சினிமா
Published:Updated:

இலவசங்களால் இலங்கை போல் ஆகுமா இந்தியா?

இலவசங்களால் இலங்கை போல் ஆகுமா இந்தியா?
பிரீமியம் ஸ்டோரி
News
இலவசங்களால் இலங்கை போல் ஆகுமா இந்தியா?

நல்லவேளையாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘இதற்காக அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது ஜனநாயக விரோதம்’ என்று சொல்லியிருக்கிறார்.

அரசுகள் வழங்கும் இலவசத் திட்டங்களுக்கு எதிராக முரட்டுத்தனமாகக் குரல் கொடுக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. ‘‘அரசியல் ஆதாயத்துக்காகச் செய்யப்படும் சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள், நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும். நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிக்கும்’’ என்று இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் முழங்கினார் அவர். இன்னொரு நிகழ்வில் மானியங்களுக்கு எதிராகவும் முழங்கினார். மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாநில மின் வாரியங்கள் தர வேண்டிய பாக்கி இரண்டரை லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதைக் குறிப்பிட்ட அவர், ‘‘இந்திய அரசியலில் மானியங்கள் வழங்கும் கலாசாரம் மிக மோசமான பிரச்னை’’ என்று வர்ணித்தார்.

‘இலங்கை போல திவால் ஆகும்!’

இதேநேரத்தில் உச்ச நீதிமன்றத்திலும் இலவசங்கள் தொடர்பாக ஒரு வழக்கு நடந்துவருகிறது. பா.ஜ.க பிரமுகர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் போட்ட வழக்கு அது. ‘இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளித்து மக்களைத் தங்கள் பக்கம் சாயவைத்துக் கட்சிகள் தேர்தலில் ஜெயிக்கின்றன. மக்கள் வரிப்பணத்தை முறையற்ற இலவசங்களுக்குச் செலவழிக்கின்றன. இப்படிச் செய்யும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்பது அவரின் வாதம்.

நல்லவேளையாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘இதற்காக அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது ஜனநாயக விரோதம்’ என்று சொல்லியிருக்கிறார். தேர்தல் ஆணையமும், ‘இயற்கைச் சீற்றங்கள் மற்றும் நோய்த்தொற்றுகளின்போது இலவசத் திட்டங்களே மக்களுக்கு உதவின’ என்ற விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறது. ‘இலவசங்கள் வேறு, நலத்திட்டங்கள் வேறு. இலவசங்களை வரைமுறைப்படுத்தவில்லை என்றால் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும்’ என்று சொல்கிறது உச்ச நீதிமன்றம். இலவசத் திட்டங்கள் குறித்து முடிவு செய்ய நிதி ஆயோக், நிதி ஆணையம், சட்ட ஆணையம், ரிசர்வ் வங்கி மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்கிறது நீதிமன்றம்.

இலவசத் திட்டங்கள் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்றும் சமீபத்தில் பரபரப்பு கிளப்பியது. ‘வருமானத்துக்கு வழி தேடாமல் இலவசங்களைக் கொடுக்கும் மாநிலங்கள் விரைவில் இலங்கை போல திவால் ஆகக்கூடும்’ என்றது அந்த அறிக்கை.

டெல்லி மாடல் Vs குஜராத் மாடல்!

திடீரென இலவசங்கள் குறித்து இத்தனை விவாதங்கள் ஏன்? டெல்லியில் குடிநீர், மின்சாரம், பேருந்துப் பயணம் என்று பல்வேறு இலவசங்களை வழங்கி வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘டெல்லி மாடல்’ என்று இதைக் குறிப்பிடுகிறார். இதேபோன்ற வாக்குறுதிகளைக் கொடுத்துப் பஞ்சாப்பில் பெரும் வெற்றி பெற்றது ஆம் ஆத்மி. ஆட்சிக்கு வந்தபிறகு இந்த ஜூலை மாதத்திலிருந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் அளித்துள்ளது அரசு. இதுதவிர கடன் தள்ளுபடிகள், 18 வயது நிரம்பிய பெண்கள் எல்லோருக்கும் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை என ரூ.20,600 கோடிக்குப் புதிய இலவசங்களை அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு. இந்தியாவிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலமாக பஞ்சாப் இருப்பது பற்றி கெஜ்ரிவால் கவலைப்படவில்லை.

