கண்டியூர், மணக்கரம்பை, பெரும்புலியூர், கல்யாணபுரம், கீழத்திருப்பந்துருத்தி உள்ளிட்ட ஆறு கிராமங்களின் வழியாக அமைக்க, திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தால், 280 விவசாயிகள் நேரடியாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பாதிப்படைந்திருக்கின்றனர். எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை முறையாக அழைத்துப் பேசவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, நிலத்தை இழந்த விவசாயிகள் யாருக்கும் இதுவரை ஒரு பைசாகூட இழப்பீடு தரவில்லை. சாலை அமைப்பதற்கான ஆவணங்களை இதுவரை விவசாயிகளிடம் காட்டவில்லை. அரசுப் பதிவேடுகளின்படி, இப்போது வரை விவசாயிகளின் பெயரிலேயே குறிப்பிட்ட நிலங்கள் உள்ளன. எங்கள் கண்முன்னே, எங்கள் நிலத்தில் அத்துமீறி சாலை அமைக்கப்படுவதை எப்படி ஏற்க முடியும்?

திருவையாறு நகர்ப்பகுதிக்குள் இருக்கும் பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையின் அசல் அகலம் 10 மீட்டர். ஆனால், இருபுறமும் 6 மீட்டர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, இப்போது நான்கு மீட்டர் மட்டுமே மீதமுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே புதிய புறவழிச்சாலை அமைப்பதற்கான தேவை இருக்காது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. அப்படியும் நெரிசல் ஏற்படும் என அரசு கருதினால், மேம்பாலம்கூட அமைக்கலாம். ஆனால், இப்படி விவசாயிகளின் வயிற்றில் அடிக்க வேண்டியதில்லை. மேலும், காவிரி, குடமுருட்டி ஆறுகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் திருடப்படுகிறது. மணல் ஏற்றிவரும் லாரிகளால், நகருக்குள் அவ்வப்போது விபத்துகள் நடக்கின்றன. இதற்கு எதிர்ப்பும் வலுத்துவருகிறது. இந்தப் புறவழிச்சாலை அமைக்கப்பட்டால், யார் கண்ணையும் உறுத்தாமல் அந்த லாரிகள் சுலபமாக மணல் ஏற்றிச் செல்லலாம். அந்த மணல் மாஃபியாக்களுக்காக இந்தப் புதிய புறவழிச்சாலை அவசர அவசரமாக உருவாக்கப்படுகிறதோ என்கிற கேள்வியும் எழுகிறது.

“உயிரோடு புதைக்குறாங்க!” - கதறும் விவசாயிகள்... தூங்கும் ஸ்டாலின்?

1956 தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தின்படி, இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2013-ல் புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அந்தப் பழைய சட்டம் காலாவதியாகிவிட்டது. அ.தி.மு.க ஆட்சியில், 1956 சட்டத்தின்படிதான் சேலம் எட்டுவழிச் சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., காலாவதியான சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி, அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனால், எட்டுவழிச் சாலைப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. இன்று அதே தி.மு.க ஆளுங்கட்சியாக மாறிய பின்னர், விதிமுறைகளை மீறி, வயல்களுக்கு நடுவே புறவழிச்சாலை அமைக்கும் பணிக்குத் துணைபோகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளின் வலியை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எங்களுக்குப் புதிய சாலை வேண்டாம். ஆயுள் வரை வாழவைக்கும் விவசாய நிலம்தான் வேண்டும்” என்றார் விரிவாக.

“உயிரோடு புதைக்குறாங்க!” - கதறும் விவசாயிகள்... தூங்கும் ஸ்டாலின்?

தலைவிரித்தாடும் விவசாயப் பிரச்னைகள்... தூங்குகிறாரா முதல்வர்?

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ‘மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு’ நடைபெற்றது. மாநாட்டில், ‘எங்கள் ஒப்புதல் இல்லாமல் எங்கள் நிலங்களை எடுக்கக் கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றினர். அதில், சிறப்பு அழைப்பாளராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கும்விதமாக, “தி.மு.க ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் சம்மதம் இல்லாமல் எந்தத் திட்டப்பணிக்கும் நிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம். நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு, விவசாயிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்படும்” என்றார். அந்தப் பேச்சு, இன்று காற்றோடு போச்சு.

திருவையாறில் மட்டுமல்ல, நாலா பக்கமும் விவசாயிகளின் பிரச்னைகள் தலைவிரித்து ஆடுகின்றன. கோவை மாவட்டம், அன்னூரில் சிப்காட் அமைப்பதற்காக 3,800 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப் படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆறு ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் வைகை ஆற்றிலிருந்து விலாங்குளத்தூர் கண்மாய்க்கு நீர் திறந்துவிடப்படாததைக் கண்டித்து அந்தப் பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கண்மாய்க்கு வரக்கூடிய கால்வாயும் தூர்வாரப்படவில்லை. தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான சி.பி.எம்-தான் இந்தப் போராட்டத்துக்குத் தலைமையேற்றிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், சுப்பன்கால்வாய்த் திட்டத்தில் கால்வாய் தூர்வாரப்படாததைக் கண்டித்து, இளையான்குடி விவசாயிகளும் போர்க்குரல் எழுப்பியிருக்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். கரூரில், பயிர்க்கடன் பெறாதவர்களுக்கும் பயிர்க்கடனைத் திருப்பிச் செலுத்தச் சொல்லி சம்மன் அனுப்பட்டதால், விவசாயிகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது.

