சினிமா
Published:Updated:

ஆடி அடங்கும் (அரசியல்) வாழ்க்கையடா!

ராஜேந்திரபாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேந்திரபாலாஜி

தன்னைக் கைது செய்யத் திட்டமிடுகிறார்கள் என்பது தெரிந்ததும், 20 நாள்கள் தலைமறைவாகத் திரிந்தார். தலைமறைவு வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமையவில்லை.

நள்ளிரவு 1.30 மணி.

விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டபோது நீண்ட பயணத்தால் சோர்ந்துபோயிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு, 20 நாள்களுக்குப் பிறகு சொந்த மாவட்டம் வந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. ‘மீடியாக்காரங்களைத் தவிர்த்து நம்மள பார்க்க யாராவது வந்திருக்காங்களா’ என்று எட்டிப் பார்த்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.


‘‘என்னை மாதிரியே மஞ்ச சட்டை போட்டுக்கிட்டு, கையில கயிறு கட்டிக்கிட்டு நைட்டு நான் தூங்குற வரைக்கும் கூடவே இருந்து காலையில எந்திருக்கும்போது முன்னால நிப்பானுங்களே, அவனுங்க எல்லாம் எங்கேய்யா போனாங்க’’ என்று தெரிந்த போலீஸ்காரரிடம் கேட்டிருக்கிறார்.

ஆடி அடங்கும் (அரசியல்) வாழ்க்கையடா!

ஒரு நிகழ்ச்சிக்கு ராஜேந்திரபாலாஜி வருகிறார் என்றால், அவர் பின்னால் ‘லாலி லாலி’ என்ற ஹம்மிங் ஒலிக்காத குறையாக மஞ்சள் சட்டை படையொன்று ஊர்வலம் போல் வரும். அது ஒரு காலம். அப்படி வந்தவர்கள் வசதியாக செட்டிலாகி விட்டார்கள். இப்போது வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வரும்போது விசாரிக்கக்கூட ஒருத்தரும் வரவில்லை. காலம் விசித்திரமானது என்பதற்கு நிகழ்கால உதாரணமாக அவர் இருக்கிறார்.

கடந்த ஆட்சியில் தன் அதிரடி அன் லிமிட்டெட் பேச்சால் ராஜேந்திரபாலாஜி பிரபலம். ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக மீடியாக்களுக்கு பிரேக்கிங் கன்டென்ட் கொடுக்கும் நபராகிப்போனார்.

வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த வழக்குகளில் ஜனவரி 6-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் ஒரு பயங்கரவாதியைப் பிடிப்பதுபோல போலீஸ் மடக்கிப் பிடித்தபோது, ‘ரொம்ப ஓவராத்தான் போயிட்டோமோ’ என்று ஃபீலாகியிருக்கிறார். கைது செய்யும்போது காவலர் ஒருவர் முதுகைப் பிடித்துத் தள்ளி வண்டியில் ஏற்றியதைப் பார்த்தவர்கள், ‘அமைச்சராக இருந்தபோது இதே போலீஸ் அவரை எப்படி நடத்தியது’ என்பதைப் பார்த்திருந்தால் அதிர்ச்சி ஆவார்கள்.

ஆடி அடங்கும் (அரசியல்) வாழ்க்கையடா!

ஒவ்வொரு அமைச்சருக்கும் இன்ஸ்பெக்டர் தலைமையில் எஸ்கார்ட் போலீஸ் நியமிக்கப்படுவார்கள். எங்கு சென்றாலும் கூடவே செல்வார்கள். வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். இது பொதுவான நடைமுறை. ஆனால், ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது, எஸ்கார்ட் மட்டுமன்றி அவர் வீட்டிற்கும் தனியே எஸ்.ஐ. தலைமையில் 10 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட விருதுநகர் மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது. எந்த அமைச்சருக்கும் இப்படிக் கிடையாது. திருத்தங்கலில் அவர் வீடு இருக்கும் தெருவில் தடுப்பு வைத்து அடைத்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களைக்கூட விசாரித்துதான் உள்ளே விடுவார்கள். அப்படியொரு விசுவாசத்தை ராஜேந்திர பாலாஜி மீது காட்டினார்கள். பதிலுக்கு அவரும் அவர்களுக்குச் சிறப்பு செய்திருக்கிறார். அப்படி ஆர்ப்பாட்டமாக இருந்தவர்தான்.

அந்த விசுவாசத்தில்தான், தேடுவதாக பாவ்லா செய்தபடி அவரைத் தப்பிக்க விட்டது விருதுநகர் போலீஸ். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி ஆன தகவல் தெரிந்தும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவரை போலீஸ் கண்டுகொள்ளவில்லை. இது முதலமைச்சர் வரைக்கும் சென்று சர்ச்சையானதும் பதறித் துடித்தது போலீஸ். பதற்றத்தில் அவர் சகோதரி குடும்பத்தினரை விசாரித்ததும், ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டுக்குச் சென்று சோதனை செய்ததும் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டது.

ஆடி அடங்கும் (அரசியல்) வாழ்க்கையடா!