விரைவில் குஜராத் சட்டமன்றத்துக்குத் தேர்தல் வருகிறது. அங்கு கால் பதித்துவரும் அரவிந்த் கெஜ்ரிவால், அங்கேயும் இதேபோன்ற இலவசங்களுக்கான வாக்குறுதிகளை அளிக்கிறார். ‘குஜராத் மாடல்’ என்பதையே இந்தியா முழுக்க பா.ஜ.க சொல்லிவரும் நிலையில், அந்த குஜராத்துக்கே ‘டெல்லி மாட’லைக் கொண்டு போய்விட்டார் கெஜ்ரிவால். இதை ஒரு கௌரவ யுத்தமாக பா.ஜ.க கருதுவதே இத்தனை விவாதங்களுக்குக் காரணம்.

இலவசங்களை மோடி எதிர்க்கிறார் என்றால், தமிழகத்தில் நிலைமை வேறு. ‘இலவச வேட்டி, சேலைத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நெசவாளர்களுக்கு இழப்பு ஏற்படும். அப்படித் தமிழக அரசு செய்தால், அதை எதிர்த்துப் போராடுவோம்’ என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. ‘இலவசங்கள் தருவதாக தி.மு.க அளித்த வாக்குறுதிகள் என்ன ஆயின?’ என்று உச்சபட்சக் குரல் கொடுப்பதும் அவர்தான்.

இலவசங்களால் இலங்கை போல் ஆகுமா இந்தியா?

‘ராமரும் ரேஷனும் தந்த வெற்றி!’

மோடி எதிர்க்கும் இலவசங்களை பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எங்குமே தரவில்லையா என்று கேட்டால், தமிழகம் போலவே பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் தருவதாக வாக்குறுதி அளித்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். இப்போது அங்கு லேப்டாப் திட்டம் ஆரம்பித்துவிட்டது. இப்படிப் பல மாநிலங்கள் பல இலவசங்களைத் தருகின்றன. கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுப்பொருள்கள் கொடுத்ததை ‘உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்’ என்று வர்ணித்தார் மோடி. உ.பி தேர்தல் களத்தில் இதையே பெரிய சாதனையாகப் பேசினார். ‘ராமரும் ரேஷனும்தான் உத்தரப்பிரதேசத்தில் எங்களுக்கு வெற்றி தேடித் தந்த அம்சங்கள்’ என்று பா.ஜ.க தலைவர்கள் சிலரே சொன்னார்கள்.

எது இலவசம், எது மானியம், எது மக்கள் நலத் திட்டம் என்பதில் பலருக்குக் குழப்பம் இருக்கிறது. இலவச மின்சாரம், லேப்டாப், போக்குவரத்து வசதி, கடன் தள்ளுபடி, மாதா மாதம் குறிப்பிட்ட அளவு பணம் தருவது போன்றவை இலவசங்கள். விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச விலை தருவது, உரத்துக்கு மானியம் தருவது போன்றவை மானியங்கள். ரேஷனில் அரிசி தருவது, கல்வி மற்றும் மருத்துவச் சேவையை அளிப்பது போன்றவை மக்கள்நலத் திட்டங்கள். இந்த எல்லாவற்றையும் மத்திய அரசும் செய்கின்றன. மாநில அரசுகளும் செய்கின்றன. வரைமுறையற்ற இலவசங்கள் அரசை நெருக்கடியில் தள்ளும். ஆனால், மானியங்களும் நலத்திட்டங்களும் தேவை.

இலவசங்களுக்கும் மானியங்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் மோடிதான், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் போன்ற பல திட்டங்களை உருவாக்கி மானியம் அளித்தார்.

தமிழகம் இலவசங்களால் சீரழிந்ததா?

