‘விடியல்’ ஆட்சியிலும் ‘வெற்றிநடைபோடும்’ குட்கா! - சாட்டையைச் சுழற்றுவாரா முதல்வர்?

பெருமளவு குட்கா ஆந்திரா, கர்நாடகாவிலிருந்துதான் தமிழகத்துக்குக் கடத்திவரப்படுகிறது.
‘குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!’ என்று ஜூனியர் விகடனில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டு, வருடம் கடந்துவிட்டது. ஆனால், இப்போதும் தமிழகம் முழுக்க குட்கா விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது!
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற பொருள்களுக்குத் தடைவிதிக்கப்பட்டு, ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், குட்கா விற்பனை அமோகமாக நடந்தது. இதையொட்டி, 26.08.2020 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘குட்கா வேண்டுமா முதல்வரே?’ என்கிற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியானது. அந்தச் சமயத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்ததால், எதிர்க்கட்சியான தி.மு.க-வினரால் இந்தக் கட்டுரை பெருமளவில் பேசப்பட்டது. ‘முரசொலி’யிலும் ஜூ.வி கட்டுரை பிரசுரமானது.

இதையடுத்து, ‘கழக ஆட்சியில் குட்கா விற்பனை முழுமையாகத் தடைசெய்யப்படும்’ என்று சூளுரைத்திருந்தார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்!
ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும் குட்கா விற்பனையைத் தடுப்பதில் கூடுதல் அக்கறை காட்டப்படவில்லை. இந்த நிலையில், ‘குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!’ என்ற தலைப்பில் 25.7.2021 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலும் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தி.மு.க ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா வகைப் புகையிலைப் பொருள்கள், இப்போதும் தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தங்குதடையின்றி கிடைத்து வருகின்றன என்பதுதான் கள நிலவரமாக இருக்கிறது.

போலீஸ் கெடுபிடி... விலையேறிய குட்கா பொட்டலம்!
அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் எச்சரிக்கை மட்டும் விடுக்கிறார்கள். குட்கா விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை. மாறாக, 30 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த குட்கா பொட்டலங்கள், போலீஸ் கெடுபிடி காரணமாக தற்போது 60 முதல் 70 ரூபாய் விலை அதிகரித்திருக்கிறது.
கடந்த 22-ம் தேதி, சென்னை புறநகர்ப் பகுதியில் நடத்திய வாகன சோதனையின்போது, காரில் கடத்திவரப்பட்ட 200 கிலோ பான் மசாலா, குட்கா பொருள்களை பறிமுதல் செய்ததோடு நரேந்திரன், ஹரிகிருஷ்ணன் என இருவரைக் கைதும் செய்திருக்கிறது காவல்துறை. கைது செய்யப்பட்ட இருவருமே கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலிருந்து குட்காவைக் கடத்திவந்து சென்னை புறநகர்ப் பகுதிகளில் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கார், ரயில் வழியாகக் கடத்தப்படும் குட்கா!
இதேபோல, கடந்த 19-ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் அலுவலகத்துக்கு அருகில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆட்டோவில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தார். சந்தேகமடைந்த போலீஸார், அந்த மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில், 82 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்ததோடு ஆட்டோ ஓட்டுநர் வீரபாண்டியையும் கைதுசெய்து, குட்காவை அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை செய்துவருகின்றனர் போலீஸார்.
கடந்த 22-ம் தேதி ஈரோடு மாவட்டம், கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் முருகன் என்பவர் தனது டீக்கடையில் விற்பனை செய்வதற்காக வாங்கிச்சென்ற 3.4 கிலோ குட்காவுடன் பிடிபட்டார்.
கடந்த வாரத்தில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள முள்ளண்டிரம் கிராமத்தைச் சேர்ந்த மரகதம்மாள் என்பவரின் வீட்டில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 140 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, மதுரை மாவட்டம் பரவை, சமயநல்லூர் பகுதியில் விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான குடோனில் 650 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 23.11.2022 அன்று தலைநகர் சென்னையில் குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது மற்றும் வைத்திருந்தது தொடர்பாக 89 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 89 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மேலே சொல்லப்பட்ட சம்பவங்கள் அனைத்துமே காவல்துறையின் கண்ணில் சிக்கியவை மட்டுமே. காவல்துறைக்குத் தெரியாமல் தமிழகத்தில் புழங்கும் குட்காவின் அளவு இதைப்போல பல மடங்கு அதிகம் என்கிறார்கள். இது தொடர்பாக, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு உயரதிகாரிகளிடம் பேசினோம். “பெருமளவு குட்கா ஆந்திரா, கர்நாடகாவிலிருந்துதான் தமிழகத்துக்குக் கடத்திவரப்படுகிறது. ஆந்திராவிலிருந்து கடத்திவரப்படும் குட்கா தடா, திருத்தணி வழியாக சென்னை நெற்குன்றம் பகுதியிலுள்ள தனியார் சரக்கு குடோன்களில் பதுக்கப்படு கிறது. அதேபோல, பெங்களூரிலிருந்து கடத்திக் கொண்டுவரப்படும் குட்கா கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் பகுதிகளிலுள்ள குடோன்களில் பதுக்கப்படுகிறது. பெரும் மூட்டைகளில் வரும் பண்டல் பிரிக்கப்பட்டு, ‘100 எண்ணம்’ உள்ள பாக்கெட்டுகளாக மாற்றப்படுகிறது. அவை நகருக்குள் வரும் சரக்கு வாகனங்களின் வழியே கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. குட்கா கடத்தல் விற்பனையைத் தடுக்க மாநில எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்” என்றார்கள்.

சாட்டையைச் சுழற்றுவாரா முதல்வர்?
“தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டு சென்று காண்பித்தோம். கமிஷன் வாங்கிக்கொண்டு, அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவர்களுக்குப் பொறுக்கவில்லை. குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப்போகிறது. கழக ஆட்சியில் குட்கா விற்பனை முழுமையாகத் தடைசெய்யப்படும்” என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடந்த ஆண்டு, பிப்ரவரி 10-ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார். ஆனால், இன்றளவும் தமிழகத்தில் குட்கா விற்பனை என்பது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகவே இருந்துவருகிறது.
தமிழகத்தில் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே குட்கா உள்ளிட்ட போதை, புகையிலைப் பொருள்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்திருப்பது அதிர்ச்சியான தகவல். நகரிலுள்ள பல கடைகளிலும் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் மிட்டாய் போன்ற பொருளாக குட்கா மாறியிருக்கிறது.
ஒரு பக்கம் கஞ்சா இளைஞர்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் குட்கா போன்ற புகையிலைப் பொருள் கள் மாணவர்களை அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் குட்காவுக்கு எதிராகக் குரல் கொடுத்த ஸ்டாலின், இப்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார். காவல்துறையும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. குட்காவைக் கட்டுப்படுத்த சாட்டையைச் சுழற்றுவாரா முதல்வர்?