
பில்லியன் ரைடர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை மோட்டார் வாகனச் சட்டத்தின்படி காலங்காலமாக வலியுறுத்தி வந்தது அரசு.
இது கேட்பதற்குக் கொஞ்சம் நம்ப முடியாததாக இருக்கும். ஆனால், உண்மை! ஒரு டூ–வீலர் விபத்தை எடுத்துக்கொண்டால், ரைடர்கள் தப்பித்துக்கொள்வார்கள். ஆனால், பில்லியன் ரைடர்கள்தான் பெரும்பாலும் கடுமையான விபத்துக்குள்ளாவார்கள். என் வட்டாரத்திலேயே போன மாதம் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ‘‘ஓட்டினவரு தப்பிச்சுட்டாரு… சும்மா பின்னாடி உட்கார்ந்து வந்தவரு கோமாவுல இருக்காரு!’’ என்று சொன்னார்கள். அவர், ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.
இதற்குக் காரணம் – பைக் ஓட்டுபவருக்கு, விபத்து நடப்பதற்குச் சில மைக்ரோ விநாடிகள் முன்பே தனது ஹெல்மெட் மண்டையைத் தாண்டி அலாரம் அடிப்பதால் அலெர்ட் ஆகியிருப்பார். பின் பக்கம் உட்கார்ந்திருப்பவர் பெரும்பாலும் அதைப் பற்றிய ஐடியா இல்லாததால் பைக்கிலிருந்து தூக்கி எறியப்படுவார். இன்னொரு காரணமும் உண்டு. பில்லியன் ரைடருக்கு பைக்கில் பிடிமானமும் கம்மி. இப்படித்தான் பில்லியன் ரைடர்கள் அடிபடுகிறார்கள் / பலியாகிறார்கள்.



இந்தப் புத்தாண்டிலிருந்து மே 15, 2022 வரை எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில், 841 பேர் ஹெல்மெட் இல்லாததால் பாதிக்கப்பட்டிருக்கிறதாகச் சொல்கிறார்கள். இதில் 741 பேர் பைக்கை ஓட்டியவர்கள்; பின்னால் அமர்ந்து வந்தவர்கள் 127 பேர். இதில் 18 பில்லியன் ரைடர்கள் இறந்திருக்கிறார்கள். 127 பில்லியன் டைர்கள் இன்னமும் படுக்கையில் இருக்கிறார்களாம்.
அதற்குத்தான், அரசாங்கம் ஒரு சட்டம் பிறப்பித்திருக்கிறது. அதாவது, இனி பைக் ரைடரோடு சேர்ந்து பின்னால் அமர்ந்து வரும் பில்லியன் ரைடரும் தலைக்கவசம் அணிய வேண்டும். மீறினால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது லைசென்ஸ் சஸ்பெண்ட். மே மாதம் 23–ம் தேதியிலிருந்து இதை அமல்படுத்தியிருக்கிறது அரசு.
பில்லியன் ரைடர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை மோட்டார் வாகனச் சட்டத்தின்படி காலங்காலமாக வலியுறுத்தி வந்தது அரசு. ரைடர்களே முறையாக ஹெல்மெட் அணியாததாலும், விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாவதாலும் இந்தப் புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது அரசு. கொஞ்ச நாள்களுக்கு முன்புதான் மும்பையில் இப்படி ஒரு சட்டத்தை அமல்படுத்தியிருந்தார்கள். அங்கே 500 ரூபாயும், 3 மாதங்களுக்கு லைசென்ஸ் ரத்தும் தண்டனையாகத் தரப்படுகிறது. கேரளாவிலும் இதை அமல்படுத்தியிருக்கிறார்கள்.
