
ஓவியம்: ரவி
இந்தியாவில் +2 முடிக்கும் 100 பேரில் 27 பேர்தான் கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். அடுத்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கையை 50 ஆக்கும் நோக்கில்தான் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இப்போதே தமிழகத்தில் +2 முடிக்கும் 100 மாணவர்களில் 51 பேர் கல்லூரியில் சேர்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக உயர்கல்விச்சேர்க்கை நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ஆனால், கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் கல்வியில் முழுமையடைந்து வெளியே வருகிறார்களா..?
இது ஆய்வு செய்யப்பட வேண்டிய கேள்வி.
தமிழகத்தில் 173 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. சமீபத்தில், பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் இருந்த உறுப்புக்கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. ஒவ்வோராண்டும் பல லட்சம் மாணவர்கள் அரசுக்கல்லூரிகளை நாடி வருகிறார்கள். குறிப்பாக பி.காம் படிப்புகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்குப் பெரும் போட்டியே இருக்கிறது. இப்படி மாணவர்கள் கனவுகளோடு தேடிவந்துகொண்டிருக்கும் நிலையில், அரசுக்கல்லூரிகள் அவலநிலையில் இருக்கின்றன. 30 சதவிகிதம்கூட அரசுக் கல்லூரிகளில் நிரந்தப் பேராசிரியர்கள் இல்லை. சுமார் 8,000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மிகக்குறைந்த சம்பளம் பெறும் கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே பல கல்லூரிகள் இயங்கிவருகின்றன. குறிப்பாக, கிராமப்புறக் கல்லூரிகளில் 80% வரை கௌரவ விரிவுரையாளர்களே பணியாற்றுகிறார்கள். ஷிப்ட் 2 எனப்படும் மாலை நேரக் கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்களை நம்பியே நடக்கின்றன.

உலகமயமாக்கலுக்குப் பிறகு கல்வியின் தன்மையும் தரமும் கல்விக்கூடச்சூழலும்கூட மாறிவிட்டன. புதிய தொழில்நுட்பங்கள், கற்பித்தல் முறைகள் கல்விக்கூடங்களுக்குள் வந்துவிட்டன. இந்தச்சூழலில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் 70 சதவிகிதத்துக்கு மேல் தகுதிவாய்ந்த நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறி நிற்பது, தமிழகத்தின் எதிர்காலத்தையே பாதிக்கும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
‘‘அரசு புதிது புதிதாகக் கல்லூரிகளைத் திறக்கிறது. ஆனால் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில்லை. நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதுமில்லை. பெரும்பாலும் கௌரவ விரிவுரையாளர்களே கற்பிக்கிறார்கள். பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கிய 41 உறுப்புக் கல்லூரிகளையும் இப்போது அரசு எடுத்துக்கொண்டுள்ளது. அங்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
கல்லூரிகளில் உள்ள பாட எண்ணிக்கையைப் பொறுத்து அங்கு இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. உதாரணத்திற்கு இளநிலைப் படிப்புகள் மட்டும் இருந்தால் அங்கு குறைந்தபட்சம் 8 உதவிப் பேராசிரியர்கள், முதுநிலை வரை இருந்தால் அங்கு 12 உதவிப் பேராசிரியர்கள் இருக்கவேண்டும். பெருநகரக் கல்லூரிகளில் இந்த எண்ணிக்கை ஓரளவுக்குப் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பார்கள். மற்றவர்களெல்லாம் கௌரவ விரிவுரையாளர்கள். தமிழக அரசுக்கல்லூரிகள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை நம்பியே இயங்குகின்றன. புதிதாகத் தொடங்கப்பட்ட 20 புதிய கல்லூரிகளுக்கு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படவில்லை. அங்கு யார் பாடம் நடதுவார்கள் என்பதும் முடிவாகவில்லை’’ என்கிறார், தமிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் சென்ன கிருஷ்ணன்.
கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. NET, SET அல்லது PhD... இதில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்திருக்கவேண்டும். கல்லூரிகளில் பணியாற்றும் அனுபவத்துக்கு சிறப்பு ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படும். ஓர் ஆண்டு கல்விப் பணிக்கு 2 மதிப்பெண் என ஏழரை ஆண்டுக்காலப் பணிக்காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு 15 மதிப்பெண் கொடுக்கப்படும். இதுதவிர முனைவர் பட்டத்திற்கு 9 மதிப்பெண், நேர்காணலுக்கு 10 மதிப்பெண் என மொத்தம் 34 மதிப்பெண். இதில் அதிகபட்ச மதிப்பெண் பெற்றிருப்பவர் தேர்வு செய்யப்படுவார். இதுதான் நியமன நடைமுறை.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத பாடங்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதுபோல, கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 2015-க்கு முன்னர் கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள் இணைந்து எம்.பில் முடித்தவர்களை கௌரவ விரிவுரையாளர்களாக நியமித்தார்கள். 2015-க்குப் பிறகு பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளின்படி NET, SET அல்லது PhD கட்டாயமாகப்பட்டது.
