
வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு தினம்தோறும் தங்கம், வைரம், போதைப்பொருள்கள் கொண்டு வரப்படுவது அதிகரித்திருக்கிறது.
சமீபத்தில், சென்னையில் நடந்த ஒரு கொலை, ‘ஹவாலா’ கும்பல்களின் கொடூர முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. அடுத்தடுத்து நிகழ்ந்த கொள்ளைச் சம்பவங்களால், அதிர்ந்துபோயிருக்கிறது தலைநகரம். “மாதம்தோறும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் இந்த ‘ஹவாலா’ தொழிலில், நம்பிக்கையும் நாணயமும்தான் மூலதனம். இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கும் கண நேரத்தில் பணத்தை தருவிக்க முடியும். ஏஜென்ட்டுகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ரெளடிகள் எனப் பலரின் கரங்களும் கோக்கப்பட்டிருக்கும் ‘ஹவாலா’ தொழிலின் ஆண்டுச் சந்தை மதிப்பு, தமிழகத்தில் மட்டுமே 20,000 கோடி ரூபாய்” என அதிரவைக்கிறார்கள் இந்தத் தொழிலில் ஊறித் திளைப்பவர்கள். மிரளவைக்கும் இந்த ‘ஹவாலா’ தொழில் எப்படி நடக்கிறது... யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள்? விவரமறியக் களமிறங்கினோம். கிடைத்த தகவல்களெல்லாம் ‘பல்ஸை’ எகிறவைத்தன!
என்.ஐ.ஏ பெயரில் நாடகம்... மாட்டிய ‘ஹவாலா’ பணம்?
நமது விசாரணையே, இரண்டு சம்பவங்களை ஒட்டித்தான் ஆரம்பித்தது. சென்னை மண்ணடியைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் முகமது அப்துல்லாவிடம், ‘நாங்க என்.ஐ.ஏ அதிகாரிகள். உங்களைச் சோதனையிட வந்திருக்கிறோம்’ என மிரட்டி, அவரிடமிருந்த பெரும் தொகையைக் கொள்ளையடித்திருக்கிறது ஒரு கும்பல். சம்பவம் தொடர்பாக டிசம்பர் 13-ம் தேதி, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில், ‘என்னிடமிருந்த 20 லட்சம் ரூபாயை என்.ஐ.ஏ பெயரைச் சொல்லி சிலர் கொள்ளையடித்துவிட்டனர்’ என அப்துல்லா புகாரளித்தார். போலீஸ் விசாரிக்கத் தொடங்கும்போதே, சம்பவம் தொடர்பாக ஆறு பேர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களில், ராயபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகியான வேலு என்பவரும் அடக்கம்.
சரணடைந்தவர்களைக் காவலில் எடுத்து போலீஸ் விசாரித்தபோது, ‘நாங்க இரண்டரை கோடி ரூபாயைக் கொள்ளையடித்தோம்’ என்று போலீஸையே அதிரவைத்திருக்கிறார்கள். குழம்பிப்போன போலீஸார், விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரிக்கவும், ‘அது ஹவாலா பணம்ங்க... அதைக் கொள்ளையடிச்சா போலீஸுக்குப் போக மாட்டாங்கனு நினைச்சோம். ஆனா மாட்டிக்கிட்டோம்’ எனக் கதறியிருக்கிறார்கள். செல்போன் கடை உரிமையாளர் அப்துல்லாவை போலீஸ் விசாரித்தபோது, ‘எவ்வளவு தொகை கொள்ளை போனதுனு முதல்ல கணக்கு தெரியல சார். இப்போதான் கணக்குப் போட்டுப் பார்த்தேன். நீங்க சொல்ற அமவுன்ட்தான் வருது’ என, கொள்ளையடிக்கப்பட்ட இரண்டரைக் கோடி ரூபாய்க்கும் கணக்கு காட்டியிருக்கிறார். விவகாரம், தொடர் விசாரணையில் இருக்கிறது.

மஸ்தான் கொலையில் ‘ஹவாலா’ பின்னணி?
தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் தலைவர் டாக்டர் மஸ்தான், கடந்த டிசம்பர் 21-ம் தேதி மாரடைப்பில் காலமானதாகச் செய்திகள் வெளியாகின. முதல்வர் ஸ்டாலின்கூட நேரில் சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மஸ்தான் உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்த அவர் மகன், அவர் மரணத்தில் சந்தேகத்தை எழுப்பவும், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. போலீஸ் விசாரணையில், மஸ்தான் திட்டமிட்டுக் கொல்லப்பட்டது வெளிச்சமானது. 15 லட்சம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் தகராறில், மஸ்தானின் தம்பி மருமகனான இம்ரான் பாஷா என்பவரும், அவர் கூட்டாளிகளும் இந்தக் கொலையைச் செய்ததாகச் சொல்கிறார்கள் காவல்துறை உயரதிகாரிகள். ஆனால், “சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஹவாலா டீலரான ‘கொய்யா’ பிரமுகருக்கும், மஸ்தானுக்கும் இடையே பல கோடி ரூபாய் டீலிங் இருந்தது. இந்தக் கொலையில் நிச்சயமாக ‘ஹவாலா’ விவகாரப் பின்னணி இருக்கிறது. இன்னும் தீவிரமாக போலீஸ் விசாரிக்க வேண்டும்” என்று அதிர்ச்சியைக் கிளப்புகிறார்கள் மஸ்தானுக்கு நெருக்கமானவர்கள். இப்படிச் சம்பவங்கள் அடுத்தடுத்து நம்மை அதிரவைக்கவும், ‘ஹவாலா’ தொழிலில் கைதேர்ந்தவர்கள் சிலரிடம் பேசினோம்.

ஹவாலாவுக்கு ரூட் போட்ட ‘சில்க் ரோடு’!
“8-ம் நூற்றாண்டிலிருந்தே ‘ஹவாலா’ தொழில் இந்தியாவில் நடந்துவருகிறது. ‘சில்க் ரோடு’ வழியாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்துவந்த அரேபிய, கிரேக்க வியாபாரிகள், கொள்ளையர்களின் அச்சுறுத்தலால், தங்கள் வருமானத்தைச் சொந்த நாட்டுக்கே எடுத்துச்செல்ல முடியாத நிலை இருந்தது. அதற்காக உருவானதுதான் ‘ஹவாலா.’ அவர்களின் வருமானத்தையெல்லாம் இந்தியாவிலுள்ள ஒரு தரகரிடம் கொடுத்துவிட்டு, தங்கள் நாட்டிலுள்ள ஒரு தரகரிடமிருந்து தங்கமாகப் பெற்றனர். அதேபோல, வெளிநாட்டில் தரகரிடம் கொடுக்கும் தங்கம், இந்தியாவில் செட்டில் செய்யப்பட்டது. இந்த ‘ஹவாலா’ முறையில் பணம் எங்கேயும் நகராது. ஒரு தரகருக்கும் மற்றொரு தரகருக்கும் இடையே இருக்கும் தொடர்பும் நம்பிக்கையும்தான் இதில் மூலதனம். இதற்கான கமிஷனை இரு தரகர்களுமே வியாபாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில், ‘ஹவாலா’ முறை பெரிய அளவில் இல்லையென்றாலும், நாடு சுதந்திரமடைந்த பிறகு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது.
1990-களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களுக்குப் பிறகு, இந்தியாவில் வங்கிப் பயன்பாடுகள் அதிகரித்தன. வளைகுடா நாடுகளுக்கும், தெற்காசிய நாடுகளுக்கும் வேலைக்குச் சென்றவர்கள், தங்கள் உறவினர்களுக்குப் பணத்தை அனுப்ப வங்கிகளையும், தனியார் நிதி அமைப்புகளையும் நாட வேண்டியிருந்தது. இந்த முறையில் பணத்தை அனுப்புவதற்கு, 30 சதவிகிதம் வரை கமிஷன் கட்டணமாகச் செலுத்த நேரிடும். ஆனால், ‘ஹவாலா’ முறையில் பணத்தை அனுப்பினால் வெறும் 5 சதவிகிதம்தான் ‘கமிஷன்.’ இதனால், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து வேலைக்குச் சென்ற பலர், இந்த ‘ஹவாலா’ முறையில் ஊருக்குப் பணம் அனுப்ப ஆரம்பித்தனர். இதற்காக, ஊருக்கு ஊர் ‘ஹவாலா’ ஏஜென்ட்டுகளும், பல நாடுகளில் ‘ஹவாலா’ கிளைகளும் முளைத்தன. சிறிய தொகையில் தொடங்கிய இந்தத் தொழில், இன்று பல்லாயிரம் கோடி புரளும் வியாபார கேந்திரமாக மாறிவிட்டது.