அவரைப் பிடிக்க அதிக தனிப்படைகள் அமைத்தது, வங்கிக் கணக்குகளைக் கண்காணிப்பதாக அறிவித்தது, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது, கடல் வழியில் கண்காணிப்பை பலப்படுத்தியதாக அறிவித்தது என சாதாரண மோசடி வழக்கில் சர்வதேச பயங்கரவாதியைப் பிடிப்பது போல காவல்துறை செயல்பட்டது மக்கள் மத்தியில் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.

அருப்புக்கோட்டைப் பகுதியிலிருந்து பிழைப்பு தேடி சிவகாசி திருத்தங்கல் பகுதியில் குடியேறி, அ.தி.மு.க கூட்டங்களுக்கு ஆட்டோவில் அறிவிப்பு செய்யும் வாய்ப்பைப் பெற்று, அப்படியே கட்சி உறுப்பினராகி, திருத்தங்கல் நகராட்சி வார்டு கவுன்சிலராகி, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துகொண்டே ஜெயலலிதாவின் கருணையால் எம்.எல்.ஏ-வாகி, யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைச்சராகி, விருதுநகர் மாவட்ட அ.தி.முக-வில் பலரையும் ஓவர்டேக் செய்து வளர்ந்தவர் ராஜேந்திர பாலாஜி. இதனால் எதிர்க்கட்சிகளைவிட உள் கட்சியில்தான் அவருக்கு எதிரிகள் அதிகம்.

2014-ல் உயர் நீதிமன்றத்தில் அவர்மீது தாக்கல் செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கைக்கூட, ‘உள்கட்சி எதிரிகளின் சதி’ என்றே நெருக்கமான வட்டாரத்தில் அவர் சொல்வார். இப்போதும் இந்த மோசடி வழக்கின் பின்னணியில் சொந்தக் கட்சியினரே வில்லனாக இருப்பதாக அவர் குடும்ப உறவுகள் சொல்கிறார்கள்.

தன்னைக் கைது செய்யத் திட்டமிடுகிறார்கள் என்பது தெரிந்ததும், 20 நாள்கள் தலைமறைவாகத் திரிந்தார். தலைமறைவு வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமையவில்லை. நெடுஞ்சாலைகளைத் தவிர்த்துவிட்டு கிராமச் சாலைகள் வழியாகவே பயணம் செய்தார். தேனி மாவட்டம் வழியாக கேரளா சென்று, அங்கிருந்து கோவை வந்தவருக்கு இரண்டு நாள்கள் மட்டும்தான் அடைக்கலம் கிடைத்தது. அங்கிருந்த முன்னாள் அமைச்சர் கைவிட்ட நிலையில்தான் தருமபுரி மாவட்டத்துக்குச் சென்றார். அங்கு முன்னாள் அமைச்சர் ஒருவர் இவரை பா.ஜ.க நிர்வாகி ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்துள்ளார். பெங்களூரு வழியாக டெல்லிக்குச் செல்ல முயற்சி செய்த நிலையில் விமான நிலையங்கள் அலெர்ட் செய்யப்பட்டதால், செல்ல முடியாத நிலை. கார் மூலம் டெல்லி செல்ல முயன்ற நிலையில் ஹாசனில் தங்கியிருந்த ராஜேந்திர பாலாஜிக்கு சரியான உணவு அமையாததால் சர்க்கரை நோய் அதிகரித்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுக்க காரில் சென்றபோதுதான் பிடிபட்டார்.

பாலாஜி என்ற பெயருடன் தன்னிடம் உதவி தேடி வருகிறவர்களுக்கு தேவையானவற்றைச் செய்து கொடுத்த விநோத மனிதர் ராஜேந்திர பாலாஜி. சமுதாய ஆதரவு வேண்டும் என்பதற்காக, தன் சமூக அமைப்புக்குப் பணம் அள்ளிக் கொடுத்திருக்கிறார். அவர்களும் ஆபத்து நேரத்தில் உதவவில்லை. ஆவினில் இவரால் பெரிய பொறுப்புக்கு வந்தவர்கள், ஊழல் செய்து காப்பாற்றப்பட்டவர்கள், இப்போது இவர் போன் செய்துவிடுவாரோ என்று ஆஃப் பண்ணி வைத்துவிட்டார்களாம்.

ஆடி அடங்கும் (அரசியல்) வாழ்க்கையடா!

இப்போது அவர் திருச்சிச் சிறையின் உயர் பாதுகாப்புப் பிரிவில் தனியாக அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அடைப்பதற்கு முன் அவர் கையில் கலர் கலராகக் கட்டியிருந்த கயிறுகளைக் கழற்றி வாங்கிக்கொண்டார்களாம். பல சோதிடர்கள் கோயில்களில் மந்திரித்துக் கட்டிய கயிறுகளை அவரிடமிருந்து பிரித்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையாம்.

சிறையில் வழங்கப்படும் சைவ உணவும் அவருக்கு செட்டாகவில்லை. முட்டை பரோட்டா, நாட்டுக்கோழி கிரேவி அவருக்குப் பிடித்த உணவு. சாப்பிட்டபடி ரஜினி படத்தை டி.வி-யில் பார்த்துக்கொண்டு நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டுதான் அவருடைய ஒவ்வொரு நாளும் முடியும். அப்படிப்பட்டவர் இப்போது தனிமையில் தள்ளப்பட்டிருக்கிறார்.

வாழ்க்கைன்னா என்னான்னு இப்போ புரிஞ்சிருக்கும்!