‘இலவசங்கள்’ என்றாலே எல்லோரது பார்வையும் தமிழ்நாட்டின் பக்கம் திரும்பும். அதனால் மாநிலமே கடனாளி ஆகிப்போனதாகக் குற்றம் சாட்டும். உண்மை என்னவென்றால், இலவசங்கள் மற்றும் மானியங்களுக்குத் தம் மாநில வருமானத்தில் 10 சதவிகிதத்திற்கு மேல் செலவிடும் டாப் ஐந்து மாநிலங்கள் பஞ்சாப், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கர். இதில் தமிழ்நாடு இல்லை. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியையும் கடனையும் ஒப்பிட்டால், இந்தியாவிலேயே அதிக கடன் சுமையுள்ள டாப் 5 மாநிலங்கள் பஞ்சாப், ராஜஸ்தான், பீகார், கேரளா, உத்தரப்பிரதேசம். இதில் தமிழ்நாடு 11-வது இடத்தில் இருக்கிறது. அதற்காக தமிழ்நாடு கடன் இல்லாமலில்லை. இந்த 2022-23 நிதியாண்டில் புதிதாக ரூ.90,116.52 கோடியை தமிழகம் கடன் வாங்குகிறது. 2023 மார்ச் மாதம் மாநிலத்தின் கடன் ரூ.6,53,348.73 கோடியாக இருக்கும். இந்தக் கடன் சுமைக்கு இலவசங்களும் முக்கியக் காரணம். தி.மு.க தன் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றாமல் தடுமாறுவதற்கும் இந்தக் கடன்சுமையே காரணம்.

‘55 ஆண்டுகளாக இலவசங்களைக் கொடுத்து மாநிலத்தைச் சீரழித்துவிட்டார்கள்’ என்ற குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை? நிதி ஆயோக் தரும் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவிலேயே வறுமை குறைவான மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. மத்திய அரசின் வருடாந்தர தொழிற்சாலைகள் ஆய்வின்படி, முறைசார்ந்த தொழில் துறையில் அதிக தொழிற்சாலைகள் இயங்கும் மாநிலம் தமிழகம்தான்.

இலவசம் இல்லை… சமூக முதலீடு!

‘இலவசம்’ என்பதையே ‘விலையில்லா’ என்று கண்ணியமாக அழைக்கும் சூழலுக்கு நாம் வந்திருக்கிறோம். எல்லா இலவசங்களுமே மோசமானவை அல்ல! சில இலவசங்களை ‘சமூக முதலீடு’ என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். பள்ளியில் சத்துணவு தருகிறோம். பஸ் பாஸ் தருகிறோம். சைக்கிள் தருகிறோம். அவை நிறைய பேரைப் படிக்க வைக்கின்றன. படித்து, நல்ல வேலையில் சேரும் ஒருவர், நிறைய சம்பாதித்து நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிக்கிறார். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் உதவிகள், அவர் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாமல் பிறக்க உதவுகின்றன. அந்தக் குழந்தைக்குக் காலம் முழுக்க சிகிச்சை தரும் சுமை அரசுக்குக் குறைகிறது. ரேஷனில் கொடுக்கப்படும் இலவச அரிசி, பலர் பட்டினியுடன் தூங்குவதைத் தடுக்கிறது. சமூகத்தில் சமநிலையற்ற சூழல் உருவாகி, அதனால் வன்முறைகள் நிகழ்வதை அது தடுக்கிறது.

இதனால்தான் தமிழகத்தின் பல இலவசத் திட்டங்கள் இந்தியா முழுக்கப் போயிருக்கின்றன. நம் சத்துணவுத் திட்டத்தை மத்திய அரசு மதிய உணவுத் திட்டமாக இந்தியா முழுக்கச் செயல்படுத்துகிறது. ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம், மாணவர்களுக்கு சைக்கிள், முதியோர் ஓய்வூதியம் போன்றவை இந்தியாவே பின்பற்றும் ‘தமிழக மாடல்.’ ஆனால், டி.வி., மிக்சி எல்லாம் தேவையற்ற நிதிச்சுமை.

விவசாயிகளைக் காக்கும் மானியம்!

இலவசங்கள் போலவே மானியங்களும் முக்கியம். விவசாயம், கால்நடை வளர்ப்பு, எரிபொருள், போக்குவரத்து என்று ஏராளமான விஷயங்களுக்கு உலக நாடுகள் பலவும் மானியம் தருகின்றன. நார்வே, ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளில் மனிதர்களைவிட பசுக்களுக்கு அதிக மானியம் தருகிறது அரசு. ஆனால், பசுவைப் புனிதமாகக் கருதும் நம் நாட்டில் விவசாய மானியங்களுக்கு எதிராகத்தான் அதிக குரல்கள் எழுகின்றன.