ஆண்டுக்கு 20,000 கோடி... தங்கம், வைரம், பணம்... கண நேரத்தில் கோடிகள் பறிமாற்றம்!
‘ஹவாலா’ முறையில், எந்த நாட்டுக்கும், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அனுப்பலாம். பணமாக மட்டுமல்ல, தங்கம், வைரமாகக்கூட கொண்டுசேர்க்க முடியும். கொண்டுவரவும் முடியும். அதற்கான நெட்வொர்க் உள்ள ஆட்கள் சென்னையிலேயே இருக்கிறார்கள். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் தொடங்கி, கோலாலம்பூர், ஹாங்காங் வரை இந்த ஏஜென்ட்டுகளுக்குத் தொடர்புகள் இருக்கின்றன. சென்னை மண்ணடியில், லாட்ஜ் தொழில் நடத்திவரும் ‘கொய்யா’ பிரமுகர்தான் ‘ஹவாலா’வில் பெரிய கை. இளையான்குடியைப் பூர்வீகமாகக்கொண்ட இவரின் கட்டுப்பாட்டில், சென்னையில் பெரிய டீம் இயங்குகிறது. பெரிய தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், நகைக்கடை அதிபர்களின் பணத்தையெல்லாம் ‘ஹவாலா’ முறையில் வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்கிறது இவரது டீம். டி.டி.கே சாலையில் கலாசார மையத்தை நடத்தும் ஒருவரும் ‘ஹவாலா’ தொழிலில் ஐரோப்பிய நாடுகள் வரை தொடர்புகள் வைத்திருக்கிறார். சென்னையில் பிரியாணி பிசினஸில் ஈடுபடும் இரண்டு முக்கியப் புள்ளிகளின் பிசினஸே ‘ஹவாலா’தான். தமிழ்நாட்டில் மட்டும் நாளொன்றுக்கு 50 கோடி ரூபாய்க்கும் குறையாத அளவில் ‘ஹவாலா’ தொழில் நடக்கிறது. ஆண்டுச் சந்தை மதிப்பு மட்டுமே சுமார் 20,000 கோடி ரூபாய். கோயம்புத்தூர், தூத்துக்குடி ஏரியாக்களிலும் ‘ஹவாலா’ ஏஜென்ட்டுகள் இருக்கிறார்கள். கறுப்புப் பணத்தை இந்தியாவில் பதுக்கிவைத்துக்கொள்ள முடியாதவர்கள், வெளிநாடுகளில் தங்களுக்கு இருக்கும் தொடர்புகள் மூலமாக அந்தப் பணத்தைப் பத்திரப்படுத்துகிறார்கள். இதற்கு, ‘ஹவாலா’ முறைதான் அவர்களுக்குக் கைகொடுக்கும் ஒரே வழி.

சமீபத்தில், ஆளும் தரப்பைச் சேர்ந்த பிரமுகரின் 250 கோடி ரூபாய் பணம், லண்டனில் அவர் கைகாட்டிய நபரிடம் ‘ஹவாலா’ முறையில் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக, ஒரு சவுதி ரியால் நோட்டின் பாதிப் பகுதி அந்தப் பிரமுகரிடம் கொடுக்கப்பட்டு, அதை லண்டனில் கொடுத்த பிறகே பணம் செட்டில் ஆனது. கடந்த ஆட்சியில், தென்மாவட்டத்தில் கோலோச்சிய அமைச்சர் ஒருவர், இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கங்களை வாங்கினார். அதற்கான தொகை, ‘ஹவாலா’ முறையில் புரூனேவில் தங்கமாக செட்டில் செய்யப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், ஒரு பிரபல அரசியல் தலைவர் தன்னிடமிருந்த வைரக்கற்களை ஹாங்காங்கில் விற்று, அந்தத் தொகையை ‘ஹவாலா’ முறையில் சென்னைக்குக் கொண்டுவந்தார். அதைவைத்துத்தான் தேர்தலையே சந்தித்தார்.