சென்னையில் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டுபவர்களையே வளைத்து வளைத்துப் பிடிக்கும் காவல்துறை, இப்போது பில்லியன் ரைடர்களையும் சுற்றிவளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது மக்களைப் பாதுகாக்கும் சட்டம் என்றாலும், ‘நச்’ வரவேற்பு என்று பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள்; ‘என்னங்கய்யா உங்க சட்டம்’ என்று உச்சுக் கொட்டுபவர்களும் இருக்கிறார்கள்.



‘‘சட்டத்தைத் தாண்டி இதில் நம் பாதுகாப்புதாங்க முக்கியம். நானும் என் மனைவியும் ஒரே பைக்கில்தான் ஆபீஸ் போவோம். நான் எப்போவுமே கவனமாதான் பைக் ஓட்டுவேன். ஒரு தடவை ஒரு குடிகார ரைடரால், சின்ன ஆக்ஸிடென்ட். மயிரிழையில் அவளுக்குத் தலையில் அடிபடாமல் தப்பிச்சோம். அதிலிருந்து அவளுக்கும் ஒரு ஹெல்மெட் வாங்கிட்டேன். இப்போ நாங்க ரெண்டு பேருமே ஹெல்மெட் போடாம வெளியே போறதே இல்லை!’’ என்றார், சென்னையைச் சேர்ந்த குகன் சூர்யா.
‘‘நான் புல்லட்டும் ஓட்டுவேன்; ஸ்கூட்டரும் ஓட்டுவேன். ஆக்ஸிடென்ட் ஆச்சுனா ரைடரைவிட பில்லியன்ல இருக்கறவருக்குத்தான் முதல்ல அடிபடும். அதிலும் முக்கியமா 3 பாகங்கள் – தலை, கை, கால். கை காலுக்குக்கூட ட்ரீட்மென்ட் பண்ணிக்கலாம். தலைக்கு என்ன பண்ணுவீங்க? அதனால் ஹெல்மெட் முக்கியம் பாஸ்! அடம் பண்ணாதீங்க… போடுங்க ப்ளீஸ்!’’ என்றார் வித்யா ஸ்ரீனிவாசன்.
‘‘ஏங்க… இதெல்லாம் நடக்கிற காரியமா? எனக்கு ஒரு குழந்தை இருக்கா. என் மனைவியோட 3 பேரும்தான் போவோம். எப்போ பார்த்தாலும், ரெண்டு ஹெல்மெட் தூக்கிட்டே திரிய முடியுமா? இதெல்லாம் கடுப்பாதான் இருக்கு! முதல்ல ரோடுகளை ஒழுங்கா போடச் சொல்லுங்க சார்!’’ என்று கோபமானார் முத்துராஜ் என்பவர்.
‘‘நான் ஒரு பைக் ரைடர். இதுல பல சிக்கல்கள் இருக்குன்னாலும், இது ரொம்பவும் அவசியம்னு நினைக்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே ‘நோ நோ’ன்னு சொல்றதைவிட, ‘யெஸ் யெஸ்’னு சொல்லிப் பழகிப்பாருங்க! நானும் என் கணவரும் எங்கே போனாலும் ஹெல்மெட் போட்டுத்தான் போவோம்! என்ன, ஹெல்மெட்டைப் பாதுகாக்கிறதுதான் பெரிய சிக்கலா இருக்கப்போகுது!’’ என்று சிரித்தார் அனுராதா ராஜசேகர்.


‘‘நான் பைக் டாக்ஸியில் வேலை பார்க்கிறேன். என் தொழிலே பைக் ஓட்டுறதுதான். ஸ்கூட்டர்தான் வெச்சிருக்கேன். ரெண்டு ஹெல்மெட் எப்போவுமே ஸ்டாக் வெச்சிருப்பேன். இருந்தாலும், ரெண்டு ஹெல்மெட் வைக்கிற அளவுக்கு பைக் தயார் பண்ணினா நல்லா இருக்கும்!’’ என்றார் ஒருவர்.