நியூசிலாந்து தவிர விவசாயிகளுக்கு மானியம் தராத நாடுகளே இல்லை. அந்த மானியங்கள்தான் அவர்களைக் குறைந்த செலவில் அதிக உணவு உற்பத்தி செய்ய வைக்கின்றன. அதனால், எல்லோருக்கும் வாங்க முடிகிற விலையில் உணவு கிடைக்கிறது. விவசாயத்துக்கு அதிக மானியம் தரும் டாப் 5 நாடுகள் சீனா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேஷியா. இதில் முதல் பத்து இடங்களுக்குள் இந்தியா இல்லை. ஆனால், உலகிலேயே அதிக பால், வாசனை திரவியங்கள், பருப்பு வகைகள் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. நெல் மற்றும் கோதுமையில் உலகில் இரண்டாவது இடம். குறைந்தபட்ச ஆதரவு விலை, உர மானியம் ஆகிய இரண்டும் இந்திய விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்யும் உதவிகள்.

உலகின் பணக்கார நாடுகள் பலவும் தங்கள் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தரும் மானியங்களின் அளவு, சுமார் 20 லட்சம் கோடி ரூபாய். அதனால் அந்த விவசாயிகள் குறைந்த விலையில் தங்கள் விளைச்சலை உற்பத்தி செய்ய முடிகிறது. அமெரிக்கா இதைத் தாண்டி தங்கள் விவசாயிகளுக்கு ஏற்றுமதி மானியமும் அளிக்கிறது. இவர்களுடன் மோத முடியாமல் நம் விவசாயிகள் தவிக்கிறார்கள்.

கார்ப்பரேட் வரியும் இலவசங்களும்!

எல்லா வரிகளும் ஏறிக்கொண்டிருக்கும் இந்தியாவில் கார்ப்பரேட் வரி மட்டும் குறைந்தது. 2019 செப்டம்பரில் கார்ப்பரேட் வரியை 30% என்ற அளவிலிருந்து 22% என்று குறைத்தது மத்திய அரசு. புதிய நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25% என்பதிலிருந்து 15% என்று குறைக்கப்பட்டது. அந்நிய முதலீடுகள் குவியும், தொழில்துறை உற்பத்தியும் வேலைவாய்ப்பும் பெருகும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட முடிவு இது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.45 லட்சம் கோடி வரி வசூல் குறைந்தது.

இதேபோல ஒவ்வொரு ஆண்டுமே கார்ப்பரேட் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடிகள், கடன் தள்ளுபடிகள் தரப்படுகின்றன. மத்திய அரசின் மானிய பட்ஜெட்டுக்கு ஈடான தொகை இது. இவை எல்லாமே ‘வரிச்சலுகை’, ‘ஊக்கத்தொகை’ போன்ற கண்ணியமான சொற்களால் சுட்டப்படுகின்றன. ‘இலவசம்’ என்று அதிகார மட்டத்தில் யாரும் சொல்வதில்லை.

தன் குழந்தைகளில் ஒன்று சவலைப்பிள்ளையாக இருந்தால், அதற்கு மட்டும் கூடுதல் கவனம் கொடுப்பாள் தாய். அந்தத் ‘தாயினும் சாலப் பரிந்து’ தன் குடிகளில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை அரசு காக்க வேண்டும். அதனால்தான் ‘மக்கள் நல அரசு’ என்று ஜனநாயகத்தில் சொல்கிறோம். அரசின் வேலை வரி வசூல் செய்து, சாலைகள் போட்டு, சுங்கச்சாவடிகள் அமைத்து, காவல் துறையை வைத்துப் பாதுகாப்பு கொடுப்பது மட்டுமே அல்ல! தங்கள் நலன்களைப் பாதுகாக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். நலன் காக்காத அரசை அவர்கள் நிராகரித்துவிடுவார்கள்.

*****

வருமான வரிதான் இலவசங்களாகச் செல்கிறதா?