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், நோட்டுகளின் பாதியைக் காண்பித்து, சீரியல் நம்பர் ஒத்துப்போயிருந்தால்தான் பணத்தை ஒப்படைக்கும் மரபான வழக்கமே இன்றும் தொடர்கிறது. அந்த ஆளும் தரப்புப் பிரமுகர் கொடுத்த 250 கோடி ரூபாய் பணம் தமிழ்நாட்டை விட்டு எங்கேயும் நகரவில்லை. வெளிநாட்டிலிருந்து ஒருவர் தமிழ்நாட்டுக்குப் பணம் அனுப்ப விரும்பினால், அந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்வார்கள் ‘ஹவாலா’ ஏஜென்ட்டுகள். இப்படித் திரளும் பணத்தைப் பத்திரப்படுத்திவைக்க தொண்டி, கீழக்கரை, காயல்பட்டினம் ஏரியாக்களில் பல ‘பாயின்ட்டு’கள் இருக்கின்றன. சென்னையின் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில், சிறிய சிறிய மேன்ஷன் அறைகளில் பெட்டிப் பெட்டியாக கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது கோடிக்கணக்கிலான ஹவாலா பணம்! அதற்கு 24 மணி நேரமும் அப்பாவி முகம்கொண்ட ஆட்களை காவலுக்குப் போட்டிருக்கிறது ஹவாலா கும்பல். சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்தவர்களும், அண்டை மாநிலத்தைச் சேர்ந்த சிலரும் ‘ஹவாலா’ தொழிலில் ஈடுபடுகிறார்கள். ‘Tax Haven’-ஆகச் செயல்படும் கரீபியத் தீவுகள், மொராக்கோ நாடுகளிலும் பணத்தை ஒப்படைக்கிறார்கள் ‘ஹவாலா’ ஏஜென்ட்டுகள். இதற்கான ‘கமிஷன் ரேட்’ தனி” என்றனர் விரிவாக.

புதிய ரூட் போதை... கொடிகட்டிப் பறக்கும் ‘ஹவாலா’!
‘ஹவாலா’ பிசினஸ் குறித்து நாம் விசாரித்த வேளையில், சென்னை எழும்பூரிலுள்ள பிரபலமான வணிக வளாகம் ஒன்றின் பெயர் பெரிதாக அடிபட்டது. சோர்ஸ் ஒருவர் சொன்னதன் அடிப்படையில், அங்கு மாலை நேரத்தில் சென்றோம். வாசலில் சிலர் ஆவலோடும் பரபரப்போடும் சாலையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நமக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்ள, சிறிது நேரத்தில் பைக்குகளிலும் கார்களிலும் பைகளோடு வந்திறங்கினர் சிலர். வந்தவர்களோடு, காத்திருந்தவர்களும் ஒன்றாக வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்துக்குச் செல்ல, சில போன் கால்களுக்குப் பிறகு பைகள் கை மாறின. காக்கா கூட்டம்போல வந்த அந்தக் கும்பல், அடுத்தடுத்து காலியானது. “எல்லாம் ஹவாலா டீல்தான் சார். தினமும் நடக்குது. வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு, போலீஸ், சி.பி.ஐ-னு எல்லாருக்குமே இங்க நடக்குற விஷயம் தெரியும். எல்லாருக்கும் கட்டிங் போறதால யாரும் கண்டுக்கிறதில்ல” என்றார் அந்த வளாகத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரி ஒருவர்.
வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு தினம்தோறும் தங்கம், வைரம், போதைப்பொருள்கள் கொண்டு வரப்படுவது அதிகரித்திருக்கிறது. “அடிக்கடி ராமநாதபுரத்தில் போதைப்பொருள்கள் மாட்டுவதும், திருச்சியில் தங்கம் சிக்குவதும் ‘ஹவாலா’ பறிமாற்றத்தின் ஒரு சிறுதுளிதான்” என்கிறார்கள் விவரமறிந்த சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகள்.