எ.வ.வேலு
எ.வ.வேலு

இப்படி, விவசாயிகள் சார்ந்த பிரச்னைகள் பூதாகரமாகிவரும் நிலையில், அது குறித்து முதல்வரோ, அமைச்சர்களோ கொஞ்சமும் வாய் திறக்கவே இல்லை. அதிகாரிகள்கூட பேசுவதில்லை. திமுக ஆட்சிக்குவந்த சில மாதங்களில், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவதைக் கண்டித்திருந்தார் ஸ்டாலின். இங்கே, ஊருக்கு ஊர் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. “உங்களை நம்பித்தானே வாக்களித்தோம்?” என விவசாயச் சங்கத்தினர் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பதில் சொல்ல வேண்டிய முதல்வர், ஏன் ஆழ்ந்த மௌனத்தில் இருக்கிறார்?

நம்மிடம் பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நகரங்களில், மாநகரங்களில் வளர்ச்சி விரிவாக்கப் பணிகளுக்காக நில உரிமையாளர்களின் அனுமதியே இல்லாமல் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க-வும் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, வழக்கை முறையாக நடத்தாததால் தற்போது அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ‘ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, வந்த பிறகு ஒரு பேச்சு’ என்பது தி.மு.க-வின் நிலைப்பாடாக இருக்கிறது” என்றார் ஆக்ரோஷமாக.

திருவையாறு விவசாயிகள் போராட்டம் குறித்து நாம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவைத் தொடர்பு கொண்டோம். நமது அழைப்புகளுக்கோ, குறுஞ்செய்திக்கோ அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

முருகேசன், சுகுமாறன், பி.ஆர்.பாண்டியன்
முருகேசன், சுகுமாறன், பி.ஆர்.பாண்டியன்

ஆனால், சமீபத்தில் எட்டுவழிச் சாலை தொடர்பான ஒரு கேள்விக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, “ஒருகாலத்தில் ஒரு ஊருக்கு ஒரு கார் மட்டுமே இருந்தது. தற்போது ஒரு வீட்டுக்கு ஒரு கார் வந்துவிட்டது. இதனால், சாலை விரிவாக்கம் என்பது மிகவும் அவசியமாகிவிட்டது. ஆனால், நிலம் இல்லாதவர்கள்கூட பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு, ‘எங்கள் நிலத்தை எடுக்காதீர்கள்’ என்று இப்போது பிரச்னை செய்கிறார்கள்” என்று போராடுபவர்களை ஏளனம் செய்து பதிலளித்திருக்கிறார். இது முதல்வரின் மௌனத்தைவிட ஆபத்தானது.

கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், இதே பச்சைத்துண்டைப் போட்டுக்கொண்டுதான், வயல்வெளிகளில் இறங்கி வாக்கு கேட்டு ஸ்டாலினும் எ.வ.வேலுவும் வீதிக்கு வீதி நடந்தார்கள். இன்று அதே பச்சைத்துண்டையும் போராட்டத்தையும் ஏளனம் செய்கிறார் எ.வ.வேலு. இந்தக் கருத்துக்கு அவரைக் கண்டித்திருக்கவேண்டிய முதல்வரோ வாய் திறக்கவே இல்லை. தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில், தங்களின் ஒரே வாழ்வாதாரமான வயல்களில், பயிர்களின்மீது மண்ணள்ளிப்போடும் பொக்லைன்களுக்கு முன்னே நின்று கண்ணீர்விட்டுக் கதறுகிறார்கள் விவசாயிகள். அந்தக் குரல்களுக்கு செவி கொடுப்பாரா தமிழக முதல்வர்?

 துரை.சந்திரசேகரன்
துரை.சந்திரசேகரன்

“நிலம் இல்லாத சிலர் பிரச்னை செய்கிறார்கள்!”

“அரசு விதியை முறையாகப் பின்பற்றி, விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீட்டுப் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. சிலர் இழப்பீட்டுக்கான பணத்தை வாங்கவில்லை. கூடுதலாகப் பணம் தர வேண்டும் எனக் கூறிவருகின்றனர். திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், நிலைமை சரியாவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. புறவழிச்சாலை வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கை. திருவையாறு பாரம்பர்யம் மிக்க நகரம் என்பதாலும், கோயில்கள், மசூதிகள் இடிபடும் நிலை இருந்ததாலும், நெடுஞ்சாலையோரத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் புறவழிச்சாலைத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு கல் ஊன்றிய பிறகு, விவசாயிகள் நடவுசெய்திருக்கின்றனர். நிலம் இல்லாத சிலர் பிரச்னை செய்கிறார்கள். விவசாயிகள் பாதிக்காத வகையில் இதைச் செயல்படுத்த அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தியிருக்கிறேன்!”

- துரை.சந்திரசேகரன், எம்.எல்.ஏ., திருவையாறு தொகுதி.