வருமான வரி செலுத்துவோர் பலருக்கு இருக்கும் ஆதங்கம், ‘‘நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்துச் செலுத்தும் வருமான வரியை அரசாங்கம் இலவசத் திட்டங்கள் அறிவித்து யார் யார் பாக்கெட்டிலோ கொண்டு போய்ச் சேர்க்கிறது'' என்பதுதான். ‘இனிமேல் அரசாங்கம் ஏதாவது இலவசத் திட்டத்தை அறிவிப்பதாக இருந்தால், வருமான வரி செலுத்துவோரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். இதற்காக ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்' என்றெல்லாம் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகள் பரபரப்பாகச் சுற்றுகின்றன.

உண்மை என்ன தெரியுமா? அரசின் ஒட்டுமொத்த வரி வருமான வரிசையில் நான்காவது இடத்தில்தான் அது இருக்கிறது. 2021-22 நிதியாண்டில் ஜி.எஸ்.டி: ரூ.14.76 லட்சம் கோடி. கலால் வரி போன்ற மறைமுக வரிகள்: ரூ.12.9 லட்சம் கோடி. கார்ப்பரேட் வரி: ரூ. 8.58 லட்சம் கோடி. தனிநபர் வருமான வரி: ரூ.7.49 லட்சம் கோடி.

வருமான வரி செலுத்துவோரை மட்டுமே வரி செலுத்தும் பிரிவாகப் பார்க்கும் மனநிலை பலருக்கு இருக்கிறது. கிராமத்துப் பெட்டிக்கடை ஒன்றில் ஒரு ரூபாய் கொடுத்துத் தீப்பெட்டி வாங்குபவர்கூட ஜி.எஸ்.டி வரிக்குப் பங்களிக்கிறார். இந்தியாவில் வரி செலுத்தாத பொதுஜனம் என்று யாருமில்லை.

‘‘அசிங்கப்படுத்துகிறார்கள்!’’

‘‘இலவசம் என்ற வார்த்தை மிகவும் மோசமானது. ஆட்சியாளர்கள் அவர்கள் கையில் இருந்து எதையும் மக்களுக்குச் செய்வதில்லை. மக்களின் வரிப்பணம் தான் வேறு வடிவில் மீண்டும் மக்களை வந்தடைகிறது. அதை ‘இலவசம்’ என்று சொல்லி மக்களை இழிவுபடுத்துகிறார்கள். ‘மேம்பாட்டுக்கான அடிப்படை வசதி’ என்பதே சரியான பதம். மக்கள் மாண்போடு வாழ்வதற்கான தேவைகளைத்தான் அடிப்படை வசதி என்கிறோம். அதைக் கொடுக்கத் தவறும் அரசுகள், தம் தோல்வியை மறைக்க இலவசம் என்ற பெயரில் சில பொருள்களை மக்களுக்குத் தந்துவிட்டு நழுவிக்கொள்கின்றன’’ என்கிறார், கிராமிய மேம்பாட்டு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் க.பழனிதுரை.

‘‘மக்களுக்கு எதையெல்லாம் அரசு விலையின்றி வழங்குகிறது என்பதும் முக்கியம். மிக்சி, மின்விசிறி, டி.வி-யெல்லாம் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை. பள்ளிக்கூடம் செல்லும் பெண்ணுக்கு சைக்கிள் வழங்கினால் வளர்ச்சி. கல்லூரிக்குச் செல்லும் ஒரு மாணவனுக்கு லேப்டாப் கொடுத்தால் வளர்ச்சி. ‘இது தேவை, இதனால் தேசம் வளர்ச்சியடையும்' என்ற எண்ணத்தில் அரசு இந்தச் செயலை முன்னெடுத்தால் பிரச்னையில்லை.