மேலும் நம்மிடம் பேசிய அவர்கள், “வழக்கமாக, ‘ஹவாலா’ முறையில் பணம் எங்கேயும் நகராது. அதேசமயம், பெரும் தொகை சம்பந்தப்பட்டிருந்தால், அதற்கு ஈடான மதிப்புள்ள தங்கம், வைரம், போதைப்பொருள் உள்ளிட்டவை கைமாற்றப்படும். அந்த வகையில், சமீபகாலமாக இம்மூன்று பொருள்களின் கடத்தல் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில், ‘ஹவாலா’ பணத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போதும், தேர்தல் காலம் வரும்போதெல்லாம் இந்தக் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கும். கடத்திவரப்படும் போதைப்பொருள்களுக்கு இணையான தொகையைப் பணமாகக் கொடுக்க, இலங்கையைச் சேர்ந்த போதை ஏஜென்ட்டுகள் இருக்கிறார்கள். அதேபோல, கடத்தல் தங்கத்துக்குப் பணத்தைக் கொட்ட, செளகார்பேட்டையைச் சேர்ந்த பல ஏஜென்ட்டுகள் இருக்கிறார்கள். அவர்களிடம் பொருளைக் கொடுத்துவிட்டு, பணமாக வாங்கி பார்ட்டிகளிடம் சேர்த்துவிடுவார்கள். இதற்காக, 7 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரைகூட கமிஷன் பெறப்படுகிறது.
கொட்டமடிக்கும் ஹவாலா கும்பல்... வேடிக்கை பார்க்கும் அரசுகள்!
கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அரசியலில் தனி ரூட் எடுத்திருக்கும் ஒருவருக்கும், கொல்கத்தாவின் ‘ஹால்தியா’ பகுதியிலிருக்கும் ஒரு நிறுவனத்துக்குமான ‘பிசினஸ்’ தொடர்புகள் அதிகம். சீனாவின் ஹாங்காங், மக்காவ் பகுதியில் பல நூறு கோடிகளைக் கொட்டிவைத்திருக்கும் அந்த அரசியல் பிரமுகர், ‘ஹால்தியா’ நிறுவனம் மூலமாகச் சமீபத்தில் பல கிலோ தங்கக்கட்டிகளை இந்தியாவுக்குள் கொண்டுவந்திருக்கிறார். இந்தத் தொழிலில் கறுப்புப் பணம்தான் முழுவதுமாகக் கையாளப்படுகிறது. ஹவாலா பிசினஸ் குறித்து விசாரிக்க, Serious Fraud Investigation Office, டி.ஆர்.ஐ., அமலாக்கத்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் உள்ளன. Prevention of Money Laundering Act, 2002 -ன்படி நடவடிக்கை எடுக்கவும் முடியும். ஆனால், பல் இல்லாத பாம்பாகத்தான் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள்” என்றனர்.
சரி, இந்த ஹவாலாவால் மக்களுக்கும் அரசுக்கும் என்ன பிரச்னை... அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், இந்தத் தொழிலின் உப விளைவுகளாக ஏராளமான குற்றங்கள் நிகழ்கின்றன. மக்களிடம், அரசிடம் கொள்ளையடித்த பணங்களைப் பதுக்க, பாதுகாக்க இந்த ஹவாலா முறை உதவுகிறது. ஒரு வேளை உணவுக்குக் கையேந்துகிறவர்கள் நிறைந்த இந்த தேசத்தில், கறுப்புப் பணம் எனும் கொடூரம் பிரமாண்டமாக நாளுக்கு நாள் வளர ஹவாலா முக்கியக் காரணமாக இருக்கிறது. பலரின் ரத்தமும் கண்ணீரும் படிந்த குற்ற வாடையடிக்கும் பணத்தைவைத்து அதிகார விளையாட்டை ஆடுபவர்களை, வெறுமனே கையைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.
2016-ல் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் குறையேதும் சொல்ல முடியாது என சர்ட்டிஃபிகேட் அளித்திருக்கிறது மாண்பமை நீதிமன்றம். ஆனால், ஹவாலா உலகின் உண்மை நிலவரமோ நம்மைப் பார்த்து கேலியாகச் சிரிக்கிறது!