‘‘2015-க்கு முன்னர் நியமிக்கப்பட்டவர்கள், முதல்வர் அல்லது துறைத்தலைவருக்கு வேண்டப்பட்டவராகவே இருந்தார்கள். பலருக்குக் கல்லூரியில் பணியாற்றும் தகுதியே இல்லை. ஆனாலும் 10-15 ஆண்டுகளாக அவர்கள் பாடம் நடத்துகிறார்கள். தற்போது பணியாற்றும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்களில் உரிய தகுதியோடு இருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்குள்தான் வரும்’’ என்கிறார் சென்ன கிருஷ்ணன்.
முறைப்படி நியமனம் செய்யப்படும் உதவிப் பேராசிரியரின் மாதச்சம்பளம் ரூ.80,000 முதல் 1 லட்சம் வரை. இத்தனை மணி நேரம் பணியாற்றினால் போதும் என்ற வரையறை உண்டு. ஆனால் கௌரவ விரிவுரையாளர்களுக்கு இப்போதுதான் மாதச் சம்பளத்தை இருபதாயிரமாக உயர்த்தியிருக்கிறார்கள். இவர்களுக்குப் பணிநேர வரன்முறை கிடையாது. துறைத்தலைவர்கள் எவ்வளவு பணி கொடுத்தாலும் செய்தாக வேண்டும்.
‘‘எப்போதேனும் நிரந்தரமாக்கி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே பலர் 45 வயதைக் கடந்துவிட்டார்கள். சிலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். நிறைய பேர் பணியிலிருந்து ஓய்வே பெற்றுவிட்டார்கள். அவ்வப்போது நிரந்தரமாக்கப் போகிறோம் என்று ஆசை காட்டியே கௌரவ விரிவுரையாளர்களைக் கொத்தடிமைகள் போலக் கசக்கிப் பிழிகிறது அரசு. ஏற்கெனவே மூன்றில் ஒரு பங்குக்கு மேல் கௌரவ விரிவுரை யாளர்கள் நிறைந்திருக்கும் நிலையில், மேலும் 1,300-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கப் போகிறோம் என்று அமைச்சர் கூறுவதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் சென்ன கிருஷ்ணன்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த தருணத்தில் 2,023 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் நடைமுறைகள் தொடங்குவதற்குள் ஆட்சி மாறிவிட்டது. பிறகு அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டு விட்டது.
‘‘புதிய கல்லூரிகள் திறக்கப்படுவது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்கு ஆசிரியர்களை நியமிக்கவேண்டும். பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசு எடுத்து இத்தனை ஆண்டுகளில் வேலை செய்பவர்களுக்குப் பல்கலைக்கழகங்கள்தான் சம்பளம் தருகின்றன. சில கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள்கூட இல்லை. பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஒரு நிதியைத் திரட்டி அந்தப் பகுதியில் இருக்கும் ஒருவரை நியமித்துக்கொள்கிறார்கள். முனைவர் பட்டம் வாங்கி, கற்பித்தல் பணியில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஒருவர் 6,000-7,000 சம்பளத்துக்கு வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். அப்படி மட்டும் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள். கடைகளைத் திறப்பதுபோல கல்லூரிகளைத் திறக்கும் அரசு, தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும்’’ என்கிறார், அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் சிவராமன்.

பல்கலைக்கழக மானியக்குழு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களுக்குத் தரப்படும் சம்பளத்தில் பாதியை கௌரவ விரிவுரையாளர்களுக்குத் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் அப்படித்தான் வழங்கப்படுகிறது. பாண்டிச்சேரியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 50,000 ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இங்கு இப்போதுதான் 20,000 என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.
‘‘2013-க்குப் பிறகு கல்லூரிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவேயில்லை. 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு என்னானது என்று இன்றுவரை தெரியவில்லை. வருடந்தோறும் ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் காலிப் பணியிடங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மாலைநேரக் கல்லூரிகள் முழுமையாக கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே நடத்தப்படுகின்றன.
மாணவர்கள் அரசுக் கல்லூரிகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். இங்கு இடம் கிடைக்காவிட்டால் மட்டுமே பிற கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். மாணவர்களை வழிநடத்த ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் தரம் கேள்விக்குறியாகிறது. சொற்ப சம்பளத்துக்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கவே நினைக்கிறது அரசு. நிரந்தரப் பேராசிரியர்கள் நியமிக்க ஆர்வம் காட்டவேயில்லை’’ என்று வருந்துகிறார், அரசு உறுப்புக் கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் சிவராமன்.
உயர்கல்விதான் ஒரு நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும். தமிழக அரசு, அரசுக்கல்லூரிகளை நம்பிவரும் மாணவர்களை வஞ்சிக்கக்கூடாது. முழுமையாக நிரந்தரப் பேராசிரியர்களை நியமிப்பதோடு உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும்!