‘‘ஹெல்மெட் வியாபாரத்துக்குத் திட்டம் போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன். இனிமே ஹெல்மெட்டிலும் ஒரு லாபம் அடிக்கலாம்ல. அதான் இந்தத் திட்டமும் சட்டமும்! இனிமேல் ஹெல்மெட் திருட்டும் நடக்கும்; அதுக்கும் ரெடியா இருங்க!’’ என்றார் அப்பாவு என்பவர்.
இனிமேல் 9 மாதத்துக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்கிற சட்டம் வரவும் வாய்ப்புண்டு. ஏற்கெனவே சொன்னதுபோல், நச்சுனு இருந்தாலும் சரி; உச்சுக்கொட்ட வைத்தாலும் சரி – இந்த அதிரடி மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள கொஞ்ச நாள் ஆகும்!



****
விபத்துகளைத் தடுக்க ஹெல்மெட் மட்டும்தான் வழியா? காவல்துறைக்கும் சில டிப்ஸ்!
* ஹெல்மெட் போடாதவர்களை - சாலையில் வழிமறித்தோ… குற்றவாளிகளைப்போல் விரட்டியோ பிடிப்பது இன்னும் ஆபத்து! அதற்குப் பதிலாக சென்னை அண்ணா நகரில் மட்டும் இருப்பதுபோல், ANPR (Automatic Number Plate Recognition) கேமராக்களை ஒவ்வொரு சிக்னல்களிலும் பொருத்தி, அவர்கள் முகத்தோடு போட்டோ எடுத்து இ–சலான், மொபைலுக்கே போவதுபோல் செட் செய்துவிட்டால்… வேலை சுலபம்.
* 100சிசி ஸ்ப்ளெண்டரைக்கூட 200சிசி பல்ஸர்போல் பாவித்து ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என ரேஷ் டிரைவ் செய்பவர்கள்தான் மோசமானவர்களில் முக்கியமானவர்கள். சிட்டிக்குள் ஒரு குறிப்பிட்ட கி.மீ–க்கு மேல் பறப்பவர்களையும், பெட்ரோல் டேங்க்கில்கூட அன்லிமிட்டட் ஆக ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்பவர்களையும் பேட்ரோல் அமைத்துப் பிடித்து, அபராதம் போட வேண்டும்.
* ஹெல்மெட் போடாதவர்கள் பைக் ஓட்டி விபத்தானால், அவர்களின் உயிருக்குத்தான் சிக்கல். ஆனால் – தங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி, அடுத்தவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் – குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள். அவர்களுக்கு வாகனமே ஓட்ட முடியாதபடி கடுமையான தண்டனை வழங்கலாம்.
* முக்கியமாக, ஒவ்வொரு டாஸ்மாக்கைச் சுற்றியும் ஒரு குறிப்பிட்ட தூர இடைவெளியில் சர்வைலன்ஸ் செய்தால்… ‘டிரங்க் அண்ட் டிரைவ்’ ஓட்டுநர்களை பாட்டிலும் பைக்குமாகப் பிடிக்கலாம்.
* ரேஸ் போட்டிகளில் ஓட்டும் திறன் (300சிசி) கொண்ட நேக்டு பைக்குகளை போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட சாலைகளில் ஓட்ட நிபந்தனைகள் கொண்டுவந்தாலே பாதி கோர விபத்துக்களைத் தடுக்கலாம். அதே போல, இளைஞர்களின் அதீத ஆர்வத்துக்கு தீனி போடும் விதமாக ஸ்போர்ட்ஸ் பைக்குகளை வாங்கிக் கொடுத்து, அவற்றால் விபத்து ஏற்படுமாயின், அத்தகைய இளைஞர்களின் பெற்றோர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
பில்லியன் ரைடர் ஹெல்மெட் கட்டாயச் சட்டம் நடைமுறையில் இருக்கும் மற்ற நகரங்கள்!
பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, லக்னோ, கொச்சின், டெல்லி (பெண்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற நடைமுறை 2018–ல் கொண்டு வரப்பட்டது).