Published:Updated:

வாடிவாசல் திறக்குது!

ஜல்லிக்கட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
ஜல்லிக்கட்டு

எங்கள் குடும்பமே பல தலைமுறைகளாக ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்த்துவந்தது. இடையில் நான் வெளியூர் சென்றதும் மாடுகளுடனான தொடர்பு விட்டுப் போனது.

``முகூர்த்தக்கால் ஊனியாச்சு. இனி ஜல்லிக்கட்டு பார்க்க சொந்தக்காரவுகளை வரச்சொல்லணும்’’ என்று உற்சாகமாகப் பேசுகிறார்கள் அலங்காநல்லூர் மக்கள். அலங்காநல்லூரில் மட்டுமல்ல, மதுரை மாவட்டம் முழுக்க ஜல்லிக்கட்டு உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

அலங்காநல்லூருக்கு முன்னதாக நடத்தப்படும் பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசலுக்கு வண்ணம் பூசும் வேலைகள், கேலரி அமைக்கும் வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. அதேநேரத்தில், ‘வாடிவாசலில் வந்து நிற்கும் மாட்டை அவிழ்த்து விடுவதா, வேண்டாமா?' என்பதுபோல எந்த நேரத்தில் என்ன உத்தரவு வரும் என்ற கவலையும் இன்னொரு பக்கம் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு, இப்பகுதி மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது.

வாடிவாசல் திறக்குது!
வாடிவாசல் திறக்குது!

‘ஜல்லிக்கட்டு நடத்துவதற்குப் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். மாடுகள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதால் ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும்' என்று பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தொடர்ந்துள்ள வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘தீர்ப்பு எப்படி வந்தாலும் பரவாயில்லை என்று தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது. விசாரணையின்போது, வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளையும் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க வருமாறு தமிழக அரசு வழக்கறிஞர் அழைப்பு விடுத்தார்' என்கிறார்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தினர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பிரதமர் மோடி வருகிறார் என்று வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வருகை உறுதி செய்யப்படவில்லை என்று சொல்லப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஜல்லிக்கட்டைக் காண அலங்காநல்லூர் வரவுள்ளதாகச் சொல்லப்படும் நிலையில் ‘‘ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடந்த போராட்டத்தை நினைவு கூரும் விதமாக சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது எங்கள் ஆசை’’ என்று கமல்ஹாசன் பேசியுள்ளார். இன்னொரு பக்கம், மும்பையில் ஜல்லிக்கட்டு நடத்தலாமா என்று அங்குள்ள தமிழ் அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன.

வாடிவாசல் திறக்குது!

கமல்ஹாசன் அறிவிப்பு குறித்தும், உச்ச நீதிமன்ற வழக்கு குறித்தும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் பி.ராஜசேகரிடம் கேட்டேன். ‘‘சென்னைக்கு எங்களை அழைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து கமல்ஹாசன் விவரங்கள் கேட்டார். தென்மாவட்ட மக்கள் மட்டும் அதிகம் விரும்பும் ஜல்லிக்கட்டு விளையாட்டு வட மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதற்கு கமல் உதவுவார். அதேநேரம், ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக சிலர் வழக்கு போட்டு நம்மைப் பதற்றமடைய வைக்கிறார்கள். தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில் தமிழக அரசு சரியான வாதங்களை எடுத்து வைத்தது. எங்கள் தரப்பிலும் வழக்கறிஞர் வைத்து வாதாடினோம். நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

வாடிவாசல் திறக்குது!

ஜனவரி 6-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடும் விழா அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடந்தது. அதன் பின்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு வந்தவரிடம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்துக் கேட்டேன். ‘‘இந்த ஆண்டும் சிறப்பாகப் போட்டிகள் நடக்கும். அலங்காநல்லூரில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை யார் முன்னின்று நடத்துவது என்பதில் ஊர்க்காரர்கள் இரண்டு அணியாக உள்ளார்கள். அவர்களை ஒற்றுமைப்படுத்தி விழாவைச் சிறப்பாக நடத்துவோம்’’ என்றார்.

அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவி ரேணுகா, ‘‘உள்ளூர்க்காரர்கள் நாங்கள் ஜல்லிக்கட்டைப் பார்க்கிறோமோ இல்லையோ, எங்க ஊருக்கு வருகின்ற வெளியூர் மக்கள் எல்லோரும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். கேலரியை இதற்கு மேல் அதிகப்படுத்த முடியாது. அதனால் நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இதனால் ஊருக்கு வெளியே ஜல்லிக்கட்டு மைதானத்தை உருவாக்க அரசு ஏற்பாடு செய்துவருகிறது. ஆனால், என்னதான் மைதானம் ஏற்பாடு செய்தாலும் பாரம்பரியமாக நடக்கும் இடத்தில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பதுதான் ஊர் மக்களின் ஆசை’’ என்றார்.

நம்மிடம் பேசிய ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஒருவர், ‘‘தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், அரசு விழாவாக நடைபெறுவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். அதற்கு முன் 15-ம் தேதி அவனியாபுரம், 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெறும். என்றாலும், அதிகமான காளைகளும் வாடிவாசல்களும் இருப்பது புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்தான். அலங்காநல்லூருக்கு முன்பே முதல் ஜல்லிக்கட்டு கந்தர்வக்கோட்டை தச்சங்குறிச்சியில்தான் நடத்தப்படும். அதுபோல் திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டும் ரொம்ப பிரபலமானது.

வாடிவாசல் திறக்குது!
வாடிவாசல் திறக்குது!

ஆரம்பத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. விலங்கு நல அமைப்புகள் கண்காணிக்கத் தொடங்கியதாலும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதாலும், பிறகு கடுமையான விதிகள் உருவாக்கப்பட்டன. கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா ஜல்லிக்கட்டுகளுமே இப்போது முறையாகவே நடக்கின்றன. இந்த நிலையில்தான் 2011-ல் பீட்டா தாக்கல் செய்த வழக்கால் ஜல்லிக்கட்டுக்கு 2014-ல் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். 2017-ல் மெரினா உட்பட தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமடைய, அப்போதிருந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றது. அதே நேரம் போராட்டத்தின் கடைசி நாளில் காவல்துறை நடத்திய தாக்குதலில் பலரும் கடுமையான காயம் அடைந்ததையும் மறக்க முடியாது. மெரினா போராட்டத்துக்குப்பின் தமிழ்நாடு மட்டுமன்றி தமிழர்கள் வாழுகின்ற நாடுகளிலெல்லாம் மக்களை ஈர்க்கும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறிவருகிறது. இது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவர்கள்தான் பல அமைப்புகளைத் தூண்டி விட்டு வழக்கு போடச் செய்கிறார்கள்’’ என்றார்.

ராஜசேகர், ரேணுகா
ராஜசேகர், ரேணுகா

ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்துவரும் மதுரை, பொட்டப்பனையூர் திருநங்கை கீர்த்தனா, ‘‘எங்கள் குடும்பமே பல தலைமுறைகளாக ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்த்துவந்தது. இடையில் நான் வெளியூர் சென்றதும் மாடுகளுடனான தொடர்பு விட்டுப் போனது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின்பு மாடுகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை மீண்டும் வந்தது. எட்டு மாடுகள் வளர்த்து, ஒவ்வொரு போட்டிக்கும் அழைத்துச் செல்கிறேன். யார் எந்த வழக்கு போட்டாலும் ஜல்லிக்கட்டையும் நம்மையும் பிரிக்க முடியாது’’ என்றார், தன் மாடுகளுக்குப் பயிற்சி கொடுத்தபடி.

ஒவ்வொரு ஊரிலும் பிரபலங்களும் சாமானியர்களும் தங்கள் காளைகளுடன் ஜல்லிக்கட்டுக்குத் தயாராகிவருகிறார்கள். வழக்கு, பிரச்னைகள் என்று எதிர்ப்புகள் எழும்போதுதான் ஜல்லிக்கட்டு ஒவ்வொரு முறையும் மக்களின் அபிமானத்தை அதிகம் பெற்றுவந்திருக்கிறது. உச்ச நீதிமன்ற வழக்கு காரணமாக, வழக்கத்தைவிட இவ்வாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ரொம்ப எழுச்சியாக நடைபெறும் என்பதை அறிய முடிந்தது.