பொருளாதாரம் வளர்கிறபோது பங்கீட்டு நீதி நடக்க வேண்டும். இது அடிப்படையான பொருளாதாரக் கோட்பாடு. ஆனால், இந்தியா சுதந்திரமடைந்த இத்தனை ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ந்த அளவுக்குப் பங்கீட்டு நீதி நடக்கவில்லை. ஓட்டு வாங்குவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டு ஆசை காட்டுகிறார்கள். இன்னொன்று, இதுபோன்ற திட்டங்களில் பொருள்களை வழங்கும் முறையும் மிகவும் மோசமாக இருக்கிறது. பொங்கல் பரிசுகளைப் பெற மக்களை வரிசையில் நிறுத்தி அசிங்கப்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு கொரோனா காலத்தில் இலவசமாக உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டன. அதைச் செய்திருக்காவிட்டால் மிகப்பெரும் பட்டினிச் சாவை இந்தியா சந்தித்திருக்கும். பொருளாதார வல்லரசு என்று புள்ளிவிவரம் வாசிக்கிறோம். ஆனால், 80 கோடி மக்கள் உணவில்லாமல் இருக்கிறார்கள். இந்த வளர்ச்சி பற்றிய புரிதலோடுதான் இலவசங்களையும் பார்க்க வேண்டும்’’ என்கிறார் அவர்.

இலவசங்களால் இலங்கை போல் ஆகுமா இந்தியா?

‘‘தேவையற்ற இலவசங்களால் செலவு கூடும்!’’

‘‘இலவசங்களே மோசம் என்ற கருத்து தவறானது. இலவசத் திட்டங்கள் எந்த அளவுக்குத் தேவை என்பது இரண்டு அம்சங்களைப் பொறுத்தது. அதாவது, இலவசத் திட்டம் யாருக்குப் பயன்படுகிறது, அரசின் நிதியாதாரம் எந்த அளவுக்குத் தாங்கும் என்பதைப் பார்க்க வேண்டும். கட்டாயம் அமல்படுத்தியே தீர வேண்டும் என்கிற திட்டங்களும் இருக்கின்றன. தேவையே இல்லை என்கிற திட்டங்களும் இருக்கின்றன. பொது விநியோகத் திட்டம் மிகவும் அவசியம். இத்திட்டத்தை நம்பி எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றன. இத்திட்டம் இல்லையென்றால் பட்டினிச்சாவுகள் ஏற்படும். அதே நேரத்தில், இத்திட்டம் எல்லோருக்கும் தேவையா என்ற கேள்வியும் இருக்கிறது. பொது விநியோகத் திட்டத்தை ஏழைகளுக்கு மட்டும் கொடுக்கலாம் என்றால், உண்மையான பயனாளிகளைக் கணக்கெடுப்பதில் பிரச்னை இருக்கிறது. ஏழைகளில் சிலர் விடுபட்டுவிட வாய்ப்பு இருக்கிறது என்பதால், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் கொடுக்கப்படுகிறது. வளர்ச்சியை பாதிக்கக்கூடிய அளவுக்கு இலவசங்களைக் கொடுப்பது சரியல்ல. தேவையற்ற இலவசத் திட்டங்களால் அரசின் செலவுகள் கூடும். அத்தகைய திட்டங்களை சூழலைப் பொறுத்துக் கைவிட வேண்டும். உண்மையான, தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே இத்தகைய திட்டங்கள் செல்வதை உறுதிப்படுத்தினால், செலவு கட்டுப்படுத்தப்படும். அதன் மூலமாகச் சேமிக்கப்படும் நிதி, பயனுள்ள மற்ற திட்டங்களுக்குப் பயன்படும்” என்கிறார், தமிழக அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலாளர் கே.சண்முகம் ஐ.ஏ.எஸ்.

- ஆ.பழனியப்பன்

***

மத்திய அரசின் மானியங்கள்!

இந்த நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இலவசங்கள் மற்றும் மானியங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய பட்ஜெட்டில் சுமார் 13 சதவிகித செலவுகள் இந்த வகையில் போகின்றன. முக்கியமான சில இலவசங்கள் மற்றும் மானியங்கள்:

இலவசங்களால் இலங்கை போல் ஆகுமா இந்தியா?

தமிழக அரசின் மானியங்கள்!

இந்த நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூ.1,13,643.10 கோடி ரூபாய் அளவுக்கு இலவசங்கள் மற்றும் மானியங்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமான சில இலவசங்கள் மற்றும் மானியங்கள்:

நிதி ஒதுக்கீடு (ரூபாய் கோடிகளில்)

இலவசங்களால் இலங்கை போல் ஆகுமா இந்தியா?